யோசுவா 3 : 1 (ECTA)
இஸ்ரயேலர் யோர்தானைக் கடத்தல் யோசுவா அதிகாலையில் விழித்தெழுந்தார். அவரும் இஸ்ரயேல் மக்களனைவரும் சித்திமிலிருந்து புறப்பட்டு யோர்தான் வந்தடைந்தனர். அதைக் கடக்குமுன் அங்கே தங்கினர்.
யோசுவா 3 : 2 (ECTA)
மூன்று நாள்கள் கழிந்தபின் மேற்பார்வையாளர் பாளையமெங்கும் போய்,
யோசுவா 3 : 3 (ECTA)
மக்களுக்குக் கட்டளையிட்டுக் கூறியது: “உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழையை லேவியக் குருக்கள் தூக்குவதை நீங்கள் பார்க்கும்போது, உங்கள் இடங்களிலிருந்து புறப்பட்டு அதன் பின்னால் செல்லவேண்டும்.
யோசுவா 3 : 4 (ECTA)
ஆயினும், உங்களுக்கும் அதற்கும் இரண்டாயிரம் அடி இடைவெளி இருக்கட்டும். யாரும் அதன் அருகில் செல்ல வேண்டாம். நீங்கள் செல்லும் வழி உங்களுக்குத் தெரியவேண்டும். ஏனெனில், நீங்கள் அவ்வழியில் இதுவரை சென்றதில்லை.”
யோசுவா 3 : 5 (ECTA)
யோசுவா மக்களிடம், “உங்களைத் தூய்மையாக்கிக்கொள்ளுங்கள். நாளை ஆண்டவர் உங்களிடையே வியத்தகு செயல்கள் புரிவார்” என்றார்.
யோசுவா 3 : 6 (ECTA)
யோசுவா குருக்களிடம், “உடன்படிக்கைப் பேழையைத் தூக்கிப் பிடியுங்கள். மக்கள்முன் கடந்து செல்லுங்கள்” என்றார். அவ்வாறே, அவர்களும் உடன்படிக்கைப் பேழையைத் தூக்கிக் கொண்டு மக்கள்முன் சென்றனர்.
யோசுவா 3 : 7 (ECTA)
ஆண்டவர் யோசுவாவிடம், “இன்று இஸ்ரயேலர் அனைவரின் பார்வையில் உன்னை உயர்த்தத் தொடங்குகிறேன். அதனால் நான் மோசேயுடன் இருந்ததுபோல் உன்னோடும் இருப்பேன் என்று அவர்கள் அறிந்து கொள்வார்கள்.
யோசுவா 3 : 8 (ECTA)
உடன்படிக்கைப் பேழையைத் தூக்கிவரும் குருக்கள் யோர்தான் ஆற்றங்கரைக்கு வந்தவுடன் அங்கேயே நிற்குமாறு அவர்களுக்குக் கட்டளையிடு” என்றார்.
யோசுவா 3 : 9 (ECTA)
யோசுவா இஸ்ரயேல் மக்களிடம், “இங்கே வாருங்கள், உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் வார்த்தைகளைக் கேளுங்கள்.
யோசுவா 3 : 10 (ECTA)
வாழும் இறைவன் உங்களிடையே இருக்கின்றார் என்று இதனால் அறிவீர்கள். அவர் உங்கள் முன்னிருந்து கானானியர், இத்தியர், இவ்வியர், பெரிசியர், கிர்காசியர், எமோரியர், எபூசியர் ஆகியோரை விரட்டிவிடுவார்.
யோசுவா 3 : 11 (ECTA)
இதோ, உலகனைத்தின் ஆண்டவரது உடன்படிக்கைப் பேழை உங்கள்முன் யோர்தானைக் கடக்கின்றது.
யோசுவா 3 : 12 (ECTA)
இப்போது இஸ்ரயேலின் பன்னிரு குலங்களிலிருந்தும் குலத்திற்கு ஒருவராக நீங்கள் தேர்ந்தெடுங்கள்.
யோசுவா 3 : 13 (ECTA)
உலகனைத்தின் ஆண்டவரது உடன்படிக்கைப் பேழையைத் தூக்கிச் செல்லும் குருக்களின் காலடிகள் யோர்தான் நீரில் பட்டவுடன் அத்தண்ணீர் பிரிந்து போகும். மேற்பகுதியிலிருந்து ஓடிவரும் தண்ணீர் குவியலாக நிற்கும்” என்றார்.
யோசுவா 3 : 14 (ECTA)
மக்கள் தங்கள் கூடாரங்களிலிருந்து யோர்தானைக் கடக்கப் புறப்படும்போது குருக்கள் உடன்படிக்கைப் பேழையைத் தூக்கிக் கொண்டு மக்கள் முன்னே சென்றனர்.
யோசுவா 3 : 15 (ECTA)
உடன்படிக்கைப் பேழையைத் தூக்கிச் சென்ற குருக்கள் யோர்தானை அடைந்தனர். அவர்கள் காலடிகள் யோர்தான் நீரின் விளிம்பில் நனைந்தவுடன், மேற்பகுதியிலிருந்து ஓடிவந்த யோர்தான் நீர் வெகுதொலையில் நின்றது. அறுவடை நாள்களில் இந்நதி கரைபுரண்டு ஓடும்.
யோசுவா 3 : 16 (ECTA)
மேற்பகுதியிலிருந்து வந்த நீர், சாரத்தானின் அருகில் இருந்து ஆதாம் நகருக்கு எதிரில் வெகு தொலையில் மேலெழும்பி நின்றது. கீழே ஓடிய நீர் பாலைநிலக் கடலாகிய சாக்கடல்** வரை ஓடிமறைந்தது. மக்களும் எரிகோவுக்கு நேர்எதிராகக் கடந்து சென்றனர். * ‘உப்புக் கடல்’ என்பது மறுபெயர்..
யோசுவா 3 : 17 (ECTA)
இஸ்ரயேலர் அனைவரும் கடந்து முடிக்கும்வரை, ஆண்டவரது உடன்படிக்கைப் பேழையைத் தூக்கிச் சென்ற குருக்கள் யோர்தான் நடுவே வறண்ட தரையில் நின்றனர். எல்லா இஸ்ரயேல் மக்களும் அவ்வறண்ட தரை வழியாக நடந்தனர்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17