எரேமியா 14 : 1 (ECTA)
கொடிய வறட்சி வறட்சி பற்றி எரேமியாவுக்கு ஆண்டவர் அருளிய வாக்கு:
எரேமியா 14 : 2 (ECTA)
யூதா துயருற்றுள்ளது; அதன் வாயில்கள் சோர்வுற்றுள்ளன; அதன் மக்கள் தரையில் விழுந்து புலம்புகின்றார்கள்; எருசலேமின் அழுகைக் குரல் எழும்பியுள்ளது.
எரேமியா 14 : 3 (ECTA)
உயர்குடி மக்கள் தம் ஊழியரைத் தண்ணீர் எடுக்க அனுப்புகின்றார்கள்; அவர்கள் நீர்த்தேக்கங்களுக்குச் செல்கின்றார்கள்; அங்குத் தண்ணீர் இல்லை; அவர்கள் வெறுங்குடங்களோடு திரும்பி வருகின்றார்கள்; வெட்கி நாணித் தங்கள் தலைகளை மூடிக்கொள்கின்றார்கள்.
எரேமியா 14 : 4 (ECTA)
நாட்டில் மழை இல்லாததால் தரை வெடிப்புற்றுள்ளது. உழவர்கள் வெட்கித் தங்கள் தலைகளை மூடிக் கொள்கின்றார்கள்; * ‘யூப்பிரத்தீசு’ என்பது மறுபெயர்.
எரேமியா 14 : 5 (ECTA)
கன்று ஈன்ற வயல்வெளிப் பெண்மான் புல் இல்லாமையால் தன் கன்றை விட்டுவிட்டு ஓடிப்போகும்.
எரேமியா 14 : 6 (ECTA)
காட்டுக் கழுதைகள் மொட்டை மேடுகள்மேல் நிற்கின்றன; காற்று இல்லாமையால், குள்ள நரிகளைப் போல் மூச்சுத் திணறுகின்றன; பசுமையே காணாததால் அவற்றின் பார்வை மங்கிப் போயிற்று.
எரேமியா 14 : 7 (ECTA)
ஆண்டவரே! நாங்கள் பலமுறை உம்மை விட்டகன்றோம். உமக்கு எதிராகப் பாவம் செய்தோம். எங்கள் குற்றங்களே எங்களுக்கு எதிராய்ச் சான்றுபகர்கின்றன. எனினும், உமது பெயருக்கேற்பச் செயலாற்றும்.
எரேமியா 14 : 8 (ECTA)
இஸ்ரயேலின் நம்பிக்கையே! துன்ப வேளையில் அதனை மீட்பவரே! நாட்டில் நீர் ஏன் அன்னியரைப் போல் இருக்கவேண்டும்? இரவு மட்டும் தங்க வரும் வழிப்போக்கரைப்போல் நீர் ஏன் இருக்க வேண்டும்?
எரேமியா 14 : 9 (ECTA)
நீர் ஏன் திகைப்புற்ற மனிதர்போல் தோன்ற வேண்டும்? ஏன் காக்கும் திறனற்ற வீரர் போல் காணப்படவேண்டும்? ஆயினும், ஆண்டவரே! நீர் எங்கள் நடுவில் உள்ளீர்; உமது பெயராலேயே நாங்கள் அழைக்கப்படுகிறோம்; எங்களைக் கைவிட்டு விடாதேயும்.
எரேமியா 14 : 10 (ECTA)
இம்மக்களைக் குறித்து ஆண்டவர் கூறுவது இதுவே; அவர்கள் அலைந்து திரிய விரும்பினர்; தங்கள் கால்களை அவர்கள் கட்டுப்படுத்தவில்லை; எனவே, ஆண்டவர் அவர்களை ஏற்கவில்லை; இப்போது அவர்களின் தீமையை நினைவில் கொண்டு, அவர்களின் பாவங்களுக்காக அவர்களைத் தண்டிப்பார்.
எரேமியா 14 : 11 (ECTA)
ஆண்டவர் எனக்குக் கூறியது: இந்த மக்களின் நலனுக்காக நீ என்னிடம் மன்றாட வேண்டாம்.
எரேமியா 14 : 12 (ECTA)
அவர்கள் நோன்பு இருப்பினும் நான் அவர்களின் குரலைக் கேட்கமாட்டேன். அவர்கள் எரிபலிகளையும் தானியப் படையல்களையும் அளிப்பினும் அவற்றை நான் ஏற்கமாட்டேன். மாறாக, வாளாலும் பஞ்சத்தாலும் கொள்ளை நோயாலும் அவர்களை ஒழித்து விடுவேன்.
எரேமியா 14 : 13 (ECTA)
“ஓ! எம் தலைவராகிய ஆண்டவரே! ‘நீங்கள் வாளைச் சந்திக்க மாட்டீர்கள். உங்களிடையே பஞ்சம் வராது. மாறாக, இந்த இடத்தில் நிலையான அமைதியை உங்களுக்குத் தருவேன்’ என இறைவாக்கினர் அவர்களுக்குக் கூறுகின்றனரே!” என்றேன் நான்.
எரேமியா 14 : 14 (ECTA)
ஆண்டவர் என்னிடம் கூறியது: “என் பெயரால் இறைவாக்கினர் பொய்யை உரைக்கின்றார்கள். நான் அவர்களை அனுப்பவில்லை; அவர்களுக்குக் கட்டளையிடவில்லை; அவர்களோடு பேசவுமில்லை.” அவர்கள் உங்களுக்கு இறைவாக்காக உரைப்பவை; பொய்யான காட்சிகள், பயனற்ற குறிகூறல், வஞ்சக எண்ணங்கள், சொந்தக் கற்பனைகள்.
எரேமியா 14 : 15 (ECTA)
ஆகவே தம் பெயரால் இறைவாக்கு உரைப்போரைக் குறித்து ஆண்டவர் கூறுவது இதுவே; நான் அவர்களை அனுப்பவில்லை; எனினும், அவர்கள் “இந்த நாட்டின்மேல் வாளும் பஞ்சமும் வாரா” என்று கூறுகிறார்கள். வாளாலும் பஞ்சத்தாலும் அந்த இறைவாக்கினரே அழிவுறுவர்.
எரேமியா 14 : 16 (ECTA)
அவர்களின் இறைவாக்கைக் கேட்கும் மக்களும் வாள், பஞ்சம் ஆகியவற்றின் காரணமாக எருசலேமின் தெருக்களில் தூக்கி வீசப்படுவார்கள். அவர்களையும் அவர்கள் மனைவியர், புதல்வர், புதவியரையும் புதைக்க யாரும் இரார். அவர்களது தீமையை அவர்கள் மீதே கொட்டுவேன்.
எரேமியா 14 : 17 (ECTA)
நீ அவர்களுக்கு இந்த வாக்கைக் கூறு; “என் கண்கள் இரவு பகலாகக் கண்ணீர் சொரியட்டும்; இடைவிடாது சொரியட்டும்; ஏனெனில், என் மக்களாம் கன்னிமகள் நொறுங்குண்டாள்; அவளது காயம் மிகப் பெரிது.
எரேமியா 14 : 18 (ECTA)
வயல்வெளிகளுக்குச் சென்றால், இதோ! வாளால் மடிந்தவர்கள்! நகரில் நுழைந்தால், இதோ! பசியால் நலிந்தவர்கள்! இறைவாக்கினரும் குருக்களும் தங்களுக்கு முன்பின் தெரியாத நாட்டில் அலைகின்றனர்.
எரேமியா 14 : 19 (ECTA)
நீர் யூதாவை முற்றிலும் புறக்கணித்துவிட்டீரா? சீயோனை உம் உள்ளம் வெறுத்து விட்டதா? நாங்கள் குணமாக முடியாதபடி ஏன் எங்களை நொறுக்கினீர்? நாங்கள் அமைதிக்காகக் காத்திருந்தோம்; பயனேதும் இல்லை! நலம்பெறும் காலத்தை எதிர்பார்த்திருந்தோம்; பேரச்சமே மிஞ்சியது!
எரேமியா 14 : 20 (ECTA)
ஆண்டவரே! எங்கள் குற்றத்தையும் எங்கள் மூதாதையரின் தீமையையும் நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்; நாங்கள் உமக்கு எதிராய்ப் பாவம் செய்தோம்.
எரேமியா 14 : 21 (ECTA)
உம் பெயரை முன்னிட்டு எங்களை உதறித் தள்ளாதீர்; உம் மாட்சிமிகு அரியணையை அவமதிக்காதீர்; நீ எங்களோடு செய்த உடன்படிக்கையை நினைவுகூரும்; அதனை முறித்து விடாதீர்.
எரேமியா 14 : 22 (ECTA)
வேற்றினத்தாரின் தெய்வச் சிலைகளுள் மழை தரவல்லது எதுவும் உண்டா? வானங்கள் தாமாக மழை பொழிய முடியுமா? எங்கள் இறைவனாகிய ஆண்டவரே, நீர் அல்லவா அதைச் செய்யக் கூடியவர்; நாங்கள் உம்மையே எதிர்நோக்கியுள்ளோம்; எனெனில், இவற்றை எல்லாம் செய்பவர் நீரே.
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22