ஏசாயா 40 : 1 (ECTA)
நம்பிக்கை தரும் நல்வாக்கு “ஆறுதல் கூறுங்கள்; என் மக்களுக்குக் கனிமொழி கூறுங்கள்” என்கிறார் உங்கள் கடவுள்.
ஏசாயா 40 : 2 (ECTA)
எருசலேமிடம் இனிமையாய்ப் பேசி, உரத்த குரலில் அவளுக்குச் சொல்லுங்கள்; அவள் போராட்டம் நின்றுவிட்டது; அவள் குற்றம் மன்னிக்கப்பட்டது; அவள் தன் பாவங்கள் அனைத்திற்காகவும் ஆண்டவர் கையில் இருமடங்கு தண்டனை பெற்றுவிட்டாள்.
ஏசாயா 40 : 3 (ECTA)
குரலொலி ஒன்று முழங்குகின்றது; பாலைநிலத்தில் ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்; பாழ்நிலத்தில் நம் கடவுளுக்காக நெடுஞ்சாலை ஒன்றைச் சீராக்குங்கள். [* மத் 3:3; மாற் 1:3; யோவா 1: 23 ; லூக் 3:4- 6. ]
ஏசாயா 40 : 4 (ECTA)
பள்ளத்தாக்கு எல்லாம் நிரப்பப்படும்; மலை, குன்று யாவும் தாழ்த்தப்படும்; கோணலானது நேராக்கப்படும்; கரடு முரடானவை சமதளமாக்கப்படும். [* லூக் 3:4- 6 ]
ஏசாயா 40 : 5 (ECTA)
ஆண்டவரின் மாட்சி வெளிப்படுத்தப்படும்; மானிடர் அனைவரும் ஒருங்கே இதைக் காண்பர்; ஆண்டவர்தாமே இதை மொழிந்தார். [* லூக் 3:4- 6 ]
ஏசாயா 40 : 6 (ECTA)
“உரக்கக் கூறு” என்றது ஒரு குரல்; “எதை நான் உரக்கக் கூற வேண்டும்?” என்றேன். “மானிடர் அனைவரும் புல்லே ஆவர்; அவர்களின் மேன்மை வயல்வெளிப் பூவே! [* யாக் 1:10-11; 1 பேது 1:24- 25 ]
ஏசாயா 40 : 7 (ECTA)
ஆண்டவரின் ஆவி இறங்கி வரவே, புல் உலர்ந்துபோம்; பூ வதங்கிவிழும்; உண்மையில் மானிடர் புல்லே ஆவர்! [* யாக் 1:10-11; 1 பேது 1:24- 25 ]
ஏசாயா 40 : 8 (ECTA)
புல் உலர்ந்துபோம்; பூ வதங்கி விழும்; நம் ஆண்டவரின் வார்த்தையோ என்றென்றும் நிலைத்திருக்கும். [* யாக் 1:10-11; 1 பேது 1:24- 25 ]
ஏசாயா 40 : 9 (ECTA)
சீயோனே! நற்செய்தி தருபவளே, உயர்மலைமேல் நின்றுகொள்! எருசலேமே! நற்செய்தி உரைப்பவரே! உன் குரலை எழுப்பு, அஞ்சாதே! ‘இதோ உன் கடவுள்’ என்று யூதா நகர்களிடம் முழங்கு!
ஏசாயா 40 : 10 (ECTA)
இதோ என் தலைவராகிய ஆண்டவர் ஆற்றலுடன் வருகின்றார்; அவர் ஆற்றலோடு ஆட்சி புரிய இருக்கிறார். அவர்தம் வெற்றிப் பரிசைத் தம்முடன் எடுத்து வருகின்றார்; அவர் வென்றவை அவர்முன் செல்கின்றன. [* எசா 62:11; திவெ 22: 12 ]
ஏசாயா 40 : 11 (ECTA)
ஆயனைப்போல் தம் மந்தையை அவர் மேய்ப்பார்; ஆட்டுக்குட்டிகளைத் தம் கையால் ஒன்று சேர்ப்பார்; அவற்றைத் தம் தோளில் தூக்கிச் சுமப்பார்; சினையாடுகளைக் கவனத்துடன் நடத்திச் செல்வார்.” [* எசே 34:15; யோவா 10: 11 ]
ஏசாயா 40 : 12 (ECTA)
இஸ்ரயேலின் ஒப்பற்ற கடவுள் கடல்நீரைத் தம் உள்ளங்கை அளவால் கணக்கிட்டவர் யார்? வானத்தைச் சாண் அளவால் கணித்திட்டவர் யார்? மண்ணுலகின் புழுதியை மரக்காலால் அளந்தவர் யார்? மலைகளை நிறைகோலாலும் குன்றுகளைத் தராசாலும் நிறுத்தவர் யார்?
ஏசாயா 40 : 13 (ECTA)
ஆண்டவரின் ஆவிக்கு வழிகாட்டியவர் யார்? அவருக்கு அறிவுரையாளனாய் இருந்து கற்றுத்தந்தவர் யார்? [* உரோ 11:34; 1 கொரி 2: 16 ]
ஏசாயா 40 : 14 (ECTA)
யாரிடம் அவர் அறிவுரை கேட்டார்? அவருக்குப் பயிற்சி அளித்து, நீதிநெறியை உணர்த்தியவர் யார்? அவருக்கு அறிவு புகட்டி, விவேக நெறியைக் காட்டியவர் யார்?
ஏசாயா 40 : 15 (ECTA)
இதோ, வேற்றினத்தார், வாளியிலிருக்கும் நீர்த்துளியாகவும், தராசில் ஒட்டிய தூசாகவும் அவரால் கருதப்படுகின்றனர். இதோ, தீவுகளை ஓர் அணுவென அவர் தூக்குகின்றார்.
ஏசாயா 40 : 16 (ECTA)
எரிப்பதற்கு லெபனோன் போதாது; எரிபலிக்கு அதன் விலங்குகள் பற்றாது.
ஏசாயா 40 : 17 (ECTA)
மக்களினங்கள் யாவும் இல்லாமையாக, ஒன்றுமில்லாமையாக, வெறுமையாக அவரால் கருதப்படுகின்றன.
ஏசாயா 40 : 18 (ECTA)
இறைவனை யாருக்கு ஒப்பிடுவீர்கள்? எந்தச் சாயலை அவருக்கு நிகராகக் கொள்வீர்கள்? [* திப 17:29.. ]
ஏசாயா 40 : 19 (ECTA)
சிலை வடிவத்தையா? அதைச் சிற்பி வார்க்கிறான்; பொற்கொல்லன் அதைப் பொன்னால் வேய்கிறான்; வெள்ளிச் சங்கிலிகளை அதற்கென அமைக்கிறான். [* திப 17:29.. ]
ஏசாயா 40 : 20 (ECTA)
இத்தகைய நேர்ச்சையை நிறைவேற்ற இயலா வறியவன் உளுத்துப்போகா மரத்தைத் தேர்ந்து கொள்கிறான்; அசைக்க முடியாச் சிலையொன்றை நிறுவ அவன் கைவினைஞனைத் தேடுகிறான்.
ஏசாயா 40 : 21 (ECTA)
உங்களுக்குத் தெரியாதா? நீங்கள் கேள்விப்படவில்லையா? தொடக்கத்திலிருந்தே உங்களுக்கு அறிவிக்கப்படவில்லையா? மண்ணுலகின் அடித்தளங்கள் இடப்பட்டதுபற்றி நீங்கள் அறிந்து கொள்ளவில்லையா?
ஏசாயா 40 : 22 (ECTA)
உலகின் விதானத்தின் மீது வீற்றிருப்பவர் அவரே; மண்ணில் வாழ்வோர் வெட்டுக்கிளி போல்வர்; வான் வெளியைத் திரைச் சீலையென விரித்துக் குடியிருக்கும் கூடாரம்போல் அதை அமைப்பவரும் அவரே.
ஏசாயா 40 : 23 (ECTA)
ஆள்வோரை வீழ்த்துபவர் அவரே; மண்ணுலகின் தலைவர்களை ஒன்றுமில்லாது ஆக்குபவர் அவரே.
ஏசாயா 40 : 24 (ECTA)
அவர்கள் நடப்படுகிறார்கள்; விதைக்கப்படுகிறார்கள்; ஆனால் அவர்களின் தண்டு நிலத்தில் வேர்விடுவதற்குள், அவர்கள்மேல் அவர் ஊத, அவர்கள் வாடிவதங்குகின்றனர். சூறைக்காற்று அவர்களைத் துரும்பென அடித்துச் செல்கிறது.
ஏசாயா 40 : 25 (ECTA)
‘யாருக்கு என்னை ஒப்பிடுவீர்கள்? எனக்கு நிகரானவர் யார்?’ என்கிறார் தூயவர்.
ஏசாயா 40 : 26 (ECTA)
உங்கள் கண்களை உயர்த்தி மேலே பாருங்கள்; அவற்றைப் படைத்தவர் யார்? வான் படையை எண்ணிக்கை வாரியாய் வெளிக்கொணர்ந்து ஒவ்வொன்றையும் பெயர் சொல்லி அழைப்பவர் அன்றோ? அவர் ஆற்றல்மிக்கவராயும் வலிமை வாய்ந்தவராயும் இருப்பதால் அவற்றில் ஒன்றேனும் குறைவதில்லை.
ஏசாயா 40 : 27 (ECTA)
“என் வழி ஆண்டவருக்கு மறைவாய் உள்ளது; என் நீதி என் கடவுளுக்குப் புலப்படவில்லை” என்று யாக்கோபே, நீ செல்வது ஏன்? இஸ்ரயேலே, நீ கூறுவது ஏன்?
ஏசாயா 40 : 28 (ECTA)
உனக்குத் தெரியாதா? நீ கேட்டதில்லையா? ஆண்டவரே என்றுமுள கடவுள்; அவரே மண்ணுலகின் எல்லைகளைப் படைத்தவர்; அவர் சோர்ந்து போகார்; களைப்படையார்; அவரது அறிவை ஆய்ந்தறிய இயலாது.
ஏசாயா 40 : 29 (ECTA)
அவர் சோர்வுற்றவருக்கு வலிமை அளிக்கின்றார்; வலிமையிழந்தவரிடம் ஊக்கம் பெருகச் செய்கின்றார்.
ஏசாயா 40 : 30 (ECTA)
இளைஞர் சோர்வுற்றுக் களைப்படைவர்; வாலிபர் நிலைதடுமாறி வீழ்வர்.
ஏசாயா 40 : 31 (ECTA)
ஆண்டவர்மேல் நம்பிக்கை வைத்திருப்பவர்களோ புதிய ஆற்றல் பெறுவர். கழுகுகள்போல் இறக்கை விரித்து உயரே செல்வர்; அவர்கள் ஓடுவர்; களைப்படையார்; நடந்து செல்வர்; சோர்வடையார்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31