யோவேல் 3 : 1 (ECTA)
வேற்றினத்தார்மேல் வரும் தண்டனைத் தீர்ப்பு “அந்நாள்களில் நான் யூதா, எருசலேம் ஆகியவற்றின் துன்ப நிலைமையை மாற்றி முன்பு இருந்த நிலைமைக்கே கொண்டுவருவேன்;
யோவேல் 3 : 2 (ECTA)
அப்பொழுது நான் வேற்றினத்தார் அனைவரையும் ஒன்றுசேர்த்து யோசபாத்துப் பள்ளத்தாக்கிற்கு இறங்கிவரச் செய்வேன்; அங்கே நான், என் மக்களும் உரிமைச் சொத்துமாகிய இஸ்ரயேலை முன்னிட்டு அவர்களுக்கு எதிராகத் தண்டனைத் தீர்ப்பு வழங்குவேன்; ஏனெனில், அவர்கள் என் மக்களை வேற்று நாடுகளில் சிதறடித்தார்கள்; எனது நாட்டைத் தங்களுக்குள் பங்கிட்டுக்கொண்டார்கள்;
யோவேல் 3 : 3 (ECTA)
என் மக்கள் மேல் சீட்டுப்போட்டார்கள்; ஆண் பிள்ளையை விலைமகளுக்குக் கூலியாய்க் கொடுத்தார்கள்; பெண் குழந்தையை விலையாய்க் கொடுத்து, திராட்சை இரசம் வாங்கிக் குடித்தார்கள்.
யோவேல் 3 : 4 (ECTA)
தீர், சீதோன் நகரங்களே, பெலிஸ்தியா நாட்டின் அனைத்துப் பகுதிகளே, எனக்கும் உங்களுக்கும் என்ன வழக்கு? என்னை முற்றிலுமாகப் பழிவாங்குவது உங்கள் எண்ணமோ? அவ்வாறு நீங்கள் பழிவாங்கினால் நான் காலந்தாழ்த்தாமல் நீங்கள் செய்ததையே உங்கள் தலைமேல் வெகு விரைவில் விழச் செய்வேன். [* எசா 14:29-31; 23:1-18; எரே 47:1-7; எசே 25:15-28:26; ஆமோ 1:6-10; செப் 2:4-7; செக் 9:1-7; மத் 11:21-22; லூக் 10:13- 14 ]
யோவேல் 3 : 5 (ECTA)
நீங்கள் என் பொன்னையும் வெள்ளியையும் எடுத்துக் கொண்டீர்கள்; விலையுயர்ந்த பொருள்களை உங்கள் அரண்மனைகளுக்கு அள்ளிக்கொண்டு போனீர்கள். [* எசா 14:29-31; 23:1-18; எரே 47:1-7; எசே 25:15-28:26; ஆமோ 1:6-10; செப் 2:4-7; செக் 9:1-7; மத் 11:21-22; லூக் 10:13- 14 ]
யோவேல் 3 : 6 (ECTA)
யூதாவின் மைந்தரையும் எருசலேமின் மக்களையும் கிரேக்கரிடம் விற்றுவிட்டீர்கள்; இவ்வாறு அவர்கள் தங்கள் நாட்டைவிட்டு வெகு தொலைவிற்குப் போகச் செய்தீர்கள். [* எசா 14:29-31; 23:1-18; எரே 47:1-7; எசே 25:15-28:26; ஆமோ 1:6-10; செப் 2:4-7; செக் 9:1-7; மத் 11:21-22; லூக் 10:13- 14 ]
யோவேல் 3 : 7 (ECTA)
நீங்கள் விற்றுவிட்ட இடத்திலிருந்து அவர்களை இப்பொழுதே கிளர்ந்தெழச் செய்வேன்; நீங்கள் செய்த கொடுமையை உங்கள் தலை மேலேயே விழச் செய்வேன். [* எசா 14:29-31; 23:1-18; எரே 47:1-7; எசே 25:15-28:26; ஆமோ 1:6-10; செப் 2:4-7; செக் 9:1-7; மத் 11:21-22; லூக் 10:13- 14 ]
யோவேல் 3 : 8 (ECTA)
உங்கள் புதல்வரையும் புதல்வியரையும் யூதா மக்களிடமே விற்றுவிடுவேன்; யூதா மக்களோ அவர்களைத் தொலைநாட்டவரான செபாயரிடம் விற்றுவிடுவார்கள்; இதைக் கூறுவது ஆண்டவரே. [* எசா 14:29-31; 23:1-18; எரே 47:1-7; எசே 25:15-28:26; ஆமோ 1:6-10; செப் 2:4-7; செக் 9:1-7; மத் 11:21-22; லூக் 10:13- 14 ]
யோவேல் 3 : 9 (ECTA)
வேற்றினத்தாரிடையே இதைப் பறைசாற்றுங்கள்; போருக்காக நாள் குறித்து, போர் வீரர்களைக் கிளர்ந்தெழச் செய்யுங்கள்; படை வீரர்கள் அனைவரும் திரண்டு வந்து, போருக்குக் கிளம்பட்டும்.
யோவேல் 3 : 10 (ECTA)
உங்கள் கலப்பைக் கொழுவைப் போர்வாளாக அடித்துக் கொள்ளுங்கள்; கதிரறுக்கும் அரிவாள்களை ஈட்டிகளாக வடித்துக்கொள்ளுங்கள்; வலுவற்றவனும் ‘நானொரு போர்வீரன்’ என்று சொல்லிக் கொள்ளட்டும். [* எசா 2:4; மீக் 4: 3 ]
யோவேல் 3 : 11 (ECTA)
சுற்றுப் புறங்களிலுள்ள வேற்று நாட்டவர்களே, நீங்கள் அனைவரும் விரைந்து வாருங்கள்; வந்து அவ்விடத்தில் ஒன்றாய்க் கூடுங்கள்; ஆண்டவரே, உம் போர் வீரர்களை அனுப்பியருளும்.
யோவேல் 3 : 12 (ECTA)
வேற்றினத்தார் அனைவரும் கிளர்ந்தெழட்டும்; கிளர்ந்தெழுந்து யோசபாத்து பள்ளத்தாக்கிற்கு வந்து சேரட்டும்; ஏனெனில் சுற்றுப்புறத்து வேற்றினத்தார் அனைவர்க்கும் தீர்ப்பு வழங்க நான் அங்கே அமர்ந்திருப்பேன்.
யோவேல் 3 : 13 (ECTA)
அரிவாளை எடுத்து அறுங்கள், பயிர் முற்றிவிட்டது; திராட்சைப் பழங்களை மிதித்துப் பிழியுங்கள். ஏனெனில் ஆலை நிரம்பித் தொட்டிகள் பொங்கி வழிகின்றன; அவர்கள் செய்த கொடுமை மிகப் பெரிது. [* திவெ 14:14-16, 19-20; 19: 15 ]
யோவேல் 3 : 14 (ECTA)
திரள் திரளாய் மக்கட் கூட்டம் தீர்ப்பு வழங்கும் பள்ளத்தாக்கில் திரண்டிருக்கிறது. ஏனெனில், ஆண்டவரின் நாள் அப்பள்ளத்தாக்கை நெருங்கி வந்துவிட்டது.
யோவேல் 3 : 15 (ECTA)
கதிரவனும் நிலவும் இருளடைகின்றன; விண்மீன்கள் ஒளியை இழக்கின்றன.
யோவேல் 3 : 16 (ECTA)
ஆண்டவர் தம் மக்களுக்கு ஆசி வழங்குவார் சீயோனிலிருந்து ஆண்டவர் கர்ச்சனை செய்கின்றார்; எருசலேமிலிருந்து அவர் முழங்குகின்றார்; விண்ணும் மண்ணும் அதிர்கின்றன; ஆயினும் ஆண்டவரே தம் மக்களுக்குப் புகலிடம்; இஸ்ரயேலருக்கு அரணும் அவரே. [* ஆமோ 1:2.. ]
யோவேல் 3 : 17 (ECTA)
நானே உங்கள் கடவுளாகிய ஆண்டவர் என்றும், நான் என் திருமலையாகிய சீயோனில் குடியிருக்கிறேன் என்றும் அப்பொழுது நீங்கள் அறிவீர்கள்; எருசலேம் தூயதாய் இருக்கும்; அன்னியர் இனிமேல் அதைக் கடந்து செல்லமாட்டார்கள்.
யோவேல் 3 : 18 (ECTA)
“அந்நாளில் மலைகள் இனிய, புது இரசத்தைப் பொழியும்; குன்றுகளிலிருந்து பால் வழிந்தோடும் ; யூதாவின் நீரோடைகளிலெல்லாம் தண்ணீர் நிரம்பி வழியும்; ஆண்டவரின் இல்லத்திலிருந்து நீரூற்று ஒன்று கிளம்பும்; அது சித்திமிலுள்ள ஓடைகளில் பாய்ந்தோடும்.
யோவேல் 3 : 19 (ECTA)
எகிப்து பாழ்நிலமாகும்; ஏதோம் பாழடைந்து பாலைநிலம் ஆகும்; ஏனெனில், அவர்கள் யூதாவின் மக்களைக் கொடுமைக்கு உள்ளாக்கினார்கள்; அவர்களின் நாட்டிலேயே குற்றமற்ற இரத்தத்தைச் சிந்தினார்கள்.
யோவேல் 3 : 20 (ECTA)
யூதாவோ என்றென்றும் மக்கள் குடியிருக்கும் இடமாயிருக்கும்; எருசலேமில் எல்லாத் தலைமுறைக்கும் மக்கள் குடியிருப்பார்கள்.
யோவேல் 3 : 21 (ECTA)
சிந்தப்பட்ட இரத்தத்திற்கு நான் பழிவாங்கவே செய்வேன்; குற்றவாளிகளைத் தண்டியாமல் விடேன்; ஆண்டவராகிய நான் சீயோனில் குடியிருப்பேன்.
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21