ஏசாயா 42 : 1 (ECTA)
ஆண்டவரின் ஊழியர் இதோ! என் ஊழியர்! அவருக்கு நான் ஆதரவு அளிக்கிறேன்; நான் தேர்ந்துகொண்டவர் அவர்; அவரால் என் நெஞ்சம் பூரிப்படைகின்றது; அவருள் என் ஆவி தங்கும்படி செய்தேன்; அவர் மக்களினங்களுக்கு நீதி வழங்குவார். [* மத் 3:17; 12:18; 17:5; மாற் 1:11; லூக் 3:22; 9: 35 ; மத் 12:18- 21. ]
ஏசாயா 42 : 2 (ECTA)
அவர் கூக்குரலிடமாட்டார்; தம்குரலை உயர்த்தமாட்டார்; தம் குரலொலியைத் தெருவில் எழுப்பவுமாட்டார். [* மத் 12:18- 21 ]
ஏசாயா 42 : 3 (ECTA)
நெரிந்த நாணலை முறியார்; மங்கி எரியும் திரியை அணையார்; உண்மையாகவே நீதியை நிலை நாட்டுவார். [* மத் 12:18- 21 ; திப 17:24- 25. ]
ஏசாயா 42 : 4 (ECTA)
உலகில் நீதியை நிலைநாட்டும்வரை அவர் சோர்வடையார்; மனம் தளரமாட்டார்; அவரது நீதிநெறிக்காகத் தீவு நாட்டினர் காத்திருப்பர். [* மத் 12:18- 21 ]
ஏசாயா 42 : 5 (ECTA)
விண்ணுலகைப் படைத்து விரித்து, மண்ணுலகைப் பரப்பி உயிரினங்களைத் தோன்றச் செய்து, அதன் மக்களுக்கு உயிர்மூச்சுத் தந்து, அதில் நடமாடுவோர்க்கு ஆவியை அளித்தவருமான இறைவனாகிய ஆண்டவர் கூறுவது இதுவே:
ஏசாயா 42 : 6 (ECTA)
ஆண்டவராகிய நான் நீதியை நிலைநாட்டுமாறு உம்மை அழைத்தேன்; உம் கையைப் பற்றிப்பிடித்து, உம்மைப் பாதுகாப்பேன்; மக்களுக்கு உடன்படிக்கையாகவும் பிற இனத்தாருக்கு ஒளியாகவும் நீர் இருக்குமாறு செய்வேன். [* எசா 49:6; லூக் 2:32; திப 13:47; 26:23.. ]
ஏசாயா 42 : 7 (ECTA)
பார்வை இழந்தோரின் கண்களைத் திறக்கவும், கைதிகளின் தளைகளை அறுக்கவும், இருளில் இருப்போரைச் சிறையினின்று மீட்கவும் உம்மை அழைத்தேன்.
ஏசாயா 42 : 8 (ECTA)
நானே ஆண்டவர்; அதுவே என் பெயர்; என் மாட்சியைப் பிறருக்கோ, என் புகழைச் சிலைகளுக்கோ விட்டுக்கொடேன்.
ஏசாயா 42 : 9 (ECTA)
முன்னர் நான் அறிவித்தவை நிகழ்ந்துவிட்டன; புதியனவற்றை நான் அறிவிக்கிறேன்; அவை தோன்றுமுன்னே உங்களுக்குத் தெரியப்படுத்துகிறேன்.
ஏசாயா 42 : 10 (ECTA)
புகழ்ச்சிப் பா ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; உலகின் எல்லையெங்கும் அவர் புகழ்ப் பாடுங்கள்; கடலில் பயணம் செய்வோரே, கடல்வாழ் உயிரினங்களே, தீவு நாடுகளே, அவற்றில் குடியிருப்போரே, அவரைப் போற்றுங்கள்.
ஏசாயா 42 : 11 (ECTA)
பாலைநிலமும் அதன் நகர்களும் கேதாரியர் வாழ் ஊர்களும் பேரொலி எழுப்பட்டும்; சேலா வாழ் மக்களும் மகிழ்ந்து பாடட்டும்; மலைகளின் உச்சியிலிருந்து அவர்கள் ஆர்ப்பரிக்கட்டும்.
ஏசாயா 42 : 12 (ECTA)
அவர்கள் ஆண்டவருக்கு மாட்சி அளிப்பார்கள்; அவர் புகழைத் தீவு நாட்டினரிடையே அறிவிப்பார்கள்.
ஏசாயா 42 : 13 (ECTA)
ஆண்டவர் வலியோன் எனப் புறப்பட்டுச் செல்வார்; போர்வீரரைப்போல் தீராச் சினம் கொண்டு எழுவார்; உரத்தக்குரல் எழுப்பி, முழக்கமிடுவார்; தம் பகைவருக்கு எதிராக வீரத்துடன் செயல்படுவார்.
ஏசாயா 42 : 14 (ECTA)
தம் மக்களுக்கு ஆண்டவரின் உதவி “வெகுகாலமாய் நான் மௌனம் காத்துவந்தேன்; அமைதியாய் இருந்து என்னைக் கட்டுப்படுத்திக்கொண்டேன், இப்பொழுதோ, பேறுகாலப் பெண்போல் வேதனைக்குரல் எழுப்புகின்றேன்; பெருமூச்சு விட்டுத் திணறுகின்றேன்.
ஏசாயா 42 : 15 (ECTA)
மலைகளையும் குன்றுகளையும் பாழாக்குவேன்; அவற்றின் புல்பூண்டுகளை உலர்ந்து போகச் செய்வேன்; ஆறுகளைத் திட்டுகளாக மாற்றுவேன்; ஏரிகளை வற்றிப்போகச் செய்வேன்.
ஏசாயா 42 : 16 (ECTA)
பார்வையற்றோரை அவர்கள் அறியாத பாதையில் நடத்திச் செல்வேன்; அவர்கள் பழகாத சாலைகளில் வழிநடத்துவேன்; அவர்கள்முன் இருளை ஒளியாக்குவேன்; கரடுமுரடான இடங்களைச் சமதளமாக்குவேன்; இவை நான் அவர்களுக்காகச் செய்யவிருப்பன; நான் அவர்களைக் கைநெகிழ மாட்டேன்.
ஏசாயா 42 : 17 (ECTA)
சிலைகள்மேல் நம்பிக்கை வைப்போரும், படிமங்களிடம், ‘நீங்கள் எங்கள் தெய்வங்கள்’ என்போரும் இழிநிலையடைந்து, மானக்கேடுறுவர்.
ஏசாயா 42 : 18 (ECTA)
கற்றுக் கொள்ளாத இஸ்ரயேல் செவிடரே, கேளுங்கள்; குருடரே, கவனமாய்ப் பாருங்கள்.
ஏசாயா 42 : 19 (ECTA)
குருடாய் இருப்பவன் எவன்? என் ஊழியன்தான்! செவிடாய் இருப்பவன் எவன்? நான் அனுப்பும் தூதன் தான்! எனக்கு அர்ப்பணிக்கப்பட்டவன் போல் குருடன் யார்? ஆண்டவரின் ஊழியன்போல் பார்வையற்றவன் யார்?
ஏசாயா 42 : 20 (ECTA)
பலவற்றை நீ பார்த்தும், கவனம் செலுத்தவில்லை; உன் செவிகள் திறந்திருந்தும் எதுவும் உன் காதில் விழவில்லை.
ஏசாயா 42 : 21 (ECTA)
ஆண்டவர் தம் நீதியின் பொருட்டுத் தம் திருச்சட்டத்தைச் சிறப்பித்து மேன்மைப்படுத்த ஆர்வமுற்றார்.
ஏசாயா 42 : 22 (ECTA)
ஆனால் இந்த மக்களினம் கொள்ளையடிக்கப்பட்டுச் சூறையாடப்பட்டது; அவர்கள் அனைவரும் குழிகளில் சிக்கினர்; சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டனர்; விடுவிப்பார் எவருமிலர்; கவர்ந்து செல்லப்பட்டனர்; கொள்ளைப் பொருளாயினர்; ‘திருப்பி அனுப்பு’ என்று சொல்வாரில்லை.
ஏசாயா 42 : 23 (ECTA)
உங்களுள் எவன் இதற்குச் செவி கொடுப்பான்? எவன் வருங்காலத்திற்காகக் கவனித்துக் கேட்பான்?
ஏசாயா 42 : 24 (ECTA)
யாக்கோபைக் கொள்ளைக்காரரிடமும் இஸ்ரயேலலைக் கள்வரிடமும் ஒப்புவித்தவர் யார்? ஆண்டவரன்றோ? அவருக்கு எதிராக அன்றோ நாம் பாவம் செய்தோம்! மக்கள் அவருடைய நெறிகளைப் பின்பற்ற விரும்பவில்லை; அவரது திருச்சட்டத்திற்குக் கீழ்ப்படியவில்லை.
ஏசாயா 42 : 25 (ECTA)
ஆகவே அவர் அவர்கள்மேல் தம் கோபக்கனலைக் கொட்டினார்; கடும் போர் மூண்டது; அவரது சினம் அவர்களைச் சூழ்ந்து பற்றி எரிந்தது; ஆயினும் அவர்கள் உணரவில்லை; அவர்களை நெருப்பு சுட்டெரித்தது; ஆயினும் அவர்கள் சிந்தையில் கொள்ளவில்லை.
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25