ஏசாயா 48 : 1 (ECTA)
ஆண்டவர் வருங்காலத்தின் தலைவர் யாக்கோபின் வீட்டாரே! இதற்குச் செவிகொடுங்கள்; நீங்கள் இஸ்ரயேல் என்னும் பெயரால் அழைக்கப்படுகிறீர்கள்; யூதாவெனும் ஊற்றினின்று தோன்றியுள்ளீர்கள்; ஆண்டவரின் பெயரால் ஆணையிடுகின்றீர்கள்; இஸ்ரயேலின் கடவுளைப் புகழ்கின்றீர்கள். ஆயினும், உண்மையுடனும் நேர்மையுடனும் இவற்றைச் செய்வதில்லை.
ஏசாயா 48 : 2 (ECTA)
‘திரு நகரினர்’ என்று உங்களைப் பற்றிச் சொல்லிக்கொள்கின்றீர்கள்; இஸ்ரயேலின் கடவுளையே சார்ந்து நிற்கின்றீர்கள்; ‘படைகளின் ஆண்டவர்’ என்பது அவர்தம் பெயராம்!
ஏசாயா 48 : 3 (ECTA)
பண்டைய நிகழ்ச்சிகளை முன்கூட்டியே அறிவித்தேன்; என் வாய் மொழிந்தவற்றை அவர்கள் கேட்கச் செய்தேன்; திடீரெனச் செயல்பட்டேன்; யாவும் நிகழ்ந்தன.
ஏசாயா 48 : 4 (ECTA)
நீ பிடிவாத குணமுடையவன்; உன் கழுத்து இரும்புத் தசைநார்; உன் நெற்றி வெண்கலம்; இதை நான் அறிவேன்.
ஏசாயா 48 : 5 (ECTA)
எனவே அவற்றை முன்கூட்டியே உனக்கு அறிவித்தேன்; அவை நிகழ்வதற்குமுன் உனக்குத் தெரியப்படுத்தினேன்; ‘என் சிலை அவற்றைச் செய்தது; நான் வார்த்த வடிவமும் செதுக்கிய உருவமும் அவற்றைக் கட்டளையிட்டன’ என்று நீ கூறாதிருக்கவே அவ்வாறு செய்தேன்.
ஏசாயா 48 : 6 (ECTA)
முன்பு நீ கேட்டாய்; இப்போது அவை அனைத்தையும் காண்கின்றாய்; அவை குறித்து அறிவிக்கமாட்டாயோ? இதுமுதல் புதியனவற்றையும் நீ அறியாத மறைபொருள்களையும் உனக்கு வெளிப்படுத்துவேன்.
ஏசாயா 48 : 7 (ECTA)
பண்டைக்காலத்தில் அல்ல, அவை இப்பொழுதுதான் உருவாக்கப்பட்டன; இதற்குமுன் அவை நிகழ்ந்ததில்லை; அவை பற்றி நீ கேள்விப்படவும் இல்லை; ‘அவைபற்றி எனக்குத் தெரியும்’ என நீ கூறவும் முடியாது.
ஏசாயா 48 : 8 (ECTA)
உண்மையிலே நீ கேள்விப்படவுமில்லை; அறியவும் இல்லை; முன்பிருந்தே உன் செவிகள் திறந்திருக்கவில்லை; ஏனெனில், நீ ‘ஏமாற்றுப் பேர்வழி, கருப்பையிலிருந்தே கலகக்காரன்’ என்று பெயர்பெற்றவன்; இதை நான் உறுதியாய் அறிவேன்.
ஏசாயா 48 : 9 (ECTA)
என் பெயரின் பொருட்டு என் சினத்தை அடக்கிக்கொள்கின்றேன்; என் புகழை முன்னிட்டு உன்னை வெட்டி வீழ்த்தாமல், உனக்காக அதைக் கட்டுப்படுத்துகின்றேன்.
ஏசாயா 48 : 10 (ECTA)
நான் உன்னைப் புடமிட்டேன்; ஆனால், வெள்ளியைப் போலல்ல; துன்பம் எனும் உலை வழியாய் உன்னைத் தேர்ந்தெடுத்தேன்.
ஏசாயா 48 : 11 (ECTA)
என்பொருட்டே, என்னை முன்னிட்டே அதைச் செய்கின்றேன்; என் பெயரை எங்ஙனம் களங்கப்படுத்தலாம்? என் மாட்சியை நான் எவருக்கும் விட்டுக்கொடேன்.
ஏசாயா 48 : 12 (ECTA)
நான் அழைத்திருக்கும் யாக்கோபே, இஸ்ரயேலே, எனக்குச் செவிகொடு; நானே அவர்; தொடக்கமும் நானே; முடிவும் நானே. [* எசா 44:6; திவெ 1:17; 22: 13 ]
ஏசாயா 48 : 13 (ECTA)
என் கையே மண்ணுலகிற்கு அடித்தளமிட்டது; என் வலக்கை விண்ணுலகை விரித்து வைத்தது. நான் அழைக்கும்போது அவை ஒருங்கிணைந்து நிற்கின்றன.
ஏசாயா 48 : 14 (ECTA)
நீங்கள் அனைவரும் கூடிவந்து கேளுங்கள்; அவர்களுள் இவற்றை அறிவித்தவர் யார்? ஆண்டவரின் அன்புக்குரியவன், பாபிலோனில் அவர் விரும்பியதைச் செய்வான்; அவன் புயம் கல்தேயருக்கு எதிராக எழும்.
ஏசாயா 48 : 15 (ECTA)
நான், நானேதான் அதைக் கூறினேன்; நான் அவனை அழைத்தேன்; நானே அவனைக்கொண்டு வந்தேன், அவன் தன்வழியில் வெற்றி காண்பான்.
ஏசாயா 48 : 16 (ECTA)
என் அருகில் வந்து இதைக் கேளுங்கள்; தொடக்கமுதல் நான் மறைவாகப் பேசியதில்லை; அது நிகழ்ந்த காலம் முதல், நான் அங்கே இருக்கின்றேன். இப்பொழுது என் தலைவராகிய ஆண்டவர் என்னையும் அவர்தம் ஆவியையும் அனுப்பியுள்ளார்.
ஏசாயா 48 : 17 (ECTA)
தம் மக்களைப் பற்றிய ஆண்டவரின் திட்டம் இஸ்ரயேலின் தூயவரும் உன் மீட்பருமான ஆண்டவர் கூறுவது இதுவே: உன் கடவுளாகிய ஆண்டவர் நானே! பயனுள்ளவற்றை உனக்குக் கற்பிப்பவரும் செல்லவேண்டிய வழியில் உன்னை நடத்துபவரும் நானே!
ஏசாயா 48 : 18 (ECTA)
என் கட்டளைக்குச் செவிசாய்த்திருப்பாயானால், உன் நிறைவாழ்வு ஆற்றைப் போலும், உன் வெற்றி கடல் அலை போலும், பாய்ந்து வந்திருக்கும்.
ஏசாயா 48 : 19 (ECTA)
உன் வழிமரபினர் மணல் அளவாயும், உன் வழித்தோன்றல்கள் கதிர்மணிகள் போன்றும் இருந்திருப்பர்; அவர்கள் வெட்டி வீழ்த்தப்பட்டிரார்; அவர்கள் பெயர் என் திருமுன்னின்று அழிக்கப்பட்டிராது.
ஏசாயா 48 : 20 (ECTA)
பாபிலோனிலிருந்து புறப்பட்டுச் செல்லுங்கள்; கல்தேயாவை விட்டுத் தப்பியோடுங்கள்; ஆரவாரக் குரலெழுப்பி இதை முழங்கி அறிவியுங்கள்; உலகின் எல்லைவரை இதை அறியச் செய்யுங்கள்; ‘தம் ஊழியன் யாக்கோபை ஆண்டவர் மீட்டுவிட்டார்’ என்று சொல்லுங்கள். [* திவெ 18: 4 ]
ஏசாயா 48 : 21 (ECTA)
அவர் அவர்களைப் பாலைநிலங்களில் நடத்திச் சென்றபோது அவர்கள் தாகமடையவில்லை; பாறையிலிருந்து அவர்களுக்கு நீர் சுரக்கச் செய்தார்; பாறையைப் பிளந்தார், நீர் பாய்ந்து வந்தது.
ஏசாயா 48 : 22 (ECTA)
‘தீயோர்க்கு அமைதி இல்லை’ என்கிறார் ஆண்டவர். [* எசா 57:21.. ]

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22