ஏசாயா 44 : 1 (ECTA)
ஆண்டவர் ஒருவரே கடவுள் என் ஊழியன் யாக்கோபே, நான் தேர்ந்துகொண்ட இஸ்ரயேலே, இப்பொழுது செவிகொடு.
ஏசாயா 44 : 2 (ECTA)
உன்னைப் படைத்தவரும், கருப்பையில் உன்னை உருவாக்கியவரும், உனக்கு உதவி செய்பவருமாகிய ஆண்டவர் கூறுவதைக் கேள்; என் ஊழியன் யாக்கோபே, நான் தேர்ந்துகொண்ட ‘எசுரூன்’* அஞ்சாதே! [* "எசுரூன்" என்பது எபிரேயத்தில், "நேர்மையாளன்" எனவும் "கண்மணி" எனவும் பொருள்படும்.. ]
ஏசாயா 44 : 3 (ECTA)
ஏனெனில், தாகமுற்ற நிலத்தில் நீரை ஊற்றுவேன்; வறண்ட தரையில் நீரோடைகள் ஓடச் செய்வேன்; உன் வழிமரபினர் மீது என் ஆவியைப் பொழிவேன்; உன் வழித்தோன்றல்களுக்கு நான் ஆசி வழங்குவேன்;
ஏசாயா 44 : 4 (ECTA)
அவர்கள் நீரோடை அருகிலுள்ள புல் போலும் நாணல்கள் போலும் செழித்து வளருவர்.
ஏசாயா 44 : 5 (ECTA)
ஒருவன் ‘நான் ஆண்டவருக்கு உரியவன்’ என்பான்; மற்றொருவன் யாக்கோபின் பெயரைச் சூட்டிக்கொள்வான்; வேறொருவன் ‘ஆண்டவருக்குச் சொந்தம்’ என்று தன் கையில் எழுதி, ‘இஸ்ரயேல்’ என்று பெயரிட்டுக் கொள்வான்.
ஏசாயா 44 : 6 (ECTA)
இஸ்ரயேலின் அரசரும் அதன் மீட்பரும், படைகளின் ஆண்டவருமான ஆண்டவர் கூறுவது இதுவே: தொடக்கமும் நானே; முடிவும் நானே; என்னையன்றி வேறு கடவுள் இல்லை. [* எசா 48:12; திவெ 1:17; 22: 13 ]
ஏசாயா 44 : 7 (ECTA)
எனக்கு நிகர் யார்? அவன் உரத்த குரலில் அறிவிக்கட்டும். என்றுமுள மக்களை நான் ஏற்படுத்தியதிலிருந்து நடந்தவற்றை முறைப்படுத்திக் கூறட்டும். இனி நடக்கவிருப்பன பற்றியும், நிகழப்போவனபற்றியும் முன்னுரைக்கட்டும்.
ஏசாயா 44 : 8 (ECTA)
நீங்கள் கலங்காதீர்கள், அஞ்சாதீர்கள்; முன்பிருந்தே நான் உரைக்கவில்லையா? அறிவிக்கவில்லையா? நீங்களே என் சாட்சிகள்; என்னையன்றி வேறு கடவுள் உண்டோ? நான் அறியாத கற்பாறை வேறு உண்டோ?
ஏசாயா 44 : 9 (ECTA)
ஏளனத்திற்குரிய சிலை வழிபாடு சிலை செதுக்குவோர் அனைவரும் வீணரே; அவர்கள் பெரிதாக மதிப்பவை பயனற்றவை; அவர்களின் சான்றுகள் பார்வையற்றவை; அறிவற்றவை; எனவே அவர்கள் மானக்கேடு அடைவர்.
ஏசாயா 44 : 10 (ECTA)
எதற்கும் உதவாத தெய்வச் சிலையை எவனாவது செதுக்குவானா? வார்ப்பானா?
ஏசாயா 44 : 11 (ECTA)
இதோ, அவனும் அவன் நண்பர்களும் வெட்கக்கேடு அடைவர்; அந்தக் கைவினைஞர் அனைவரும் மனிதர்தாமே! அவர்கள் அனைவரும் கூடிவந்து எம்முன் நிற்கட்டும்; அவர்கள் திகிலடைந்து ஒருங்கே வெட்கக்கேடுறுவர்.
ஏசாயா 44 : 12 (ECTA)
கொல்லன் இரும்பைக் குறட்டால் எடுத்துக் கரிநெருப்பிலிட்டு உருக்குகிறான்; அதைச் சம்மட்டியால் அடித்து வடிவமைக்கிறான்; தன் வலிய கைகளால் அதற்கு உருக்கொடுக்கிறான். ஆனால் அவனோ பட்டினி கிடக்கிறான்; ஆற்றலை இழக்கிறான்; நீர் அருந்தாமல் களைத்துப் போகிறான்.
ஏசாயா 44 : 13 (ECTA)
தச்சன் மரத்தை எடுத்து, நூல் பிடித்து கூராணியால் குறியிட்டு, உளியால் செதுக்குகிறான்; அளவுகருவியால் சரிபார்த்து, ஓர் அழகிய மனித உருவத்தைச் செய்கிறான். அதைக் கோவிலில் நிலைநிறுத்துகிறான்.
ஏசாயா 44 : 14 (ECTA)
அவன் தன் தேவைக்கென்று கேதுருகளை வெட்டிக்கொள்ளலாம்; அல்லது அடர்ந்த் காட்டில் வளர்ந்த மருதமரத்தையோ, கருவாலி மரத்தையோ தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்; அல்லது அசோக மரக் கன்றை நட்டு, அது மழையினால் வளர்வதற்குக் காத்திருக்கலாம்.
ஏசாயா 44 : 15 (ECTA)
அது மனிதருக்கு எரிக்கப் பயன்படுகிறது; அவன் அதிலிருந்து கொஞ்சம் எடுத்துக் குளிர்காயப் பயன்படுத்துகிறான். அதே மரத்தைக் கொண்டு தீ மூட்டி அப்பம் சுடுகிறான். அதைக் கொண்டே தெய்வத்தைச் செய்து அதை வணங்குகிறான். சிலையைச் செதுக்கி அதன்முன் பணிந்து வணங்குகிறான்.
ஏசாயா 44 : 16 (ECTA)
அதில் ஒரு பகுதியை அடுப்பில் வைத்து எரிக்கிறான்; அதன்மேல் அவன் உணவு சமைக்கிறான்; இறைச்சியைப் பொரித்து வயிறார உண்ணுகிறான்; பின்னர் குளிர் காய்ந்து, ‘வெதுவெதுப்பாக இருக்கிறது, என்ன அருமையான தீ!’ என்று சொல்லிக் கொள்கிறான்.
ஏசாயா 44 : 17 (ECTA)
எஞ்சிய பகுதியைக் கொண்டு தெய்வச் சிலையைச் செதுக்கி அதன்முன் பணிந்து வணங்கி ‘நீரே என் இறைவன், என்னை விடுவித்தருளும்’ என்று மன்றாடுகிறான்.
ஏசாயா 44 : 18 (ECTA)
அவர்கள் அறிவற்றவர், விவேகமற்றவர், காணாதவாறு கண்களையும், உணராதவாறு உள்ளத்தையும் அடைத்துக் கொண்டனர்.
ஏசாயா 44 : 19 (ECTA)
அவர்கள் சிந்தையில் மாற்றமில்லை; அவர்களுக்கு அறிவுமில்லை; “அதில் ஒரு பகுதியை அடுப்பில் இட்டு எரித்தேன்; அதன் நெருப்புத்தணலில் அப்பம் சுட்டேன்; இறைச்சியைப் பொரித்து உண்டேன்; எஞ்சிய பகுதியைக் கொண்டு சிலை செய்யலாமா? ஒரு மரக்கட்டை முன் நான் பணிந்து வணங்கலாமா?” என்று சொல்ல அவர்களுக்கு விவேகமும் இல்லை.
ஏசாயா 44 : 20 (ECTA)
அவன் செய்வது சாம்பலைத் தின்பதற்குச் சமமானது; ஏமாறிய அவன் சிந்தனைகள் அவனை வழிவிலகச் செய்கின்றன; அவனால் தன்னை மீட்க இயலாது, ‘தன் வலக்கையிலிருப்பது வெறும் ஏமாற்று வேலை’ என்று அவன் ஏற்றுக்கொள்வதில்லை.
ஏசாயா 44 : 21 (ECTA)
படைத்தவரும் மீட்பவரும் ஆண்டவரே யாக்கோபே, இஸ்ரயேலே, இவற்றை நீ நினைவிற் கொள்வாய்; நீ என் ஊழியன்; நான் உன்னை உருவாக்கினேன்; நீ தான் என் அடியான்; இஸ்ரயேலே, நான் உன்னை மறக்க மாட்டேன்.
ஏசாயா 44 : 22 (ECTA)
உன் குற்றங்களைக் கார்மேகம் போலும், உன் பாவங்களைப் பனிப்படலம் போலும் அகற்றிவிட்டேன். என்னிடம் திரும்பி வா, நான் உனக்கு மீட்பளித்துவிட்டேன்.
ஏசாயா 44 : 23 (ECTA)
வானங்களே, மகிழ்ந்து பாடுங்கள்; ஆண்டவர் இதைச் செய்தார்; மண்ணுலகின் அடித்தளங்களே, ஆர்ப்பரியுங்கள்; மலைகளே, காடே, அங்குள்ள அனைத்து மரங்களே, களிப்புற்று முழங்குங்கள்; ஏனெனில் ஆண்டவர் யாக்கோபை மீட்டருளினார்; இஸ்ரயேலில் அவர் மாட்சி பெறுகிறார்.
ஏசாயா 44 : 24 (ECTA)
கருப்பையில் உன்னை உருவாக்கிய உன் மீட்பரான ஆண்டவர் கூறுவது இதுவே: அனைத்தையும் படைத்த ஆண்டவர் நானே; யார் துணையுமின்றி நானாக வானங்களை விரித்து மண்ணுலகைப் பரப்பினேன்.
ஏசாயா 44 : 25 (ECTA)
பொய்யர் சொல்லும் குறிகள் பலிக்காதவாறு செய்கின்றேன்; மந்திரவாதிகளை மடையராக்குகின்றேன்; ஞானிகளை இழிவுறச் செய்து அவர்களது அறிவு மடமையெனக் காட்டுகின்றேன்; [* 1 கொரி 1: 20 ]
ஏசாயா 44 : 26 (ECTA)
என் ஊழியன் சொன்ன வார்த்தையை உறுதிப்படுத்துகின்றேன்; என் தூதர் அறிவித்த திட்டத்தை நிறைவேற்றுகின்றேன்; எருசலேமை நோக்கி, ‘நீ குடியமர்த்தப் பெறுவாய்’ என்றும் யூதா நகர்களிடம், ‘நீங்கள் கட்டியெழுப்பப் பெறுவீர்கள்’ என்றும் அவற்றின் பாழடைந்த இடங்களைச் சீரமைப்பேன்’ என்றும் கூறுகின்றேன்.
ஏசாயா 44 : 27 (ECTA)
ஆழ்நீர்த்தளங்களைப் பார்த்து, ‘வற்றிப்போ; உன் ஆறுகளை உலர்ந்த தரையாக்குவேன்’ என்றும் உரைக்கின்றேன்.
ஏசாயா 44 : 28 (ECTA)
சைரசு மன்னனைப்பற்றி, ‘அவன் நான் நியமித்த ஆயன்; என் விருப்பத்தை நிறைவேற்றுவான்’ என்றும், எருசலேமைப்பற்றி, ‘அது கட்டியெழுப்பப்படும்’ என்றும், திருக்கோவிலைப்பற்றி, ‘உனக்கு அடித்தளம் இடப்படும்’ என்றும் கூறுவதும் நானே. [* 2 குறி 36:23; எஸ்ரா 1: 2 ]
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28