எரேமியா 20 : 1 (ECTA)
பஸ்கூருக்குச் சாபம் இம்மேர் மகனும், ஆண்டவரது இல்லத்தில் தலைமை அதிகாரியுமாய் இருந்த பஸ்கூர் என்னும் குரு, எரேமியா இவற்றை எல்லாம் இறைவாக்காகச் சொல்லக் கேட்டான்.
எரேமியா 20 : 2 (ECTA)
அதன் காரணமாக அவன் எரேமியாவைப் பிடித்து, அடித்து, ஆண்டவர் இல்லத்தில் பென்யமின் உயர்வாயிலில் சிறையில் அடைத்தான்.
எரேமியா 20 : 3 (ECTA)
மறுநாள் காலையில் பஸ்கூர் எரேமியாவைச் சிறையிலிருந்து விடுதலை செய்தான். அப்போது எரேமியா கூறியது: “ஆண்டவர் உன்னைப் பஸ்கூர் என்றல்ல, மாறாக ‘மாகோர் மிசாபீபு’ *என்றே அழைத்துள்ளார். [* எபிரேயத்தில், ‘சுற்றிலும் பேரச்சம்’ என்பது பொருள்.. ]
எரேமியா 20 : 4 (ECTA)
ஏனெனில் ஆண்டவர் கூறுவது இதுவே; இதோ உனக்கும் உன் நண்பர்களுக்கும் பேரச்சம் உண்டாக நீயே காரணமாவாய். உன் கண் முன்னாலேயே அவர்கள் பகைவர்களின் வாளால் மடிவார்கள். யூதா முழுவதையும் பாபிலோனிய மன்னனிடம் கையளிப்பேன்; அவன் அவர்களைப் பாபிலோனுக்கு நாடு கடத்தி வாளால் வெட்டி வீழ்த்துவான்.
எரேமியா 20 : 5 (ECTA)
இந்நகரின் செல்வங்களையும் உழைப்பின் பயன் அனைத்தையும் விலை உயர்ந்த பொருள்கள் யாவற்றையும் யூதா அரசரின் கருவூலங்களையும் அவர்கள் பகைவர்களிடம் ஒப்புவிப்பேன். அவர்கள் அவற்றைப் பறிமுதல் செய்து பாபிலோனுக்கே கொண்டு செல்வார்கள்.
எரேமியா 20 : 6 (ECTA)
பஸ்கூர்! நீயும் உன் வீட்டில் வாழும் அனைவரும் நாடு கடத்தப்படுவீர்கள். நீயும், உன் பொய்யான இறைவாக்குகளைக் கேட்ட உன் நண்பர்களும் பாபிலோனுக்குச் சென்று அங்குச் சாவீர்கள்; அங்கேயே புதைக்கப்படுவீர்கள்.
எரேமியா 20 : 7 (ECTA)
எரேமியாவின் முறைப்பாடு ஆண்டவரே! நீர் என்னை ஏமாற்றிவிட்டீர்; நானும் ஏமாந்து போனேன்; நீர் என்னைவிட வல்லமையுடையவர்; என்மேல் வெற்றி கொண்டுவிட்டீர்; நான் நாள் முழுவதும் நகைப்புக்கு ஆளானேன். எல்லாரும் என்னை ஏளனம் செய்கின்றார்கள்.
எரேமியா 20 : 8 (ECTA)
நான் பேசும்போதெல்லாம் ‘வன்முறை அழிவு’ என்றே கத்த வேண்டியுள்ளது; ஆண்டவரின் வாக்கு என்னை நாள் முழுதும் பழிச்சொல்லுக்கும் நகைப்புக்கும் ஆளாக்கியது.
எரேமியா 20 : 9 (ECTA)
“அவர் பெயரைச் சொல்லமாட்டேன்; அவர் பெயரால் இனிப் பேசவும் மாட்டேன்” என்பேனாகில், உம் சொல் என் இதயத்தில் பற்றியெரியும் தீ போல இருக்கின்றது. அது என் எலும்புகளுக்குள் அடைப்பட்டுக் கிடக்கின்றது. அதனை அடக்கிவைத்துச் சோர்ந்து போனேன்; இனி என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது.
எரேமியா 20 : 10 (ECTA)
‘சுற்றிலும் ஒரே திகில்!’ என்று பலரும் பேசிக் கொள்கின்றார்கள்; ‘பழிசுமத்துங்கள்; வாருங்கள், அவன்மேல் பழி சுமத்துவோம்’ என்கிறார்கள். என் நண்பர்கள்கூட என் வீழ்ச்சிக்காகக் காத்திருக்கிறார்கள்; ‘ஒருவேளை அவன் மயங்கிவிடுவான்; நாம் அவன்மேல் வெற்றி கொண்டு அவனைப் பழி தீர்த்துக் கொள்ளலாம்’ என்கிறார்கள்.
எரேமியா 20 : 11 (ECTA)
ஆனால், ஆண்டவர் வலிமை வாய்ந்த வீரரைப் போல என்னோடு இருக்கின்றார். எனவே, என்னைத் துன்புறுத்துவோர் இடறி விழுவர். அவர்கள் வெற்றிகொள்ள மாட்டார்கள். அவர்கள் விவேகத்தோடு செயல்படவில்லை; அவர்களின் அவமானம் என்றும் நிலைத்திருக்கும்; அது மறக்கப்படாது.
எரேமியா 20 : 12 (ECTA)
படைகளின் ஆண்டவரே! நேர்மையாளரை சோதித்தறிபவரும் உள்ளுணர்வுகளையும் இதயச் சிந்தனைகளையும் அறிபவரும் நீரே; நீர் என் எதிரிகளைப் பழி வாங்குவதை நான் காணவேண்டும்; ஏனெனில், என் வழக்கை உம்மிடம் எடுத்துரைத்துள்ளேன்.
எரேமியா 20 : 13 (ECTA)
ஆண்டவருக்குப் புகழ் பாடுங்கள்; அவரைப் புகழ்ந்தேத்துங்கள்; ஏனெனில், அவர் வறியோரின் உயிரைத் தீயோரின் பிடியினின்று விடுவித்தார்.
எரேமியா 20 : 14 (ECTA)
நான் பிறந்த நாள் சபிக்கப்படட்டும்; என் அன்னை என்னைப் பெற்றெடுத்த நாள் ஆசி பெறாதிருக்கட்டும். [* யோபு 3:1- 19 ]
எரேமியா 20 : 15 (ECTA)
‘உனக்கோர் ஆண் குழந்தை பிறந்துள்ளது’ என்ற செய்தியை என் தந்தையிடம் சொல்லி அவரை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்திய அந்த மனிதன் சபிக்கப்படுக! [* யோபு 3:1- 19 ]
எரேமியா 20 : 16 (ECTA)
அவன், ஆண்டவர் இரக்கமின்றி வீழ்த்திய நகர்களுக்கு ஒப்பாகட்டும். அவன் காதில் காலையில் அழுகைக் குரலும் நண்பகலில் போர் இரைச்சலும் ஒலிக்கட்டும்! [* யோபு 3:1- 19 ]
எரேமியா 20 : 17 (ECTA)
தாய் வயிற்றில் நான் இருந்தபோதே, அவள் ஏன் என்னைக் கொல்லவில்லை? என் தாயே எனக்குக் கல்லறையாய் இருந்திருப்பாளே! அவள் கருவறையிலேயே என்றும் இருந்திருப்பேனே! [* யோபு 3:1- 19 ]
எரேமியா 20 : 18 (ECTA)
கருவறைவிட்டு ஏன்தான் வெளிவந்தேன்? துன்ப துயரத்தை அனுபவிக்கவும் என் வாழ்நாள்களை வெட்கத்தில் கழிக்கவும்தான் வந்தேனோ? [* யோபு 3:1- 19 ]
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18