யோவான் 18 : 1 (ECTA)
இயேசுவைக் கைது செய்தல்
(மத் 26:47-56; மாற் 14:43-50; லூக் 22:47-53) இவற்றைக் கூறியபின் இயேசு தம் சீடர்களோடு கெதரோன் என்னும் நீரோடையைக் கடந்து சென்றார். அங்கே ஒரு தோட்டம் இருந்தது. தம் சீடர்களோடு இயேசு அதில் நுழைந்தார்.
யோவான் 18 : 2 (ECTA)
அவரைக் காட்டிக் கொடுத்த யூதாசுக்கு அந்த இடம் தெரியும். ஏனெனில், இயேசுவும் அவருடைய சீடர்களும் அடிக்கடி அங்குக் கூடுவர்.
யோவான் 18 : 3 (ECTA)
படைப் பிரிவினரையும் தலைமைக் குருக்களும் பரிசேயரும் அனுப்பிய காவலர்களையும் கூட்டிக் கொண்டு யூதாசு விளக்குகளோடும் பந்தங்களோடும் படைக்கலங்களோடும் அங்கே வந்தான்.
யோவான் 18 : 4 (ECTA)
தமக்கு நிகழப் போகிற அனைத்தையும் இயேசு அறிந்து அவர்கள்முன் சென்று, “யாரைத் தேடுகிறீர்கள்?” என்று கேட்டார்.
யோவான் 18 : 5 (ECTA)
அவர்கள் மறுமொழியாக, “நாசரேத்து இயேசுவைத் தேடுகிறோம்” என்றார்கள். இயேசு, “நான்தான்” என்றார். அவரைக் காட்டிக்கொடுத்த யூதாசும் அவர்களோடு நின்றுகொண்டிருந்தான்.
யோவான் 18 : 6 (ECTA)
‘நான்தான்’ என்று இயேசு அவர்களிடம் சொன்னதும் அவர்கள் பின்வாங்கித் தரையில் விழுந்தார்கள்.
யோவான் 18 : 7 (ECTA)
“யாரைத் தேடுகிறீர்கள்?” என்று இயேசு மீண்டும் அவர்களிடம் கேட்டார். அவர்கள், “நாசரேத்து இயேசுவைத் தேடுகிறோம்” என்றார்கள்.
யோவான் 18 : 8 (ECTA)
இயேசு அவர்களைப் பார்த்து, “‘நான்தான்’ என்று உங்களிடம் சொன்னேனே. நீங்கள் என்னைத் தேடுகிறீர்கள் என்றால் இவர்களைப் போகவிடுங்கள்” என்றார்.
யோவான் 18 : 9 (ECTA)
“நீர் என்னிடம் ஒப்படைத்தவர்களுள் எவரையும் நான் இழந்து விடவில்லை” என்று அவரே கூறியிருந்தது இவ்வாறு நிறைவேறியது.
யோவான் 18 : 10 (ECTA)
சீமோன் பேதுருவிடம் ஒரு வாள் இருந்தது. அவர் அதை உருவித் தலைமைக் குருவின் பணியாளரைத் தாக்கி அவரது வலக்காதை வெட்டினார். அப்பணியாளரின் பெயர் மால்கு.
யோவான் 18 : 11 (ECTA)
இயேசு பேதுருவிடம், “வாளை உறையில் போடு. தந்தை எனக்கு அளித்த துன்பக் கிண்ணத்திலிருந்து நான் குடிக்காமல் இருப்பேனோ?” என்றார். [* மத் 26:39; மாற் 14:36; லூக் 22: 42 ]
யோவான் 18 : 12 (ECTA)
தலைமைக் குருமுன் இயேசு கொண்டுவரப்படுதல்
(மத் 26:57-58; மாற் 14:53-54; லூக் 22:54) படைப்பிரிவினரும் ஆயிரத்தவர் தலைவரும் யூதர்களின் காவலர்களும் இயேசுவைப் பிடித்துக் கட்டி,
யோவான் 18 : 13 (ECTA)
முதலில் அவரை அன்னாவிடம் கொண்டுசென்றார்கள். ஏனெனில், அந்த ஆண்டில் தலைமைக் குருவாய் இருந்த கயபாவுக்கு அவர் மாமனார்.
யோவான் 18 : 14 (ECTA)
‘இந்தக் கயபாதான், “மக்களுக்காக ஒருவர் மட்டும் இறப்பது நல்லது” என்று யூதர்களுக்கு ஆலோசனை கூறியவர். [* யோவா 3:14; 12: 32 ]
யோவான் 18 : 15 (ECTA)
பேதுரு மறுதலித்தல்
(மத் 26:69-70; மாற் 14:66-68; லூக் 22:55-57) சீமோன் பேதுருவும் மற்றொரு சீடரும் இயேசுவைப் பின்தொடர்ந்து வந்தனர். அந்தச் சீடர் தலைமைக் குருவுக்கு அறிமுகமானவர்; ஆகவே, இயேசுவுடன் தலைமைக் குருவின் மாளிகை முற்றத்தில் நுழைந்தார்.
யோவான் 18 : 16 (ECTA)
பேதுரு வெளியில் வாயிலருகே நின்று கொண்டிருந்தார். அப்போது தலைமைக் குருவுக்கு அறிமுகமாயிருந்த அந்தச் சீடர் வெளியே வந்து, வாயில் காவலரிடம் சொல்லிப் பேதுருவை உள்ளே கூட்டிச் சென்றார்.
யோவான் 18 : 17 (ECTA)
வாயில் காவல் செய்த அப்பணிப்பெண் பேதுருவிடம், “நீயும் இம்மனிதனுடைய சீடருள் ஒருவன் தானே?” என்று கேட்டார். பேதுரு, “இல்லை” என்றார்.
யோவான் 18 : 18 (ECTA)
அப்போது குளிராய் இருந்ததால் பணியாளர்களும் காவலர்களும் கரியினால் தீ மூட்டி அங்கே நின்று குளிர்காய்ந்து கொண்டிருந்தார்கள். பேதுருவும் சென்று அவர்களோடு நின்று குளிர் காய்ந்து கொண்டிருந்தார்.
யோவான் 18 : 19 (ECTA)
தலைமைக் குரு இயேசுவை விசாரித்தல்
(மத் 26:59-66; மாற் 14:55-64; லூக் 22:66-71) தலைமைக் குரு இயேசுவின் சீடர்களைப்பற்றியும் அவருடைய போதனையைப்பற்றியும் அவரிடம் கேட்டார்.
யோவான் 18 : 20 (ECTA)
இயேசு அவரைப் பார்த்து, “நான் உலகறிய வெளிப்படையாய்ப் பேசினேன். யூதர் அனைவரும் கூடிவரும் தொழுகைக் கூடங்களிலும் கோவிலிலும்தான் எப்போதும் கற்பித்து வந்தேன். நான் மறைவாக எதையும் பேசியதில்லை. [* எசா 45:19; 48:16; மத் 26:55; லூக் 19:47; 22: 53 ]
யோவான் 18 : 21 (ECTA)
ஏன் என்னிடம் கேட்கிறீர்? நான் பேசியதைக் கேட்டுக் கொண்டிருந்தவர்களிடம் கேட்டுப்பாரும். நான் என்ன சொன்னேன் என அவர்களுக்குத் தெரியுமே” என்றார்.
யோவான் 18 : 22 (ECTA)
அவர் இப்படிச் சொன்னதால் அங்கு நின்று கொண்டிருந்த காவலருள் ஒருவர், “தலைமைக் குருவுக்கு இப்படியா பதில் கூறுகிறாய்?” என்று சொல்லி இயேசுவின் கன்னத்தில் அறைந்தார். [* திப 23: 2 ]
யோவான் 18 : 23 (ECTA)
இயேசு அவரிடம், “நான் தவறாகப் பேசியிருந்தால் தவறு என்னவெனக் காட்டும். சரியாகப் பேசியிருந்தால் ஏன் என்னை அடிக்கிறீர்?” என்று கேட்டார்.
யோவான் 18 : 24 (ECTA)
அதன்பின் அன்னா அவரைக் கட்டப்பட்ட நிலையில் தலைமைக் குரு கயபாவிடம் அனுப்பினார்.
யோவான் 18 : 25 (ECTA)
பேதுரு மீண்டும் மறுதலித்தல்
(மத் 26:71-75; மாற் 14:69-72; லூக் 22:58-62) சீமோன் பேதுரு அங்கு நின்று குளிர் காய்ந்து கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்தவர்கள் அவரிடம், “நீயும் அவனுடைய சீடர்களுள் ஒருவன் தானே” என்று கேட்டனர். அவர் “இல்லை” என்று மறுதலித்தார்.
யோவான் 18 : 26 (ECTA)
தலைமைக் குருவின் பணியாளருள் ஒருவர், “நான் உன்னைத் தோட்டத்தில் அவரோடு பார்க்கவில்லையா?” என்று கேட்டார். பேதுருவால் காது வெட்டப்பட்டவருக்கு இவர் உறவினர்.
யோவான் 18 : 27 (ECTA)
பேதுரு மீண்டும் மறுதலித்தார். உடனே சேவல் கூவிற்று.
யோவான் 18 : 28 (ECTA)
பிலாத்துமுன் இயேசு கொண்டுவரப்படல்
(மத் 27:1-2, 11-14; மாற் 15:1-5; லூக் 23:1-5) அதன்பின் அவர்கள் கயபாவிடமிருந்து ஆளுநர் மாளிகைக்கு இயேசுவைக் கொண்டு சென்றார்கள். அப்போது விடியற்காலம். பாஸ்கா உணவை உண்ணுமுன் தீட்டுப் படாமலிருக்க ஆளுநர் மாளிகையில் அவர்கள் நுழையவில்லை.
யோவான் 18 : 29 (ECTA)
எனவே, பிலாத்து வெளியே அவர்களிடம் வந்து, “நீங்கள் இந்த ஆளுக்கு எதிராகக் கூறும் குற்றச்சாட்டு என்ன?” என்று கேட்டார்.
யோவான் 18 : 30 (ECTA)
அதற்கு அவர்கள், “இவன் குற்றம் செய்யாதிருந்தால் இவனை நாங்கள் உம்மிடம் ஒப்புவித்திருக்க மாட்டோம்” என்றார்கள்.
யோவான் 18 : 31 (ECTA)
பிலாத்து அவர்களிடம், “நீங்கள் இவனைக் கொண்டுபோய் உங்கள் சட்டப்படி இவனுக்குத் தீர்ப்பு வழங்குங்கள்” என்றார். யூதர்கள் அவரிடம், “சட்டப் படி நாங்கள் யாருக்கும் மரண தண்டனை விதிக்க முடியாது” என்றார்கள்.
யோவான் 18 : 32 (ECTA)
இவ்வாறு, தாம் எப்படிப்பட்ட சாவுக்கு உட்படப் போகிறார் என்பதைக் குறிப்பிட்டு இயேசு கூறியிருந்ததை நிறைவேறச் செய்தார்கள். [* யோவா 3:14; 12: 32 ]
யோவான் 18 : 33 (ECTA)
பிலாத்து மீண்டும் ஆளுநர் மாளிகைக்குள் சென்று இயேசுவைக் கூப்பிட்டு, அவரிடம், “நீ யூதரின் அரசனா?” என்று கேட்டான்.
யோவான் 18 : 34 (ECTA)
இயேசு மறுமொழியாக, “நீராக இதைக் கேட்கிறீரா? அல்லது மற்றவர்கள் என்னைப்பற்றி உம்மிடம் சொன்னதை வைத்துக் கேட்கிறீரா?” என்று கேட்டார்.
யோவான் 18 : 35 (ECTA)
அதற்கு பிலாத்து, “நான் ஒரு யூதனா, என்ன? உன் இனத்தவரும் தலைமைக் குருக்களும் தானே உன்னை என்னிடம் ஒப்புவித்தார்கள். நீ என்ன செய்தாய்?” என்று கேட்டான்.
யோவான் 18 : 36 (ECTA)
இயேசு மறுமொழியாக, “எனது ஆட்சி இவ்வுலக ஆட்சி போன்றது அல்ல. அது இவ்வுலக ஆட்சி போன்றதாய் இருந்திருந்தால் நான் யூதர்களிடம் காட்டிக் கொடுக்கப்படாதவாறு என் காவலர்கள் போராடியிருப்பார்கள். ஆனால், என் ஆட்சி இவ்வுலக ஆட்சி போன்றது அல்ல” என்றார்.
யோவான் 18 : 37 (ECTA)
பிலாத்து அவரிடம், “அப்படியானால் நீ அரசன்தானோ?” என்று கேட்டான். அதற்கு இயேசு, “அரசன் என்று நீர் சொல்கிறீர். உண்மையை எடுத்துரைப்பதே என் பணி. இதற்காகவே நான் பிறந்தேன்; இதற்காகவே உலகிற்கு வந்தேன். உண்மையைச் சார்ந்தவர் அனைவரும் என் குரலுக்குச் செவிசாய்க்கின்றனர்” என்றார். [* 1 யோவா 3: 20 ]
யோவான் 18 : 38 (ECTA)
பிலாத்து அவரிடம், “உண்மையா? அது என்ன?” என்று கேட்டான்.இயேசுவுக்கு மரண தண்டனை விதித்தல்
(மத் 27:15-31; மாற் 15:6-20; லூக் 23:13-25) (38b) இப்படி கேட்டபின் பிலாத்து மீண்டும் யூதரிடம் சென்று, “இவனிடம் நான் குற்றம் ஒன்றும் காணவில்லையே” என்றான். * மத் 27:13; லூக் 23:22..
யோவான் 18 : 39 (ECTA)
மேலும், “பாஸ்கா விழாவின்போது உங்கள் விருப்பப்படி ஒரு கைதியை விடுதலை செய்யும் வழக்கம் உண்டே! யூதரின் அரசனாகிய இவனை நான் விடுதலை செய்யட்டுமா? உங்கள் விருப்பம் என்ன?” என்று கேட்டான்.
யோவான் 18 : 40 (ECTA)
அதற்கு அவர்கள், “இவன் வேண்டாம். பரபாவையே விடுதலை செய்யும்” என்று மீண்டும் கத்தினார்கள். அந்தப் பரபா ஒரு கள்வன்.
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40