எரேமியா 3 : 1 (ECTA)
மனம் மாற அழைப்பு “கணவன் தன் மனைவியைத் தள்ளிவிட, அவள் அவனை விட்டகன்று வேறு ஒருவனோடு வாழ்கையில், அக்கணவன் அவளிடம் மீண்டும் திரும்பிச் செல்வானா? அந்நாடு தீட்டுப்படுவது உறுதியல்லவா? நீ பல காதலர்களோடு விபசாரம் செய்தாய்; உன்னால் என்னிடம் திரும்பிவர முடியுமா?” என்கிறார் ஆண்டவர்.
எரேமியா 3 : 2 (ECTA)
உன் கண்களை உயர்த்தி மொட்டை மேடுகளைப்பார்; நீ படுத்துக்கிடக்காத இடம் உண்டோ? பாலை நிலத்தில் அராபியனைப்போல, பாதையோரங்களில் நீயும் காதலர்களுக்காகக் காத்திருந்தாய்; உன் விபசாரங்களாலும் தீச்செயல்களாலும் நாட்டைத் தீட்டுப்படுத்தினாய்.
எரேமியா 3 : 3 (ECTA)
ஆகையால், நாட்டில் மழை பெய்யாது நின்று விட்டது; இளவேனிற் கால மழையும் வரவில்லை; உனது நெற்றி ஒரு விலைமாதின் நெற்றி; நீ மானங்கெட்டவள்.
எரேமியா 3 : 4 (ECTA)
இப்போது கூட ‘என் தந்தையே! என் இளமையின் நண்பரே!’ என என்னை நீ அழைக்கவில்லையா?
எரேமியா 3 : 5 (ECTA)
‘என்றென்றும் அவர் சினம் அடைவாரோ? இறுதிவரை அவர் சினம் கொண்டிருப்பாரோ?’ என்கிறாய். இவ்வாறு சொல்லிவிட்டு உன்னால் இயன்றவரை தீச்செயல்களையே செய்கிறாய்.
எரேமியா 3 : 6 (ECTA)
யோசியா அரசன் காலத்தில் ஆண்டவர் என்னிடம் கூறியது: “நம்பிக்கையற்ற இஸ்ரயேல் செய்ததைக் கண்டாயா? அவள் சென்று உயர்ந்த குன்றுகள் அனைத்தின் மீதும், பசுமையான மரங்கள் அனைத்தின் கீழும் விபசாரம் செய்தாள். [* 2 அர 22:1-23:30; 2 குறி 34:1-35: 27 ]
எரேமியா 3 : 7 (ECTA)
இவை அனைத்தையும் செய்தபின் என்னிடம் திரும்பி வருவாள் என எண்ணினேன். அவளோ திரும்பி வரவில்லை. நம்பிக்கைத் துரோகம் செய்த சகோதரி யூதா இதைக் கண்டாள்.
எரேமியா 3 : 8 (ECTA)
நம்பிக்கையற்ற இஸ்ரயேலுடைய விபசாரத்தின் காரணமாக, நான் அவளைத் தள்ளிவிட்டு அவளுக்கு மணமுறிவுச் சீட்டு கொடுத்ததை நம்பிக்கைத் துரோகம் செய்த அவளுடைய சகோதரி யூதா கண்டாள். எனினும், அவளும் அஞ்சாது சென்று விபசாரம் செய்தாள். * “அவளுடைய சகோதரி யூதா கண்டாள்” என்பது “நான்…கண்டேன்” என்று எபிரேய பாடத்தில் உள்ளது..
எரேமியா 3 : 9 (ECTA)
விபசாரம் செய்வது அவளுக்கு வெகு எளிதாக இருந்ததால், கல்லோடும் மரத்தோடும் வேசித்தனம் செய்து நாட்டைத் தீட்டுப்படுத்தினாள்.
எரேமியா 3 : 10 (ECTA)
இவை அனைத்திற்கும் பிறகு கூட நம்பிக்கைத் துரோகம் செய்த அவளுடைய சகோதரி யூதா முழு உள்ளத்தோடு என்னிடம் திரும்பி வரவில்லை; பொய் வேடம் போடுகிறாள்” என்கிறார் ஆண்டவர்.
எரேமியா 3 : 11 (ECTA)
ஆண்டவர் என்னிடம் கூறியது: நம்பிக்கையற்ற இஸ்ரயேல் நம்பிக்கைத் துரோகம் செய்த யூதாவைவிட நேர்மையானவள்.
எரேமியா 3 : 12 (ECTA)
நீ சென்று வடக்கே திரும்பி இச்சொற்களை உரக்கக் கூறு: நம்பிக்கையற்ற இஸ்ரயேலே, என்னிடம் திரும்பிவா, என்கிறார் ஆண்டவர். நான் உன்மீது சினம் கொள்ளமாட்டேன்; ஏனெனில், நான் பேரன்பு கொண்டவன், என்கிறார் ஆண்டவர். நான் என்றென்றும் சினம் கொள்ளேன்.
எரேமியா 3 : 13 (ECTA)
உன் குற்றத்தை நீ ஏற்றுக்கொண்டால் போதும்; உன் கடவுளாகிய ஆண்டவருக்கு எதிராகக் கலகம் செய்தாய்; பசுமையான மரங்கள் அனைத்தின் கீழும் அன்னியரை நாடி அங்குமிங்கும் ஓடினாய்; என் குரலுக்கோ நீ செவிசாய்க்கவில்லை, என்கிறார் ஆண்டவர்.
எரேமியா 3 : 14 (ECTA)
மக்களே! என்னிடம் திரும்பி வாருங்கள்; ஏனெனில், நானே உங்கள் தலைவன்; நகருக்கு ஒருவனையும் குடும்பத்திற்கு இருவரையுமாகத் தெரிந்தெடுத்து உங்களைச் சீயோனுக்குக் கூட்டி வருவேன்.
எரேமியா 3 : 15 (ECTA)
என் இதயத்திற்கேற்ற மேய்ப்பர்களை உங்களுக்குக் கொடுப்பேன். அவர்கள் உங்களை அறிவுடனும், முன்மதியுடனும் வழிநடத்துவார்கள்.
எரேமியா 3 : 16 (ECTA)
நீங்கள் நாட்டில் பல்கிப் பெருகும் அக்காலத்தில் யாரும் ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழைபற்றியே பேசமாட்டார்கள். அது அவர்கள் எண்ணத்திலோ நினைவிலோ இராது. அது இல்லை என்று வருந்தி இனி ஒன்றும் செய்யமாட்டார்கள், என்கிறார் ஆண்டவர்.
எரேமியா 3 : 17 (ECTA)
அக்காலத்தில் எருசலேம ‘ஆண்டவரின் அரியணை’ என அழைப்பார்கள். ஆண்டவரின் பெயரை முன்னிட்டு எல்லா மக்களினத்தாரும் எருசலேமில் வந்து கூடுவர். தங்கள் தீய இதயப் பிடிவாதத்தின்படி இனி நடக்க மாட்டார்கள்.
எரேமியா 3 : 18 (ECTA)
அந்நாள்களில் யூதா வீட்டார் இஸ்ரயேல் வீட்டாரோடு சேர்ந்து கொள்வர்; நான் அவர்கள் மூதாதையருக்கு உரிமைச் சொத்தாகக் கொடுத்த நாட்டுக்கு வட நாட்டிலிருந்து ஒன்றாக வந்து சேர்வர்.
எரேமியா 3 : 19 (ECTA)
உன்னை என் மக்களின் வரிசையிலே எவ்விதம் சேர்த்துக்கொள்வேன் என்றும் திரளான மக்களினங்களுக்கிடையே அழகான உரிமைச்சொத்தாகிய இனிய நாட்டை உனக்கு எவ்விதம் தருவேன் என்றும் எண்ணிக்கொண்டிருந்தேன். ‘என் தந்தை’ என என்னை அழைப்பாய் என்றும், என்னிடமிருந்து விலகிச் செல்லமாட்டாய் என்றும் எண்ணியிருந்தேன்.
எரேமியா 3 : 20 (ECTA)
நம்பிக்கைத் துரோகம் செய்த ஒரு பெண் தன் காதலனைக் கைவிடுவது போல, இஸ்ரயேல் வீடே! நீயும் எனக்கு நம்பிக்கைத் துரோகம் செய்கிறாய், என்கிறார் ஆண்டவர்.
எரேமியா 3 : 21 (ECTA)
மொட்டை மேடுகளில் கூக்குரல் கேட்கிறது; அது இஸ்ரயேல் மக்களின் அழுகையும் வேண்டலுமாம்; ஏனெனில், அவர்கள் நெறிதவறித் தங்கள் கடவுளாகிய ஆண்டவரை மறந்தார்கள்.
எரேமியா 3 : 22 (ECTA)
என்னைவிட்டு விலகிய மக்களே! திரும்பி வாருங்கள்; உங்கள் நம்பிக்கையின்மையிலிருந்து உங்களைக் குணமாக்குவேன்; “இதோ நாங்கள் உம்மிடம் வருகிறோம். நீரே எங்கள் கடவுளாகிய ஆண்டவர்.
எரேமியா 3 : 23 (ECTA)
குன்றுகளிலிருந்தும் மலைகளில் செய்யப்படும் அமளிகளிலிருந்தும் கிடைப்பது ஏமாற்றமே; இஸ்ரயேலின் விடுதலை எங்கள் கடவுளாகிய ஆண்டவரிடம் மட்டுமே உள்ளது.
எரேமியா 3 : 24 (ECTA)
எங்கள் இளமை முதல், எங்கள் மூதாதையர் உழைப்பின் பயனாகப் பெற்ற ஆடுமாடுகளையும், புதல்வர் புதல்வியரையும் வெட்கங்கெட்ட பாகால் விழுங்கிவிட்டது.
எரேமியா 3 : 25 (ECTA)
மானக்கேடே எங்கள் படுக்கை; அவமானமே எங்கள் போர்வை. ஏனெனில் எங்கள் இளமை முதல் இன்றுவரை நாங்களும் எங்கள் மூதாதையரும் எங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு எதிராகப் பாவம் செய்தோம்; அவரது குரலுக்கு நாங்கள் செவிசாய்க்கவில்லை.’
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25