ஏசாயா 52 : 1 (ECTA)
எருசலேமின் மீட்பு விழித்தெழு, விழித்தெழு, சீயோனே, உன் ஆற்றலை அணிந்து கொள்; திரு நகர் எருசலேமே, உன் அழகுறு ஆடைகளை அணிந்துகொள்; விருத்தசேதனம் செய்யாதவனும் தீட்டுப்பட்டவனும் உன்னிடையே இனி வரவேமாட்டான். [* திவெ 21:2, 27 ]
ஏசாயா 52 : 2 (ECTA)
சிறைப்பட்ட எருசலேமே, புழுதியைத் தட்டிவிட்டு எழுந்துநில்; அடிமையாக்கப்பட்ட மகள் சீயோனே, உன் கழுத்திலுள்ள கட்டுகளை அவிழ்த்துவிடு.
ஏசாயா 52 : 3 (ECTA)
ஆண்டவர் கூறுவது இதுவே: விலையின்றி விற்கப்பட்டீர்கள்; பணமின்றி மீட்கப்படுவீர்கள்.
ஏசாயா 52 : 4 (ECTA)
ஆண்டவராகிய என் தலைவர் கூறுவது இதுவே: முன்னாளில் என் மக்கள் தங்கி வாழ்வதற்கு எகிப்திற்குச் சென்றார்கள்; அசீரியன் காரணம் எதுவுமின்றி அவர்களை ஒடுக்கினான்.
ஏசாயா 52 : 5 (ECTA)
இப்பொழுது எனக்கு இங்கே என்ன இருக்கிறது? என்கிறார் ஆண்டவர். ஈட்டுத் தொகை செலுத்தாது என் மக்கள் இழுத்துச் செல்லப்பட்டார்கள்; அவர்களை ஆளுவோர் தற்பெருமை பேசுகின்றனர்; எந்நாளும் இடைவிடாது என் பெயர் இகழப்படுகிறது, என்கிறார் ஆண்டவர். [* உரோ 2: 24 ]
ஏசாயா 52 : 6 (ECTA)
ஆதலால் என் மக்கள் எனது பெயரை அறிந்து கொள்வார்கள். இதைச் சொல்லுகிறவர் நானே என்பதை அந்நாளில் உணர்ந்து கொள்வார்கள்; இதோ, நான் இங்கே இருக்கின்றேன்.
ஏசாயா 52 : 7 (ECTA)
நற்செய்தியை அறிவிக்கவும், நல்வாழ்வைப் பலப்படுத்தவும் நலம்தரும் செய்தியை உரைக்கவும், விடுதலையைப் பறைசாற்றவும், சீயோனை நோக்கி, ‘உன் கடவுள் அரசாளுகின்றார்’ என்று கூறவும் வருவோனின் பாதங்கள் மலைகள்மேல் எத்துணை அழகாய் இருக்கின்றன! [* நாகூ 1:15; உரோ 10:15; எபே 6: 15 ]
ஏசாயா 52 : 8 (ECTA)
இதோ, உன் சாமக் காவலர் குரல் எழுப்புகின்றனர்; அவர்கள் அக்களித்து ஒருங்கே ஆரவாரம் செய்கின்றனர்; ஆண்டவர் சீயோனுக்குத் திரும்பி வருவதை அவர்கள் தம் கண்களாலேயே காண்பர்.
ஏசாயா 52 : 9 (ECTA)
எருசலேமின் பாழ் இடங்களே, ஒருங்கே ஆர்ப்பரித்துப் பாடுங்கள்; ஆண்டவர் தம் மக்களுக்கு ஆறுதல் அளித்துள்ளார்; எருசலேமுக்கு மீட்பு வழங்கியுள்ளார்.
ஏசாயா 52 : 10 (ECTA)
பிறஇனத்தார் அனைவரின் கண்களும் காண ஆண்டவர் தம் தூய புயத்தினைத் திறந்து காட்டியுள்ளார்; மண்ணுலகின் எல்லைகள் யாவும் நம் கடவுள் அளிக்கும் மீட்பைக் காணும்.
ஏசாயா 52 : 11 (ECTA)
திரும்பிச் செல்லுங்கள், திரும்பிச் செல்லுங்கள்; அங்கிருந்து வெளியேறுங்கள்; தீட்டானதைத் தொடாதீர்கள்; ஆண்டவரின் கலங்களை ஏந்திச்செல்வோரே, அந்நாட்டினின்று வெளியேறுங்கள்; உங்களையும் தூய்மைப்படுத்திக் கொள்ளுங்கள். [* 2 கொரி 6: 17 ]
ஏசாயா 52 : 12 (ECTA)
நீங்கள் அவசரப்பட்டு வெளியேறப் போவதில்லை; தப்பியோடுவது போல் செல்வதுமில்லை; ஏனெனில், ஆண்டவர் உங்கள்முன்னே செல்வார்; இஸ்ரயேலின் கடவுள் உங்கள்பின்னே பாதுகாப்பாய் இருப்பார்.
ஏசாயா 52 : 13 (ECTA)
துன்புறும் ஊழியர் இதோ, என் ஊழியர் சிறப்படைவார்; அவர் மேன்மைப்படுத்தப்பட்டு, உயர்த்தப்பட்டு, பெரிதும் மாட்சியுறுவார்.
ஏசாயா 52 : 14 (ECTA)
அவரைக் கண்ட பலர் திகைப்புற்றனர்; அவரது தோற்றம் பெரிதும் உருக்குலைந்ததால் மனித சாயலே அவருக்கு இல்லாதிருந்தது; மானிடரின் உருவமே அவருக்கு இல்லை.
ஏசாயா 52 : 15 (ECTA)
அவ்வாறே, அவர் பல பிறஇனத்தாரை அதிர்ச்சிக்குள்ளாக்குவார்; அரசர்களும் அவரை முன்னிட்டு வாய்பொத்தி நிற்பர்; ஏனெனில் தங்களுக்குச் சொல்லப் படாததை அவர்கள் காண்பர்; தாங்கள் கேள்விப்படாததை அவர்கள் புரிந்து கொள்வர். [* உரோ 15:21.. ]
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15