எரேமியா 19 : 1 (ECTA)
உடைந்த சாடியின் அடையாளம் ஆண்டவர் கூறுவது இதுவே: “நீ சென்று குயவன் செய்த மண்கலயம் ஒன்றை வாங்கு. மக்களுள் மூப்பர் சிலரையும் குருக்களுள் முதியோர் சிலரையும் கூட்டிக் கொண்டு,
எரேமியா 19 : 2 (ECTA)
மண்கல உடைசல் வாயில் அருகிலுள்ள பென்இன்னோம் பள்ளத்தாக்கிற்குப் போ. அங்கு நான் உன்னிடம் சொல்லப்போகும் சொற்களை அறிவி. [* 2 அர 23:10; எரே 7:30-32; 32:34- 35 ]
எரேமியா 19 : 3 (ECTA)
நீ சொல்ல வேண்டியது: “யூதாவின் அரசர்களே, எருசலேம் வாழ் மக்களே! ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள். இஸ்ரயேலின் கடவுளாகிய படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: கேட்போர் ஒவ்வொருவரின் காதுகள் நடு நடுங்கும் அளவுக்கு இந்த இடத்தின் மீது தீமை வரச் செய்வேன்.
எரேமியா 19 : 4 (ECTA)
அவர்கள் என்னைப் புறக்கணித்தனர்; இந்த இடத்தைத் தீட்டுப்படுத்தினர். தாங்களோ, தங்கள் மூதாதையரோ, யூதாவின் அரசர்களோ அறிந்திராத வேற்றுத் தெய்வங்களுக்குத் தூபம் காட்டினர். மாசற்றோரின் இரத்தத்தால் இவ்விடத்தை நிரப்பினர்.
எரேமியா 19 : 5 (ECTA)
தங்கள் புதல்வர்களைத் தீயில் சுட்டெரித்துப் பாகாலுக்கு எரிபலி கொடுக்கும்படி, அந்தத் தெய்வத்திற்குத் தொழுகை மேடு எழுப்பினர். இதனை நான் கட்டளையிடவில்லை; இதுபற்றி நான் பேசவுமில்லை; இது என் எண்ணத்தில்கூட எழவில்லை. * லேவி 18:21..
எரேமியா 19 : 6 (ECTA)
ஆதலால் ஆண்டவர் கூறுகிறார்; இதோ நாள்கள் வருகின்றன! அப்போது இந்த இடம் தோபேத்து என்றோ பென்இன்னோம் பள்ளத்தாக்கு என்றோ பெயர் பெறாது. மாறாகப் ‘படுகொலைப் பள்ளத்தாக்கு’ என்று பெயர் பெறும்.
எரேமியா 19 : 7 (ECTA)
யூதா, எருசலேமின் திட்டங்களை நான் இவ்விடத்தில் முறியடிப்பேன். அவர்கள் பகைவர் முன்னிலையிலும் அவர்களின் உயிரைப் பறிக்கத் தேடுவோர் முன்னிலையிலும் அவர்களை வாளால் வீழ்த்துவேன். அவர்களின் பிணங்களை வானத்துப் பறவைகளுக்கும் நிலத்து விலங்குகளுக்கும் உணவாகக் கொடுப்பேன்.
எரேமியா 19 : 8 (ECTA)
இந்நகர் கொடூரமாய்க் காட்சியளிக்கும். அது ஏளனத்துக்கு உள்ளாகும். அவ்வழியே செல்லும் ஒவ்வொருவனும் திகிலுறுவான்; அதன் காயங்களை எண்ணி ஏளனம் செய்வான்.
எரேமியா 19 : 9 (ECTA)
தங்கள் புதல்வர் புதல்வியரின் சதையை அவர்கள் உண்ணுமாறு செய்வேன். அவர்கள் பகைவர்களும் அவர்களின் உயிரைப் பறிக்கத் தேடுவோரும் அவர்களை முற்றுகையிட்டு நெருக்கி வருத்தும்போது, அவர்கள் ஒருவர் ஒருவருடைய சதையை உண்பார்கள்.
எரேமியா 19 : 10 (ECTA)
அப்போது உன்னோடு வந்திருந்தவர்களின் முன்னிலையில் அந்த மண்கலயத்தை உடைத்துவிட்டு,
எரேமியா 19 : 11 (ECTA)
நீ அவர்களுக்குக் கூற வேண்டியது; படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே; குயவனின் உடைக்கப்பட்ட மண் கலயத்தை மீண்டும் ஒட்டவைக்க முடியாது; அதுபோலவே நான் இந்த மக்களையும் இந்த நகரையும் தகர்த்தெறிவேன். இறந்தோரைப் புதைக்க வேறு இடம் இல்லாமையால் தோபேத்திலேயே புதைப்பர்.
எரேமியா 19 : 12 (ECTA)
ஆண்டவர் கூறுவது: எருசலேமுக்கும் அதில் குடியிருப்போருக்கும் எதிராக இவ்வாறு செய்வேன். அந்நகரைத் தோபேத்தாகவே மாற்றிவிடுவேன்.
எரேமியா 19 : 13 (ECTA)
எருசலேமின் வீடுகளும், யூதா அரசர்களின் மாளிகைகளும், எந்த வீட்டு மேல்தளங்களில் வானத்துப் படைகளுக்குத் தூபம் காட்டினார்களோ, வேற்றுத் தெய்வங்களுக்கு நீர்மப் படையல்கள் படைத்தார்களோ, அந்த வீடுகள் எல்லாம் தோபேத்தைப் போலத் தீட்டுப்பட்டவையாகும்'’.
எரேமியா 19 : 14 (ECTA)
இறைவாக்கு உரைக்க ஆண்டவரால் தோபேத்துக்கு அனுப்பப் பெற்றிருந்த எரேமியா அங்கிருந்து திரும்பி வந்து, திருக்கோவில் முற்றத்தில் நின்று கொண்டு மக்கள் அனைவருக்கும் கூறியது:
எரேமியா 19 : 15 (ECTA)
“இஸ்ரயேலின் கடவுளாகிய படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: நான் இந்நகருக்கு எதிராகக் கூறியுள்ள அனைத்துத் தீமைகளையும் இந்நகர் மேலும் இதனைச் சுற்றியுள்ள நகர்கள்மேலும் விழச் செய்வேன். ஏனெனில் அவர்கள் என் சொற்களைக் கேளாமல் முரட்டுப் பிடிவாதம் செய்தார்கள்.
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15