யோவேல் 2 : 1 (ECTA)
வெட்டுக்கிளிகள் ஆண்டவரின் நாளுக்கு முன்னறிவிப்பு சீயோனிலே எக்காளம் ஊதி எச்சரியுங்கள்; என்னுடைய திரு மலை மேலிருந்து கூக்குரலிடுங்கள்; நாட்டில் குடியிருப்பவர்கள் அனைவரும் நடுங்குவார்களாக! ஏனெனில், ஆண்டவரின் நாள் வருகின்றது, ஆம்; அது வந்து விட்டது.
யோவேல் 2 : 2 (ECTA)
அதுவோ இருளும் காரிருளும் கவிந்த நாள்; மப்பும் மந்தாரமும் சூழ்ந்த நாள்; விடியற்கால ஒளி மலைகள்மேல் பரவுவதுபோல் ஆற்றல்மிகு, வெட்டுக்கிளிகளின் பெருங்கூட்டம் வருகின்றது; இதுபோன்று என்றுமே நிகழ்ந்ததில்லை; இனிமேல் தலைமுறை தலைமுறைக்கும் நிகழப்போவதுமில்லை.
யோவேல் 2 : 3 (ECTA)
அவை வரும்பொழுது தீயும் தணலும் சுட்டெரிக்கும். அவற்றின் வருகைக்குமுன் நாடு ஏதேன் தோட்டம் போலிருக்கும்; அவை போனபின்போ பாலைநிலம்போல் ஆகிவிடும்; அவற்றுக்கு எதுவுமே தப்பமுடியாது.
யோவேல் 2 : 4 (ECTA)
பார்வைக்கு அவை குதிரைகள் போலிருக்கின்றன; போர்க் குதிரைகள்போல் அவை விரைந்தோடுகின்றன. [* திவெ 9:7- 9 ]
யோவேல் 2 : 5 (ECTA)
அவை தேர்ப்படைகளின் கிறீச்சொலிபோல் இரைந்து கொண்டு, சருகுகளைச் சுட்டெரிக்கும் நெருப்புத் தணல்போல் ஒலியெழுப்பி, போருக்கு அணிவகுத்த ஆற்றல் மிக்க படைகள்போல் மலையுச்சிகளின்மேல் குதித்துச் செல்லும். [* திவெ 9:7- 9 ]
யோவேல் 2 : 6 (ECTA)
அவற்றின் முன் மக்களினத்தார் நடுங்குவர்; அச்சத்தால் எல்லாரின் முகமும் வெளிறிப் போகும்.
யோவேல் 2 : 7 (ECTA)
அவை போர் வீரர்களைப்போல் தாவி ஓடுகின்றன; படை வீரர்களைப்போல் சுவர்மேல் ஏறுகின்றன; ஒவ்வொன்றும் தனக்குரிய பாதையில் போகின்றது; தங்கள் இலக்கைவிட்டு அவை பிறழ்வதில்லை.
யோவேல் 2 : 8 (ECTA)
ஒன்றை ஒன்று நெருக்குவதில்லை; ஒவ்வொன்றும் தன் வழி தவறாது செல்கின்றது; போர்க் கருவிகளுக்கிடையே சிக்கிக் கொண்டாலும் அவை வரிசை கலையாமல் முன்னேறுகின்றன.
யோவேல் 2 : 9 (ECTA)
நகருக்குள் பாய்ந்து செல்கின்றன; மதில்மேல் ஓடுகின்றன; வீடுகள்மேல் ஏறி, பலகணி வழியாய்த் திருடனைப்போல் உள்ளே நுழைகின்றன
யோவேல் 2 : 10 (ECTA)
அவற்றுக்கு முன்பாக நிலம் நடுங்குகின்றது; வானம் அசைகின்றது; கதிரவனும் நிலவும் இருண்டு போகின்றன; விண்மீன்களும் ஒளி இழந்து போகின்றன. [* திவெ 8: 12 ]
யோவேல் 2 : 11 (ECTA)
ஆண்டவர் தம் படைகள்முன் முழக்கம் செய்கின்றார்; அவரது பாளையம் மிக மிகப் பெரிது; அவர் தம் வாக்கை நிறைவேற்ற
ஆற்றல் உடையவர். ஏனெனில் ஆண்டவரின் நாள் மிகக் கொடியது; அச்சம் தர வல்லது, அதைத் தாங்கிக் கொள்ளக் கூடியவர் எவர்? [* திவெ 6: 17 ]
யோவேல் 2 : 12 (ECTA)
மனமாற்றத்திற்கு அழைப்பு “இப்பொழுதாவது உண்ணா நோன்பிருந்து, அழுது புலம்பிக்கொண்டு, உங்கள் முழு இதயத்தோடு என்னிடம் திரும்பி வாருங்கள்” என்கிறார் ஆண்டவர்.
யோவேல் 2 : 13 (ECTA)
“நீங்கள் உங்கள் உடைகளைக் கிழித்துக்கொள்ள வேண்டாம், இதயத்தைக் கிழித்துக்கொண்டு உங்கள் கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பி வாருங்கள்.” அவர் அருள் நிறைந்தவர், இரக்கம் மிக்கவர்; நீடிய பொறுமையுள்ளவர், பேரன்பு மிக்கவர்; செய்யக் கருதிய தீங்கைக் குறித்து மனம் மாறுகின்றவர்.
யோவேல் 2 : 14 (ECTA)
ஒருவேளை அவர் தம் மனத்தை மாற்றிக்கொண்டு, உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு தானியப் படையலையும்
நீர்மப் படையலையும் நீங்கள் அளிக்குமாறு உங்களுக்கு ஆசி வழங்குவார். இதை யார் அறிவார்?
யோவேல் 2 : 15 (ECTA)
சீயோனில் எக்காளம் ஊதி எச்சரியுங்கள்; புனிதமான உண்ணா நோன்புக்கென நாள் குறியுங்கள்; வழிபாட்டுப் பேரணியைத் திரட்டுங்கள்.
யோவேல் 2 : 16 (ECTA)
மக்களைத் திரண்டு வரச்செய்யுங்கள்; புனித கூட்டத்திற்கு
ஏற்பாடு செய்யுங்கள்; முதியோரைக் கூடிவரச் செய்யுங்கள், பிள்ளைகளையும் பால் குடிக்கும் குழந்தைகளையும் ஒருசேரக் கூட்டுங்கள்; மணமகன் தன் அறையை விட்டு வெளியேறட்டும்; மணமகள் தன் மஞ்சத்தைவிட்டுப் புறப்படட்டும்.
யோவேல் 2 : 17 (ECTA)
ஆண்டவரின் ஊழியர்களாகிய குருக்கள் கோவில் மண்டபத்திற்கும் பலிபீடத்திற்கும் இடையே நின்று அழுதவண்ணம், “ஆண்டவரே, உம் மக்கள்மீது இரக்கம் கொள்ளும்; உமது உரிமைச்சொத்தை வேற்றினத்தார் நடுவில் நிந்தைக்கும் பழிச்சொல்லுக்கும் ஆளாக்காதீர்” எனச் சொல்வார்களாக!
‘அவர்களுடைய கடவுள் எங்கே?’ என வேற்றினத்தார் கூறவும் வேண்டுமோ?
யோவேல் 2 : 18 (ECTA)
ஆண்டவர் நாட்டைச் செழிப்பாக்குகிறார் அப்பொழுது ஆண்டவர் தம் நாட்டின்மேல் பேரார்வம் கொண்டு தம் மக்கள் மீது கருணை காட்டினார்.
யோவேல் 2 : 19 (ECTA)
ஆண்டவர் தம் மக்களுக்கு மறுமொழியாகக் கூறியது இதுவே: ‘நான் உங்களுக்குக் கோதுமையும், திராட்சை இரசமும்,
எண்ணெயும் தருவேன்; நீங்களும் நிறைவு பெறுவீர்கள்; இனிமேல் வேற்றினத்தார் நடுவில் உங்களை நிந்தைக்கு ஆளாக்கமாட்டேன்.’
யோவேல் 2 : 20 (ECTA)
வடக்கிலிருந்து வந்த படையை உங்களிடமிருந்து வெகு தொலைவிற்கு
விரட்டியடிப்பேன்; அதனை வறட்சியுற்றதும்
பாழடைந்ததுமான நிலத்திற்குத் துரத்திவிடுவேன். அதன் முற்பகுதியைக் கீழைக் கடலுக்குள்ளும், பிற்பகுதியை மேலைக் கடலுக்குள்ளும்
ஆழ்த்துவேன். பிண நாற்றமும் தீய வாடையும் அங்கே எழும்பும்; ஏனெனில் அது பெரும் தீச்செயல்களைப் புரிந்தது.
யோவேல் 2 : 21 (ECTA)
நிலமே நீ அஞ்சாதே; மகிழ்ந்து களிகூரு; ஏனெனில், ஆண்டவர் பெரிய காரியங்களைச் செய்தார்.
யோவேல் 2 : 22 (ECTA)
காட்டு விலங்குகளே, அஞ்சாதிருங்கள்; ஏனெனில், பாலைநிலப் புல்வெளிகள் பசுமையாய் இருக்கின்றன; மரங்கள் கனி தருகின்றன; அத்திமரமும் திராட்சைக் கொடியும் மிகுந்த கனி கொடுக்கின்றன.
யோவேல் 2 : 23 (ECTA)
சீயோனின் பிள்ளைகளே, அகமகிழுங்கள்; உங்கள் கடவுளாகிய ஆண்டவரை முன்னிட்டுக்
களிப்படையுங்கள்; ஏனெனில், அவர் தமது நீதியை நிலைநாட்ட உங்களுக்கு முன்மாரியைத் தந்தார்; முன்போலவே உங்களுக்கு முன் மாரியையும் பின் மாரியையும் நிறைவாகத் தந்தருளினார்.
யோவேல் 2 : 24 (ECTA)
போரடிக்கும் களங்களில் கோதுமை நிறைந்திருக்கும்; ஆலைகளில் திராட்சை இரசமும் எண்ணெயும் வழிந்தோடும்.
யோவேல் 2 : 25 (ECTA)
நான் உங்களுக்கு எதிராக அனுப்பிய என் பெரும் படையாகிய வெட்டுப் புழுக்கள், இளம் வெட்டுக்கிளிகள், துள்ளும் வெட்டுக்கிளிகள், வளர்ந்த வெட்டுக்கிளிகள் ஆகியவை அழித்துவிட்ட பருவப் பலன்களை உங்களுக்கு மீண்டும் தருவேன்.
யோவேல் 2 : 26 (ECTA)
நீங்கள் வேண்டியமட்டும் உண்டு நிறைவடைவீர்கள்; உங்களை வியத்தகு முறையில் நடத்தி வந்த உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் பெயரைப் போற்றுவீர்கள்; இனிமேல் என் மக்கள் ஒருபோதும் நிந்தைக்கு உள்ளாகமாட்டார்கள்.
யோவேல் 2 : 27 (ECTA)
இஸ்ரயேல் நடுவில் நான் இருக்கிறேன் என்றும், ஆண்டவராகிய நானே உங்கள் கடவுள் என்றும், என்னையன்றி வேறு எவரும் இல்லையென்றும் நீங்கள் அறிந்துகொள்வீர்கள்; இனிமேல் என் மக்கள் ஒருபோதும் நிந்தைக்கு உள்ளாக மாட்டார்கள்.
யோவேல் 2 : 28 (ECTA)
ஆண்டவரின் நாள் அதற்குப்பின்பு, நான் மாந்தர் யாவர்மேலும் என் ஆவியைப் பொழிந்தருள்வேன்; உங்கள் புதல்வரும் புதல்வியரும் இறைவாக்கு உரைப்பர்; உங்கள் முதியோர் கனவுகளையும் உங்கள் இளைஞர்கள் காட்சிகளையும் காண்பார்கள். [* திப 2:17- 21 ]
யோவேல் 2 : 29 (ECTA)
அந்நாள்களில், உங்கள் பணியாளர், பணிப்பெண்கள் மேலும் என் ஆவியைப் பொழிந்தருள்வேன். [* திப 2:17- 21 ]
யோவேல் 2 : 30 (ECTA)
இன்னும் விண்ணிலும் மண்ணிலும் வியத்தகு செயல்களைச் செய்து காட்டுவேன்; எங்குமே, இரத்த ஆறாகவும் நெருப்பு மண்டலமாகவும், புகைப்படலமாகவும் இருக்கும். [* திப 2:17- 21 ]
யோவேல் 2 : 31 (ECTA)
அச்சம் தரும் பெருநாளாகிய ஆண்டவரின் நாள் வருமுன்னே, கதிரவன் இருண்டு போகும்; நிலவோ இரத்தமாக மாறும். [* திப 2:17- 21 ; மத் 24:29; மாற் 13:24-25; லூக் 21:25; திவெ 16:12- 13. ]
யோவேல் 2 : 32 (ECTA)
அப்பொழுது ஆண்டவரின் திருப்பெயரைச்சொல்லி வேண்டுவோர் யாவரும் தப்பிப்பிழைப்பர்; ஏனெனில், ஆண்டவர் கூறிய வண்ணமே, சீயோன் மலையிலும் எருசலேமிலும் எஞ்சியிருப்போர் வாழ்வு அடைவர்; ஆண்டவரால் அழைக்கப்பட்டவர்களே தப்பிப் பிழைப்பார்கள். [* திப 2:17- 21 ; உரோ 10:13.. ]
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32