ஏசாயா 5 : 1 (ECTA)
திராட்சைத் தோட்டம்பற்றிய கவிதை என் நண்பரைக்குறித்துக் கவி பாடுவேன்; என் அன்பரின் திராட்சைத் தோட்டத்தைப் பற்றிக் காதல் பாட்டொன்று பாடுவேன்; செழுமை மிக்கதொரு குன்றின்மேல் என் நண்பருக்குத் திராட்சைத் தோட்டம் ஒன்றிருந்தது. [* மத் 21:33; மாற் 12:1; லூக் 20:9.. ]
ஏசாயா 5 : 2 (ECTA)
அவர் அதை நன்றாகக், கொத்திக்கிளறிக் கற்களைக் களைந்தெடுத்தார்; நல்ல இனத் திராட்சைச் செடிகளை அதில் நட்டுவைத்தார்; அவற்றைக் காக்கும் பொருட்டுக் கோபுரம் ஒன்றைக் கட்டி வைத்தார்; திராட்சைப் பழம் பிழிய ஆலை ஒன்றை அமைத்தார்; நல்ல திராட்சைக் குலைகள் கிட்டுமென எதிர்பார்த்து காத்திருந்தார்; மாறாக, காட்டு பழங்களையே அது தந்தது. [* மத் 21:33; மாற் 12:1; லூக் 20:9.. ]
ஏசாயா 5 : 3 (ECTA)
இப்பொழுது என் நண்பர் சொல்கிறார்; எருசலேமில் குடியிருப்போரே, யூதாவில் வாழும் மனிதரே, எனக்கும் என் திராட்சைத் தோட்டத்திற்கும் இடையே நீதி வழங்குங்கள்.
ஏசாயா 5 : 4 (ECTA)
என் திராட்சைத் தோட்டத்திற்குச் செய்யாது நான் விட்டு விட்டதும் இனிச் செய்யக் கூடியதும் ஏதும் உண்டோ? நற்கனிகளைத் தரும் என்று நான் காத்திருக்க, காட்டுப் பழங்களை அது தந்ததென்ன?
ஏசாயா 5 : 5 (ECTA)
என் திராட்சைத் தோட்டத்திற்குச் செய்யப் போவதை உங்களுக்கு நான் அறிவிக்கிறேன், கேளுங்கள்; “நானே அதன் வேலியைப் பிடுங்கி எறிவேன்; அது தீக்கிரையாகும்; அதன் சுற்றுச் சுவரைத் தகர்த்தெறிவேன்; அது மிதியுண்டு போகும்.
ஏசாயா 5 : 6 (ECTA)
நான் அதைப் பாழாக்கி விடுவேன்; அதன் கிளைகள் நறுக்கப்படுவதில்லை; களையை அகற்ற மண் கொத்தப்படுவதுமில்லை; நெருஞ்சியும், முட்புதர்களுமே அதில் முளைக்கும்; அதன்மீது மழை பொழியாதிருக்க மேகங்களுக்குக் கட்டளையிடுவேன்.”
ஏசாயா 5 : 7 (ECTA)
படைகளின் ஆண்டவரது திராட்சைத் தோட்டம் இஸ்ரயேல் குடும்பத்தாரே; அவர் ஆர்வத்துடன் நட்ட கன்று யூதா மக்களே; நீதி விளையுமென்று எதிர்நோக்கியிருந்தார்; ஆனால் விளைந்ததோ இரத்தப்பழி; நேர்மை தழைக்கும் என்று காத்திருந்தார்; ஆனால் தழைத்ததோ முறைப்பாடு.
ஏசாயா 5 : 8 (ECTA)
மக்களின் தீச்செயலும் தண்டனைத் தீர்ப்பும் வீட்டோடு வீடு சேர்ப்பவர்களே, வயலோடு வயல் இணைத்துக் கொள்பவர்களே, உங்களுக்கு ஐயோ கேடு! பிறருக்கு இடமில்லாது நீங்கள்மட்டும் தனித்து நாட்டில் வாழ்வீர்களோ?
ஏசாயா 5 : 9 (ECTA)
என் காது கேட்கப் படைகளின் ஆண்டவர் ஆணையிட்டுக் கூறியது இதுவே: “மெய்யாகவே பல இல்லங்கள் பாழடைந்து போகும்: அழகுவாய்ந்த பெரிய மாளிகைகள் தங்குவதற்கு ஆள் இல்லாமற் போகும்.
ஏசாயா 5 : 10 (ECTA)
ஏனெனில் பத்து ஏக்கர் திராட்சைத் தோட்டம் ஒரு குடம் இரசம்தான் கொடுக்கும்; பத்துக் கலம் விதை விதைத்தால், ஒரு கலமே விளையும்.
ஏசாயா 5 : 11 (ECTA)
விடியற் காலையிலேயே விழித்தெழுந்து, போதை தரும் மதுவை நாடி அலைந்து, இரவுவரை குடித்துப் பொழுதைப் போக்குகிறவர்களுக்கோ ஐயோ, கேடு!
ஏசாயா 5 : 12 (ECTA)
அவர்கள் கேளிக்கை விருந்துகளில் கின்னரம், வீணை, தம்புரு, மதுபானம் இவையெல்லாம் உண்டு; ஆனால் ஆண்டவரின் செயல்களை அவர்கள் நினைவுகூர்வதில்லை; அவருடைய கைவினைகளை நோக்கிப் பார்ப்பதுமில்லை.
ஏசாயா 5 : 13 (ECTA)
ஆதலால் அறியாமையால் என் மக்கள் நாடு கடத்தப்படுகின்றார்கள்; அவர்களில் பெருமதிப்பிற்குரியோர் பசியால் மடிகின்றார்கள்; பொதுமக்கள் தாகத்தால் நாவறண்டு போகின்றார்கள்;
ஏசாயா 5 : 14 (ECTA)
ஆதலால் பாதாளம் தன் வாயை அளவுகடந்து பிளந்துள்ளது; தன் பசியைப் பெருக்கியிருக்கிறது. எருசலேமின் உயர்குடிமக்கள், பொதுமக்கள், திரள் கூட்டத்தார், அதில் களியாட்டம் புரிவோர் ஆகியோர் ஒருங்கே அதனுள் இறங்குவார்கள்.
ஏசாயா 5 : 15 (ECTA)
மனிதர் தலைகுனிவர், மானிடமைந்தர் தாழ்வுறுவர், இறுமாப்புக் கொண்டோரின் பார்வை தாழ்ச்சியடையும்.
ஏசாயா 5 : 16 (ECTA)
ஆனால் படைகளின் ஆண்டவர் தம் நீதியால் உயர்ந்திருப்பார்; தூயவராம் இறைவன் தம் நேர்மையால் தம்மைத் தூயவராக வெளிப்படுத்துவார்.
ஏசாயா 5 : 17 (ECTA)
அப்பொழுது ஆட்டுக்குட்டிகள் தங்கள் மேய்ச்சல் நிலத்தில் மேய்வதுபோல மேயும், வெள்ளாட்டுக் குட்டிகளும் இளங்கன்றுகளும் பாழடைந்த இடங்களில் மேயும்.
ஏசாயா 5 : 18 (ECTA)
பொய்ம்மை என்னும் கயிறுகளால் தீச்செயலைக் கட்டி இழுத்து, வண்டியைக் கயிற்றால் இழுப்பது போலப் பாவத்தையும் கட்டி இழுப்பவர்களுக்கு ஐயோ கேடு!
ஏசாயா 5 : 19 (ECTA)
‘நாங்கள் பார்க்கும்படி அவர் விரைவாய் வந்து, தம் வேலையைத் துரிதமாய்ச் செய்யட்டும்; நாங்கள் அறியும்படி, இஸ்ரயேலின் தூயவர் தம் நோக்கத்தை வெளிப்படுத்தி அதை நிறைவேற்றட்டும்’ என்று சொல்கிறவர்களுக்கு ஐயோ, கேடு!
ஏசாயா 5 : 20 (ECTA)
தீமையை நன்மை என்றும், நன்மையைத் தீமை என்றும் சொல்லி, இருளை ஒளியாக்கி, ஒளியை இருளாக்கி, கசப்பை இனிப்பாக்கி, இனிப்பைக் கசப்பாக்குகிறவர்களுக்கு ஐயோ கேடு!
ஏசாயா 5 : 21 (ECTA)
தங்கள் பார்வையில் ஞானிகள் என்னும், தங்கள் கணிப்பில் கூர்மதி வாய்ந்தவர்கள் என்றும் தங்களையே கருதுபவர்களுக்கு ஐயோ கேடு!
ஏசாயா 5 : 22 (ECTA)
திராட்சை இரசம் குடிப்பதில் தீரர்களாகவும், மதுபானம் கலப்பதில் திறமைசாலிகளாகவும் இருப்பவர்களுக்கு ஐயோ கேடு!
ஏசாயா 5 : 23 (ECTA)
அவர்கள் கையூட்டு வாங்கிக்கொண்டு, குற்றவாளியை நேர்மையாளர் எனத் தீர்ப்பிடுகின்றார்கள்; குற்றமற்றவருக்கு நீதி கிடைப்பதைத் தடை செய்கின்றார்கள்;
ஏசாயா 5 : 24 (ECTA)
ஆதலால், நெருப்புத் தணல் வைக்கோலை எரித்துச் சாம்பலாக்குவது போல, காய்ந்த புல் தீக்கிரையாக்கித் தீய்ந்து போவது போல, அவர்கள் ஆணிவேர் அழுகிப்போகும்; அவர்கள் வழிமரபு துரும்புபோல் பறந்து போகும்; ஏனெனில் அவர்கள், படைகளின் ஆண்டவரது திருச்சட்டத்தைப் புறக்கணித்தார்கள்; இஸ்ரயேலின் தூயவரது வாக்கை வெறுத்துத் தள்ளினார்கள்.
ஏசாயா 5 : 25 (ECTA)
ஆதலால், ஆண்டவரின் சினத் தீ அவருடைய மக்களுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்தது, அவர்களுக்கு எதிராக அவர் தம் கையை நீட்டி அவர்களை நொறுக்கினார். மலைகள் நடுநடுங்கின; அவர்களுடைய சடலங்கள் நடுத்தெருவில் நாதியற்றுக் குப்பை போல் கிடந்தன; இவையெல்லாம் நடந்தும் அவரது சீற்றம் தணியவில்லை. நீட்டிய சினக்கை இன்னும் மடங்கவில்லை.
ஏசாயா 5 : 26 (ECTA)
அவர் தொலையிலுள்ள பிற இனத்துக்கு ஓர் அடையாளக் கொடியைக் காட்டியுள்ளார்; மண்ணுலகின் எல்லைகளிலிருந்து சீழ்க்கை ஒலியால் அதனை அழைத்துள்ளார், அந்த இனம் வெகுவிரைவாய் வந்து கொண்டிருக்கின்றது.
ஏசாயா 5 : 27 (ECTA)
அவர்களுள் ஒருவனும் களைப்படையவில்லை; இடறி விழவில்லை; தூங்கவில்லை; உறங்கவுமில்லை; அவர்களில் யாருக்கேனும் இடுப்புக்கச்சை அவிழ்ந்து விழவில்லை; மிதியடிகளின் வாரேதும் அறுந்து போகவுமில்லை.
ஏசாயா 5 : 28 (ECTA)
அவர்களுடைய அம்புகள் கூர்மையானவை; அவர்களுடைய விற்கள் நாணேற்றப்பட்டுள்ளன; அவர்களுடைய குதிரைகளின் குளம்புகள் கருங்கற்களைப் போல் காட்சியளிக்கின்றன; அவர்களுடைய தேர்ச் சக்கரங்கள் சூறாவளிக் காற்றைப்போல் சுழல்கின்றன.
ஏசாயா 5 : 29 (ECTA)
அவர்களின் கர்ச்சனை பெண் சிங்கத்தினுடையதை ஒத்தது; இளஞ் சிங்கங்களைப்போல் அவர்கள் கர்ச்சிக்கிறார்கள்; உறுமிக்கொண்டு தங்கள் இரையைக் கவ்விப் பிடிப்பார்கள்; யாரும் விடுவிக்க இயலாதவாறு இரையை எடுத்துக்கொண்டு போய் விடுவார்கள்.
ஏசாயா 5 : 30 (ECTA)
அந்நாளில் கடலின் பேரிரைச்சல்போல் இஸ்ரயேலுக்கு எதிராக இரைந்து உறுமுவார்கள்; நாட்டை ஒருவன் பார்க்கையில், இருளும் துன்பமுமே காண்பான்; மேகத்திரள் ஒளியை விழுங்கிவிட்டது.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30