ஏசாயா 66 : 1 (ECTA)
மக்களினத்தார்க்கு ஆண்டவர் அளிக்கும் தீர்ப்பு ஆண்டவர் கூறுவது இதுவே: விண்ணகம் என் அரியணை; மண்ணகம் என் கால்மணை; அவ்வாறிருக்க எத்தகைய கோவிலை நீங்கள் எனக்காகக் கட்டவிருக்கிறீர்கள்? எத்தகைய இடத்தில் நான் ஓய்வெடுப்பேன்? [* மத் 5:34,35; 23: 22 ; திப 7:49- 50. ]
ஏசாயா 66 : 2 (ECTA)
இவை அனைத்தையும் என் கைகளே உண்டாக்கின; இவை யாவும் என்னால் உருவாகின, என்கிறார் ஆண்டவர். எளியவரையும், உள்ளம் வருந்துபவரையும், என் சொல்லுக்கு அஞ்சுபவரையும் நான் கண்ணோக்குவேன். [* திப 7:49- 50 ]
ஏசாயா 66 : 3 (ECTA)
அவர்களுக்கு இளம் காளையை வெட்டிப் பலியிடுவதும் மனிதரைக் கொலைச்செய்வதும் ஒன்றாம்; ஆட்டுக் குட்டியைப் பலியாகக் கொடுப்பதும் நாயின் கழுத்தை முறிப்பதும் ஒன்றாம்; உணவுப் படையலைப் படைப்பதும், பன்றியின் இரத்தத்தை ஒப்புக் கொடுப்பதும் ஒன்றாம்; நினைவுப் படையலாகிய தூபம் காட்டுதலைச் செய்வதும் சிலைகளை வணங்குதலும் ஒன்றாம்; அவர்கள் தங்கள் வழிகளையே தெரிந்தெடுத்துள்ளனர்; தங்கள் அருவருப்புகள் மீது அவர்கள் உள்ளம் மகிழ்கின்றது.
ஏசாயா 66 : 4 (ECTA)
நானும் அவர்களுக்குரிய தண்டனையைத் தேர்ந்து கொள்வேன்; அவர்கள் அஞ்சுகின்றவற்றை அவர்கள்மீது வரச்செய்வேன்; ஏனெனில், நான் அழைத்தபோது எவரும் பதில் தரவில்லை; நான் பேசியபோது அவர்கள் செவி கொடுக்கவில்லை; என் கண்முன்னே தீயவற்றைச் செய்தார்கள்; நான் விரும்பாதவற்றைத் தெரிந்தெடுத்தார்கள்.
ஏசாயா 66 : 5 (ECTA)
ஆண்டவரின் வாக்குக்கு நடுநடுங்குவோரே, இதைக் கேளுங்கள்; என் பெயர் பொருட்டு உங்களை வெறுத்து ஒதுக்கும் உங்கள் உறவின் முறையார் ‘நாங்கள் உங்கள் மகிழ்ச்சியைக் காணும் பொருட்டு ஆண்டவர் தம் மாட்சியைக் காண்பிக்கட்டும்’ என்கிறார்கள். ஆனால் அவர்கள்தான் வெட்கம் அடைவார்கள்.
ஏசாயா 66 : 6 (ECTA)
இதோ, நகரில் பேரொலி கேட்கின்றது! திருக்கோவிலில் பேரோசை எழுகின்றது! ஆண்டவர் தம் பகைவருக்குத் தக்க பதலடி கொடுப்பதால் எழும் இரைச்சலே அது!
ஏசாயா 66 : 7 (ECTA)
வேதனை வருமுன்னே சீயோன் பிள்ளை பெற்றாள்! பிரசவ நேரம் நெருங்குமுன்னே ஆண்மகவை ஈன்றாள்! [* திவெ 12: 5 ]
ஏசாயா 66 : 8 (ECTA)
இத்தகைய நிகழ்ச்சிபற்றிக் கேள்வியுற்றவர் யார்? இதைப் போன்ற ஒன்றைப் பார்த்தவர் யார்? ஒரே நாளில் நாடு ஒன்று உருவாகிட இயலுமா? ஒரு நொடிப்பொழுதில் மக்களினம் ஒன்று பிறக்கக்கூடுமா? ஆனால் வேதனை ஏற்பட்டவுடனே சீயோன் தன் பிள்ளைகளைப் பெற்றுவிட்டாள்.
ஏசாயா 66 : 9 (ECTA)
பேறுகாலத்தை ஏற்படுத்திய நான் மகப்பேற்றைத் தடை செய்வேனா? என்கிறார் ஆண்டவர். மகப்பேற்றுக்குக் காரணமான நான் கருப்பையை அடைத்துவிடுவேனா? என்கிறார் உங்கள் கடவுள்.
ஏசாயா 66 : 10 (ECTA)
எருசலேமின் மேல் அன்பு கொண்ட அனைவரும் அவளுடன் அகமகிழ்ந்து அவள் பொருட்டு அக்களியுங்கள்; அவளுக்காகப் புலம்பி அழும் எல்லாரும் அவளுடன் சேர்ந்து மகிழ்ந்து கொண்டாடி ஆர்ப்பரியுங்கள்.
ஏசாயா 66 : 11 (ECTA)
அப்போது அவளின் ஆறுதல் அளிக்கும் முலைகளில் குடித்து நீங்கள் நிறைவடைவீர்கள்; அவள் செல்வப் பெருக்கில் நிறைவாக அருந்தி இன்பம் காண்பீர்கள்.
ஏசாயா 66 : 12 (ECTA)
ஆண்டவர் கூறுவது இதுவே: ஆறுபோல் நிறைவாழ்வு பாய்ந்தோடச் செய்வேன்; பெருக்கெடுத்த நீரோடைபோல் வேற்றினத்தாரின் செல்வம் விரைந்து வரச் செய்வேன்; நீங்கள் பால் பருகுவீர்கள்; மார்பில் அணைத்துச் சுமக்கப்படுவீர்கள்; மடியில் வைத்துத் தாலாட்டப்படுவீர்கள்.
ஏசாயா 66 : 13 (ECTA)
தாய் தன் பிள்ளையைத் தேற்றுவதுபோல் நான் உங்களைத் தேற்றுவேன்; எருசலேமில் நீங்கள் தேற்றப்படுவீர்கள்.
ஏசாயா 66 : 14 (ECTA)
இதை நீங்கள் காண்பீர்கள், உங்கள் இதயம் மகிழ்ச்சி கொள்ளும், உங்கள் எலும்புகள் பசும்புல்போல் வளரும்; ஆண்டவர் தம் ஆற்றலைத் தம் ஊழியருக்குக் காட்டுவார் என்பதும் அவரது சினம் அவர்தம் பகைவருக்கு எதிராய் மூளும் என்பதும் அறியப்படும்.
ஏசாயா 66 : 15 (ECTA)
இதோ! ஆண்டவர் நெருப்பென வருவார்; அவர் தேர்கள் புயலென விரையும்; கொழுந்து விட்டெரியும் தம் சினத்தைக் கொட்டுவார்; தீப்பிழம்பென அவர்தம் கண்டனம் வருகின்றது.
ஏசாயா 66 : 16 (ECTA)
தம் நெருப்பையும் வாளையும் கொண்டு மானிடர் அனைவர்மீதும் ஆண்டவர் தண்டனைத் தீர்ப்பு வழங்குவார்; எண்ணிறந்தோரை ஆண்டவர் கொன்றுவிடுவார்.
ஏசாயா 66 : 17 (ECTA)
தோட்ட வழிபாட்டிற்கெனத் தங்களைத் தூய்மைப்படுத்தித் தீட்டகற்றுவோர், அதற்கு அணி அணியாய்ச் செல்வோர், பன்றி, எலி இவற்றின் இறைச்சி மற்றும் அருவருப்புகளை உண்போர் ஆகிய அனைவரும் ஒருங்கே அழிந்தொழிவர், என்கிறார் ஆண்டவர்.
ஏசாயா 66 : 18 (ECTA)
அவர்கள் செயல்களையும் எண்ணங்களையும் நான் அறிவேன்; பிறஇனத்தார், பிறமொழியினர் அனைவரையும் நான் கூட்டிச் சேர்க்க வருவேன்; அவர்களும் கூடிவந்து என் மாட்சியைக் காண்பார்கள்.
ஏசாயா 66 : 19 (ECTA)
அவர்களிடையே ஓர் அடையாளத்தை நான் ஏற்படுத்துவேன்; அவர்களுள் எஞ்சியிருப்போரை மக்களினத்தாரிடையே அனுப்பி வைப்பேன்; அவர்கள் தர்சீசு, பூல், வில்வீரர் வாழும் லூது, தூபால், யாவான், தொலையிலுள்ள தீவு நாடுகள் ஆகியவற்றிற்குச் செல்வார்கள். இந்நாட்டினர் என் புகழ்பற்றிக் கேள்விப்படாதவர்; என் மாட்சியைக் கண்டிராதவர்; அவர்களும் என் மாட்சி பற்றி மக்களினத்தாருக்கு எடுத்துரைப்பார்கள்.
ஏசாயா 66 : 20 (ECTA)
அவர்கள் உங்கள் உறவின் முறையார் அனைவரையும் அனைத்து மக்களினத்தாரிடையே இருந்து ஆண்டவருக்கு அளிக்கும் படையலாகக் கொண்டு சேர்ப்பார்கள்; இஸ்ரயேல் மக்கள் தூய கலம் ஒன்றில் உணவுப் படையலை ஆண்டவரின் கோவிலுக்கு எடுத்து வருவதுபோல், அவர்களைக் குதிரைகள், தேர்கள், பல்லக்குகள், கழுதைகள், ஒட்டகங்கள் ஆகியவற்றின் மேல் ஏற்றி, எருசலேமிலுள்ள என் திருமலைக்கு அழைத்து வருவார்கள், என்கிறார் ஆண்டவர்.
ஏசாயா 66 : 21 (ECTA)
மேலும் அவர்களுள் சிலரைக் குருக்களாகவும் லேவியராகவும் நியமிப்பேன், என்கிறார் ஆண்டவர்.
ஏசாயா 66 : 22 (ECTA)
நான் படைக்கின்ற புதிய விண்ணுலகும் புதிய மண்ணுலகும் என் முன்னே நிலைத்திருப்பது போல், உங்கள் வழித்தோன்றல்களும் உங்கள் பெயரும் நிலைத்திருக்கும், என்கிறார் ஆண்டவர். [* எசா 65:17; 2 பேது 3:13; திவெ 21: 1 ]
ஏசாயா 66 : 23 (ECTA)
அமாவாசைதோறும் ஓய்வுநாள்தோறும் மானிடர் அனைவரும் என்முன் வழிபட வருவர், என்கிறார் ஆண்டவர்.
ஏசாயா 66 : 24 (ECTA)
அவர்கள் புறப்பட்டுச் சென்று, என்னை எதிர்த்துக் கிளர்ச்சி செய்தோரின் பிணங்களைக் காண்பார்கள்; அவர்களை அரிக்கும் புழு சாவதில்லை; அவர்களை எரிக்கும் நெருப்பு அணைந்து போவதில்லை; மானிடர் யாவருக்கும் அவர்கள் ஓர் அருவருப்பாக இருப்பார்கள். [* மாற் 9:48.. ]
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24