ஏசாயா 29 : 1 (ECTA)
எருசலேமின் நிலைமை தாவீது பாசறை அமைத்த நகராகிய அரியேல்!* அரியேல்! உனக்கு ஐயோ கேடு! ஆண்டிற்குப்பின் ஆண்டு கடந்து வரட்டும்; விழாக்கள் முறைமுறையாய் வந்து போகட்டும். [* “அரியேல்” என்பது எபிரேயத்தில், ‘இறைவனின் பெண் சிங்கம்’ எனவும் ‘இறைவனின் பீடம்’ எனவும் பொருள்படும்.. ]
ஏசாயா 29 : 2 (ECTA)
அரியேலுக்கு நான் இடுக்கண் விளைவிப்பேன்; அங்கு அழுகையும் புலம்பலும் நிறைந்திருக்கும்; அரியேல் போலவே அது எனக்கிருக்கும்.
ஏசாயா 29 : 3 (ECTA)
உன்னைச் சுற்றிலும் பாசறை அமைப்பேன்; உன்னைப் போர்க் கோபுரங்களால் சூழ்ந்து வளைப்பேன்; உனக்கெதிராய் முற்றுகைத் தளங்களை எழுப்புவேன்.
ஏசாயா 29 : 4 (ECTA)
தாழ்த்தப்பட்ட நீ தரையிலிருந்து பேசுவாய்; நலிந்த உன் குரல் புழுதியிலிருந்து எழும்பும்; உன் குரல், இறந்தவன் ஆவியின் ஒலிபோல, மண்ணிலிருந்து வெளிவரும்;, உன் பேச்சு புழுதிக்குள்ளிலிருந்து முணுமுணுக்கும்.
ஏசாயா 29 : 5 (ECTA)
உன் பகைவனின் திரள் நுண்ணிய தூசிபோல் இருக்கும்; கொடியவர் கூட்டம் “பறக்கும் பதர் போலிருக்கும்; இவை திடீரென்று ஒரு நொடியில் நிகழும்.
ஏசாயா 29 : 6 (ECTA)
இடிமுழக்கம், நில நடுக்கம், பேரிரைச்சல், சூறாவளி, புயல்காற்று விழுங்கும் நெருப்புப் பிழம்பு ஆகியவற்றால் படைகளின் ஆண்டவர் உன்னைத் தண்டிப்பார்.
ஏசாயா 29 : 7 (ECTA)
அரியேலுக்கு எதிராகப் போர்தொடுக்கும் திரளான வேற்றினத்தார் அனைவரும் அதற்கும் அதன் அரணுக்கும் எதிராகப் போரிட்டு அதைத் துன்புறுத்திய அனைவரும் கனவு போலும், கனவில் காணும் காட்சிபோலும் மறைவர்.
ஏசாயா 29 : 8 (ECTA)
பசியாய் இருப்பவர் உண்பதாய்க் கனவு கண்டு விழித்தெழுந்து வெறும் வயிற்றினராய் வாடுவது போலும், தாகமாய் இருப்பவர் நீர் அருந்துவதாய்க் கனாக்கண்டு விழித்தெழுந்து தீராத்தாகத்தால் தவிப்பது போலும், சீயோன் மலைமேல் போர் தொடுக்கும் திரளான வேற்றினத்தார் அனைவரும் ஆவர்.
ஏசாயா 29 : 9 (ECTA)
எச்சரிக்கைகள் புறக்கணிக்கப்படல் திகிலடையுங்கள்; திகைத்து நில்லுங்கள்; குருடரைப்போல் இருங்கள்; பார்வையற்றவராகுங்கள். ஆனால் திராட்சை இரசத்தால் அல்ல; தடுமாறுங்கள்; ஆனால் மதுவால் அல்ல.
ஏசாயா 29 : 10 (ECTA)
ஏனெனில் ஆழ்ந்த தூக்கம் தரும் ஆவியை ஆண்டவர் உங்கள் மீது அனுப்பியுள்ளார்; இறைவாக்கினராகிய உங்கள் கண்களை மூடியுள்ளார்; திருக்காட்சியாளராகிய உங்கள் பார்வையை மறைத்துள்ளார். [* உரோ 11: 8 ]
ஏசாயா 29 : 11 (ECTA)
ஆதலால் ஒவ்வொரு காட்சியும் உங்களுக்கு மூடி முத்திரையிடப்பட்ட ஏட்டுச்சுருளின் வார்த்தைகள் போலாகும். எழுத்தறிந்த ஒருவரிடம் “இதைப்படியும்” என்றால், அவர்“என்னால் இயலாது; இது மூடி முத்திரையிடப்பட்டுள்ளதே” என்பார்.
ஏசாயா 29 : 12 (ECTA)
எழுத்தறியா ஒருவரிடம் ஏட்டுச் சுருளைக் கொடுத்து “இதைப் படியும்” என்றால் அவர் “எனக்குப் படிக்கத்தெரியாதே” என்பார்.
ஏசாயா 29 : 13 (ECTA)
என் தலைவர் கூறுவது இதுவே: வாய்ச் சொல்லால் இம்மக்கள் என்னை அணுகுகின்றனர்; உதட்டினால் என்னைப் போற்றுகின்றனர்; அவர்கள் உள்ளமோ என்னை விட்டுத் தொலையில் இருக்கிறது; அவர்களது இறையச்சம் மனனம் செய்த வெறும் மனித கட்டளையைச் சார்ந்ததே! [* மத் 15:8-9; மாற் 7:6- 7 ]
ஏசாயா 29 : 14 (ECTA)
ஆதலால், இதோ நான் இந்த மக்களுக்காக மீண்டும் வியத்தகு செயல் புரிவேன். அது விந்தைக்கு மேல் விந்தையாக இருக்கும். அவர்களுடைய ஞானிகளின் ஞானம் அழிந்துபோம்; அவர்களுடைய அறிஞர்களின் அறிவு மறைந்துபோம். [* 1 கொரி 1: 19 ]
ஏசாயா 29 : 15 (ECTA)
வருங்கால நம்பிக்கை ஆண்டவரிடமிருந்து தங்கள் திட்டங்களை மனத்தின் ஆழங்களில் மறைத்துக்கொண்டு, தங்கள் செயல்களை இருளில் செய்து, “நம்மை எவர் காணப்போகின்றார்? நம்மை எவர் அறியப் போகின்றார்?” எனச் சொல்வோருக்கு ஐயோ கேடு!
ஏசாயா 29 : 16 (ECTA)
நீங்கள் செய்யும் முறைகேடுதான் என்ன? குயவனுக்குக் களிமண் ஈடாகுமோ? கைவேலை தன் கைவினைஞனை நோக்கி “நீர் என்னை உருவாக்கவில்லை” என்று கூறலாமோ? வனையப்பட்டது தன்னை வனைந்தவனை நோக்கி “உமக்கு அறிவில்லை” என்று சொல்லலாமோ? [* எசா 45: 9 ]
ஏசாயா 29 : 17 (ECTA)
இன்னும் சிறிது காலத்தில் லெபனோன் வளம்மிகு தோட்டமாக மாறுமன்றோ? வளம் மிகு நிலம் காடாக ஆகிவிடுமன்றோ?
ஏசாயா 29 : 18 (ECTA)
அந்நாளில் காது கேளாதோர் ஏட்டுச் சுருளின் வார்த்தைகளைக் கேட்பர்; பார்வையற்றோரின் கண்கள் காரிருளிலிருந்தும் மையிருளிலிருந்தும் விடுதலையாகிப் பார்வை பெறும்.
ஏசாயா 29 : 19 (ECTA)
ஒடுக்கப்பட்டோர் மீண்டும் ஆண்டவரில் மகிழ்ச்சி பெறுவர்; மானிடரில் வறியவர் இஸ்ரயேலின் தூயவரில் அகமகிழ்வர்.
ஏசாயா 29 : 20 (ECTA)
கொடியோர் இல்லாதொழிவர்; இகழ்வோர் இல்லாமற் போவர்; தீமையில் நாட்டம் கொள்வோர் அழிந்து போவர்.
ஏசாயா 29 : 21 (ECTA)
அவர்கள் ஒருவர்மேல் பொய்க் குற்றம் சாட்டி, நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்குவோரை இடறச் செய்கின்றனர்; பொய் புனைந்து நேர்மையாளரின் வழக்கைப் புரட்டுகின்றனர்.
ஏசாயா 29 : 22 (ECTA)
ஆதலால் ஆபிராகாமை மீட்ட ஆண்டவர் யாக்கோபு வீட்டாரைப் பற்றிக் கூறுவது: இனி யாக்கோபு மானக்கேடு அடைவதில்லை; அவன் முகம் இனி வெளிறிப் போவதுமில்லை.
ஏசாயா 29 : 23 (ECTA)
அவன் பிள்ளைகள் என் பெயரைத் தூயதெனப் போற்றுவர்; நான் செய்யவிருக்கும் என் கைவேலைப்பாடுகளைக் காணும்போது யாக்கோபின் தூயவரைத் தூயவராகப் போற்றுவர்; இஸ்ரயேலின் கடவுள்முன் அஞ்சி நிற்பர்.
ஏசாயா 29 : 24 (ECTA)
தவறிழைக்கும் சிந்தை கொண்டோர் உணர்வடைவர்; முறுமுறுப்போர் அறிவுரையை ஏற்றுக் கொள்வர்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24