யோவான் 11 : 1 (ECTA)
இலாசர் இறத்தல் பெத்தானியாவில் வாழ்ந்து வந்த இலாசர் என்னும் ஒருவர் நோயுற்றிருந்தார். அவ்வூரில்தான் மரியாவும் அவருடைய சகோதரியான மார்த்தாவும் வாழ்ந்துவந்தனர். [* லூக் 19:38,39; யோவா 12:1- 8 ]
யோவான் 11 : 2 (ECTA)
இந்த மரியாதான் ஆண்டவர்மேல் நறுமணத்தைலம் பூசித் தமது கூந்தலால் அவரின் காலடிகளைத் துடைத்தவர். நோயுற்றிருந்த இலாசர் இவருடைய சகோதரர். [* லூக் 19:38,39; யோவா 12:1- 8 ]
யோவான் 11 : 3 (ECTA)
இலாசரின் சகோதரிகள் இயேசுவிடம் ஆளனுப்பி, “ஆண்டவரே, உம் நண்பன் நோயுற்றிருக்கிறான்” என்று தெரிவித்தார்கள்.
யோவான் 11 : 4 (ECTA)
அவர் இதைக் கேட்டு, “இந்நோய் சாவில் போய் முடியாது. கடவுளின் மாட்சி விளங்கவே இவன் நோயுற்றான். இதனால் மானிடமகனும் மாட்சி பெறுவார்” என்றார்.
யோவான் 11 : 5 (ECTA)
மார்த்தாவிடமும் அவருடைய சகோதரியான மரியாவிடமும் இலாசரிடமும் இயேசு அன்பு கொண்டிருந்தார்.
யோவான் 11 : 6 (ECTA)
இலாசர் நோயுற்றிருந்ததைக் கேள்விப்பட்ட பிறகு, தாம் இருந்த இடத்தில் இன்னும் இரண்டு நாள் அவர் தங்கியிருந்தார்.
யோவான் 11 : 7 (ECTA)
பின்னர், தம் சீடரிடம், “மீண்டும் யூதேயாவுக்குப் போவோம், வாருங்கள்” என்று கூறினார்.
யோவான் 11 : 8 (ECTA)
அவருடைய சீடர்கள் அவரிடம், “ரபி, இப்போது தானே யூதர்கள் உம்மேல் கல்லெறிய முயன்றார்கள்; மீண்டும் அங்குப் போகிறீரா?” என்று கேட்டார்கள்.
யோவான் 11 : 9 (ECTA)
இயேசு மறுமொழியாக, “பகலுக்குப் பன்னிரண்டு மணி நேரம் உண்டு அல்லவா? பகலில் நடப்பவர் இடறி விழுவதில்லை; ஏனெனில், பகல் ஒளியில் பார்க்க முடிகிறது. [* யோவா 8: 12 ]
யோவான் 11 : 10 (ECTA)
ஆனால், இரவில் நடப்பவர் இடறி விழுவார்; ஏனெனில் ,அப்போது* ஒளி இல்லை” என்றார். * ‘அவரிடம்’ என்பது கிரேக்க பாடத்தின் நேரடி மொழிபெயர்ப்பு.
யோவான் 11 : 11 (ECTA)
இவ்வாறு கூறியபின், “நம் நண்பன் இலாசர் தூங்குகிறான்; நான் அவனை எழுப்புவதற்காகப் போகிறேன்” என்றார்.
யோவான் 11 : 12 (ECTA)
அவருடைய சீடர் அவரிடம், “ஆண்டவரே, அவர் தூங்கினால் நலமடைவார்” என்றனர்.
யோவான் 11 : 13 (ECTA)
இயேசு அவருடைய சாவைக் குறிப்பிட்டே இவ்வாறு சொன்னார். வெறும் தூக்கத்தையே அவர் குறிப்பிட்டதாக அவர்கள் நினைத்தார்கள். [* மத் 9: 24 ]
யோவான் 11 : 14 (ECTA)
அப்போது இயேசு அவர்களிடம், “இலாசர் இறந்து விட்டான்” என்று வெளிப்படையாகச் சொல்லி விட்டு,
யோவான் 11 : 15 (ECTA)
“நான் அங்கு இல்லாமல் போனதுபற்றி உங்கள் பொருட்டு மகிழ்கிறேன்; ஏனெனில், நீங்கள் என்னை நம்புவதற்கு இது ஒரு வாய்ப்பாகிறது. அவனிடம் போவோம், வாருங்கள்” என்றார்.
யோவான் 11 : 16 (ECTA)
திதிம் என்னும் தோமா தம் உடன் சீடரிடம், “நாமும் செல்வோம், அவரோடு இறப்போம்” என்றார்.
யோவான் 11 : 17 (ECTA)
நம்புவோர் வாழ்வர் இயேசு அங்கு வந்தபோது இலாசரைக் கல்லறையில் வைத்து ஏற்கெனவே நான்கு நாள் ஆகியிருந்தது.
யோவான் 11 : 18 (ECTA)
பெத்தானியா எருசலேமுக்கு அருகில் ஏறக்குறைய மூன்று கிலோ மீட்டர்* தொலையில் இருந்தது. * பதினைந்து ஸ்தாதியம் என்பது கிரேக்க பாடம்..
யோவான் 11 : 19 (ECTA)
சகோதரர் இறந்ததால் மார்த்தா, மரியா இவர்களுக்கு ஆறுதல் சொல்லப் பலர் அங்கே வந்திருந்தனர்.
யோவான் 11 : 20 (ECTA)
இயேசு வந்துகொண்டிருக்கிறார் என்று கேள்விப்பட்டதும் மார்த்தா அவரை எதிர்கொண்டு சென்றார்; மரியா வீட்டில் இருந்துவிட்டார்.
யோவான் 11 : 21 (ECTA)
மார்த்தா இயேசவை நோக்கி, “ஆண்டவரே, நீர் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்க மாட்டான்.
யோவான் 11 : 22 (ECTA)
இப்போதுகூட நீர் கடவுளிடம் கேட்பதை எல்லாம் அவர் உமக்குக் கொடுப்பார் என்பது எனக்குக் தெரியும்” என்றார்.
யோவான் 11 : 23 (ECTA)
இயேசு அவரிடம், “உன் சகோதரன் உயிர்த்தெழுவான்” என்றார்.
யோவான் 11 : 24 (ECTA)
மார்த்தா அவரிடம் , “இறுதி நாள் உயிர்த்தெழுதலின் போது அவனும் உயிர்த்தெழுவான் என்பது எனக்கு தெரியும்” என்றார்.
யோவான் 11 : 25 (ECTA)
இயேசு அவரிடம், “உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே. என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார்.
யோவான் 11 : 26 (ECTA)
உயிரோடு இருக்கும் போது என்னிடம் நம்பிக்கைகொள்ளும் எவரும் என்றுமே சாகமாட்டார். இதை நீ நம்புகிறாயா?” என்று கேட்டார்.
யோவான் 11 : 27 (ECTA)
மார்த்தா அவரிடம், “ஆம் ஆண்டவரே, நீரே மெசியா! நீரே இறைமகன்! நீரே உலகிற்கு வரவிருந்தவர் என நம்புகிறேன்” என்றார்.
யோவான் 11 : 28 (ECTA)
இயேசு கண்ணீர் விடுதல் இவ்வாறு சொன்னபின் மார்த்தா தம் சகோதரியான மரியாவைக் கூப்பிடச் சென்றார்; அவரிடம், “போதகர் வந்து விட்டார்; உன்னை அழைக்கிறார்” என்று காதோடு காதாய்ச் சொன்னார்.
யோவான் 11 : 29 (ECTA)
இதைக் கேட்டதும் மரியா விரைந்தெழுந்து இயேசுவிடம் சென்றார்.
யோவான் 11 : 30 (ECTA)
இயேசு அதுவரையிலும் ஊருக்குள் வரவில்லை. மார்த்தா தம்மைச் சந்தித்த இடத்திலேயே இன்னும் இருந்தார்.
யோவான் 11 : 31 (ECTA)
வீட்டில் மரியாவுக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்த யூதர்கள் அவர் விரைந்தெழுந்து வெளியே செல்வதைக் கண்டு, அவர் அழுவதற்காகக் கல்லறைக்குப் போகிறார் என்று எண்ணி அவர் பின்னே சென்றார்கள்.
யோவான் 11 : 32 (ECTA)
இயேசு இருந்த இடத்திற்கு மரியா வந்து, அவரைக் கண்டதும் அவர் காலில் விழுந்து, “ஆண்டவரே, நீர் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்க மாட்டான்” என்றார்.
யோவான் 11 : 33 (ECTA)
மரியா அழுவதையும், அவரோடு வந்த யூதர்கள் அழுவதையும் கண்டபோது இயேசு உள்ளங் குமுறிக் கலங்கி,
யோவான் 11 : 34 (ECTA)
“அவனை எங்கே வைத்தீர்கள்?” என்று கேட்டார். அவர்கள் அவரிடம், “ஆண்டவரே, வந்து பாரும்” என்றார்கள்.
யோவான் 11 : 35 (ECTA)
அப்போது இயேசு கண்ணீர் விட்டு அழுதார்.
யோவான் 11 : 36 (ECTA)
அதைக் கண்ட யூதர்கள், “பாருங்கள், இலாசர்மேல் இவருக்கு எத்துணை அன்பு!” என்று பேசிக் கொண்டார்கள்.
யோவான் 11 : 37 (ECTA)
ஆனால், அவர்களுள் சிலர், “பார்வையற்றவருக்குப் பார்வையளித்த இவர் இவரைச் சாகாமலிருக்கச் செய்ய இயலவில்லையா?” என்று கேட்டனர்.
யோவான் 11 : 38 (ECTA)
இலாசர் உயிர்பெறுதல் இயேசு மீண்டும் உள்ளம் குமுறியவராய்க் கல்லறைக்கு அருகில் சென்றார். அது ஒரு குகை. அதை ஒரு கல் மூடியிருந்தது.
யோவான் 11 : 39 (ECTA)
“கல்லை அகற்றி விடுங்கள்” என்றார் இயேசு. இறந்து போனவரின் சகோதரியான மார்த்தா அவரிடம், “ஆண்டவரே, நான்கு நாள் ஆயிற்று; நாற்றம் அடிக்குமே!” என்றார்.
யோவான் 11 : 40 (ECTA)
இயேசு அவரிடம், “நீ நம்பினால் கடவுளின் மாட்சிமையைக் காண்பாய் என நான் உன்னிடம் கூறவில்லையா?” என்று கேட்டார்.
யோவான் 11 : 41 (ECTA)
அப்போது அவர்கள் கல்லை அகற்றினார்கள். இயேசு அண்ணாந்து பார்த்து, “தந்தையே, நீர் என் வேண்டுதலுக்குச் செவிசாய்த்ததற்காக உமக்கு நன்றி கூறுகிறேன்.
யோவான் 11 : 42 (ECTA)
நீர் எப்போதும் என் வேண்டுதலுக்குச் செவிசாய்க்கிறீர் என்பது எனக்குத் தெரியும். எனினும், நீரே என்னை அனுப்பினீர் என்று சூழ்ந்து நிற்கும் இக்கூட்டம் நம்பும் பொருட்டே இப்படிச் சொன்னேன்” என்று கூறினார்.
யோவான் 11 : 43 (ECTA)
இவ்வாறு சொன்ன பின் இயேசு உரத்த குரலில், “இலாசரே, வெளியே வா” என்று கூப்பிட்டார்.
யோவான் 11 : 44 (ECTA)
இறந்தவர் உயிரோடு வெளியே வந்தார். அவருடைய கால்களும் கைகளும் துணியால் சுற்றப்பட்டிருந்தன. முகத்தில் துணி சுற்றப்பட்டிருந்தது. “கட்டுகளை அவிழ்த்து அவனைப் போகவிடுங்கள்” என்று இயேசு அவர்களிடம் கூறினார்.
யோவான் 11 : 45 (ECTA)
இயேசுவைக் கொலை செய்யத் திட்டம்
(மத் 26:1-5; மாற் 14:1-2; லூக் 22:1-2)
மரியாவிடம் வந்திருந்த யூதர் பலர் இயேசு செய்ததைக் கண்டு அவரை நம்பினர்.
யோவான் 11 : 46 (ECTA)
ஆனால், அவர்களுள் சிலர் பரிசேயரிடம் சென்று இயேசு செய்ததைத் தெரிவித்தனர். [* மத் 26:3,4; லூக் 22:2; திப 4: 16 ]
யோவான் 11 : 47 (ECTA)
தலைமைக் குருக்களும் பரிசேயரும் தலைமைச் சங்கத்தைக் கூட்டி, “இந்த ஆள் பல அரும் அடையாளங்களைச் செய்து கொண்டிருக்கிறானே, என்ன செய்யலாம்?
யோவான் 11 : 48 (ECTA)
இவனை இப்படியே விட்டுவிட்டால் அனைவரும் இவனிடம் நம்பிக்கை கொள்வர். அப்போது உரோமையர் வந்து நம் தூய இடத்தையும் நம் இனத்தையும் அழித்து விடுவார்களே!” என்று பேசிக் கொண்டனர்.
யோவான் 11 : 49 (ECTA)
கயபா என்பவர் அவர்களுள் ஒருவர். அவர் அவ்வாண்டின் தலைமைக் குருவாய் இருந்தார். அவர் அவர்களிடம், “உங்களுக்கு ஒன்றும் தெரியவில்லை. [* லூக் 3:2; யோவா 18: 13 ]
யோவான் 11 : 50 (ECTA)
இனம் முழுவதும் அழிந்து போவதைவிட ஒரு மனிதன் மட்டும் மக்களுக்காக இறப்பது நல்லது என்பதை நீங்கள் உணரவில்லை” என்று சொன்னார்.
யோவான் 11 : 51 (ECTA)
இதை அவர் தாமாகச் சொல்லவில்லை. அவர் அவ்வாண்டின் தலைமைக் குருவாய் இருந்ததால், இயேசு தம் இனத்திற்காவும்,
யோவான் 11 : 52 (ECTA)
தம் இனத்திற்காக மட்டுமின்றி, சிதறி வாழ்ந்த கடவுளின் பிள்ளைகளை ஒன்றாய்ச் சேர்க்கும் நோக்குடன் அவர்களுக்காகவும் இறக்கப்போகிறார் என்று இறைவாக்காகச் சொன்னார்.
யோவான் 11 : 53 (ECTA)
ஆகவே, அன்றிலிருந்தே அவர்கள் இயேசுவைக் கொன்றுவிடத் திட்டம் தீட்டினார்கள். [* மத் 12: 14 ]
யோவான் 11 : 54 (ECTA)
அது முதல் இயேசு யூதரிடையே வெளிப்படையாக நடமாடவில்லை. அவர் அவ்விடத்தினின்று அகன்று பாலை நிலத்திற்கு அருகிலுள்ள பகுதிக்குப் போனார்; அங்கு எப்ராயிம் என்னும் ஊரில் தம் சீடருடன் தங்கியிருந்தார்.
யோவான் 11 : 55 (ECTA)
7.இறுதிப் பாஸ்கா விழா யூதர்களுடைய பாஸ்கா விழா அண்மையில் நிகழவிருந்தது. விழாவுக்குமுன் தங்கள் தூய்மைச் சடங்குகளை நிறைவேற்றப் பலர் நாட்டுப் புறங்களிலிருந்து எருசலேமுக்குச் சென்றனர்.
யோவான் 11 : 56 (ECTA)
அங்கே அவர்கள் இயேசுவைத் தேடினார்கள். “அவர் திருவிழாவுக்கு வரவே மாட்டாரா? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” என்று கோவிலில் நின்றுகொண்டிருந்தவர்கள் தங்களிடையே பேசிக் கொண்டார்கள்.
யோவான் 11 : 57 (ECTA)
ஏனெனில், தலைமைக் குருக்களும் பரிசேயர்களும் இயேசுவைப் பிடிக்க எண்ணி அவர் இருக்கும் இடம் யாருக்காவது தெரிந்தால் தங்களிடம் வந்து அறிவிக்க வேண்டும் என்று கட்டளையிட்டிருந்தார்கள்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57