ஏசாயா 55 : 1 (ECTA)
ஆண்டவரின் பேரிரக்கம் தாகமாய் இருப்பவர்களே, நீங்கள் அனைவரும் நீர்நிலைகளுக்கு வாருங்கள்; கையில் பணமில்லாதவர்களே, நீங்களும் வாருங்கள்; தானியத்தை வாங்கி உண்ணுங்கள், வாருங்கள், காசு பணமின்றித் திராட்சை இரசமும் பாலும் வாங்குங்கள். [* திவெ 21:6; 22: 17 ]
ஏசாயா 55 : 2 (ECTA)
உணவாக இல்லாத ஒன்றிற்காக நீங்கள் ஏன் பணத்தைச் செலவிடுகின்றீர்கள்? நிறைவு தராத ஒன்றிற்காய் ஏன் உங்கள் உழைப்பை வீணாக்குகிறீர்கள்? எனக்குக் கவனமாய்ச் செவிகொடுங்கள்; நல்லுணவை உண்ணுங்கள்; கொழுத்ததை உண்டு மகிழுங்கள்.
ஏசாயா 55 : 3 (ECTA)
எனக்குச் செவிகொடுங்கள், என்னிடம் வாருங்கள்; கேளுங்கள்; அப்பொழுது நீங்கள் வாழ்வடைவீர்கள். நான் உங்களுடன் ஓர் என்றுமுள உடன்படிக்கையைச் செய்து கொள்வேன்; தாவீதுக்கு நான் காட்டிய மாறாத பேரன்பை உங்களுக்கும் காட்டுவேன். [* திப 13: 34 ]
ஏசாயா 55 : 4 (ECTA)
நான் அவனை மக்களினங்களுக்குச் சாட்சியாகவும், வேற்றினங்களுக்குத் தலைவராகவும் தளபதியாகவும் ஏற்படுத்தினேன்.
ஏசாயா 55 : 5 (ECTA)
இதோ, நீ அறியாத பிற இனமக்களை அழைப்பாய்; உன் கடவுளாகிய ஆண்டவரை, இஸ்ரயேலின் தூயவரை முன்னிட்டு, உன்னை அறியாத பிறஇனத்தார் உன்னிடம் ஓடிவருவர். ஏனெனில், அவர் உன்னை மேன்மைப்படுத்தியுள்ளார்.
ஏசாயா 55 : 6 (ECTA)
ஆண்டவரைக் காண்பதற்கு வாய்ப்புள்ளபோதே அவரைத் தேடுங்கள்; அவர் அண்மையில் இருக்கும்போதே அவரை நோக்கி மன்றாடுங்கள்.
ஏசாயா 55 : 7 (ECTA)
கொடியவர் தம் வழிமுறையையும், தீயவர் தம் எண்ணங்களையும் விட்டுவிடுவார்களாக; அவர்கள் ஆண்டவரிடம் திரும்பி வரட்டும்; அவர் அவர்களுக்கு இரக்கம் காட்டுவார்; அவர்கள் நம் கடவுளிடம் வரட்டும்; ஏனெனில், மன்னிப்பதில் அவர் தாராள மனத்தினர்.
ஏசாயா 55 : 8 (ECTA)
என் எண்ணங்கள் உங்கள் எண்ணங்கள் அல்ல, உங்கள் வழிமுறைகள் என் வழிமுறைகள் அல்ல, என்கிறார் ஆண்டவர்.
ஏசாயா 55 : 9 (ECTA)
மண்ணுலகத்திலிருந்து விண்ணுலகம் மிக உயர்ந்து இருப்பதுபோல உங்கள் வழிமுறைகளைவிட என் வழிமுறைகளும், உங்கள் எண்ணங்களைவிட என் எண்ணங்களும் மிக உயர்ந்திருக்கின்றன.
ஏசாயா 55 : 10 (ECTA)
மழையும் பனியும் வானத்திலிருந்து இறங்கி வருகின்றன; அவை நிலத்தை நனைத்து, முளை அரும்பி வளரச் செய்து, விதைப்பவனுக்கு விதையையும் உண்பவனுக்கு உணவையும் கொடுக்காமல், அங்குத் திரும்பிச் செல்வதில்லை. [* 2 கொரி 9:10.. ]
ஏசாயா 55 : 11 (ECTA)
அவ்வாறே, என் வாயிலிருந்து புறப்பட்டுச் செல்லும் வாக்கும் இருக்கும். அது என் விருப்பத்தைச் செயல்படுத்தி, எதற்காக நான் அதை அனுப்பினேனோ அதை வெற்றிகரமாக நிறைவேற்றாமல் வெறுமையாய் என்னிடம் திரும்பி வருவதில்லை.
ஏசாயா 55 : 12 (ECTA)
மகிழ்ச்சியுடன் நீங்கள் புறப்பட்டுச் செல்வீர்கள்; அமைதியுடன் நடத்திச் செல்லப் படுவீர்கள்; மலைகளும் குன்றுகளும் உங்கள் முன் முழங்கி மகிழ்ந்து பாடும்; காட்டு மரங்கள் கைகொட்டி ஆர்ப்பரிக்கும்.
ஏசாயா 55 : 13 (ECTA)
முட்செடிக்குப் பதிலாக தேவதாரு மரம் முளைத்து வளரும்; காஞ்சொறிக்குப் பதிலாக நறுமணச் செடி துளிர்த்து வளரும்; இது, ஆண்டவருக்கு நற்பெயர் ஏற்படச் செய்யும்; அழிவில்லா, என்றுமுள நினைவுச் சின்னமாய் அமையும்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13