எரேமியா 1 : 1 (ECTA)
எரேமியாவின் அழைப்பு பென்யமின் நாட்டு அனத்தோத்தில் இருந்த குருக்களுள் ஒருவரான இலிக்கியாவின் மகன் எரேமியாவின் சொற்கள்:
எரேமியா 1 : 2 (ECTA)
ஆமோன் மகனும் யூதா அரசருமான யோசியாவின் காலத்தில், அவரது ஆட்சியின் பதின்மூன்றாம் ஆண்டில் ஆண்டவரின் வாக்கு எரேமியாவுக்கு அருளப்பட்டது. [* 2 அர 22:3-23:7; 2 குறி 24:8-35: 19 ]
எரேமியா 1 : 3 (ECTA)
யோசியா மகனும் யூதா அரசனுமாகிய யோயாக்கீம் காலத்திலும், யோசியா மகனும் யூதா அரசனுமாகிய செதேக்கியா ஆட்சியேற்ற பதினோராம் ஆண்டின் இறுதி வரையிலும், அதாவது எருசலேம் மக்கள் நாடுகடத்தப்பட்ட அதே ஆண்டின் ஐந்தாம் மாதம்வரை ஆண்டவரின் வாக்கு அவருக்கு அருளப்பட்டது. [* 2 அர 23:36-24:7,18-25:21; 2 குறி 36:5-8,11- 21 ]
எரேமியா 1 : 4 (ECTA)
எனக்கு அருளப்பட்ட ஆண்டவரின் வாக்கு:
எரேமியா 1 : 5 (ECTA)
“தாய் வயிற்றில் உன்னை நான் உருவாக்கு முன்பே அறிந்திருந்தேன்; நீ பிறக்குமுன்பே உன்னைத் திருநிலைப்படுத்தினேன்; மக்களினங்களுக்கு இறைவாக்கினனாக உன்னை ஏற்படுத்தினேன்.”
எரேமியா 1 : 6 (ECTA)
நான், “என் தலைவராகிய ஆண்டவரே, எனக்குப் பேசத் தெரியாதே, சிறுபிள்ளைதானே” என்றேன்.
எரேமியா 1 : 7 (ECTA)
ஆண்டவர் என்னிடம் கூறியது: “‘சிறுபிள்ளை நான்’ என்று சொல்லாதே; யாரிடமெல்லாம் உன்னை அனுப்புகின்றேனோ அவர்களிடம் செல்; எவற்றை எல்லாம் சொல்லக் கட்டளை இடுகின்றேனோ அவற்றைச் சொல்.
எரேமியா 1 : 8 (ECTA)
அவர்கள்முன் அஞ்சாதே. ஏனெனில், உன்னை விடுவிக்க நான் உன்னோடு இருக்கின்றேன், என்கிறார் ஆண்டவர்.”
எரேமியா 1 : 9 (ECTA)
ஆண்டவர் தம் கையை நீட்டி என் வாயைத் தொட்டு என்னிடம் கூறியது: “இதோ பார்! என் சொற்களை உன் வாயில் வைத்துள்ளேன்.
எரேமியா 1 : 10 (ECTA)
பிடுங்கவும் தகர்க்கவும், அழிக்கவும் கவிழ்க்கவும், கட்டவும் நடவும், இன்று நான் உன்னை மக்களினங்கள் மேலும்} அரசுகள் மேலும் பொறுப்பாளனாக ஏற்படுத்தியுள்ளேன்”.
எரேமியா 1 : 11 (ECTA)
ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது: ‘எரேமியா, நீ காண்பது என்ன?’ என்னும் கேள்வி எழ, “வாதுமை* மரக்கிளையைக் காண்கிறேன்” என்றேன். * எபிரேயத்தில், ‘விழிப்பாயிருக்கும் மரம்’ என்பது பொருள்..
எரேமியா 1 : 12 (ECTA)
அதற்கு ஆண்டவர் என்னிடம், “நீ கண்டது சரியே. என் வாக்கைச் செயலாக்க நானும் விழிப்பாயிருப்பேன்” என்றார்.
எரேமியா 1 : 13 (ECTA)
ஆண்டவரின் வாக்கு இரண்டாம் முறை எனக்கு அருளப்பட்டது: “நீ காண்பது என்ன?” என்னும் கேள்வி எழ, “கொதிக்கும் பானையைக் காண்கிறேன். அதன் வாய் வடக்கிலிருந்து சாய்ந்திருக்கின்றது” என்றேன்.
எரேமியா 1 : 14 (ECTA)
ஆண்டவர் என்னிடம் கூறியது: “நாட்டில் குடியிருப்போர் அனைவர் மீதும் வடக்கிலிருந்தே தீமை பாய்ந்து வரும்.”
எரேமியா 1 : 15 (ECTA)
இதோ வடக்கிலுள்ள அரச குடும்பத்தார் அனைவரையும் நான் அழைக்கிறேன், என்கிறார் ஆண்டவர். அவர்கள் வந்து ஒவ்வொருவரும் எருசலேமின் வாயில்களிலும், அதன் சுற்றுச் சுவர்களுக்கு எதிரிலும், யூதா நகர்களுக்கு எதிரிலும் தம் அரியணையை அமைப்பர்.
எரேமியா 1 : 16 (ECTA)
என் மக்களின் தீய செயல்களுக்காக அவர்களுக்கெதிராகத் தீர்ப்புக் கூறப் போகிறேன். அவர்கள் என்னைப் புறக்கணித்தார்கள். வேற்றுத் தெய்வங்களுக்குத் தூபம் காட்டினார்கள். தங்கள் கைவேலைப்பாடுகளை வழிபட்டார்கள்.
எரேமியா 1 : 17 (ECTA)
நீயோ உன் இடையை வரிந்து கட்டிக்கொள். புறப்படு, நான் கட்டளையிடும் அனைத்தையும் அவர்களிடம் சொல். அவர்கள் முன் கலக்கமுறாதே. இல்லையேல், அவர்கள் முன் உன்னைக் கலக்கமுறச் செய்வேன்.
எரேமியா 1 : 18 (ECTA)
இதோ, இன்று நான் உன்னை நாடு முழுவதற்கும், அதாவது, யூதாவின் அரசர்களுக்கும் அதன் தலைவர்களுக்கும் அதன் குருக்களுக்கும் நாட்டின் மக்களுக்கும் எதிராக அரண்சூழ் நகராகவும் இரும்புத் தூணாகவும் வெண்கலச் சுவராகவும் ஆக்கியுள்ளேன்.
எரேமியா 1 : 19 (ECTA)
அவர்கள் உனக்கு எதிராகப் போராடுவார்கள். எனினும் உன்மேல் வெற்றி கொள்ள அவர்களால் இயலாது. ஏனெனில் உன்னை விடுவிக்க நான் உன்னோடு இருக்கிறேன்” என்கிறார் ஆண்டவர்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19