ஏசாயா 30 : 1 (ECTA)
எகிப்துடன் செய்துள்ள பயனற்ற உடன்பாடு கலகக்காரரான புதல்வருக்கு ஐயோ கேடு! என்கிறார் ஆண்டவர். என்னிடமிருந்து பெறாத திட்டத்தைச் செயல்படுத்துகின்றனர்; என் தூண்டுதல் இன்றி உடன்படிக்கை செய்கின்றனர்; இவ்வாறு பாவத்தின் மேல் பாவத்தைக் குவிக்கின்றனர். [* “அரியேல்” என்பது எபிரேயத்தில், ‘இறைவனின் பெண் சிங்கம்’ எனவும் ‘இறைவனின் பீடம்’ எனவும் பொருள்படும்.. ]
ஏசாயா 30 : 2 (ECTA)
என்னைக் கேளாமலேயே எகிப்திற்குப் புறப்பட்டுச் செல்கின்றனர்; பார்வோன் ஆற்றலில் அடைக்கலம் பெறவும் எகிப்தின் நிழலில் புகலிடம் தேடவும் போகின்றனர்.
ஏசாயா 30 : 3 (ECTA)
பார்வோனின் அடைக்கலம் உங்களுக்கு மானக்கேட்டைக் கொணரும்; எகிப்தின் நிழலில் புகலிடம் தேடுவது உங்களுக்கு இகழ்ச்சி ஆகும்.
ஏசாயா 30 : 4 (ECTA)
யூதாவின் தலைவர் சோவானுக்கு வந்தனர்; அதன் தூதர் ஆனேசுக்குச் சென்றனர்.
ஏசாயா 30 : 5 (ECTA)
பயனற்ற மக்களினத்தை முன்னிட்டு அனைவரும் மானக்கேடடைவர்; அவர்களால் யாதொரு உதவியோ பயனோ இராது; ஆனால் மானக்கேடும் அவமதிப்புமே மிஞ்சும்.
ஏசாயா 30 : 6 (ECTA)
நெகேபிலுள்ள விலங்கினங்களைப் பற்றிய இறைவாக்கு; கடுந்துயரும் வேதனையும் நிறைந்த நாடு அது; பெண்சிங்கமும் ஆண்சிங்கமும், விரியன் பாம்பும் பறக்கும் நாகமும் உள்ள நாடு அது! இத்தகைய நாட்டின் வழியாய், கழுதைகளின் முதுகின்மேல் அவர்கள் தங்கள் செல்வங்களையும் ஒட்டகங்களின் திமில்கள்மேல் தங்கள் அரும்பொருட்களையும் சுமத்தி, முற்றிலும் பயனற்ற மக்களினங்களுக்குக் கொண்டு செல்கிறார்கள்.
ஏசாயா 30 : 7 (ECTA)
எகிப்தியர் செய்யும் உதவி பயனற்றது; ஆதலால் நான் அவர்களைச் ‘செயலற்ற இராகாபு’ என அழைத்தேன்.
ஏசாயா 30 : 8 (ECTA)
கீழ்ப்படியாத மக்கள் இப்பொழுது நீ சென்று அவர்கள் முன் பலகையில் பதித்து வை; ஏட்டுச்சுருள் ஒன்றில் எழுதிவை; வருங்காலத்திற்கென என்றுமுள சான்றாக அது விளங்கும்.
ஏசாயா 30 : 9 (ECTA)
ஏனெனில், அவர்கள் கலகம் செய்யும் மக்களாயும் பொய்யுரைக்கும் பிள்ளைகளாயும், ஆண்டவரின் திருச்சட்டத்திற்குச் செவிசாய்ப்பதை விரும்பாத பிள்ளைகளாயும் உள்ளனர்.
ஏசாயா 30 : 10 (ECTA)
திருப்பார்வையாளரிடம் அவர்கள் “திருப்பார்வை காண வேண்டாம்” என்றும், திருக்காட்சியாளரிடம், “எங்களுக்கென உண்மையானவற்றைக் காட்சி காணவேண்டாம்; இனிமையானவற்றை எங்களுக்குக் கூறுங்கள்; மாயமானவற்றையே கண்டு சொல்லுங்கள்; [* உரோ 11: 8 ]
ஏசாயா 30 : 11 (ECTA)
தடம் மாறிச் செல்லுங்கள்; நெறியை விட்டு விலகுங்கள்; இஸ்ரயேலின் தூயவரை எங்கள் பார்வையிலிருந்து அகற்றுங்கள்” என்கிறார்கள்.
ஏசாயா 30 : 12 (ECTA)
ஆதலால் இஸ்ரயேலின் தூயவர் கூறுவது இதுவே: என் எச்சரிக்கையை நீங்கள் அவமதித்தீர்கள்: அடக்கி ஆள்வதிலும் ஒடுக்குவதிலும் நம்பிக்கை வைத்தீர்கள்; அவற்றையே பற்றிக் கொண்டிருந்தீர்கள்.
ஏசாயா 30 : 13 (ECTA)
ஆதலால், உயர்ந்த மதிற்சுவரில் இடிந்துவிழும் தறுவாயிலுள்ள பிளவு திடீரென்று நொடிப்பொழுதில் சரிந்து விழுவதுபோல் இந்தத் தீச்செயல் உங்கள்மேல் விழும். [* மத் 15:8-9; மாற் 7:6- 7 ]
ஏசாயா 30 : 14 (ECTA)
அது இடிந்து வீழ்வது, குயவனின் மட்கலம் சுக்குநூறாய் உடைந்து போவதுபோல் இருக்கும்; அடுப்பிலிருந்து நெருப்பு எடுப்பதற்கோ பள்ளத்திலிருந்து நீர் மொள்வதற்கோ உடைந்த துண்டுகளில் எதுவுமே உதவாது. [* 1 கொரி 1: 19 ]
ஏசாயா 30 : 15 (ECTA)
என் தலைவரும் இஸ்ரயேலின் தூயவருமான ஆண்டவர் கூறுவது இதுவே; நீங்கள் என்னிடம் திரும்பி வந்து அமைதியுற்றால் விடுதலை பெறுவீர்கள்: அமைதியிலும் நம்பிக்கையிலுமே நீங்கள் வலிமை பெறுவீர்கள்; நீங்களோ ஏற்க மறுத்தீர்கள்.
ஏசாயா 30 : 16 (ECTA)
“முடியாது, நாங்கள் குதிரை ஏறி விரைந்தோடத்தான் செய்வோம்” என்கிறீர்கள்; ஆம், தப்பியோடத்தான் போகிறீர்கள்; “விரைந்தோடும் தேரில் ஏறிச்செல்வோம்” என்கிறீர்கள்; ஆம், உங்களைத் துரத்தி வருபவர் விரைந்து வருவார். [* எசா 45: 9 ]
ஏசாயா 30 : 17 (ECTA)
ஒருவன் மிரட்ட, நீங்கள் ஆயிரம் பேர் ஓடுவீர்கள்; ஐவர் அச்சுறுத்த நீங்கள் உயிர் தப்பி ஓடுவீர்கள்; மலை உச்சிக் கொடிமரம் போல், குன்றின்மேல் சின்னம்போல் எஞ்சி நிற்பீர்கள்.
ஏசாயா 30 : 18 (ECTA)
ஆதலால் உங்களுக்குக் கருணை காட்ட ஆண்டவர் காத்திருப்பார்; உங்களுக்கு இரங்குமாறு எழுந்தருள்வார்; ஏனெனில் ஆண்டவர் நீதியின் கடவுள்; அவருக்காகக் காத்திருப்போர் நற்பேறு பெற்றோர்.
ஏசாயா 30 : 19 (ECTA)
ஆண்டவர் தம் மக்களுக்கு வழங்கும் ஆசி சீயோன் வாழ் மக்களே, எருசலேமில் குடியிருப்போரே, நீங்கள் இனி ஒருபோதும் அழமாட்டீர்கள்; அவர் உங்கள்மேல் திண்ணமாய் அருள்கூர்வார். நீங்கள் கூப்பிடும் குரலுக்குச் செவி சாய்த்து உங்களுக்கு மறுமொழி அளிப்பார்.
ஏசாயா 30 : 20 (ECTA)
என் தலைவராகிய உங்கள் போதகர் உங்களுக்கு துன்பமெனும் அப்பத்தையும் ஒடுக்குதலெனும் நீரையும் கொடுத்திருந்தாலும், இனித் தம்மை மறைத்துக்கொள்ள மாட்டார்; உங்கள் போதகரை நீங்கள் கண்ணால் காண்பீர்கள்.
ஏசாயா 30 : 21 (ECTA)
நீங்கள் வலப்புறமோ, இடப்புறமோ எப்பக்கம் சென்றாலும் “இதுதான் வழி, இதில் நடந்து செல்லுங்கள்” என்னும் வார்த்தை பின்னிருந்து உங்கள் செவிகளில் ஒலிக்கும்.
ஏசாயா 30 : 22 (ECTA)
அப்போது வெள்ளி பொதிந்த உங்கள் சிலைகளையும் பொன் வேய்ந்த உங்கள் வார்ப்புப் படிமங்களையும் தீட்டாகக் கருதுவீர்கள்; தீட்டானவையாக அவற்றைக் கருதி வெளியே வீசித் ‘தொலைந்து போ’ என்பீர்கள்.
ஏசாயா 30 : 23 (ECTA)
நீங்கள் நிலத்தில் விதைத்துள்ள விதைமீது ஆண்டவர் மழை பொழிவார்; நிலத்தின் விளைவான உணவு செழுமையாகவும் மிகுதியாகவும் இருக்கும்; அந்நாளில் உன் மந்தை பரந்த மேய்ச்சல் வெளியில் மேயும்.
ஏசாயா 30 : 24 (ECTA)
முறத்தாலும் சுளகாலும் தூற்றப்பட்டுச் சுவையூட்டப்பட்ட தீனியை நிலத்தை உழும் காளைகளும் கழுதைகளும் தின்னும்.
ஏசாயா 30 : 25 (ECTA)
கோட்டைகள் இடிந்து விழுகின்ற மிகப்பெரும் அழிவுநாளில் வானளாவிய மலைகள் அனைத்தின் மேலும் உயர்ந்த குன்றுகள் அனைத்தின் மேலும் கால்வாய்களும் நீரோடைகளும் தோன்றும்.
ஏசாயா 30 : 26 (ECTA)
ஆண்டவர் தம் மக்களின் முறிவுகளைக் கட்டி, தாம் அடித்து ஏற்படுத்திய காயங்களைக் குணமாக்கும் நாளில், நிலவின் ஒளி கதிரவன் ஒளிபோலாகும்; கதிரவன் ஒளி ஏழு பகல்களின் ஒளி ஒன்று திரண்டாற்போல ஏழு மடங்காகும்.
ஏசாயா 30 : 27 (ECTA)
அசீரியாவுக்கு எதிரான தண்டனைத் தீர்ப்பு இதோ, ஆண்டவரின் திருப்பெயர் தொலையிலிருந்து வருகின்றது; அவர் கனல்கக்கும் சினத்தோடும் பொறுக்க ஒண்ணாச் சீற்றத்தோடும் வருகின்றார்; அவர் உதடுகள் கடும் சினத்தால் துடிக்கின்றன; அவர் நாக்கு பொசுக்கும் நெருப்பைப் போன்றது.
ஏசாயா 30 : 28 (ECTA)
அவர் மூச்சு, கழுத்தளவு பாயும் வெள்ளம்போல வருகின்றது; அழிவு என்னும் சல்லடையில் மக்களினங்களைச் சலித்து வழிதவறச் செய்யும் கடிவாளத்தை மக்களின் வாயில் மாட்ட வருகின்றார்.
ஏசாயா 30 : 29 (ECTA)
புனித விழாக் கொண்டாடும் இரவில் பாடுவதுபோல் நீங்கள் மகிழ்ச்சிப் பாடல் பாடுவீர்கள்; இஸ்ரயேலின் பாறையான ஆண்டவர் மலைக்குச் செல்லும்போது குழலிசைத்துச் செல்வோரைப்போல் உங்கள் உள்ளம் அக்களிக்கும்.
ஏசாயா 30 : 30 (ECTA)
ஆண்டவர் தம் மாட்சி மிகு குரலை எங்கும் ஒலிக்கச் செய்வார்; அவர், பொங்கியெழும் சீற்றம் கொண்டு, விழுங்கும் நெருப்பு, பெருமழை, சூறாவளிக்காற்று, கல்மழை இவற்றால் தம் தண்டிக்கும் ஆற்றலை வெளிப்படுத்துவார்.
ஏசாயா 30 : 31 (ECTA)
ஆண்டவரின் குரலொலி கேட்டு அசீரியர் நடுநடுங்குவர்; ஆண்டவர் தம் கோலால் அவர்களை அடிப்பார்.
ஏசாயா 30 : 32 (ECTA)
உங்களின் யாழிசைக்கும், தம்புருவின் ஓசைக்கும் ஏற்ப, ஆண்டவர் தம் கோலால் அடிமேல் அடி அடித்து அவர்களை நொறுக்குவார்; அவர்களோடு கைகளைச் சுழற்றி வன்மையாகப் போரிடுவார்.
ஏசாயா 30 : 33 (ECTA)
ஏனெனில், முன்னரே அவர்களுக்காக நெருப்புக்குழி ஒன்று ஏற்பாடாகியுள்ளது. அது அரசனுக்கென்று தயார் செய்யப்பட்டது. ஆழமும், அகலமுமான நெருப்புக்குழியால் உருவாக்கப்பட்ட அதில் நெருப்பும், விறகுக்கட்டையும் ஏராளமாக நிறைந்துள்ளன. ஆண்டவரின் மூச்சு கந்தக மழைபோல் அவற்றின் மேல் நெருப்பு மூட்டும்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33