ஏசாயா 65 : 1 (ECTA)
கலகம் செய்வோர்க்கு எதிரான தண்டனைத் தீர்ப்பு முன்பு என்னிடம் எதுவும் கேளாதவர்கள் என்னைத் தேடி அடைய இடமளித்தேன்; என்னை நாடாதவர்கள் என்னைக் கண்டுபிடிக்க இசைந்தேன்; என் பெயரை வழிபடாத மக்களினத்தை நோக்கி, “இதோ நான், இதோ நான்” என்றேன். [* உரோ 10: 20 ]
ஏசாயா 65 : 2 (ECTA)
தங்கள் எண்ணங்களின்படி நடந்து பயனற்ற வழிமுறைகளைப் பின்பற்றும் கலகக்கார மக்களினத்தின் மீது நாள் முழுவதும் என் கைகளை விரித்து நீட்டினேன். [* உரோ 10: 21 ]
ஏசாயா 65 : 3 (ECTA)
அந்த மக்களினத்தார் என் கண் எதிரே இவற்றைச் செய்து இடையறாது எனக்குச் சினமூட்டுகின்றனர்; தோட்டங்களில் பலியிட்டு, செங்கற்கள்மேல் தூபம் காட்டுகின்றனர்.
ஏசாயா 65 : 4 (ECTA)
கல்லறைகளிடையே அமர்ந்து மறைவிடங்களில் இரவைக் கழிக்கின்றனர்; பன்றி இறைச்சியைத் தின்கின்றனர்; தீட்டான கறிக்குழம்பைத் தம் கலங்களில் வைத்துள்ளனர்.
ஏசாயா 65 : 5 (ECTA)
இவ்வாறிருந்தும், “எட்டி நில், என் அருகில் வராதே, நான் உன்னைவிடத் தூய்மையானவன்” என்கின்றனர். என் சினத்தால் மூக்கிலிருந்து வெளிப்படும் புகைபோலும் நாள்முழுவதும் எரியும் நெருப்புப் போலும் இவர்கள் இருக்கின்றனர்.
ஏசாயா 65 : 6 (ECTA)
அவர்களுக்குரியது என்முன் எழுதப்பட்டாயிற்று; நான் அமைதியாய் இருப்பதில்லை; அவர்களுக்குத் தகுந்த கைம்மாறை அவர்கள் மடியில் அளந்து கொட்டுவேன்.
ஏசாயா 65 : 7 (ECTA)
அவர்கள் தீச்செயலுக்கும் அவர்கள் மூதாதையர் தீச்செயலுக்கும் சேர்த்துக் கொட்டுவேன், என்கிறார் ஆண்டவர். ஏனெனில் அவர்கள் மலைமேல் தூபம் காட்டினார்கள்; குன்றுகளின்மேல் என்னைப் பற்றி இழிவாகப் பேசினார்கள்; அவர்களுடைய முன்னைய செயல்களுக்குரிய கைம்மாறை அவர்கள் மடியில் அளந்து கொட்டுவேன்.
ஏசாயா 65 : 8 (ECTA)
ஆண்டவர் கூறுவது இதுவே: திராட்சைக்குலையில் புது இரசம் கிடைக்கும்போது, ‘அதை அழிக்காதே, அதில் ஆசி உள்ளது’ என்பார்கள். அவ்வாறே என் ஊழியரை முன்னிட்டும் நான் செயலாற்றுவேன்; அவர்கள் அனைவரையும் அழிந்துவிட மாட்டேன்.
ஏசாயா 65 : 9 (ECTA)
யாக்கோபினின்று வழிமரபினரையும், யூதாவினின்று என் மலைகளை உடைமையாக்குவோரையும் தோன்றச் செய்வேன். நான் தேர்ந்துகொண்டோர் நாட்டை உரிமையாக்கிக் கொள்வர்; என் ஊழியர் அங்கே வாழ்வர்.
ஏசாயா 65 : 10 (ECTA)
என்னை வழிபடும் என் மக்களுக்குச் சாரோன் சமவெளி ஆடுகளுக்கு மேய்நிலமாகவும் ஆக்கோர் பள்ளத்தாக்கு மாடுகளுக்குத் தொழுவமாகவும் அமையும். [* யோசு 7:24- 26 ]
ஏசாயா 65 : 11 (ECTA)
ஆண்டவராகிய என்னைக் கைவிட்டு விட்டு, என் திருமலையை மறந்தவர்களே! கத்து* தெய்வத்திற்கு விருந்து படைத்து, மெனீ** தெய்வத்திற்கு நறுமணத்திராட்சை இரசத்தைக் கிண்ணங்களில் வார்ப்பவர்களே! [* எபிரேயத்தில், ‘செல்வம்’ என்பது பொருள். ; எபிரேயத்தில், ‘விதி’ என்பது பொருள்.. ]
ஏசாயா 65 : 12 (ECTA)
உங்களை வாளுக்கு இரையெனக் குறிப்பேன்; நீங்கள் அனைவரும் கொலைக்குத் தலைதாழ்த்துவீர்கள்; ஏனெனில், நான் அழைப்பு விடுத்தேன்; நீங்கள் மறுமொழி தரவில்லை; நான் பேசினேன், நீங்கள் கவனிக்கவில்லை; என் பார்வைக்குத் தீமையெனப்பட்டதைச் செய்தீர்கள்; எனக்கு விருப்பமில்லாததைத் தேர்ந்து கொண்டீர்கள்.
ஏசாயா 65 : 13 (ECTA)
ஆதலால் என் தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: என் ஊழியர்கள் உண்பார்கள்; நீங்களோ பசியால் வாடுவீர்கள். என் வேலையாள்கள் பானம் பருகுவார்கள்; நீங்களோ தாகத்தால் தவிப்பீர்கள்; என் அடியார்கள் அக்களிப்பார்கள்; நீங்களோ அவமதிக்கப்படுவீர்கள்.
ஏசாயா 65 : 14 (ECTA)
என் ஊழியர் உள்ளம் மகிழ்ந்து ஆர்ப்பரிப்பார்கள்; நீங்களோ நெஞ்சம் உடைந்து கூக்குரலிடுவீர்கள்; ஆவி சோர்ந்து கதறியழுவீர்கள்.
ஏசாயா 65 : 15 (ECTA)
நான் தேர்ந்தெடுத்தவர்களுக்கு உங்கள் பெயரைச் சாபப் பெயராய் விட்டுச் செல்வீர்கள்; என் தலைவராகிய ஆண்டவர் உங்களைக் கொன்றொழிப்பார்; தம் ஊழியருக்கோ புதுப்பெயர் சூட்டுவார்.
ஏசாயா 65 : 16 (ECTA)
மண்ணுலகில் ஆசி பெற விழைபவன் உண்மைக் கடவுளின் பெயரால் ஆசிபெறுவான்; பூவுலகில் ஆணையிடுபவன் மெய்க் கடவுளின் பெயரால் ஆணையிடுவான்; ஏனெனில், முந்நாளைய துன்பங்கள் மறந்து போயின; அவை என் பார்வையிலிருந்து மறைந்து போயின.
ஏசாயா 65 : 17 (ECTA)
புதிய படைப்பு இதோ! புதிய விண்ணுலகையும் புதிய மண்ணுலகையும் படைக்கிறேன்; முந்தியவை நினைத்துப் பார்க்கப்படுவதில்லை; மனத்தில் எழுதுவதுமில்லை. [* எசா 66:22; 2 பேது 3:13; திவெ 21: 1 ]
ஏசாயா 65 : 18 (ECTA)
நான் படைப்பனவற்றில் நீங்கள் என்றென்றும் மகிழ்ந்து களிகூருங்கள். இதோ நான் எருசலேமை மகிழ்ச்சிக்குரியதாகவும் அதன் மக்களைப் பூரிப்பவர்களாகவும் படைக்கிறேன்.
ஏசாயா 65 : 19 (ECTA)
நானும் எருசலேமை முன்னிட்டு மகிழ்ச்சியடைவேன்; என் மக்களைக் குறித்துப் பூரிப்படைவேன்; இனி அங்கே அழுகையும் கூக்குரலும் ஒருபோதும் கேட்கப்படா. [* திவெ 21: 4 ]
ஏசாயா 65 : 20 (ECTA)
இனி அங்கே சில நாள்களுக்குள் இறக்கும் பச்சிளங்குழந்தையே இராது; தம் வாழ்நாளை நிறைவு செய்யாத முதியவர் இரார்; ஏனெனில், நூறாண்டு வாழ்ந்து இறப்பவனும் இளைஞனாகக் கருதப்படுவான். பாவியோ நூறு ஆண்டுகள் வாழ்ந்தும் சாபத்திற்கு உட்பட்டிருப்பான்.
ஏசாயா 65 : 21 (ECTA)
அவர்கள் வீடு கட்டி அங்குக் குடியிருப்பார்கள்; திராட்சை நட்டு அதன் கனிகளை உண்பார்கள்.
ஏசாயா 65 : 22 (ECTA)
வேறொருவர் குடியிருக்க அவர்கள் கட்டுவதில்லை; மற்றொருவர் உண்ண அவர்கள் நடுவதில்லை; மரங்களின் வாழ்நாள் போன்றே என் மக்களின் வாழ்நாளும் இருக்கும்; நான் தேர்ந்து கொண்டவர்கள் தங்கள் உழைப்பின் பயனை நெடுநாள் துய்ப்பார்கள்.
ஏசாயா 65 : 23 (ECTA)
வீணாக அவர்கள் உழைப்பதில்லை; தங்கள் பிள்ளைகளை அழிவுக்கெனப் பெற்றெடுப்பதில்லை; ஏனெனில், அவர்கள் ஆண்டவரது ஆசியைப் பெற்றோரின் வழிமரபினர்! அவர்களின் தலைமுறையினர் அவர்களுடன் இருப்பார்கள்.
ஏசாயா 65 : 24 (ECTA)
அவர்கள் வேண்டுவதற்கு முன்னே நான் மறுமொழி தருவேன்; அவர்கள் பேசிமுடிப்பதற்கு முன்னே பதிலளிப்பேன்.
ஏசாயா 65 : 25 (ECTA)
ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒருமித்து மேயும்; சிங்கம் மாட்டைப்போல் வைக்கோல் தின்னும்; பாம்பு புழுதியைத் தின்னும்; என் திருமலை முழுவதிலும் தீங்கு செய்வாரும் கேடு விளைவிப்பாரும் எவருமில்லை, என்கிறார் ஆண்டவர். [* எசா 11:6- 9 ]
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25