எரேமியா 31 : 1 (ECTA)
ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: “அக்காலத்தில் இஸ்ரயேலின் குடும்பங்கள் எல்லாவற்றுக்கும் நான் கடவுளாய் இருப்பேன்; அவர்கள் என் மக்களாய் இருப்பார்கள்.”
எரேமியா 31 : 2 (ECTA)
ஆண்டவர் கூறுவது இதுவே: “வாளுக்குத் தப்பிப் பிழைத்த மக்கள் பாலைநிலத்தில் என் அருளைக் கண்டடைந்தனர்; இஸ்ரயேலர் இளைப்பாற விரும்பினர்.
எரேமியா 31 : 3 (ECTA)
ஆண்டவர் அவர்களுக்குத்* தொலையிலிருந்து தோன்றினார். உனக்கு நான் முடிவில்லாத அன்பு காட்டியுள்ளேன்; எனவே, பேரன்பால் உன்னை ஈர்த்துள்ளேன். * ‘எனக்கு’ என்பது எபிரேய பாடம்.
எரேமியா 31 : 4 (ECTA)
கன்னிப் பெண்ணாகிய இஸ்ரயேலே! உன்னை நான் மீண்டும் கட்டி எழுப்புவேன்; நீயும் கட்டி எழுப்பப்படுவாய்; மீண்டும் உன் மேளதாளங்களை நீ எடுத்துக் கொள்வாய்; மகிழ்ச்சியுற்றோர் போல நடனம் ஆடிக் கொண்டு நீ வெளியேறுவாய்;
எரேமியா 31 : 5 (ECTA)
சமாரியாவின் மலைகள்மேல் திராட்சைத் தோட்டங்களை நீ மீண்டும் அமைப்பாய்; தோட்டக்காரர் பயிரிட்டு விளைச்சலை உண்டு மகிழ்வர்.
எரேமியா 31 : 6 (ECTA)
ஏனெனில், ஒரு நாள் வரும்; அப்பொழுது எப்ராயிம் மலையில், ‘எழுந்திருங்கள்; நாம் சீயோனுக்குப் போவோம்; நம் கடவுளாகிய ஆண்டவரிடம் செல்வோம்’ என்று காவலர் அழைப்பு விடுப்பர்.
எரேமியா 31 : 7 (ECTA)
ஆண்டவர் தொடர்ந்து கூறுகிறார்: யாக்கோபை முன்னிட்டு மகிழ்ந்து பாடுங்கள்; மக்களினத் தலைவனைக் குறித்து ஆர்ப்பரியுங்கள்; முழக்கம் செய்யுங்கள், புகழ்பாடுங்கள்; ‘ஆண்டவர் இஸ்ரயேலில் எஞ்சியோராகிய தம் மக்களை மீட்டருளினார்!’ என்று பறைசாற்றுங்கள்.
எரேமியா 31 : 8 (ECTA)
இதோ! வடக்கு நாட்டிலிருந்து அவர்களை நான் அழைத்து வருவேன்; மண்ணுலகின் கடை எல்லைகளினின்று அவர்களைக் கூட்டிச் சேர்ப்பேன். அவர்களுள் பார்வையற்றோரும் காலூனமுற்றோரும் கருவுற்றோரும் பேறுகாலப் பெண்டிரும் அடங்குவர்; பெரும் கூட்டமாய் அவர்கள் இங்குத் திரும்பி வருவர்.
எரேமியா 31 : 9 (ECTA)
அழுகையோடு அவர்கள் திரும்பி வருவார்கள்; ஆறுதலளித்து* அவர்களை நான் அழைத்து வருவேன்; நீரோடைகள் ஓரமாக அவர்களை நான் நடத்திச் செல்வேன்; இடறிவிழாதவாறு சீரான வழியில் அவர்கள் நடக்கச் செய்வேன். ஏனெனில், நான் இஸ்ரயேலின் தந்தை, எப்ராயிமோ என் தலைப்பிள்ளை. * ‘மன்றாட்டுக்களோடு’ என்பது எபிரேய பாடம்..
எரேமியா 31 : 10 (ECTA)
மக்களினத்தாரே, ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள்; தொலையிலுள்ள கடலோரப் பகுதிகளில் அதை அறிவியுங்கள்; ‘இஸ்ரயேலைச் சிதறடித்தவரே அதைக் கூட்டிச் சேர்ப்பார்; ஆயர் தம் மந்தையைக் காப்பதுபோல் அதைக் காப்பார்’ என்று சொல்லுங்கள்.
எரேமியா 31 : 11 (ECTA)
ஏனெனில், யாக்கோபை ஆண்டவர் மீட்டார்; அவனிலும் வலியவன் கையினின்று அவனை விடுவித்தார்.
எரேமியா 31 : 12 (ECTA)
அவர்கள் வந்து சீயோனின் உச்சியில் பாடி மகிழ்வார்கள்; தானியம், திராட்சை இரசம், எண்ணெய், ஆட்டுக்குட்டிகள், கன்றுகாலிகள், ஆகிய ஆண்டவரின் கொடைகளை முன்னிட்டுப் பூரிப்படைவார்கள்; அவர்களது வாழ்க்கை நீர்வளம் மிக்க தோட்டம் போல் இருக்கும்; அவர்கள் இனிமேல், ஏங்கித் தவிக்க மாட்டார்கள்.
எரேமியா 31 : 13 (ECTA)
அப்பொழுது கன்னிப்பெண்கள் நடனம் ஆடிக் களித்திருப்பர்; அவ்வாறே இளைஞரும் முதியோரும் மகிழ்ந்திருப்பர்; அவர்களுடைய அழுகையை நான் மகிழ்ச்சியாக மாற்றுவேன்; அவர்களுக்கு ஆறுதல் அளிப்பேன்; துன்பத்திற்குப் பதிலாக இன்பத்தை அருள்வேன்.
எரேமியா 31 : 14 (ECTA)
குருக்களைச் செழுமையால் நிரப்புவேன்; என் மக்கள் எனது வள்ளன்மையால் நிறைவு பெறுவர், என்கிறார் ஆண்டவர்.
எரேமியா 31 : 15 (ECTA)
ஆண்டவர் இவ்வாறு கூறுகின்றார்; இராமாவிலே ஒரு குரல் கேட்கின்றது; ஒரே புலம்பலும் அழுகையுமாய் இருக்கின்றது. இராகேல் தம் குழந்தைகளுக்காக அழுதுகொண்டிருக்கின்றார்; ஆறுதல் பெற அவர் மறுக்கின்றார்; ஏனெனில், அவருடைய குழந்தைகள் அவரோடு இல்லை. [* தொநூ 35:16-19; மத் 2: 18 ]
எரேமியா 31 : 16 (ECTA)
ஆண்டவர் இவ்வாறு கூறுகின்றார்; நீ அழுகையை நிறுத்து; கண்ணீர் வடிக்காதே; ஏனெனில் உனது உழைப்புக்குப் பயன் கிடைக்கும், என்கிறார் ஆண்டவர். தங்கள் பகைவரின் நாட்டினின்று அவர்கள் திரும்பி வருவார்கள்.
எரேமியா 31 : 17 (ECTA)
உன் எதிர்காலத்தைப் பொறுத்தமட்டில் நம்பிக்கை உண்டு, என்கிறார் ஆண்டவர். உன் பிள்ளைகள் தம் நாட்டுக்குத் திரும்புவர்.
எரேமியா 31 : 18 (ECTA)
எப்ராயிமின் புலம்பலை நான் உண்மையாகவே கேட்டேன்; “பணியாத இளம் காளையை அடித்துத் திருத்துவதுபோல நீர் என்னைத் தண்டித்துத் திருத்தினீர்; நீர் என்னைத் திரும்ப அழைத்துச் செல்லும்; நானும் திரும்பி வரவேன்; ஏனெனில், என் கடவுளாகிய ஆண்டவர் நீரே.
எரேமியா 31 : 19 (ECTA)
உம்மை விட்டு விலகிச் சென்றபின் நான் மனம் வருந்தினேன்; பயிற்றுவிக்கப்பட்டபின் நான் மார்பில் அறைந்து கொண்டேன்; என் இளமையின் அவமானம் இன்னும் என்னிடம் காணப்பட்டது. நான் வெட்கித் தலை குனிந்தேன்.”
எரேமியா 31 : 20 (ECTA)
“எப்ராயிம் என் அருமை மகன் அல்லவா? நீ என் அன்புக் குழந்தை அல்லவா? உனக்கு எதிராக நான் அடிக்கடி பேசியபோதிலும், உன்னை நான் இன்னும் நினைவில் கொண்டிருக்கிறேன்; உனக்காக என் இதயம் ஏங்கித் தவிக்கின்றது; திண்ணமாய் உனக்கு நான் இரக்கம் காட்டுவேன்” என்கிறார் ஆண்டவர்.
எரேமியா 31 : 21 (ECTA)
உனக்கெனச் சாலை அடையாளங்களை அமைத்துக்கொள்; உனக்கெனக் “கைகாட்டிகளை நாட்டிக்கொள்; நீ நடந்து சென்ற வழியாகிய நெடுஞ்சாலையை நினைவில் கொள். கன்னிப் பெண்ணாகிய இஸ்ரயேலே, திரும்பி வா; இந்த உன் நகரங்களுக்குத் திரும்பி வா.
எரேமியா 31 : 22 (ECTA)
நம்பிக்கைத் துரோகம் செய்த மகளே! இன்னும் எத்துணைக் காலம் நீ அலைந்து திரிவாய்? ஆண்டவராகிய நான் விந்தையான ஒன்றை உலகில் படைத்துள்ளேன்; ஒரு பெண் தன் கணவனைப் பாதுகாக்கின்றாள்.”
எரேமியா 31 : 23 (ECTA)
இஸ்ரயேலின் கடவுளாகிய படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே; அடிமைத்தனத்தினின்று அவர்களை நான் திரும்பக் கொணரும் பொழுது, ‘நீதியின் இருப்பிடமே, தூய்மை மிகு மலையே! ஆண்டவர் உனக்கு ஆசி வழங்குவாராக!’ என்னும் வாழ்த்துரை யூதா நாட்டிலும் அதன் நகர்களிலும் மீண்டும் எதிரொலிக்கும்.
எரேமியா 31 : 24 (ECTA)
யூதாவிலும் அதன் எல்லா நகர்களிலும் மக்கள் குடியிருப்பர்; விவசாயிகளும், ஆடு மேய்க்கும் இடையர்களும் சேர்ந்து வாழ்வர்.
எரேமியா 31 : 25 (ECTA)
ஏனெனில், சோர்ந்த உள்ளங்களுக்கு நான் புத்துயிர் அளிப்பேன்; வாடிய நெஞ்சங்களுக்கு நான் நிறைவளிப்பேன்.
எரேமியா 31 : 26 (ECTA)
அப்பொழுது நான் விழித்தெழுந்து பார்த்தேன்; என் தூக்கம் எனக்கு இன்பமாய் இருந்தது.
எரேமியா 31 : 27 (ECTA)
இதோ நாள்கள் வருகின்றன. அப்பொழுது இஸ்ரயேல் வீட்டையும் யூதா வீட்டையும் மனிதர்கள், விலங்குகளின் புதுப்பிறப்புகளால் நிரப்புவேன், என்கிறார் ஆண்டவர்.
எரேமியா 31 : 28 (ECTA)
பிடுங்கவும் தகர்க்கவும், அழிக்கவும் கவிழ்க்கவும், தீங்கிழைக்கவும் அவர்களைப் பொறுத்தமட்டில் நான் எப்படி விழிப்பாய் இருந்தேனோ, அப்படியே கட்டவும் நடவும் விழிப்பாய் இருப்பேன், என்கிறார் ஆண்டவர்.
எரேமியா 31 : 29 (ECTA)
அக்காலத்தில் அவர்கள், ‘தந்தையர் புளித்த திராட்சைப் பழங்களைத் தின்ன, பிள்ளைகளின் பல் கூசிற்றாம்’ என்று சொல்ல மாட்டார்கள். [* எசே 18: 2 ]
எரேமியா 31 : 30 (ECTA)
ஆனால், எல்லாரும் அவரவர் தம் தீச்செயலின் பொருட்டே சாவர். புளித்த திராட்சைப் பழம் தின்பவனுக்குத்தான் பல் கூசும்.
எரேமியா 31 : 31 (ECTA)
இதோ, நாள்கள் வருகின்றன. அப்பொழுது நான் இஸ்ரயேல் வீட்டாரோடும் யூதாவின் வீட்டாரோடும் புதிய உடன்படிக்கை ஒன்றைச் செய்து கொள்வேன், என்கிறார் ஆண்டவர். [* மத் 26:28; மாற் 14:24; லூக் 22:20; 1 கொரி 11:25; 2 கொரி 3: 6 ; எபி 8:8- 12. ]
எரேமியா 31 : 32 (ECTA)
அவர்களுடைய மூதாதையரை எகிப்து நாட்டினின்று விடுவிப்பதற்காக, அவர்களை நான் கைப்பிடித்து நடத்தி வந்தபொழுது அவர்களோடு செய்து கொண்ட உடன்படிக்கையைப் போன்று இது இராது. நான் அவர்களின் தலைவராய் இருந்தும், என் உடன்படிக்கையை அவர்கள் மீறி விட்டார்கள், என்கிறார் ஆண்டவர். [* எபி 8:8- 12 ]
எரேமியா 31 : 33 (ECTA)
அந்நாள்களுக்குப் பிறகு, இஸ்ரயேல் வீட்டாரோடு நான் செய்யவிருக்கும் உடன்படிக்கை இதுவே; என் சட்டத்தை அவர்கள் உள்ளத்தில் பதிப்பேன்; அதை அவர்களது இதயத்தில் எழுதிவைப்பேன். நான் அவர்களின் கடவுளாய் இருப்பேன்; அவர்கள் என் மக்களாய் இருப்பார்கள், என்கிறார் ஆண்டவர். [* எபி 8:8- 12 ; எபி 10: 16. ]
எரேமியா 31 : 34 (ECTA)
இனிமேல் எவரும் ‘ஆண்டவரை அறிந்துகொள்ளும்’ எனத் தமக்கு அடுத்திருப்பவருக்கோ சகோதரருக்கோ கற்றுத்தர மாட்டார். ஏனெனில் அவர்களுள் பெரியோர் முதல் சிறியோர் வரை அனைவரும் என்னை அறிந்துகொள்வர், என்கிறார் ஆண்டவர். அவர்களது தீச்செயலை நான் மன்னித்துவிடுவேன்; அவர்களுடைய பாவங்களை இனிமேல் நினைவு கூறமாட்டேன். [* எபி 8:8- 12 ]
எரேமியா 31 : 35 (ECTA)
ஆண்டவர் பகலில் ஒளி வீசக் கதிரவனை ஏற்படுத்தியுள்ளார்; இரவில் ஒளி கொடுக்க நிலாவையும் விண்மீன்களையும் நியமித்துள்ளார்; அலைகள் முழங்குமாறு கடல் கொந்தளிக்கச் செய்துள்ளார்; ‘படைகளின் ஆண்டவர்’ என்பது அவரது பெயராம். அவர் கூறுவது இதுவே;
எரேமியா 31 : 36 (ECTA)
மேற்கண்ட நியமங்கள் என் திருமுன்னின்று மறைந்துவிடுமாயின், இஸ்ரயேலின் வழிமரபினர் என் முன்னிலையில் ஒரு தனி இனமாய் என்றென்றும் இல்லாமல் போய்விடுவர், என்கிறார் ஆண்டவர்.
எரேமியா 31 : 37 (ECTA)
ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: மேலே வான்வெளி அளக்கப்படக் கூடுமாயின், கீழே பூவுலகின் அடித்தளங்களைக் கண்டுபிடிக்க இயலுமாயின், இஸ்ரயேலின் வழிமரபினரின் அனைத்துச் செயல்களையும் முன்னிட்டு அவர்கள் அனைவரையும் நான் தள்ளிவிடுவேன், என்கிறார் ஆண்டவர்.
எரேமியா 31 : 38 (ECTA)
இதோ, நாள்கள் வருகின்றன. அப்பொழுது ஆண்டவருக்காக இந்நகர் அனனியேல் கோபுரம் முதல் மூலை வாயில்வரை கட்டியெழுப்பப்படும், என்கிறார் ஆண்டவர்.
எரேமியா 31 : 39 (ECTA)
அதன் எல்லை நேராகக் காரேபு மலைவரை சென்று, கோவாவை நோக்கித் திரும்பும்.
எரேமியா 31 : 40 (ECTA)
பிணச் சாம்பல் பள்ளத்தாக்கு முழுவதும், கிதரோன் நீரோடை முதல் கிழக்கே குதிரை வாயிலின் மூலைவரை உள்ள வயல்வெளி முழுவதும் ஆண்டவருக்குப் புனிதமானதாய் இருக்கும். இந்த இடம் இனி என்றுமே பிடுங்கி எறியப் படாது; அழித்தொழிக்கப்படாது.
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40