எரேமியா 29 : 1 (ECTA)
நாடுகடத்தப்பட்டோர்க்கு எரேமியா எழுதிய மடல் எருசலேமிருந்து பாபிலோனுக்கு நெபுகத்னேசர் நாடு கடத்தி இருந்தோருள் எஞ்சியிருந்த மூப்பர்கள், குருக்கள், இறைவாக்கினர்கள், மக்கள் ஆகிய அனைவருக்கும் இறைவாக்கினர் எரேமியா எருசலேமிலிருந்து மடல் ஒன்று அனுப்பினார். [* 2 அர 24:12-16; 2 குறி 36: 10 ]
எரேமியா 29 : 2 (ECTA)
அரசன் எக்கோனியா, அரச அன்னை, அரச அவையோர், யூதா மற்றும் எருசலேமின் தலைவர்கள், தச்சர்கள், கொல்லர்கள் ஆகியோர் எருசலேமை விட்டுச் சென்ற பின்னர், [* 2 அர 24:12-16; 2 குறி 36: 10 ]
எரேமியா 29 : 3 (ECTA)
சாப்பானின் மகன் எலாசா, இல்க்கியாவின் மகன் கெமரியா ஆகியோர் வழியாகப் பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசரிடம் யூதாவின் அரசன் செதேக்கியா அந்த மடலைப் பாபிலோனுக்கு அனுப்பிவைத்தான்.
எரேமியா 29 : 4 (ECTA)
அதன் சொற்களாவன; “இஸ்ரயேலின் கடவுளான படைகளின் ஆண்டவராகிய நான் எருசலேமிலிருந்து பாபிலோனுக்கு நாடுகடத்தியுள்ள அனைவருக்கும் கூறுவது இதுவே;
எரேமியா 29 : 5 (ECTA)
வீடுகளைக் கட்டி அவற்றில் குடியிருங்கள்; தோட்டங்கள் அமைத்து அவற்றின் விளைச்சலை உண்ணுங்கள்.
எரேமியா 29 : 6 (ECTA)
பெண்களை மணந்து புதல்வர் புதல்வியரைப் பெற்றெடுங்கள். உங்கள் புதல்வர்களுக்குப் பெண் கொள்ளுங்கள்; உங்கள் புதல்வியருக்கு மணம் முடித்து வையுங்கள்! இவ்வாறு அவர்களும் தங்களுக்குப் புதல்வர் புதல்வியரைப் பெற்றெடுக்கட்டும். அங்கே பல்கிப் பெருகுங்கள்; எண்ணிக்கையில் குறைந்து விடாதீர்கள்.
எரேமியா 29 : 7 (ECTA)
உங்களை எந்த நகருக்கு நான் நாடுகடத்தியுள்ளேனோ, அந்த நகரின் நல்வாழ்வைத் தேடுங்கள்; அந்நகருக்காக ஆண்டவரிடம் மன்றாடுங்கள்; ஏனெனில், அதன் நல்வாழ்வில்தான் உங்கள் நல்வாழ்வும் அடங்கியிருக்கிறது.
எரேமியா 29 : 8 (ECTA)
இஸ்ரயேலின் கடவுளான படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: உங்களிடையே இருக்கும் உங்கள் இறைவாக்கினரும் குறிசொல்வோரும் உங்களை ஏமாற்றாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள்.
எரேமியா 29 : 9 (ECTA)
அவர்கள் காணும் கனவுகளை நீங்கள் பொருட்படுத்தாதீர்கள். ஏனெனில், என் பெயரால் அவர்கள் உங்களுக்குப் பொய்யை இறைவாக்காக உரைக்கிறார்கள். நான் அவர்களை அனுப்பவில்லை,” என்கிறார் ஆண்டவர்.
எரேமியா 29 : 10 (ECTA)
ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: “பாபிலோனில் எழுபது ஆண்டுகள் முடிந்தபின் நான் உங்களைச் சந்திக்க வருவேன்; உங்களுக்கு நான் கொடுத்திருந்த வாக்குறுதியின்படி உங்களை இந்த இடத்திற்குக் கொண்டு வந்து சேர்ப்பேன். [* 2 குறி 36:21; எரே 25:11; தானி 9: 2 ]
எரேமியா 29 : 11 (ECTA)
ஏனெனில் உங்களுக்காக நான் வகுத்திருக்கும் திட்டங்கள் எனக்குத் தெரியும் அன்றோ! அவை வளமான எதிர்காலத்தையும் நம்பிக்கையும் உங்களுக்கு அளிப்பதற்கான நல்வாழ்வின் திட்டங்களே அன்றி, கேடு விளைவிப்பதற்கான திட்டங்கள் அல்ல, என்கிறார் ஆண்டவர்.
எரேமியா 29 : 12 (ECTA)
நீங்கள் என்னிடம் வந்து கூக்குரலிட்டு மன்றாடுவீர்கள்! அப்பொழுது நான் உங்களுக்குச் செவி கொடுப்பேன்.
எரேமியா 29 : 13 (ECTA)
நீங்கள் என்னைத் தேடுவீர்கள்; உங்கள் முழு இதயத்தோடும் என்னைத் தேடும்பொழுது நீங்கள் என்னைக் கண்டடைவீர்கள். * இச 4:29..
எரேமியா 29 : 14 (ECTA)
ஆம், நீங்கள் என்னைக் கண்டடைவீர்கள், என்கிறார் ஆண்டவர். அடிமைத்தனத்தினின்று உங்களை அழைத்து வருவேன்; நான் உங்களை விரட்டியடித்துள்ள எல்லா மக்களினங்களினின்றும் இடங்களினின்றும் கூட்டிச் சேர்ப்பேன், என்கிறார் ஆண்டவர். எந்த இடத்தினின்று உங்களை நான் நாடுகடத்தினேனோ அந்த இடத்திற்கே உங்களைத் திரும்பக் கொண்டு வருவேன்.
எரேமியா 29 : 15 (ECTA)
‘ஆண்டவர் எங்களுக்காகப் பாபிலோனில் இறைவாக்கினர்களை எழுப்பியுள்ளார்’ என்று சொல்கிறீர்கள்.
எரேமியா 29 : 16 (ECTA)
ஆதலால் தாவீதின் அரியணையில் வீற்றிருக்கும் அரசனைப் பற்றியும், இந்நகரில் வாழும் எல்லா மக்களைப்பற்றியும், உங்களோடு நாடு கடத்தப்படாத உங்கள் சகோதரர்களைப் பற்றியும் ஆண்டவர் கூறுவது இதுவே;
எரேமியா 29 : 17 (ECTA)
படைகளின் ஆண்டவர் கூறுகிறார்; இதோ! அவர்கள் மீது வாள், பஞ்சம், கொள்ளைநோய் ஆகியவற்றை அனுப்பிவைப்பேன். தின்ன முடியாத அளவுக்கு அழுகிப் போன காட்டு அத்திப் பழங்களைப் போல் அவர்களை ஆக்குவேன்.
எரேமியா 29 : 18 (ECTA)
வாள், பஞ்சம், கொள்ளைநோய் கொண்டு அவர்களைப் பின்தொடர்வேன். உலகின் எல்லா அரசுகளும் அவர்களை அருவருக்கும்படி செய்வேன்; நான் அவர்களை விரட்டியடித்துள்ள எல்லா நாடுகளிடையிலும் அவர்களைச் சாபத்திற்கும் பேரச்சத்திற்கும் நகைப்பிற்கும் கண்டனத்திற்கும் உள்ளாக்குவேன்.
எரேமியா 29 : 19 (ECTA)
ஏனெனில் என் ஊழியர்களான இறைவாக்கினர்களை நான் அவர்களிடம் திரும்பத் திரும்ப அனுப்பியிருந்தும், அவர்கள் என் சொற்களுக்குச் செவி கொடுக்கவில்லை. நீங்களும் செவிகொடுக்கவில்லை, என்கிறார் ஆண்டவர்.
எரேமியா 29 : 20 (ECTA)
எனவே, எருசலேமிலிருந்து பாபிலோனுக்கு நான் நாடுகடத்தியிருக்கும் நீங்கள் அனைவரும் ஆண்டவரின் வாக்குக்குச் செவிகொடுங்கள்.”
எரேமியா 29 : 21 (ECTA)
“என் பெயரால் உங்களுக்குப் பொய்யை இறைவாக்காக உரைத்து வரும் கோலயாவின் மகன் ஆகாபைக் குறித்தும், மாசேயாவின் மகன் செதேக்கியாவைக் குறித்தும் இஸ்ரயேலின் கடவுளான படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே; இதோ! நான் அவர்களைப் பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசரின் கையில் ஒப்புவிப்பேன். அவன் அவர்களை உங்கள் கண் முன்பாகவே வெட்டி வீழ்த்துவான்.
எரேமியா 29 : 22 (ECTA)
அவர்களுக்கு நேர்ந்ததை முன்னிட்டு, பாபிலோனுக்கு யூதாவிலிருந்து நாடுகடத்தப்பட்டோர் அனைவரும் ‘பாபிலோனிய மன்னன் நெருப்பில் போட்டுச் சுட்டெரித்த செதேக்கியாவைப் போலவும் ஆகாபைப் போலவும் ஆண்டவர் உன்னை ஆக்குவாராக’ என்று சாபமிடுவர்.
எரேமியா 29 : 23 (ECTA)
ஏனெனில் அவர்கள் இஸ்ரயேலில் மதிகேடானதைச் செய்துள்ளார்கள்; பிறருடைய மனைவியரோடு விபசாரம் செய்துள்ளார்கள்; நான் அவர்களுக்கு ஆணையிடாதிருந்தும், அவர்கள் என் பெயரால் பொய்வாக்கு உரைத்துள்ளார்கள். நானோ இவற்றை எல்லாம் அறிவேன்; இவற்றுக்குச் சாட்சியும் நானே, என்கிறார் ஆண்டவர்.”
எரேமியா 29 : 24 (ECTA)
நெகலாமைச் சார்ந்த செமாயாவிடம் நீ சொல்லவேண்டியது;
எரேமியா 29 : 25 (ECTA)
இஸ்ரயேலின் கடவுளாகிய படைகளின் ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்; நீ உன் பெயரால் மடல்கள் எழுதி, எருசலேமில் இருக்கும் எல்லா மக்களுக்கும் மாசேயாவின் மகனும் குருவுமான செப்பனியாவுக்கும் மற்ற குருக்கள் அனைவருக்கும் அவற்றை அனுப்பி வைத்துள்ளாய்.
எரேமியா 29 : 26 (ECTA)
செப்பனியாவுக்கு நீ எழுதியது; ஆண்டவர் இல்லத்தில் நீர் பொறுப்பாளராய் இருக்கும் பொருட்டும், இறைவாக்கினர்போல் நடிக்கும் எந்தப் பைத்தியக்காரனையும் தொழுவிலடித்து விலங்கிடும் பொருட்டும் குருவாகிய யோயாதாவுக்குப் பதிலாக ஆண்டவர் உம்மைக் குருவாக ஏற்படுத்தியுள்ளார்.
எரேமியா 29 : 27 (ECTA)
அப்படியிருக்க, உங்களிடம் இறைவாக்குரைக்கும் அனதோத்தைச் சார்ந்த எரேமியாவை நீர் ஏன் இன்னும் கண்டியாது விட்டு வைத்திருக்கிறீர்?
எரேமியா 29 : 28 (ECTA)
இதனால் அவன் பாபிலோனில் இருக்கும் எங்களுக்கு, ‘உங்களது அடிமைத்தனம் நெடுநாள் நீடிக்கும்; எனவே வீடுகளைக் கட்டி, அவற்றில் குடியிருங்கள்; தோட்டங்கள் அமைத்து, அவற்றின் விளைச்சலை உண்ணுங்கள்’ என்று செய்தி அனுப்பியுள்ளான்.
எரேமியா 29 : 29 (ECTA)
இறைவாக்கினர் எரேமியா கேட்கும்படி, குரு செப்பனியா அம்மடலை வாசித்துக் காட்டினார்.
எரேமியா 29 : 30 (ECTA)
அப்பொழுது ஆண்டவரின் வாக்கு எரேமியாவுக்கு அருளப்பட்டது:
எரேமியா 29 : 31 (ECTA)
நாடு கடத்தப்பட்டோர் எல்லாருக்கும் நீ எழுதி அனுப்ப வேண்டியது; நெகலாமியனான செமாயாவைப்பற்றி ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: “நான் அனுப்பாதிருந்தும் செமாயா உங்களுக்குப் பொய்யை இறைவாக்காக உரைத்து, அதை நீங்கள் நம்புமாறு செய்துள்ளான்.
எரேமியா 29 : 32 (ECTA)
எனவே ஆண்டவர் கூறுகிறார்; இதோ! நெகலாமியனான செமாயாவையும் அவனுடைய வழி மரபினரையும் நான் தண்டிப்பேன். இம்மக்களிடையே அவனுக்கு வாரிசே இராது. என் மக்களுக்கு நான் செய்யும் நன்மைகளை அவன் காணமாட்டான்; ஏனெனில் ஆண்டவருக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி செய்யுமாறு அவன் போதித்துள்ளான்,” என்கிறார் ஆண்டவர்.
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32