யோவான் 19 : 1 (ECTA)
பின்னர் பிலாத்து இயேசுவைச் சாட்டையால் அடிக்கச் செய்தான்.
யோவான் 19 : 2 (ECTA)
வீரர்கள் ஒரு முள்முடி பின்னி அவர் தலையின்மேல் வைத்து, செந்நிற மேலுடையை அவருக்கு அணிவித்தார்கள்.
யோவான் 19 : 3 (ECTA)
அவரிடம் வந்து, “யூதரின் அரசே வாழ்க!” என்று சொல்லி அவருடைய கன்னத்தில் அறைந்தார்கள்.
யோவான் 19 : 4 (ECTA)
பிலாத்து மீண்டும் வெளியே வந்து அவர்களிடம், “அவனை நான் உங்கள்முன் வெளியே கூட்டிவருகிறேன், பாருங்கள். அவனிடம் நான் குற்றம் ஒன்றும் காணவில்லை என்பதை அறிந்துகொள்ளுங்கள்” என்றான்.
யோவான் 19 : 5 (ECTA)
இயேசு முள் முடியும் செந்நிற மேலுடையும் அணிந்தவராய் வெளியே வந்தார். பிலாத்து அவர்களிடம், “இதோ! மனிதன்”* என்றான். * ‘பாருங்கள், இவர்தான் மனிதன்’ எனவும் மொழிபெயர்க்கலாம்..
யோவான் 19 : 6 (ECTA)
அவரைக் கண்டதும் தலைமைக் குருக்களும் காவலர்களும், “சிலுவையில் அறையும், சிலுவையில் அறையும்” என்று கத்தினார்கள். பிலாத்து அவர்களிடம், “நீங்களே இவனைக் கொண்டு போய்ச் சிலுவையில் அறையுங்கள். இவனிடம் குற்றம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை” என்றான்.
யோவான் 19 : 7 (ECTA)
யூதர்கள் அவரைப் பார்த்து, “எங்களுக்கு ஒரு சட்டம் உண்டு. அச்சட்டத்தின்படி இவன் சாகவேண்டும். ஏனெனில், இவன் தன்னையே இறைமகன் என உரிமைகொண்டாடுகிறான்” என்றனர். [* லேவி 24:16; யோவா 10: 33 ]
யோவான் 19 : 8 (ECTA)
பிலாத்து இதைக் கேட்டதும் இன்னும் மிகுதியாக அஞ்சினான்.
யோவான் 19 : 9 (ECTA)
அவன் மீண்டும் ஆளுநர் மாளிகைக்குச் சென்று இயேசுவிடம், “நீ எங்கிருந்து வந்தவன்?” என்று கேட்டான். ஆனால், இயேசு அவனுக்குப் பதில் கூறவில்லை.
யோவான் 19 : 10 (ECTA)
அப்போது பிலாத்து, “என்னோடு பேசமாட்டாயா? உன்னை விடுதலை செய்யவும் எனக்கு அதிகாரம் உண்டு, உன்னைச் சிலுவையில் அறையவும் எனக்கு அதிகாரம் உண்டு என்பது உனக்குத் தெரியாதா?” என்றான்.
யோவான் 19 : 11 (ECTA)
இயேசு மறுமொழியாக, “மேலிருந்து அருளப்படாவிடில் உமக்கு என் மேல் எந்த அதிகாரமும் இராது. ஆகவே, என்னை உம்மிடம் ஒப்புவித்தவன்தான் பெரும் பாவம் செய்தவன்” என்றார்.
யோவான் 19 : 12 (ECTA)
அதுமுதல் பிலாத்து அவரை விடுவிக்க வழிதேடினான். ஆனால், யூதர்கள், “நீர் இவனை விடுவித்தால் சீசருடைய நண்பராய் இருக்க முடியாது. தம்மையே அரசராக்கிக் கொள்ளும் எவரும் சீசருக்கு எதிரி” என்றார்கள்.
யோவான் 19 : 13 (ECTA)
இவ்வார்த்தைகளைக் கேட்டதும் பிலாத்து இயேசுவை வெளியே கூட்டி வந்தான். “கல்தளம்” என்னும் இடத்தில் இருந்த நடுவர் இருக்கை மீது அமர்ந்தான். அந்த இடத்திற்கு எபிரேய மொழியில் “கபதா” என்பது பெயர்.
யோவான் 19 : 14 (ECTA)
அன்று பாஸ்கா விழாவுக்கு ஏற்பாடு செய்யும் நாள். ஏறக்குறைய நண்பகல் வேளை. பிலாத்து யூதர்களிடம், “இதோ, உங்கள் அரசன்!” என்றான்.
யோவான் 19 : 15 (ECTA)
அவர்கள், “ஒழிக! ஒழிக! அவனைச் சிலுவையில் அறையும்” என்று கத்தினார்கள். பிலாத்து அவர்களிடம், “உங்கள் அரசனை நான் சிலுவையில் அறையவேண்டும் என்கிறீர்களா?” என்று கேட்டான். அதற்குக் தலைமைக் குருக்கள், “எங்களுக்குச் சீசரைத் தவிர வேறுஅரசர் இல்லை” என்றார்கள். [* லூக் 19: 14 ]
யோவான் 19 : 16 (ECTA)
அப்போது பிலாத்து அவரைச் சிலுவையில் அறையுமாறு அவர்களிடம் ஒப்புவித்தான். அவர்கள் இயேசுவைத் தம் பொறுப்பில் ஏற்றுக்கொண்டார்கள்.
யோவான் 19 : 17 (ECTA)
இயேசுவைச் சிலுவையில் அறைதல்
(மத் 27:32-44; மாற் 15:21-32; லூக் 23:26-43)
இயேசு சிலுவையைத் தாமே சுமந்துகொண்டு ‘மண்டை ஓட்டு இடம்’ என்னுமிடத்திற்குச் சென்றார். அதற்கு எபிரேய மொழியில் கொல்கொதா என்பது பெயர்.
யோவான் 19 : 18 (ECTA)
அங்கே அவர்கள் இயேசுவையும் அவரோடு வேறு இருவரையும் சிலுவைகளில் அறைந்தார்கள்; அவ்விருவரையும் இரு பக்கங்களிலும் இயேசுவை நடுவிலுமாக அறைந்தார்கள்.
யோவான் 19 : 19 (ECTA)
பிலாத்து குற்ற அறிக்கை ஒன்று எழுதி அதைச் சிலுவையின் மீது வைத்தான். அதில் “நாசரேத்து இயேசு யூதர்களின் அரசன்” என்று எழுதியிருந்தது.
யோவான் 19 : 20 (ECTA)
இயேசு சிலுவையில் அறையப்பட்ட இடம் நகரத்துக்கு அருகில் இருந்ததால் யூதருள் பலர் இந்தக் குற்ற அறிக்கையை வாசித்தனர். அது எபிரேயம், இலத்தீன், கிரேக்கம் ஆகிய மொழிகளில் எழுதப்பட்டிருந்தது. [* எபி 13: 12 ]
யோவான் 19 : 21 (ECTA)
யூதரின் தலைமைக் குருக்கள் பிலாத்திடம், “‘யூதரின் அரசன்’ என்று எழுத வேண்டாம்; மாறாக, ‘யூதரின் அரசன் நான்’ என்று அவனே சொல்லிக் கொண்டதாக எழுதும்” என்று கேட்டுக்கொண்டார்கள்.
யோவான் 19 : 22 (ECTA)
பிலாத்து அவர்களைப் பார்த்து, “நான் எழுதியது எழுதியதே” என்றான்.
யோவான் 19 : 23 (ECTA)
இயேசுவைச் சிலுவையில் அறைந்தபின் படைவீரர் அவருடைய மேலுடைகளை நான்கு பாகமாகப் பிரித்து ஆளுக்கு ஒரு பாகம் எடுத்துக் கொண்டார்கள். அங்கியையும் அவர்களே எடுத்துக்கொண்டனர். அந்த அங்கி மேலிருந்து கீழ்வரை தையலே இல்லாமல் நெய்யப்பட்டிருந்தது.
யோவான் 19 : 24 (ECTA)
எனவே, அவர்கள் ஒருவரை ஒருவர் நோக்கி, “அதைக் கிழிக்க வேண்டாம். அது யாருக்குக் கிடைக்கும் என்று பார்க்கச் சீட்டுக் குலுக்கிப் போடுவோம்” என்றார்கள். “என் ஆடைகளைத் தங்களுக்குள் பகிர்ந்து என் உடைமீது சீட்டுப் போட்டார்கள்” என்னும் மறைநூல் வாக்கு இவ்வாறு நிறைவேறியது. [* திபா 22: 18 ]
யோவான் 19 : 25 (ECTA)
சிலுவை அருகில் இயேசுவின் தாயும், தாயின் சகோதரியும் குளோப்பாவின் மனைவியுமான மரியாவும், மகதலா மரியாவும் நின்று கொண்டிருந்தனர்.
யோவான் 19 : 26 (ECTA)
இயேசு தம் தாயையும் அருகில் நின்ற தம் அன்புச் சீடரையும் கண்டு தம் தாயிடம், “அம்மா, இவரே உம் மகன்” என்றார்.
யோவான் 19 : 27 (ECTA)
பின்னர் தம் சீடரிடம், “இவரே உம் தாய்” என்றார். அந்நேரமுதல் அச்சீடர் அவரைத் தம் வீட்டில் ஏற்று ஆதரவு அளித்து வந்தார்.
யோவான் 19 : 28 (ECTA)
இயேசுவின் சாவு
(மத் 27:45-56; மாற் 15:33-41; லூக் 23:44-49)
இதன்பின், அனைத்தும் நிறைவேறிவிட்டது என்பதை அறிந்த இயேசு, “தாகமாய் இருக்கிறது” என்றார். மறைநூலில் எழுதியுள்ளது நிறைவேறவே இவ்வாறு சொன்னார். [* திபா 69:21; 22: 15 ]
யோவான் 19 : 29 (ECTA)
அங்கே ஒரு பாத்திரம் நிறையப்புளித்த திராட்சை இரசம் இருந்தது. அதில் கடற்பஞ்சை நன்கு தோய்த்து ஈசோப்புத் தண்டில் பொருத்தி அதை அவர்கள் அவரது வாயில் வைத்தார்கள்
யோவான் 19 : 30 (ECTA)
அந்த இரசத்தைக் குடித்ததும் இயேசு, “எல்லாம் நிறைவேறிற்று” என்று கூறித் தலை சாய்த்து ஆவியை ஒப்படைத்தார்.
யோவான் 19 : 31 (ECTA)
இயேசுவின் விலாவைக் குத்துதல் அன்று பாஸ்கா விழாவுக்கு ஏற்பாடு செய்யும் நாள். அடுத்த நாள் ஓய்வு நாளாகவும் பெருநாளாகவும் இருந்தது. எனவே, அன்று சிலுவையில் உடல்கள் தொங்கலாகா என்பதற்காகக் கால்களை முறித்துச் சடலங்களை எடுத்துவிடுமாறு யூதர்கள் பிலாத்திடம் கேட்டுக்கொண்டார்கள். [* இச 21: 23 ]
யோவான் 19 : 32 (ECTA)
ஆகவே படைவீரர் வந்து இயேசுவோடு சிலுவையில் அறையப் பட்டிருந்தவருள் ஒருவனுடைய கால்களை முதலில் முறித்தார்கள்; பின்னர் மற்றவனுடைய கால்களையும் முறித்தார்கள்.
யோவான் 19 : 33 (ECTA)
பின்பு அவர்கள் இயேசுவிடம் வந்தார்கள். அவர் ஏற்கெனவே இறந்து போயிருந்ததைக் கண்டு அவருடைய கால்களை முறிக்கவில்லை.
யோவான் 19 : 34 (ECTA)
ஆனால், படைவீரருள் ஒருவர் இயேசுவின் விலாவை ஈட்டியால் குத்தினார் உடனே இரத்தமும் தண்ணீரும் வடிந்தன.
யோவான் 19 : 35 (ECTA)
இதை நேரில் கண்டவரே இதற்குச் சாட்சி. அவரது சான்று உண்மையானதே. அவர் உண்மையையே கூறுகிறார் என்பது அவருக்குத் தெரியும். நீங்களும் நம்ப வேண்டும் என்பதற்காகவே அவர் இதைக் கூறுகிறார்.
யோவான் 19 : 36 (ECTA)
“எந்த எலும்பும் முறிபடாது” என்னும் மறைநூல் வாக்கு இவ்வாறு நிறைவேறியது. [* விப 12:46; எண் 9:12; திபா 34: 20 ]
யோவான் 19 : 37 (ECTA)
மேலும் “தாங்கள் ஊடுருவக் குத்தியவரை உற்றுநோக்குவார்கள்” என்றும் மறைநூல் கூறுகிறது. [* செக் 12:10; திவெ 1: 7 ]
யோவான் 19 : 38 (ECTA)
இயேசுவை அடக்கம் செய்தல்
(மத் 27:57-61; மாற் 15:42-47; லூக் 23:50-56)
அரிமத்தியா ஊரைச் சேர்ந்த யோசேப்பு என்பவர் இயேசுவின் சீடர்களுள் ஒருவர்; யூதருக்கு அஞ்சியதால் தம்மைச் சீடர் என்று வெளிப்படையாகக் காட்டிக்கொள்ளாதவர். அவர் இயேசுவின் உடலை எடுத்துக் கொண்டுபோகப் பிலாத்திடம் அனுமதி கேட்டார். பிலாத்தும் அனுமதி கொடுத்தான். யோசேப்பு வந்து இயேசுவின் சடலத்தை எடுத்துக்கொண்டு போனார்.
யோவான் 19 : 39 (ECTA)
முன்பு ஒருமுறை இரவில் இயேசுவிடம் வந்த நிக்கதேம் என்பவரும் அங்கு வந்து சேர்ந்தார். அவர் வெள்ளைப்போளமும் சந்தனத் தூளும் கலந்து ஏறக்குறைய முப்பது கிலோ கிராம் கொண்டுவந்தார். [* யோவா 3:1, 2 ]
யோவான் 19 : 40 (ECTA)
அவர்கள் இயேசுவின் உடலை எடுத்து யூத அடக்க முறைப்படி நறுமணப் பொருள்களுடன் துணிகளால் சுற்றிக் கட்டினார்கள்.
யோவான் 19 : 41 (ECTA)
அவர் சிலுவையில் அறையப்படடிருந்த இடத்தில் ஒருதோட்டம் இருந்தது. அங்கே புதிய கல்லறை ஒன்று இருந்தது. அதில் அதுவரை யாரும் அடக்கம் செய்யப்படவில்லை.
யோவான் 19 : 42 (ECTA)
அன்று பாஸ்கா விழாவுக்கு ஆயத்த நாளாய் இருந்ததாலும் அக்கல்லறை அருகில் இருந்ததாலும் அவர்கள் இயேசுவை அதில் அடக்கம் செய்தார்கள்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42