எரேமியா 11 : 1 (ECTA)
உடன்படிக்கை ஆண்டவர் எரேமியாவுக்கு அருளிய வாக்கு:
எரேமியா 11 : 2 (ECTA)
“இவ்வுடன்படிக்கையின் விதிமுறைகளைக் கேட்டு யூதாவின் மக்களுக்கும் எருசலேமில் குடியிருப்போருக்கும் அறிவிப்பாய்.
எரேமியா 11 : 3 (ECTA)
நீ அவர்களுக்குச் சொல்லவேண்டியது: இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் கூறுவது இதுவே; இவ்வுடன்படிக்கையின் விதிமுறைகளுக்குச் செவி கொடுக்காதவன் சபிக்கப்படுக!
எரேமியா 11 : 4 (ECTA)
இரும்புச் சூளையாகிய எகிப்து நாட்டிலிருந்து நான் உங்கள் மூதாதையரைக் கூட்டிக்கொண்டு வந்த நாளில், அவர்களுக்குக் கட்டளையிட்டது இதுவே; என் குரலுக்குச் செவிசொடுத்து, நான் கட்டளையிடுவது அனைத்தையும் செய்யுங்கள். அப்போது நீங்கள் என் மக்களாய் இருப்பீர்கள்; நான் உங்கள் கடவுளாய் இருப்பேன்.
எரேமியா 11 : 5 (ECTA)
இன்று இருப்பதுபோல, அப்பொழுது, பாலும் தேனும் வழிந்தோடும் நாட்டை அவர்களுக்குக் கொடுப்பதாக உங்கள் மூதாதையருக்கு நான் ஆணையிட்டுக் கூறியதை உறுதிப்படுத்துவேன்.” அதற்கு நான், ‘ஆண்டவரே! அப்படியே ஆகுக!’ என்று மறுமொழி கூறினேன்.
எரேமியா 11 : 6 (ECTA)
ஆண்டவர் என்னிடம் கூறினார்: யூதா நகர்களிலும் எருசலேம் தெருக்களிலும் இந்த விதிமுறைகளை அறிவிப்பாய். ‘உடன்படிக்கையின் விதிமுறைகளைக் கேட்டு அவற்றின்படி ஒழுகுங்கள்’ என்று கூறுவாய்.
எரேமியா 11 : 7 (ECTA)
உங்கள் மூதாதையரை எகிப்து நாட்டிலிருந்து கூட்டிக்கொண்டுவந்த நாளிலிருந்து இன்றுவரை அவர்களைத் தொடர்ந்து கண்டித்து வந்துள்ளேன். என் குரலுக்குச் செவிகொடுங்கள் என்று வற்புறுத்திக் கூறியுள்ளேன். [* திவெ 15:4.. ]
எரேமியா 11 : 8 (ECTA)
அவர்களோ கீழ்ப்படியவும் இல்லை; செவிசாய்க்கவும் இல்லை. மாறாக, ஒவ்வொருவரும் தங்கள் தீய இதயப் பிடிவாதத்தின்படி நடந்தனர். ஆகவே நான் கட்டளையிட்டும் அவர்கள் கடைப்பிடிக்காத இந்த உடன்படிக்கையின் விதிமுறை அனைத்தின்படி அவர்களுக்கு எதிராகச் செயல்படுவேன்.
எரேமியா 11 : 9 (ECTA)
ஆண்டவர் என்னிடம் கூறியது: யூதா மக்களிடமும் எருசலேம் வாழ் மக்களிடமும் சதித்திட்டம் ஒன்று தோன்றியுள்ளது.
எரேமியா 11 : 10 (ECTA)
என் சொற்களுக்குச் செவிசாய்க்க மறுத்து, முன்பு தம் மூதாதையர் செய்த குற்றங்களை இவர்களும் செய்தார்கள். வேற்றுத் தெய்வங்களுக்குப்பின் திரிந்து, அவற்றுக்கு ஊழியம் செய்து, நான் அவர்கள் மூதாதையரோடு செய்த உடன்படிக்கையை இஸ்ரயேல் வீட்டாரும் யூதாவின் வீட்டாரும் முறித்துவிட்டனர்.
எரேமியா 11 : 11 (ECTA)
ஆகவே ஆண்டவர் கூறுவது இதுவே: இதோ நான் அவர்கள் மீது தீமை வருவிக்கப்போகிறேன். அதிலிருந்து அவர்கள் தப்பமுடியாது. அவர்கள் என்னை நோக்கி அழுகுரல் எழுப்பினாலும் நான் அவர்களுக்குச் செவிசாய்க்கமாட்டேன்.
எரேமியா 11 : 12 (ECTA)
அப்போது யூதா நகர்களில் குடியிருப்போரும் எருசலேம் வாழ் மக்களும் தாங்கள் தூபம் காட்டி வணங்கும் தெய்வங்களிடம் ஓடிச்சென்று அழுகுரல் எழுப்புவார்கள். ஆனால் அவர்களுக்குத் தீமை நேர்ந்த காலத்தில் அவற்றால் அவர்களை விடுவிக்கவே முடியாது.
எரேமியா 11 : 13 (ECTA)
யூதாவே, உன் நகர்களின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு உனக்குத் தெய்வங்கள் உள்ளன. எருசலேமிலுள்ள தெருக்களின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு, வெட்கக் கேட்டிற்கு — பாகாலுக்கு — தூபம் காட்டப் பீடங்கள் அமைத்தீர்கள்.
எரேமியா 11 : 14 (ECTA)
எனவே இந்த மக்களுக்காக நீ மன்றாட வேண்டாம். இவர்களுக்காகக் குரல் எழுப்பவோ வேண்டுதல் செய்யவோ வேண்டாம். ஏனெனில் அவர்களுக்குத் தீமை நேரிடும்பொழுது அவர்கள் என்னை வருந்தி அழைத்தாலும் நான் செவிசாய்க்கமாட்டேன்.
எரேமியா 11 : 15 (ECTA)
என் இல்லத்தில் இருக்க என் அன்புக்குரியவளுக்கு என்ன உரிமை? அவள்தான் தன் எண்ணற்ற இழிசெயல்களைச் செய்துவருகிறாளே! உனக்கு வரவிருக்கும் தீமையைப் பலி இறைச்சி உன்னிடமிருந்து அகற்றிவிடுமா? அப்படியிருக்க ஏன் அக்களிக்கிறாய்?
எரேமியா 11 : 16 (ECTA)
“பசுமையான, அழகிய, பார்வைக்கினிய பழங்களைக் கொண்ட ஒலிவ மரம்” என்பது ஆண்டவர் உனக்கு இட்ட பெயர். இப்போதோ கொடும் புயற்காற்றின் இரைச்சலுடன் அது தீப்பற்றி எரியச் செய்கிறார். அதன் கிளைகள் தீய்ந்து போயின.
எரேமியா 11 : 17 (ECTA)
உன்னை நட்டுவளர்த்த படைகளின் ஆண்டவரே உனக்குத் தீமை வரும் என்று சொல்லிவிட்டார். ஏனெனில் இஸ்ரயேல் வீட்டாரும் யூதா வீட்டாரும் தீச்செயல் செய்தார்கள். எனக்குச் சினமூட்டும்படி பாகாலுக்குத் தூபம் காட்டினார்கள்.
எரேமியா 11 : 18 (ECTA)
எரேமியாவைக் கொல்லச் சதி “ஆண்டவர் எனக்கு வெளிப்படுத்தினார்; நானும் புரிந்து கொண்டேன். பின்னர் நீர் அவர்களின் செயல்களை எனக்குக் காட்டினீர்.
எரேமியா 11 : 19 (ECTA)
வெட்டுவதற்குக் கொண்டு செல்லப்படும் சாந்தமான செம்மறிபோல் இருந்தேன்; அவர்கள் எனக்கு எதிராய், “மரத்தைப் பழத்தோடு அழிப்போம்; வாழ்வோரின் நாட்டிலிருந்து அவனை அகற்றிவிடுவோம்; அவன் பெயர் மறக்கப்படட்டும்” என்று சொல்லிச் சதித் திட்டம் தீட்டியதை நான் அறியாதிருந்தேன்.
எரேமியா 11 : 20 (ECTA)
படைகளின் ஆண்டவரே, நீர் நேர்மையோடு தீர்ப்பிடுபவர்; உள்ளுணர்வுகளையும் இதயச் சிந்தனைகளையும் சோதித்தறிபவர்; நீர் அவர்களைப் பழிவாங்குவதை நான் காணவேண்டும். ஏனெனில், என் வழக்கை உம்மிடம் எடுத்துரைத்துள்ளேன்.
எரேமியா 11 : 21 (ECTA)
“ஆண்டவரின் பெயரால் இறைவாக்கு உரைக்காதே; உரைத்தால் எங்கள் கைகளாலே சாவாய்” என்று கூறி உன் உயிரைப் பறிக்கத் தேடும் அனத்தோத்தைச் சார்ந்த ஆள்களைப்பற்றி,
எரேமியா 11 : 22 (ECTA)
படைகளின் ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்; இதோ நான் அவர்களைத் தண்டிக்கப் போகிறேன். இளைஞர்கள் வாளால் மடிவர்; புதல்வர், புதல்வியர் பஞ்சத்தால் அழிவர்.
எரேமியா 11 : 23 (ECTA)
அவர்களுள் யாரும் எஞ்சியிருக்க மாட்டார்கள். அனத்தோத்தைச் சார்ந்த ஆள்கள் மேல், அவர்களைத் தண்டிக்கும் ஆண்டில், தீமை வரச்செய்வேன்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23