ஏசாயா 50 : 1 (ECTA)
ஆண்டவர் கூறுவது இதுவே: உன் தாயைத் தள்ளி வைத்ததற்கான மணமுறிவுச் சீட்டு எங்கே? உங்களை விற்றுவிடும் அளவுக்கு எவனுக்கு நான் கடன்பட்டிருந்தேன்? இதோ, உங்கள் தீச்செயல்களை முன்னிட்டே நீங்கள் விற்கப்பட்டீர்கள்; உங்கள் வன்செயல்களின் பொருட்டே உங்கள் தாய் தள்ளி வைக்கப்பட்டாள்.
ஏசாயா 50 : 2 (ECTA)
நான் வந்தபோது ஒருவனும் இல்லாமற் போனதேன்? நான் அழைத்தபோது பதில் தர எவனும் இல்லாததேன்? உங்களை மீட்க இயலாதவாறு என்கை சிறுத்துவிட்டதோ? விடுவிக்கக் கூடாதவாறு என் ஆற்றல் குன்றிவிட்டதோ? இதோ என் கடிந்துரையால் கடல்தனை வற்றச் செய்கிறேன்; ஆறுகளைப் பாலையாக்குகிறேன்; அவற்றின் மீன்கள் நீரின்றி நாறுகின்றன; தாகத்தால் சாகின்றன.
ஏசாயா 50 : 3 (ECTA)
வான்வெளியைக் காரிருளால் உடுத்துவிக்கின்றேன்; அதனைச் சாக்கு உடையால் போர்த்துகின்றேன்.
ஏசாயா 50 : 4 (ECTA)
ஆண்டவர்தம் ஊழியரின் ஒப்படைப்பு நலிந்தவனை நல்வாக்கால் ஊக்குவிக்கும் அறிவை நான் பெற்றிட, ஆண்டவராகிய என் தலைவர், கற்றோனின் நாவை எனக்கு அளித்துள்ளார்; காலைதோறும் அவர் என்னைத் தட்டி எழுப்புகின்றார்; கற்போர் கேட்பது போல் நானும் செவிகொடுக்கச் செய்கின்றார்.
ஏசாயா 50 : 5 (ECTA)
ஆண்டவராகிய என் தலைவர் என் செவியைத் திறந்துள்ளார்; நான் கிளர்ந்தெழவில்லை; விலகிச் செல்லவுமில்லை.
ஏசாயா 50 : 6 (ECTA)
அடிப்போர்க்கு என் முதுகையும், தாடியைப் பிடுங்குவோர்க்கு என் தாடையையும் ஒப்புவித்தேன். நிந்தனை செய்வோர்க்கும் காறி உமிழ்வோர்க்கும் என் முகத்தை மறைக்கவில்லை. [* மத் 26:67; மாற் 14: 65 ]
ஏசாயா 50 : 7 (ECTA)
ஆண்டவராகிய என் தலைவர் துணை நிற்கின்றார்; நான் அவமானம் அடையேன்; என் முகத்தைக் கற்பாறை ஆக்கிக் கொண்டேன்; இழிநிலையை நான் அடைவதில்லை என்றறிவேன்.
ஏசாயா 50 : 8 (ECTA)
நான் குற்றமற்றவன் என எனக்குத் தீர்ப்பு வழங்குபவர் அருகில் உள்ளார்; என்னோடு வழக்காடுபவன் எவன்? நாம் இருவரும் எதிர் எதிரே நிற்போம்; என்மீது குற்றஞ்சாட்டுபவன் எவன்? அவன் என்னை நெருங்கட்டும். [* உரோ 8:33-34.. ]
ஏசாயா 50 : 9 (ECTA)
இதோ, ஆண்டவராகிய என் தலைவர் எனக்குத் துணைநிற்கின்றார்; நான் குற்றவாளி எனத் தீர்ப்பிட யாரால் இயலும்? அவர்கள் அனைவரும் துணியைப் போல் இற்றுப்போவார்கள்; புழுக்கள் அவர்களை அரித்துவிடும். [* உரோ 8:33-34.. ]
ஏசாயா 50 : 10 (ECTA)
உங்களுள் ஆண்டவருக்கு அஞ்சி நடந்து அவர்தம் அடியானின் சொல்லுக்குச் செவிசாய்ப்பவன் எவன்? அவன் ஒளிபெற இயலா நிலையில் இருளில் நடந்துவருபவன்; ஆண்டவரின் பெயர்மீது நம்பிக்கை கொண்டு தன்கடவுளைச் சார்ந்து கொள்பவன்.
ஏசாயா 50 : 11 (ECTA)
ஆனால், நெருப்பு மூட்டித் தீப்பிழம்புகளால் சூழப்பட்டவர்களே; நீங்கள் அனைவரும் உங்கள் நெருப்பின் வெளிச்சத்திலும், நீங்கள் மூட்டிய தீப்பிழம்புகளிடையேயும் நடங்கள்; என் கையினின்று உங்களுக்குக் கிடைப்பது இதுவே: நீங்கள் வேதனையின் நடுவே உழன்று கிடப்பீர்கள்.
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11