எரேமியா 52 : 1 (ECTA)
எருசலேமின் வீழ்ச்சி
(2 அர 24:8-25:7)
செதேக்கியா அரசனானபோது அவனுக்கு வயது இருபத்தொன்று. அவன் எருசலேமில் பதினோர் ஆண்டுகள் ஆட்சி செய்தான். லிப்னாவைச் சார்ந்த எரேமியாவின் மகள் அமுற்றாள் என்பவரே அவன் தாய்.
எரேமியா 52 : 2 (ECTA)
யோயாக்கிம் செய்தது போல, செதேக்கியாவும் ஆண்டவரின் பார்வையில் தீயதெனப்பட்ட அனைத்தையும் செய்தான்.
எரேமியா 52 : 3 (ECTA)
ஆண்டவர் எருசலேமையும் யூதாவையும் தம் முன்னிலையினின்று தள்ளிவிடும் அளவுக்கு அவற்றின்மீது சினம் கொண்டார்; செதேக்கியா பாபிலோனிய மன்னனுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்தான்.
எரேமியா 52 : 4 (ECTA)
அவனது ஆட்சியின் ஒன்பதாம் ஆண்டு, பத்தாம் மாதம், பத்தாம் நாளில், பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசர் தன் எல்லாப் படைகளோடும் எருசலேமுக்கு எதிராக வந்து, பாளையம் இறங்கி, அதைச் சுற்றிலும் முற்றுகைத் தளம் எழுப்பினான். [* எசே 24: 2 ]
எரேமியா 52 : 5 (ECTA)
இவ்வாறு, அரசன் செதேக்கியா ஆட்சியேற்ற பதினொன்றாம் ஆண்டு வரை, நகர் முற்றுகைக்கு உள்ளாகியிருந்தது.
எரேமியா 52 : 6 (ECTA)
நான்காம் மாதம் ஒன்பதாம் நாள் பஞ்சம் கடுமை ஆயிற்று. நாட்டு மக்களுக்கு உணவே கிடைக்கவில்லை.
எரேமியா 52 : 7 (ECTA)
அப்பொழுது நகர மதிலில் ஒரு திறப்பு உண்டாக்கப்பட்டது. போர்வீரர் அனைவரும் அரசப் பூங்காவின் இரு மதில்களுக்கிடையே அமைந்த வாயில் வழியாக இரவோடு இரவாய் நகரைவிட்டு வெளியேறி, அராபாவை நோக்கித் தப்பியோடினர். கல்தேயரோ நகரைச் சுற்றி முற்றுகையிட்டவண்ணம் இருந்தனர். [* எசே 33: 21 ]
எரேமியா 52 : 8 (ECTA)
கல்தேயப்படையினர் அரசன் செதேக்கியாவைப் பின்தொடர்ந்து, எரிகோ சமவெளியில் அவனைப் பிடித்தனர்; அவனது படை முழுவதும் அவனை விட்டுச் சிதறி ஓடிற்று.
எரேமியா 52 : 9 (ECTA)
அவர்கள் அரசனைப் பிடித்து, ஆமாத்து நாட்டின் இரிப்பலாவில் இருந்த பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசரிடம் கொண்டு சென்றார்கள். மன்னன் அவனுக்கு எதிராகத் தீர்ப்பு வழங்கினான்.
எரேமியா 52 : 10 (ECTA)
பாபிலோனிய மன்னன் இரிப்லாவில் செதேக்கியாவின் புதல்வர்களை அவன் கண் முன்னே கொன்றான்; மேலும், யூதாவின் தலைவர்கள் அனைவரையும் கொன்றான்.
எரேமியா 52 : 11 (ECTA)
பாபிலோனிய மன்னன் செதேக்கியாவின் கண்களைப் பிடுங்கியபின், விலங்கிட்டு அவனைப் பாபிலோனுக்கு இழுத்துச் சென்றான்; அவன் சாகும்வரை அவனைச் சிறையில் அடைத்தான். [* எசே 12: 13 ]
எரேமியா 52 : 12 (ECTA)
திருக்கோவில் அழிவுறுதல்
(2 அர 25:8-17)
பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசர் ஆட்சியேற்ற பத்தொன்பதாம் ஆண்டு, ஐந்தாம் மாதம், பத்தாம் நாளன்று, அவனுக்குப் பணிசெய்து வந்த மெய்க்காப்பாளர் தலைவன் நெபுசரதான் எருசலேமுக்குள் நுழைந்தான்.
எரேமியா 52 : 13 (ECTA)
ஆண்டவரின் இல்லத்தையும் அரச அரண்மனையையும் எருசலேமில் இருந்த எல்லா வீடுகளையும் அவன் தீக்கிரையாக்கினான்; பெரிய வீடுகளை எல்லாம் தீயிலிட்டுப் பொசுக்கினான். [* 1 அர 9: 8 ]
எரேமியா 52 : 14 (ECTA)
மெய்க்காப்பாளர் தலைவனுடன் இருந்து கல்தேயப் படையினர் அனைவரும் எருசலேமைச் சுற்றிலும் இருந்த மதில்களை எல்லாம் தகர்த்தெறிந்தனர்.
எரேமியா 52 : 15 (ECTA)
மெய்க்காப்பாளர் தலைவர் நெபுசரதான் ஏழை மக்களுள் சிலரையும், நகரில் எஞ்கியிருந்த மக்களையும், பாபிலோனிய மன்னிடம் சரணடைந்திருந்தவர்களையும், விடப்பட்டிருந்த கைவினைஞரோடு சேர்த்து நாடுகடத்தினான்.
எரேமியா 52 : 16 (ECTA)
ஆனால் மெய்க்காப்பாளர் தலைவன் நெபுசரதான் திராட்சைத் தோட்டங்களையும் வயல்களையும் கவனிக்கும் பொருட்டு நாட்டின் ஏழைகள் சிலரை அங்கேயே விட்டுவைத்தான்.
எரேமியா 52 : 17 (ECTA)
ஆண்டவரின் இல்லத்தில் இருந்த வெண்கலத் தூண்களையும் தள்ளுவண்டிகளையும் வெண்கலக் கடலையும் கல்தேயர் தூள்தூளாக்கி, வெண்கலத்தை எல்லாம் பாபிலோனுக்குக் கொண்டு சென்றனர். * 1 அர 7:15-47..
எரேமியா 52 : 18 (ECTA)
சாம்பல்சட்டிகள், அள்ளு கருவிகள், அணைப்பான்கள், பலிக் கிண்ணங்கள், தூபக்கலசங்கள், திருப்பணிக்குப் பயன்பட்டவெண்கலப் பாத்திரங்கள் ஆகிய எல்லாவற்றையும் அவர்கள் கொண்டு போனார்கள். * 1 அர 7:15-47..
எரேமியா 52 : 19 (ECTA)
மேலும் பொன், வெள்ளியாலான கிண்ணங்கள், நெருப்புச் சட்டிகள், பலிக்கிண்ணங்கள், சாம்பல் சட்டிகள், விளக்குத் தண்டுகள், தூபக்கலசங்கள், நீர்மப்படையல் கிண்ணங்கள ஆகிய எல்லாவற்றையும் மெய்காப்பாளர் தலைவன் எடுத்துச் சென்றான். * 1 அர 7:15-47..
எரேமியா 52 : 20 (ECTA)
சாலமோன் அரசர் ஆண்டவர் இல்லத்திற்கென்று செய்திருந்த இரு தூண்கள், வெண்கலக் கடல், அதன் அடியில் இருந்த பன்னிரு வெண்கலக் காளைகள், தள்ளுவண்டிகள் ஆகிய இவற்றின் வெண்கலம் நிறுத்து மாளாது. * 1 அர 7:15-47..
எரேமியா 52 : 21 (ECTA)
தூண் ஒவ்வொன்றின் உயரம் பதினெட்டு முழம்; சுற்றளவு பன்னிரண்டு முழம்; வெண்கலக் கன அளவு நான்கு விரற்கடை. உள்ளே கூடாய் இருந்தது. * 1 அர 7:15-47..
எரேமியா 52 : 22 (ECTA)
தூணின் உச்சியில் ஐந்து முழ உயரமுள்ள வெண்கலப் போதிகை ஒன்று இருந்தது. போதிகையைச் சுற்றிலும் வலைப்பின்னலும் மாதுளம்பழ வடிவங்களும் வெண்கலத்தில் செய்யப்பட்டிருந்தன. மாதுளம்பழ வடிவங்கள் கொண்ட மறு தூணும் அவ்வாறே செய்யப்பட்டிருந்தது. * 1 அர 7:15-47..
எரேமியா 52 : 23 (ECTA)
வலைப் பின்னலைச் சுற்றிலும் அமைக்கப் பெற்றிருந்த மொத்தம் நூறு மாதுளம் பழ வடிவங்களுள், தொண்ணூற்றாறு பக்கவாட்டில் தெரிந்தன. * 1 அர 7:15-47..
எரேமியா 52 : 24 (ECTA)
திருக்கோவில் அழிவுறுதல்
(2 அர 25:18-21:27-30)
மெய்க்காப்பாளர் தலைவன், தலைமைக் குரு செராயாவையையும் துணைக் குரு செப்பனியாவையும் வாயிற்காவலர் மூவரையும் சிறைப்பிடித்தான்.
எரேமியா 52 : 25 (ECTA)
போர்வீரர்களின் தலைமை அதிகாரியையும், நகரில் இருந்த அரசவையோருள் எழுவரையும், படைத் தேர்வு மற்றும் பயிற்சி அலுவலரின் செயலரையும், நகருள் கண்ட பொது மக்களுள் அறுபது பேரையும் அவன் நகரினின்று கடத்தினான்.
எரேமியா 52 : 26 (ECTA)
மெய்க்காப்பாளர் தலைவன் நெபுசரதோன் இவர்களைப் பிடித்து, இரிப்லாவில் இருந்த பாபிலோனிய மன்னனிடம் கொண்டு சென்றான்.
எரேமியா 52 : 27 (ECTA)
ஆமாத்து நாட்டின் இரிப்லாவில் பாபிலோனிய மன்னன் இவர்களை வதைத்துக் கொன்றான். இவ்வாறு யூதா மக்கள் தங்கள் சொந்த நாட்டினின்று கடத்தப்பட்டார்கள்.
எரேமியா 52 : 28 (ECTA)
நெபுகத்னேசர் நாடுகடத்திய மக்களின் எண்ணிக்கை வருமாறு; அவன் ஆட்சியேற்ற ஏழாம் ஆண்டில் யூதா நாட்டினர் மூவாயிரத்து இருபத்து மூன்று பேர்;
எரேமியா 52 : 29 (ECTA)
அவன் பதினெட்டாம் ஆண்டில் எருசலேமினின்று நாடுகடத்தப்பட்டோர் எண்ணூற்று முப்பத்திரண்டு பேர்;
எரேமியா 52 : 30 (ECTA)
அவன் இருபத்து மூன்றாம் ஆண்டில் மெய்க்காப்பாளர் தலைவன் நெபுசரதான் நாடுகடத்திய யூதா நாட்டினர் எழுநூற்று நாற்பத்தைந்து பேர். ஆக, நாடு கடத்தப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை நாலாயிரத்து அறுநூறு.
எரேமியா 52 : 31 (ECTA)
யூதாவின் அரசன் யோயாக்கினுடைய அடிமைத்தனத்தின் முப்பத்தேழாம் ஆண்டு பன்னிரண்டாம் மாதம் இருபத்தைந்தாம் நாளன்று, அதாவது பாபிலோனிய மன்னன் எவில்மெரதாக்கு ஆட்சிபெற்ற ஆண்டில், அவன் யூதாவின் அரசன் யோயாக்கினைத் தலைநிமிரச் செய்து, சிறையினின்று விடுவித்தான்.
எரேமியா 52 : 32 (ECTA)
அவன் யோயாக்கினுடன் கனிவாய்ப் பேசி, பாபிலோனில் தன்னோடு இருந்த அரசர்களுக்கு இல்லாத சிறப்பை அவனுக்கு அளித்தான்.
எரேமியா 52 : 33 (ECTA)
எனவே யோயாக்கின் தன் சிறை உடைகளைக் களைந்தெறிந்தான்; தன் வாழ்நாள் எல்லாம் அரசனுடன் தவறாது விருந்துண்டுவந்தான்.
எரேமியா 52 : 34 (ECTA)
அவனுடைய அன்றாடத் தேவைகளுக்காக, அவன் சாகுமட்டும், அதாவது அவன் வாழ்நாள் முழுவதும், பாபிலோனிய மன்னன் அவனுக்கு உதவித் தொகையை ஒவ்வொரு நாளும் ஒழுங்காகக் கொடுத்து வந்தான்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34