ஏசாயா 4 : 1 (ECTA)
அந்நாளில் ஓர் ஆடவனை ஏழு பெண்கள் பிடித்துக்கொண்டு, ‟நாங்கள் எங்கள் சொந்த உணவை உண்டு வாழ்வோம்; எங்கள் சொந்த ஆடைகளை உடுத்திக்கொள்வோம்; உமது பெயரை மட்டும் எங்களுக்கு வழங்கி எங்கள் இழிவை நீக்குவீராக” என்பார்கள்.
ஏசாயா 4 : 2 (ECTA)
எருசலேமின் மறுவாழ்வு அந்நாளில் ஆண்டவரால் துளிர்க்கும் தளிர், அழகும் மேன்மையும் வாய்ந்ததாய் இருக்கும்; நாட்டில் விளையும் நற்கனிவகைகள், இஸ்ரயேலில் தப்பிப் பிழைத்தவர்களின் பெருமையும் மேன்மையுமாய் அமையும்.
ஏசாயா 4 : 3 (ECTA)
அந்நாளில் சீயோனில் எஞ்சியிருப்போரும், எருசலேமில் தப்பி வாழ்வோரும் ‛புனிதர்’ எனப் பெயர் பெறுவர்; உயிர் பிழைப்பதற்கென்று எருசலேமில் பெயர் எழுதப்பட்டோரும் ‛புனிதர்’ எனப்படுவர்.
ஏசாயா 4 : 4 (ECTA)
என் தலைவர் சீயோன் மகளின் தீட்டைக் கழுவித் தூய்மைப்படுத்துவார்; நீதியின்படி தீர்ப்பிடும் அவரது தன்மையாலும் நெருப்புத்தணலையொத்த அவரது ஆற்றலாலும் எருசலேமின் இரத்தக் கறைகளைக் கழுவி அதனைத் தூய்மைப்படுத்துவார்.
ஏசாயா 4 : 5 (ECTA)
சீயோன் மலையின் முழுப்பரப்பின் மேலும், அங்கே கூடிவரும் சபைக் கூட்டங்கள் மேலும், மேகத்தை ஆண்டவர் பகலில் தோற்றுவிப்பார்; புகைப்படலத்தையும், கொழுந்து விட்டெரியும் நெருப்பின் ஒளிச் சுடரையும் இரவில் ஏற்படுத்துவார்; ஏனெனில், அனைத்து மாட்சிக்கு மேல் ஒரு விதான மண்டபம் இருக்கும். * விப 13:21; 24:16..
ஏசாயா 4 : 6 (ECTA)
அது பகல் வெப்பத்தினின்று காக்கும் நிழலாகவும், புயல்காற்றுக்கும் மழைக்கும் ஒதுங்கும் புகலிடமாகவும் அரணாகவும் அமையும்.
❮
❯
1
2
3
4
5
6