யோவான் 6 : 1 (ECTA)
இயேசு கலிலேயக் கடலை கடந்து மறுகரைக்குச் சென்றார். அதற்குத் திபேரியக் கடல் என்றும் பெயர் உண்டு.
யோவான் 6 : 2 (ECTA)
உடல் நலம் அற்றோருக்கு அவர் செய்துவந்த அரும் அடையாளங்களைக் கண்டு மக்கள் பெருந்திரளாய் அவரைப் பின் தொடர்ந்தனர்.
யோவான் 6 : 3 (ECTA)
இயேசு மலைமேல் ஏறித் தம் சீடரோடு அமர்ந்தார்.
யோவான் 6 : 4 (ECTA)
யூதருடைய பாஸ்கா விழா அண்மையில் நிகழவிருந்தது.
யோவான் 6 : 5 (ECTA)
இயேசு நிமிர்ந்து பார்த்து மக்கள் பெருந்திரளாய் அவரிடம் வருவதைக் கண்டு, "இவர்கள் உண்பதற்கு நாம் எங்கிருந்து அப்பம் வாங்கலாம்?" என்று பிலிப்பிடம் கேட்டார்.
யோவான் 6 : 6 (ECTA)
தாம் செய்யப்போவதை அறிந்திருந்தும் அவரைச் சோதிப்பதற்காகவே இக்கேள்வியைக் கேட்டார்.
யோவான் 6 : 7 (ECTA)
பிலிப்பு மறுமொழியாக, "இருநூறு தெனாரியத்திற்கு அப்பம் வாங்கினாலும் ஆளுக்கு ஒரு சிறு துண்டும் கிடைக்காதே" என்றார்.
யோவான் 6 : 8 (ECTA)
அவருடைய சீடருள் ஒருவரும் சீமோன் பேதுருவின் சகோதரருமான அந்திரேயா,
யோவான் 6 : 9 (ECTA)
"இங்கே சிறுவன் ஒருவன் இருக்கிறான். அவனிடம் ஐந்து வாற்கோதுமை அப்பங்களும் இரண்டு மீன்களும் உள்ளன. ஆனால் இத்தனை பேருக்கு இவை எப்படிப் போதும்?" என்றார்.
யோவான் 6 : 10 (ECTA)
இயேசு, "மக்களை அமரச் செய்யுங்கள்" என்றார். அப்பகுதி முழுவதும் புல்தரையாய் இருந்தது. அமர்ந்திருந்த ஆண்களின் எண்ணிக்கை ஏறக்குறைய ஐயாயிரம்.
யோவான் 6 : 11 (ECTA)
இயேசு அப்பங்களை எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி அமர்ந்திருந்தோருக்குக் கொடுத்தார். அவ்வாறே மீன்களையும் பகிர்ந்தளித்தார். அவர்களுக்கு வேண்டிய மட்டும் கிடைத்தது.
யோவான் 6 : 12 (ECTA)
அவர்கள் வயிறார உண்டபின், "ஒன்றும் வீணாகாதபடி, எஞ்சிய துண்டுகளைச் சேர்த்து வையுங்கள்" என்று தம் சீடரிடம் கூறினார்.
யோவான் 6 : 13 (ECTA)
மக்கள் உண்டபின் ஐந்து வாற்கோதுமை அப்பங்களிலிருந்து எஞ்சிய துண்டுகளைச் சேர்த்துச் சீடர்கள் பன்னிரண்டு கூடைகளில் நிரப்பினார்கள்.
யோவான் 6 : 14 (ECTA)
இயேசு செய்த இந்த அரும் அடையாளத்தைக் கண்ட மக்கள், "உலகிற்கு வரவிருந்த இறைவாக்கினர் உண்மையில் இவரே" என்றார்கள்.
யோவான் 6 : 15 (ECTA)
அவர்கள் வந்து தம்மைப் பிடித்துக் கொண்டுபோய் அரசராக்கப்போகிறார்கள் என்பதை உணர்ந்து இயேசு மீண்டும் தனியாய் மலைக்குச் சென்றார்.
யோவான் 6 : 16 (ECTA)
மாலை வேளையானதும் இயேசுவின் சீடர்கள் கடற்கரைக்கு வந்து,
யோவான் 6 : 17 (ECTA)
படகேறி மறுகரையிலுள்ள கப்பர் நாகுமுக்குப் புறப்பட்டார்கள், ஏற்கெனவே இருட்டிவிட்டது. இயேசுவும் அவர்களிடம் அதுவரை வந்து சேரவில்லை.
யோவான் 6 : 18 (ECTA)
அப்போது பெருங்காற்று வீசிற்று; கடல் பொங்கி எழுந்தது.
யோவான் 6 : 19 (ECTA)
அவர்கள் ஐந்து அல்லது ஆறு கிலோ மீட்டர் தொலை படகு ஓட்டியபின் இயேசு கடல்மீது நடந்து படகருகில் வருவதைக் கண்டு அஞ்சினார்கள்.
யோவான் 6 : 20 (ECTA)
இயேசு அவர்களிடம், "நான்தான், அஞ்சாதீர்கள்" என்றார்.
யோவான் 6 : 21 (ECTA)
அவர்கள் அவரைப் படகில் ஏற்றிக் கொள்ள விரும்பினார்கள். ஆனால் படகு உடனே அவர்கள் சேரவேண்டிய இடம்போய்ச் சேர்ந்துவிட்டது.
யோவான் 6 : 22 (ECTA)
சீடர்கள் புறப்பட்ட கரையிலேயே மறு நாளும் மக்கள் கூட்டமாய் நின்று கொண்டிருந்தார்கள். முந்தின நாள் ஒரு படகைத்தவிர வேறு படகு எதுவும் அங்கு இல்லை என்பதையும் அதில் இயேசுவின் சீடர்கள் மட்டும் போனார்களே அன்றி இயேசு அவர்களோடு அப்படகில் ஏறவில்லை என்பதையும் அவர்கள் கண்கூடாகப் பார்த்திருந்தார்கள்.
யோவான் 6 : 23 (ECTA)
அப்போது, ஆண்டவர் கடவுளுக்கு நன்றி செலுத்திக் கொடுத்த உணவை மக்கள் உண்ட இடத்திற்கு அருகில் திபேரியாவிலிருந்து படகுகள் வந்து சேர்ந்தன.
யோவான் 6 : 24 (ECTA)
இயேசுவும் அவருடைய சீடரும் அங்கு இல்லை என்பதைக் கண்ட மக்கள் கூட்டமாய் அப்படகுகளில் ஏறி இயேசுவைத் தேடிக் கப்பர்நாகுமுக்குச் சென்றனர்.
யோவான் 6 : 25 (ECTA)
அங்கு கடற்கரையில் அவர்கள் அவரைக் கண்டு, "ரபி, எப்போது இங்கு வந்தீர்?" என்ற கேட்டார்கள்.
யோவான் 6 : 26 (ECTA)
இயேசு மறுமொழியாக, "நீங்கள் அரும் அடையாளங்களைக் கண்டதால் அல்ல, மாறாக, அப்பங்களை வயிறார உண்டதால்தான் என்னைத் தேடுகிறீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.
யோவான் 6 : 27 (ECTA)
அழிந்துபோகும் உணவுக்காக உழைக்க வேண்டாம். நிலைவாழ்வு தரும் அழியாத உணவுக்காகவே உழையுங்கள். அவ்வுணவை மானிடமகன் உங்களுக்குக் கொடுப்பார். ஏனெனில் தந்தையாகிய கடவுள் அவருக்கே தம் அதிகாரத்தை அளித்துள்ளார்" என்றார்.
யோவான் 6 : 28 (ECTA)
அவர்கள் அவரை நோக்கி, "எங்கள் செயல்கள் கடவுளுக்கு ஏற்றவையாக இருப்பதற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டார்கள்.
யோவான் 6 : 29 (ECTA)
இயேசு அவர்களைப் பார்த்து, "கடவுள் அனுப்பியவரை நம்பவதே கடவுளுக்கேற்ற செயல்;"" என்றார்.
யோவான் 6 : 30 (ECTA)
அவர்கள், "நாங்கள் கண்டு உம்மை நம்பும் வகையில் நீர் என்ன அரும் அடையாளம் காட்டுகிறீர்? அதற்காக என்ன அரும் செயல் செய்கிறீர்?
யோவான் 6 : 31 (ECTA)
எங்கள் முன்னோர் பாலை நிலத்தில் மன்னாவை உண்டனரே! "அவர்கள் உண்பதற்கு வானிலிருந்து உணவு அருளினார்" என்று மறைநூலிலும் எழுதப்பட்டுள்ளது அல்லவா!" என்றனர்.
யோவான் 6 : 32 (ECTA)
இயேசு அவர்களிடம், "உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; வானிலிருந்து உங்களுக்கு உணவு அருளியவர் மோசே அல்ல; வானிலிருந்து உங்களுக்கு உண்மையான உணவு அருள்பவர் என் தந்தையே.
யோவான் 6 : 33 (ECTA)
கடவுள் தரும் உணவு வானிலிருந்து இறங்கி வந்து உலகுக்கு வாழ்வு அளிக்கிறது" என்றார்.
யோவான் 6 : 34 (ECTA)
அவர்கள், "ஐயா, இவ்வுணவை எங்களுக்கு எப்போதும் தாரும் "; என்று கேட்டுக்கொண்டார்கள்.
யோவான் 6 : 35 (ECTA)
இயேசு அவர்களிடம், "வாழ்வு தரும் உணவு நானே. என்னிடம் வருபவருக்குப் பசியே இராது; என்னிடம் நம்பிக்கை கொண்டிருப்பவருக்கு என்றுமே தாகம் இராது.
யோவான் 6 : 36 (ECTA)
ஆனால், நான் உங்களுக்குச் சொன்னவாறே நீங்கள் என்னைக் கண்டிருந்தும் நம்பவில்லை.
யோவான் 6 : 37 (ECTA)
தந்தை என்னிடம் ஒப்படைக்கும் அனைவரும் வந்து சேருவர். என்னிடம் வருபவரை நான் புறம்பே தள்ளிவிடமாட்டேன்.
யோவான் 6 : 38 (ECTA)
ஏனெனில் என் சொந்த விருப்பத்தை நிறைவேற்ற , என்னை அனுப்பியவரின் விருப்பத்தை நிறைவேற்றவே நான் விண்ணகத்திலிருந்து இறங்கி வந்தேன்.
யோவான் 6 : 39 (ECTA)
"அவர் என்னிடம் ஒப்படைக்கும் எவரையும் நான் அழிய விடாமல் இறுதி நாளில் அனைவரையும் உயிர்த்தெழச் செய்ய வேண்டும். இதுவே என்னை அனுப்பியவரின் திருவுளம்.
யோவான் 6 : 40 (ECTA)
மகனைக் கண்டு அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் நிலைவாழ்வு பெற வேண்டும் என்பதே என் தந்தையின் திருவுளம். நானும் இறுதி நாளில் அவர்களை உயிர்த்தெழச் செய்வேன்" என்று கூறினார்.
யோவான் 6 : 41 (ECTA)
"விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த உணவு நானே" என்று இயேசு கூறியதால் யூதர்கள் அவருக்கு எதிராக முணுமுணுத்தார்கள்.
யோவான் 6 : 42 (ECTA)
"இவர் யோசேப்பின் மகனாகிய இயேசு அல்லவா? இவருடைய தாயும் தந்தையும் நமக்குத் தெரியாதவர்களா? அப்படியிருக்க, 'நான் விண்ணகத்திலிருந்து இறங்கி வந்தேன்' என இவர் எப்படி சொல்லலாம்?" என்று பேசிக்கொண்டார்கள்.
யோவான் 6 : 43 (ECTA)
இயேசு அவர்களைப் பார்த்துக் கூறியது; "உங்களிடையே முணுமுணுக்க வேண்டாம்.
யோவான் 6 : 44 (ECTA)
என்னை அனுப்பிய தந்தை ஈர்த்தாலொழிய எவரும் என்னிடம் வர இயலாது. என்னிடம் வருபவரை நானும் இறுதி நாளில் உயிர்த்தெழச் செய்வேன்.
யோவான் 6 : 45 (ECTA)
"கடவுள்தாமே அனைவருக்கும் கற்றுத்தருவார்' என இறைவாக்கு நூல்களில் எழுதியுள்ளது. தந்தைக்குச் செவிசாய்ந்து அவரிடமிருந்து கற்றுக்கொண்ட அனைவரும் என்னிடம் வருவர்.
யோவான் 6 : 46 (ECTA)
கடவுள்தாமே கற்றுத்தருவார் என்பதிலிருந்து தந்தையை எவராவது கண்டுள்ளார் என்று பொருள் கொள்ளக்கூடாது. கடவுளிடமிருந்து வந்துள்ளவர் மட்டுமே கடவுளைக் கண்டுள்ளார்.
யோவான் 6 : 47 (ECTA)
உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; என்னை நம்புவோர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளனர்.
யோவான் 6 : 48 (ECTA)
வாழ்வுதரும் உணவு நானே.
யோவான் 6 : 49 (ECTA)
உங்கள் முன்னோர் பாலைநிலத்தில் மன்னாவை உண்டபோதிலும் இறந்தனர்.
யோவான் 6 : 50 (ECTA)
உண்பவரை இறவாமல் இருக்கச் செய்யும் உணவு விண்ணகத்திலிருந்து இறங்கிவந்த இந்த உணவே.
யோவான் 6 : 51 (ECTA)
"விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார். எனது சதையை உணவாகக் கொடுக்கிறேன். அதை உலகு வாழ்வதற்காகவே கொடுக்கிறேன். "
யோவான் 6 : 52 (ECTA)
"நாம் உண்பதற்கு இவர் தமது சதையை எப்படிக் கொடுக்க இயலும்?" என்ற வாக்குவாதம் அவர்களிடையே எழுந்தது.
யோவான் 6 : 53 (ECTA)
இயேசு அவர்களிடம், "உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; மானிடமகனுடைய சதையை உண்டு அவருடைய இரத்தத்தைக் குடித்தாலொழிய நீங்கள் வாழ்வு அடையமாட்டீர்கள்.
யோவான் 6 : 54 (ECTA)
எனது சதையை உண்டு என் இரத்தத்தைக் குடிப்பவர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளார். நானும் அவரை இறுதி நாளில் உயிர்த்தெழச் செய்வேன்.
யோவான் 6 : 55 (ECTA)
எனது சதை உண்மையான உணவு. எனது இரத்தம் உண்மையான பானம்.
யோவான் 6 : 56 (ECTA)
எனது சதையை உண்டு எனது இரத்தத்தைக் குடிப்போர் என்னோடு இணைந்திருப்பர், நானும் அவர்களோடு இணைந்திருப்பேன்.
யோவான் 6 : 57 (ECTA)
வாழும் தந்தை என்னை அனுப்பினார். நானும் அவரால் வாழ்கிறேன். அதுபோல் என்னை உண்போரும் என்னால் வாழ்வர்.
யோவான் 6 : 58 (ECTA)
உண்பவரை என்றும் வாழச் செய்யும் உணவு விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த இந்த உணவே. இது நம் முன்னோர் உண்ட உணவு போன்றது அல்ல. அதை உண்டவர்கள் இறந்து போனார்கள். இவ்வுணவை உண்போர் என்றும் வாழ்வர். "
யோவான் 6 : 59 (ECTA)
இயேசு கப்பர்நாகுமிலுள்ள தொழுகைக்கூடத்தில் இவ்வாறு கற்பித்தார்.
யோவான் 6 : 60 (ECTA)
அவருடைய சீடர் பலர் இதைக் கேட்டு, "இதை ஏற்றுக் கொள்வது மிகக் கடினம்; இப்பேச்சை இன்னும் கேட்டுக்கொண்டிருக்க முடியுமா?" என்று பேசிக் கொண்டனர்.
யோவான் 6 : 61 (ECTA)
இதுபற்றித் தம் சீடர் முணுமுணுப்பதை இயேசு உணர்ந்து அவர்களிடம், "நீங்கள் நம்புவதற்கு இது தடையாய் இருக்கிறதா?
யோவான் 6 : 62 (ECTA)
அப்படியானால் மானிடமகன் தாம் முன்பு இருந்த இடத்திற்கு ஏறிச் செல்வதை நீங்கள் கண்டால் அது உங்களுக்கு எப்படி இருக்கும்?
யோவான் 6 : 63 (ECTA)
வாழ்வு தருவது தூய ஆவியே; ஊனியல்பு ஒன்றுக்கும் உதவாது. நான் கூறிய வார்த்தைகள் வாழ்வுதரும் ஆவியைக் கொடுக்கின்றன.
யோவான் 6 : 64 (ECTA)
அப்படியிருந்தும் உங்களுள் சிலர் என்னை நம்பவில்லை" என்றார். நம்பாதோர் யார், யார் என்பதும் தம்மைக் காட்டிக்கொடுக்கவிருப்பவன் யார் என்பதும் இயேசுவுக்குத் தொடக்கத்திலிருந்தே தெரிந்திருந்தது.
யோவான் 6 : 65 (ECTA)
மேலும் அவர், "இதன் காரணமாகத்தான் 'என் தந்தை அருள் கூர்ந்தால் அன்றி யாரும் என்னிடம் வர இயலாது" என்று உங்களுக்குக் கூறினேன்" என்றார்.
யோவான் 6 : 66 (ECTA)
அன்றே இயேசுவின் சீடருள் பலர் அவரை விட்டு விலகினர். அன்று முதல் அவர்கள் அவரோடு சேர்ந்து செல்லவில்லை.
யோவான் 6 : 67 (ECTA)
இயேசு பன்னிரு சீடரிடம், "நீங்களும் போய் விட நினைக்கிறீர்களா?" என்று கேட்டார்.
யோவான் 6 : 68 (ECTA)
சீமோன் பேதுரு மறுமொழியாக, "ஆண்டவரே நாங்கள் யாரிடம் போவோம்? நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன.
யோவான் 6 : 69 (ECTA)
நீரே கடவுளுக்கு அர்ப்பணமானவர் என்பதை நாங்கள் அறிந்து கொண்டோம். அதை நம்புகிறோம்" என்றார்.
யோவான் 6 : 70 (ECTA)
இயேசு அவர்களைப் பார்த்து, "பன்னிருவராகிய உங்களை நான் தேர்ந்துகொண்டேன் அல்லவா? ஆயினும் உங்களுள் ஒருவன் அலகையாய் இருக்கிறான்" என்றார்.
யோவான் 6 : 71 (ECTA)
அவர் சீமோன் இஸ்காரியோத்தின் மகனாகிய யூதாசைப் பற்றியே இப்படிச் சொன்னார். ஏனெனில் பன்னிருவருள் ஒருவனாகிய அவன் அவரைக் காட்டிக் கொடுக்கவிருந்தான்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71

BG:

Opacity:

Color:


Size:


Font: