ஏசாயா 22 : 1 (ECTA)
எருசலேம் எச்சரிக்கப்படல் காட்சிப் பள்ளத்தாக்கைக் குறித்த திருவாக்கு: வீட்டுக்கூரைகளின் மேல் நீங்கள் அனைவரும் ஏறியிருக்கிறீர்களே, உங்களுக்கு நிகழ்ந்தது என்ன?
ஏசாயா 22 : 2 (ECTA)
ஆரவாரம் நிறைந்த நகரமே; அக்களித்து அமர்க்களப்படும் பட்டணமே! உங்களிடையே கொலை செய்யப்பட்டோர் வாளால் வெட்டி வீழ்த்தப்படவில்லை, போர்க்களத்திலும் செத்து மடியவில்லை.
ஏசாயா 22 : 3 (ECTA)
உங்கள் தலைவர்கள் அனைவரும் ஒருங்கே ஓட்டமெடுத்தார்கள்; அம்பு எய்யாமலே அவர்கள் பிடிபட்டார்கள்; உன்னிடத்தில் இருந்தவர் யாவரும் வெகு தொலைவிற்குத் தப்பியோடியும் கண்டுபிடிக்கப்பட்டு ஒருசேரக் கைதானார்கள்.
ஏசாயா 22 : 4 (ECTA)
ஆதலால் நான் “என்னை உற்று நோக்காதீர்கள், நான் மனம் கசந்து கதறியழ விடுங்கள்; என் மக்களாகிய மகளின் அழிவைக்குறித்து என்னை தேற்ற முயலாதீர்கள்” என்றேன்.
ஏசாயா 22 : 5 (ECTA)
ஏனெனில் அமளியும் திகிலும் நிறைந்த நாள் அது; மக்கள் மிதிபடும் நேரம் அது. என் தலைவராகிய படைகளின் ஆண்டவரது நாள் அது. காட்சிப் பள்ளத்தாக்கில் இது நிகழ்கிறது; மதிற் சுவர்கள் தகர்க்கப்படுகின்றன; மலையை நோக்கி அபயக்குரல் எழுகிறது.
ஏசாயா 22 : 6 (ECTA)
ஏலாம் நாட்டினர் அம்பறாத் தூணியை எடுத்துச் சென்றனர், தேர்ப்படையோடும் குதிரை வீரரோடும் புறப்பட்டனர்; கீரைச் சார்ந்தோர் கேடயத்தின் உறையை அகற்றினர்.
ஏசாயா 22 : 7 (ECTA)
மிகச்சிறந்த உன் பள்ளத்தாக்குகள் தேர்ப்படைகளால் நிறைந்தன, குதிரைவீரர்கள் உன் வாயில்களில் அணிவகுத்து நின்றனர்.
ஏசாயா 22 : 8 (ECTA)
யூதாவின் அரண் தகர்க்கப்பட்டது; அந்நாளில் போர்க்கருவிகள் இருந்த ‘வன மாளிகை’யை நாடினீர்கள்.
ஏசாயா 22 : 9 (ECTA)
தாவீது நகரின் அரணில் பிளவுகள் பல இருப்பதை நீங்கள் கண்டீர்கள்; கீழ்க்குளத்துத் தண்ணீரைச் சேர்த்து வைத்தீர்கள்;
ஏசாயா 22 : 10 (ECTA)
எருசலேமின் வீடுகளை எண்ணி முடித்தீர்கள்; அரணுக்கு வலுவூட்ட வீடுகளை இடித்தீர்கள்.
ஏசாயா 22 : 11 (ECTA)
இரு மதில்களுக்கும் இடையே பழைய குளத்துத் தண்ணீருக்கென்று ஒரு நீர்த்தேக்கத்தை அமைத்தீர்கள். ஆனால் அதை உருவாக்கியவரை நீங்கள் நாடவில்லை; தொலையிலிருந்து அதை ஏற்படுத்தியவரை நீங்கள் கண்ணோக்கவுமில்லை.
ஏசாயா 22 : 12 (ECTA)
அந்நாளில் புலம்பவும், ஓலமிட்டுக் கதறி அழவும் தலையை மொட்டை அடித்துக்கொள்ளவும் சாக்கு உடை உடுத்தவும் படைகளின் ஆண்டவரான எம் தலைவர் ஆணையிட்டார்.
ஏசாயா 22 : 13 (ECTA)
நீங்களோ, மகிழ்ந்து களிப்படைகின்றீர்கள்; எருதுகளை அடித்து, ஆடுகளை வெட்டி, இறைச்சியை உண்டு, திராட்சை இரசத்தைக் குடிக்கின்றீர்கள். ‘உண்போம், குடிப்போம், நாளைக்குச் சாவோம்’ என்கின்றீர்கள். [* 1 கொரி 15: 32 ]
ஏசாயா 22 : 14 (ECTA)
படைகளின் ஆண்டவர் நான் என் காதால் கேட்குமாறு வெளிப்படுத்தியது: “நீங்கள் சாகும்வரை இத் தீச்செயலின் கறை கழுவப்படவேமாட்டாது,” என்கிறார் என் தலைவராகிய படைகளின் ஆண்டவர்.
ஏசாயா 22 : 15 (ECTA)
செபுனாவுக்கு வந்த கண்டனம் என் தலைவராகிய படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: அரண்மனைப் பொறுப்பாளனும் அதிகாரியுமாகிய செபுனாவிடம் சென்று நீ சொல்லவேண்டியது:
ஏசாயா 22 : 16 (ECTA)
‘நீ உனக்கென்று ஒரு கல்லறையை வெட்டியிருக்கிறாய்; உயர்ந்த இடத்தில் அக்கல்லறையை இருக்குமாறு அமைத்திருக்கிறாய்; பாறையில் உனக்கொரு தங்குமிடத்தைக் குடைந்துள்ளாயே? இங்கே உனக்கு யார் இருக்கிறார்கள்? இங்கே உனக்கு என்ன வேலை?
ஏசாயா 22 : 17 (ECTA)
ஓ மனிதா, ஆண்டவர் உன்னைத் தள்ளி விட்டுத் தூக்கி எறிவார்; உன்னைக் கெட்டியாய் மடக்கிப் பிடித்து,
ஏசாயா 22 : 18 (ECTA)
சுற்றிச் சுற்றி உன்னைச் சுழற்றி, பரந்து விரிந்த நாட்டிலே பந்தாடுவார். அங்கே நீ செத்துமடிவாய். உன் தலைவனின் குடும்பத்திற்கு இழுக்கானவனே, உன் மேன்மைமிகு தேர்ப் படைக்கும் அதே நிலைதான்.
ஏசாயா 22 : 19 (ECTA)
உன்னை உன் பதவியிலிருந்து இறக்கிவிடுவேன்; உன் நிலையிலிருந்து கவிழ்த்து விடுவேன்.
ஏசாயா 22 : 20 (ECTA)
அந்நாளில் இல்க்கியாவின் மகனும் என் ஊழியனுமாகிய எலியாக்கிமை நான் அழைத்து,
ஏசாயா 22 : 21 (ECTA)
உன் அங்கியை அவனுக்கு உடுத்தி, உன் கச்சையை அவன் இடுப்பில் கட்டி, உன் அதிகாரத்தை அவன் கையில் ஒப்படைப்பேன். எருசலேமில் குடியிருப்போருக்கும் யூதா குடும்பத்தாருக்கும் அவன் தந்தையாவான்.
ஏசாயா 22 : 22 (ECTA)
அந்நாளில் தாவீது குடும்பத்தாரின் திறவுகோலை அவன் தோளின் மேல் வைப்பேன். அவன் திறப்பான்; எவனும் பூட்டமாட்டான். அவன் பூட்டுவான்; எவனும் திறக்கமாட்டான். * திவெ 3:7..
ஏசாயா 22 : 23 (ECTA)
உறுதியான இடத்தில் அவனை முளைபோல அடித்து வைப்பேன்; அவன் தன் தந்தையின் குடும்பத்தாருக்கு மேன்மையுள்ள அரியணையாக இருப்பான்;
ஏசாயா 22 : 24 (ECTA)
ஆனால், அவன் தந்தை குடும்பத்தினராகிய பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் சிறு கலயங்கள், கிண்ணங்கள் முதல், கலயங்கள், குடங்கள் வரையுள்ள அனைத்துக் கலங்களைப் போல் அவன்மேல் சுமையாக மாட்டித் தொங்கினர்.
ஏசாயா 22 : 25 (ECTA)
படைகளின் ஆண்டவர் உரைத்தது: அந்நாளில் உறுதியான இடத்தில் அடிக்கப்பட்ட முளை பெயர்ந்து முறிந்து கீழே விழும். அதில் தொங்கிய சுமையும் வீழ்ந்து அழியும், என்கிறார் ஆண்டவர்.
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25