ஏசாயா 3 : 1 (ECTA)
எருசலேமில் குழப்பம் படைகளின் ஆண்டவரான நம் தலைவர், எருசலேமின் ஊன்றுகோலை ஒடித்து விடுவார்; யூதாவின் நலத்தை நலியச் செய்வார்; ஊன்றுகோலாகிய உணவையும் நலமாகிய நீரையும் அகற்றிவிடுவார்.
ஏசாயா 3 : 2 (ECTA)
வலிமைமிகு வீரன், போர்க்களம் செல்லும் போர்வீரன், தீர்ப்பு வழங்கும் நீதிபதி, இறைவாக்கு உரைக்கும் இறைவாக்கினன், குறி சொல்லும் நிமித்திகன், அறிவு முதிர்ந்த முதியோன் இவர்கள் அனைவரையும் அழித்து விடுவார்.
ஏசாயா 3 : 3 (ECTA)
ஐம்பதின்மர் தலைவன், உயர்பதவி வகிக்கும் சான்றோன், அறிவுரை வழங்குபவன், திறன் வாய்ந்த மந்திரவாதி, மாயவித்தை புரிவதில் நிபுணன் ஆகிய அனைவரையும் அகற்றி விடுவார்.
ஏசாயா 3 : 4 (ECTA)
சிறுவர்களை மக்கள் தலைவர்களாய் மாற்றுவார்; பச்சிளங் குழந்தைகள் அவர்கள் மேல் அரசாட்சி செலுத்துவார்கள். [* யோவே 3:10.. ]
ஏசாயா 3 : 5 (ECTA)
மக்கள் ஒருவரை ஒருவர் ஒடுக்குவர்; எல்லோரும் தமக்கு அடுத்திருப்பவரைத் துன்புறுத்துவர்; இளைஞர் முதியோரை அவமதிப்பர்; கீழ்மக்கள் மாண்பு மிக்கவரைப் புறக்கணிப்பர்.
ஏசாயா 3 : 6 (ECTA)
தன் தந்தையின் இல்லத்தில் வாழும் தமையனின் கையைத் தொட்டு ஒருவன், “நீ ஒருவனாவது ஆடை உடுத்தியுள்ளாய்; நீ எங்கள் பெருந்தலைவன் ஆவாயாக; பாழடைந்து கிடக்கும் இந்த நாடு உன் கைக்குள் வருவதாக” என்பான்.
ஏசாயா 3 : 7 (ECTA)
அந்நாளில் அவன், “நான் காயத்திற்குக் கட்டுப்போடுகிறவன் அல்லன்; இல்லத்தில் உடுத்துவதற்கு உடையோ, உண்பதற்கு உணவோ ஒன்றுமில்லை; மக்களின் தலைவனாய் என்னை நீங்கள் ஏற்படுத்தவும் வேண்டாம்” எனச் சொல்லி மறுத்துவிடுவான்.
ஏசாயா 3 : 8 (ECTA)
எருசலேம் நிலைகுலைந்து தடுமாற்றம் அடைந்து விட்டது; யூதா வீழ்ச்சி அடைந்து விட்டது; ஏனெனில், அவர்களுடைய சொல்லும், செயலும் ஆண்டவரின் திருவுளத்திற்கு எதிராய் உள்ளன; மாட்சிமைமிகு அவர்தம் கண்களுக்குச் சினமூட்டின.
ஏசாயா 3 : 9 (ECTA)
அவர்களின் ஓரவஞ்சனை அவர்களுக்கு எதிராய்ச் சான்றுகூறுகின்றது; அவர்கள் தங்கள் பாவத்தை மறைக்காமல் சோதோம் மக்களைப்போல் பறைசாற்றுகிறார்கள். ஐயோ! அவர்கள் உயிருக்குக் கேடு; ஏனெனில், தங்களுக்குத் தாங்களே தீமையை வருவித்துக்கொண்டார்கள்.
ஏசாயா 3 : 10 (ECTA)
ஆனால், மாசற்றோர் நலம் பெறுவர் என நவிலுங்கள்; அவர் தம் நற்செயல்களின் கனியை உண்பது உறுதி.
ஏசாயா 3 : 11 (ECTA)
தீச்செயல் புரிவோர்க்கு ஐயோ கேடு! தீமை அவர்களைச் சூழ்ந்து கொள்ளும்; அவர்களின் கைகள் செய்த தீவினைகள் அனைத்தும் அவர்கள் மேலேயே விழும்.
ஏசாயா 3 : 12 (ECTA)
என் மக்களே, சிறுவர் உங்களை ஒடுக்குகின்றார்கள்; பெண்கள் உங்கள்மேல் ஆட்சி செலுத்துகின்றார்கள்; என் மக்களே, உங்கள் தலைவர்கள் உங்களைத் தவறாக வழி நடத்துகின்றார்கள்; உங்களை ஆள்பவர்கள் நீங்கள் நடக்கவேண்டிய நெறிமுறைகளைக் குழப்புகின்றார்கள்.
ஏசாயா 3 : 13 (ECTA)
ஆண்டவர் வழக்காடுவதற்கு ஆயத்தமாகிறார்; மக்களினங்களுக்குத் தீர்ப்பு வழங்க எழுந்து நிற்கிறார்.
ஏசாயா 3 : 14 (ECTA)
தம் மக்களின் முதியோரையும் தலைவர்களையும் தம் நீதித் தீர்ப்புமுன் நிறுத்துகிறார்; இந்தத் திராட்சைத் தோட்டத்தைத் தின்றழித்தவர்கள் நீங்கள்; எளியவர்களைக் கொள்ளையிட்ட பொருள்கள் உங்கள் இல்லங்களில் நிறைந்துள்ளன;
ஏசாயா 3 : 15 (ECTA)
என் மக்களை நீங்கள் நசுக்குவதன் பொருள் என்ன? எளியோரின் முகத்தை உருக்குலைப்பதன் பொருள் என்ன?” என்கிறார் என் தலைவராகிய படைகளின் ஆண்டவர்.
ஏசாயா 3 : 16 (ECTA)
எருசலேம் பெண்களுக்கு எச்சரிக்கை மேலும் ஆண்டவர் கூறியது இதுவே: “சீயோன் மகளிர் செருக்குக் கொண்டுள்ளார்கள்; தங்கள் கழுத்தை வளைக்காது நிமிர்ந்து நடக்கின்றார்கள்; தம் கண்களால் காந்தக் கணை தொடுக்கின்றார்கள்; தங்கள் கால்களிலுள்ள சிலம்பு ஒலிக்கும்படி ஒய்யார நடை நடந்து உலவித் திரிகிறார்கள்.
ஏசாயா 3 : 17 (ECTA)
ஆதலால், ஆண்டவர் சீயோன் மகளிரின் உச்சந்தலைகளில் புண்ணை வருவிப்பார்; வழுக்கைத் தலையர்களாய் அவர்களை ஆக்குவார்; ஆண்டவர் அவர்களின் மானத்தைக் குலைப்பார்.
ஏசாயா 3 : 18 (ECTA)
அந்நாளில் அவர்களுடைய அணிகலன்களாகிய கால்சிலம்புகள், சுட்டிகள், பிறைவடிவமான அணிகலன்கள்,
ஏசாயா 3 : 19 (ECTA)
ஆரங்கள், கழுத்துப் பொற்சங்கிலிகள், கழுத்துத் துண்டுகள்,
ஏசாயா 3 : 20 (ECTA)
கை வளையல்கள், தலை அணிகலன்கள், கூந்தல் கட்டும் பட்டு நாடாக்கள், அரைக்கச்சைகள், நறு மணச் சிமிழ்கள்,
ஏசாயா 3 : 21 (ECTA)
காதணிகள், மோதிரங்கள், மூக்கணிகள்,
ஏசாயா 3 : 22 (ECTA)
வேலைப்பாடுள்ள அழகிய ஆடைகள், மேலாடைகள், போர்வைகள், கைப்பைகள்,
ஏசாயா 3 : 23 (ECTA)
கண்ணாடிகள், மெல்லிய சட்டைகள், குல்லாக்கள், முக்காடுகள் ஆகியவற்றை ஆண்டவர் களைந்துவிடுவார்.
ஏசாயா 3 : 24 (ECTA)
நறுமணத்திற்குப் பதிலாக அவர்கள்மேல் துர்நாற்றம் வீசும்; கச்சைக்குப் பதிலாகக் கயிற்றைக் கட்டிக்கொள்வார்கள்; வாரிமுடித்த கூந்தலுக்குப் பதிலாக அவர்கள் வழுக்கைத் தலை கொண்டிருப்பார்கள்; ஆடம்பர உடைகளுக்குப் பதிலாக அவர்கள் சாக்குடை உடுத்துவார்கள். அழகிய உடல்கொண்ட அவர்கள் மானக்கேடு அடைவார்கள்.
ஏசாயா 3 : 25 (ECTA)
உங்கள் ஆண்கள் வாளுக்கு இரையாவார்கள்; வலிமை மிக்க உங்கள் வீரர்கள் போரில் மடிவார்கள்.
ஏசாயா 3 : 26 (ECTA)
சீயோன் வாயில்கள் புலம்பி அழும்; அவள் எல்லாம் இழந்தவளாய்த் தரையில் உட்காருவாள்.
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26