யோசுவா 14 : 1 (ECTA)
யோர்தானுக்கு மேற்கே உள்ள பகுதியைப் பங்கிடல் கானான் நாட்டில் இஸ்ரயேலர் பெற்ற உடைமைகள் இவையே. இவற்றைக் குரு எலயாசர், நூனின் மகன் யோசுவா, குலங்களின் தந்தையர்களின் தலைவர்கள் ஆகியோர் இஸ்ரயேல் மக்களுக்கு உடைமையாக அளித்தனர்.
யோசுவா 14 : 2 (ECTA)
மோசேயின் மூலம் ஆண்டவர் கட்டளையிட்டபடி ஒன்பது குலங்களுக்கும், அரைக் குலத்திற்கும் திருவுளச்சீட்டு மூலம் உடைமை அளிக்கப்பட்டது. [* எண் 26:52-56; 34: 13 ]
யோசுவா 14 : 3 (ECTA)
மோசே இரண்டு குலங்களுக்கும், அரைக் குலத்திற்கும் யோர்தானுக்கு அப்பால் உடைமை அளித்தார். லேவியர்களுக்கு அவர்கள் நடுவில் உடைமை அளிக்கவில்லை. [* எண் 32:33; 34:14-15; இச 3:12- 17 ]
யோசுவா 14 : 4 (ECTA)
யோசேப்பின் புதல்வர் மனாசே, எப்ராயிம் என்று இரண்டு குலங்களாக இருந்தனர். லேவியருக்கு நிலத்தில் பங்கு தரப்படவில்லை. ஆனால், அவர்கள் தங்குவதற்கு நகர்களும் அவர்களின் கால்நடைகளுக்கும் மற்ற உடைமைகளுக்கும் மேய்ச்சல் நிலங்களும் தரப்பட்டன.
யோசுவா 14 : 5 (ECTA)
ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே இஸ்ரயேலர் செய்து நிலத்தைப் பகிர்ந்து கொண்டனர்.
யோசுவா 14 : 6 (ECTA)
யூதாவின் மக்கள் கில்காலில் யோசுவாவிடம் வந்தனர். கெனிசியனும் எபுன்னேயின் மகனுமான காலேபு அவரிடம், “ஆண்டவர் கடவுளின் மனிதரான மோசேயிடம் காதேசு பர்னேயாவில் என்னைப்பற்றியும் உன்னைப்பற்றியும் கூறிய வார்த்தை என்ன என்று உனக்குத் தெரியும். [* எண் 14: 30 ]
யோசுவா 14 : 7 (ECTA)
நான் நாற்பது வயதாக இருக்கும்போது ஆண்டவரின் ஊழியராகிய மோசே என்னைக் காதேசு-பர்னேயாவிலிருந்து நாட்டை உளவறிய அனுப்பினார். திரும்பி வந்து என் மனத்திற்குப்பட்டதை அவருக்குத் தெரிவித்தேன். [* எண் 13:1- 30 ]
யோசுவா 14 : 8 (ECTA)
என்னுடன் வந்த என் சகோதரர் மக்களின் இதயத்தை அச்சத்தால் நடுங்கச் செய்தனர். நான் முற்றிலும் என் கடவுளாகிய ஆண்டவரைப் பின்பற்றினேன்.
யோசுவா 14 : 9 (ECTA)
மோசே அந்நாளில், “நீ என் கடவுளாகிய ஆண்டவரை முற்றிலும் பின்பற்றியதால், உன் காலடி பட்ட நிலத்தை எல்லாம் உறுதியாகவே உனக்கும் உன் மக்களுக்கும் என்றும் உடைமையாக அளிப்பேன்” என்று எனக்கு ஆணையிட்டுக் கூறினார். * எண் 14:24..
யோசுவா 14 : 10 (ECTA)
இதோ! அவர் கூறியது போல் நாற்பது ஆண்டுகளாக இதுவரை ஆண்டவர் என்னை உயிருடன் வைத்துள்ளார். இதை ஆண்டவர் மோசேயிடம் கூறியபொழுது இஸ்ரயேலர் பாலைநிலத்தில் பயணம் செய்துகொண்டிருந்தனர். இப்போது இதோ நான் எண்பத்தைந்து வயதானவன்.
யோசுவா 14 : 11 (ECTA)
மோசே என்னை அனுப்பிய நாளன்று வலிமையுடன் இருந்ததுபோல் மீண்டும் போர் புரிவதற்கும் போவதற்கும் வருவதற்கும் வலிமையுடன் இருக்கின்றேன்.
யோசுவா 14 : 12 (ECTA)
ஆண்டவர் அந்நாளில் கூறியதுபோல் இப்பொழுது எனக்கு இந்த மலைநாட்டைக் கொடு. ஏனெனில், அங்கே ஆனாக்கியர் இருக்கின்றனர். அவர்கள் அரண்சூழ்ந்த மாநகர்களில் வாழ்கின்றனர் என்று நீ கேள்விப்பட்டிருக்கின்றாய். ஆண்டவர் என்னோடு இருக்கக்கூடும். ஆண்டவர் கூறியபடி அவர்களைத் துரத்தியடிப்பேன்” என்றார்.
யோசுவா 14 : 13 (ECTA)
யோசுவா எபுன்னேயின் மகன் காலேபுக்கு ஆசி வழங்கி எபிரோனை உடைமையாக அளித்தார்.
யோசுவா 14 : 14 (ECTA)
இந்நாள்வரை எபிரோன் கெனிசியனான எபுன்னேயின் மகன் காலேபின் உடைமையாக உள்ளது. ஏனெனில், அவர் இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரை முற்றிலும் பின்பற்றினார்.
யோசுவா 14 : 15 (ECTA)
முன்னாளில் எபிரோனுக்குக் கிர்யத்து அர்பா என்ற பெயர் வழங்கியது. அர்பா ஆனாக்கியருள் பெருமைமிக்க மனிதன் ஆவான். நாட்டில் போரின்றி அமைதி நிலவிற்று.
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15