ஏசாயா 60 : 1 (ECTA)
எருசலேமின் வருங்கால மேன்மை எழு! ஒளிவீசு! உன் ஒளி தோன்றியுள்ளது. ஆண்டவரின் மாட்சி உன்மேல் உதித்துள்ளது!
ஏசாயா 60 : 2 (ECTA)
இதோ! இருள் பூவுலகை மூடும்; காரிருள் மக்களினங்களைக் கவ்வும்; ஆண்டவரோ உன்மீது எழுந்தருள்வார்; அவரது மாட்சி உன்மீது தோன்றும்!
ஏசாயா 60 : 3 (ECTA)
பிற இனத்தார் உன் ஒளிநோக்கி வருவர்; மன்னர் உன் உதயக் கதிர்நோக்கி நடைபோடுவர்.
ஏசாயா 60 : 4 (ECTA)
உன் கண்களை உயர்த்தி உன்னைச் சுற்றிலும் பார்; அவர்கள் அனைவரும் ஒருங்கே திரண்டு உன்னிடம் வருகின்றனர்; தொலையிலிருந்து உன் புதல்வர் வருவர்; உன் புதல்வியர் தோளில் தூக்கி வரப்படுவர்.
ஏசாயா 60 : 5 (ECTA)
அப்பொழுது, நீ அதைக் கண்டு அகமகிழ்வாய்; உன் இதயம் வியந்து விம்மும்; கடலின் திரள் செல்வம் உன்னிடம் கொணரப்படும்; பிற இனத்தாரின் சொத்துகள் உன்னை வந்தடையும்.
ஏசாயா 60 : 6 (ECTA)
ஒட்டகங்களின் பெருந்திரள் உன்னை நிரப்பும்; மிதியான், ஏப்பாகு ஆகியவற்றின் இளம் ஒட்டகங்களும் வந்து சேரும்; இளம் நாட்டினர் யாவரும் பொன், நறுமணப்பொருள் ஏந்திவருவர். அவர்கள் ஆண்டவரின் புகழை எடுத்துரைப்பர்.
ஏசாயா 60 : 7 (ECTA)
கேதாரின் ஆட்டுமந்தைகள் அனைத்தும் உன்னிடம் ஒருங்கே சேர்க்கப்படும்; நெபயோத்தின் கிடாய்கள் உனக்குப் பணிவிடைசெய்யும்; எனக்கு உகந்தவையாக அவை என் பீடத்திற்கு வரும்; இவ்வாறு மேன்மைமிகு என் இல்லத்தைப் பெருமைப்படுத்துவேன்.
ஏசாயா 60 : 8 (ECTA)
மேகங்கள் போலும் பலகணி நோக்கிப் பறந்து செல்லும் புறாக்கள் போலும் விரைந்து செல்லும் இவர்கள் யார்?
ஏசாயா 60 : 9 (ECTA)
தீவு நாடுகள் எனக்காகக் காத்திருக்கும்; இஸ்ரயேலின் தூயவரும் உன் கடவுளுமான ஆண்டவரின் பெயரை முன்னிட்டு, உன் பிள்ளைகளைத் தொலையிலிருந்து ஏற்றி வரவும், வெள்ளியையும், பொன்னையும் அவர்களுடன் எடுத்து வரவும், தர்சீசின் வணிகக் கப்பல்கள் முன்னணியில் நிற்கும்; ஏனெனில், இஸ்ரயேலின் தூயவர் உனக்கு மேன்மை அளித்துள்ளார்.
ஏசாயா 60 : 10 (ECTA)
அன்னிய நாட்டவர் உன் மதிற் சுவரைக் கட்டியெழுப்புவர்; அவர்களின் மன்னர் உனக்குப் பணிவிடை செய்வர்; ஏனெனில், சினமுற்று நான் உன்னை நொறுக்கினேன்; நான் கனிவுற்று உனக்கு இரக்கம் காட்டியுள்ளேன்.
ஏசாயா 60 : 11 (ECTA)
உன் வாயில்கள் எப்போதும் திறந்திருக்கும்; இராப் பகலாய் அவை பூட்டப்படாதிருக்கும்; பிற இனத்தாரின் செல்வம் உன்னிடம் கொண்டு வரப்படவும், அவர்களின் மன்னர் ஊர்வலமாய் அழைத்து வரப்படவும், அவை திறந்திருக்கும். [* திவெ 21:25- 26 ]
ஏசாயா 60 : 12 (ECTA)
உனக்குப் பணிபுரியாத வேற்று நாடோ அரசோ அழிந்துவிடும்; அவை முற்றிலும் பாழடைந்து போகும்.
ஏசாயா 60 : 13 (ECTA)
லெபனோனின் மேன்மை உன்னை வந்து சேரும்; என் திருத்தூயகத்தைச் சுற்றியுள்ள இடத்தை அழகுபடுத்தத் தேவதாரு, புன்னை, ஊசியிலை மரம் ஆகியவை கொண்டு வரப்படும்; என் பாதங்களைத் தாங்கும் தலத்தை மேன்மைப்படுத்துவேன்.
ஏசாயா 60 : 14 (ECTA)
உன்னை ஒடுக்கியவரின் புதல்வர் உன்னிடம் தலைவணங்கி வருவர்; உன்னை அவமதித்தவர் அனைவரும் உன் காலடியில் பணிந்து வீழ்வர்; ‘ஆண்டவரின் நகர்’ என்றும், ‘இஸ்ரயேலின் தூயவரது சியோன்’ என்றும் உன்னை அவர்கள் அழைப்பர். [* திவெ 3: 9 ]
ஏசாயா 60 : 15 (ECTA)
நீ கைநெகிழப்பட்டு வெறுத்து ஒதுக்கப்பட்டாய்; உன் வழியே எவரும் பயணம் செய்யவில்லை; நானோ உன்னை என்றென்றும் பெருமைப்படுத்துவேன்; தலைமுறைதோறும் மகிழ்ச்சிக்கு உரியவனாக்குவேன்.
ஏசாயா 60 : 16 (ECTA)
நீ பிற இனத்தாரின் பாலைப் பருகுவாய்; மன்னர்களின் மார்பிலிருந்து பாலை உறிஞ்சுவாய்; ஆண்டவராகிய நானே உனக்கு விடுதலை அளிப்பவர் என்றும் யாக்கோபின் வல்லவரே உன்னை மீட்பவர் என்றும் நீ அறிந்து கொள்வாய்.
ஏசாயா 60 : 17 (ECTA)
வெண்கலத்திற்குப் பதிலாய்ப் பொன்னையும் இரும்பிற்குப் பதிலாய் வெள்ளியையும் மரத்திற்குப் பதிலாய் வெண்கலத்தையும் கற்களுக்குப் பதிலாய் இரும்பையும் கொண்டு வருவேன்; உங்கள் கண்காணியாய்ச் சமாதானத்தையும் உங்களை வேலைவாங்குமாறு நேர்மையையும் நியமிப்பேன்.
ஏசாயா 60 : 18 (ECTA)
உன் நாட்டில் வன்முறை பற்றியும் உன் எல்லைப் பகுதிகளுக்குள் பாழாக்கலும் அழித்தலும் பற்றியும் இனி எந்தப் பேச்சும் எழாது; உன் மதில்களை ‘விடுதலை’ என்றும் உன் வாயில்களைப் ‘புகழ்ச்சி’ என்றும் அழைப்பாய்.
ஏசாயா 60 : 19 (ECTA)
கதிரவன் உனக்கு இனிப் பகலில் ஒளிதர வேண்டாம்! பால்நிலவும் உனக்கு ஒளிவீச வேண்டாம்! ஆண்டவரே இனி உனக்கு முடிவிலாப் பேரொளி! உன் கடவுளே இனி உனக்கு மேன்மை! [* திவெ 21:23; 22:5.. ]
ஏசாயா 60 : 20 (ECTA)
உன் கதிரவன் ஒருபோதும் மறையான்; உன் நிலா இனித் தேய்ந்து போகாள்; ஆண்டவரே உனக்கு என்றுமுள ஒளியாக இருப்பார்; உன் கண்ணீரின் நாள்கள் ஒழிந்துபோம்.
ஏசாயா 60 : 21 (ECTA)
உன் மக்கள் அனைவரும் நேர்மையாளராய் இருப்பர்; அவர்கள் நாட்டை என்றென்றும் உரிமையாக்கிக் கொள்வர்; நான் மாட்சியடையுமாறு நட்டு வைத்த மரக்கிளை அவர்கள்; என் கைவேலைப்பாடும் அவர்களே.
ஏசாயா 60 : 22 (ECTA)
அவர்களுள் சிறியவர் ஓராயிரமாய்ப் பெருகுவர்; அற்பரும் ஆற்றல்மிகு மக்கள் இனமாவர்; நானே ஆண்டவர்; ஏற்ற காலத்தில் இதை நான் விரைவாய்ச் செய்து முடிப்பேன்.
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22