ஏசாயா 17 : 1 (ECTA)
சிரியா, இஸ்ரயேலுக்கு எதிரான தண்டனைத் தீர்ப்பு தமஸ்கு நகரைப் பற்றிய திருவாக்கு: “நகர் என்ற பெயரை தமஸ்கு இழந்துவிடும்; அது பாழடைந்த மண்மேடாக மாறிவிடும். [* எரே 49:23-27; ஆமோ 1:3-5; செக் 9:1.. ]
ஏசாயா 17 : 2 (ECTA)
அதன் அருகிலுள்ள நகரங்கள் பாழடைந்து ஆடுமாடுகள் திரியும் இடமாகும்; அவை அங்கே படுத்துக் கிடக்கும்; அவற்றை அச்சுறுத்த எவருமே இரார். [* எரே 49:23-27; ஆமோ 1:3-5; செக் 9:1.. ]
ஏசாயா 17 : 3 (ECTA)
எப்ராயிம் நாட்டின் அரண் தரைமட்டமாகும்; தமஸ்கின் அரசு இல்லாதொழியும்; இஸ்ரயேல் மக்களின் மேன்மைக்கு நேர்ந்தது சிரியாவில் எஞ்சியிருப்போரின் நிலைமையாகும், என்கிறார் படைகளின் ஆண்டவர். [* எரே 49:23-27; ஆமோ 1:3-5; செக் 9:1.. ]
ஏசாயா 17 : 4 (ECTA)
அந்நாளில், யாக்கோபின் மேன்மை தாழ்வடையும்; அவனது கொழுத்த உடல் மெலிந்து போகும்.
ஏசாயா 17 : 5 (ECTA)
அறுவடைசெய்வோன் நிமிர்ந்து நிற்கும் கதிர்களைச் சேர்த்த பின்னும் அவனது கை அவற்றை அறுவடை செய்தபின்னும் சிந்திய கதிர்களைப் பொறுக்கி எடுக்கும் பொழுதும் இரபாயிம் பள்ளத்தாக்கு இருப்பது போல யாக்கோபின் நிலைமை இருக்கும்.
ஏசாயா 17 : 6 (ECTA)
ஒலிவ மரத்தை உலுக்கும்போது அதன் உச்சிக்கிளை நுனியில் இரண்டு மூன்று காய்களும், பழமிருக்கும் கிளைகளில் நாலைந்து பழங்களும் விடப்பட்டிருப்பதுபோல், அவர்களிடையேயும் பின்னால் பறிக்கப்படுவதற்கெனச் சிலர் விடப்பட்டிருப்பர்,” என்கிறார் இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர்.
ஏசாயா 17 : 7 (ECTA)
அன்றுதான், மனிதர் தம்மைப் படைத்தவரை நோக்குவர்; இஸ்ரயேலின் தூயவரைக்காண அவர்கள் கண்கள் விழையும்;
ஏசாயா 17 : 8 (ECTA)
தங்கள் கைவேலைப்பாடுகளான பலிபீடங்களை ஏறெடுத்தும் பார்க்கமாட்டார்கள்; தாங்கள் கைப்படச்செய்த அசேராக் கம்பங்களையும் மரச் சிலைகளையும் நோக்கமாட்டார்கள்.
ஏசாயா 17 : 9 (ECTA)
இவ்வியர், எமோரியர் என்பவர்களின் நகரங்கள் இஸ்ரயேல் மக்கள் வந்தபோது பாழடைந்ததுபோல, அந்நாளில் உன் வலிமைமிகு நகர்களும் கைவிடப்பட்டுப் பாழ்வெளி ஆகி விடும்.
ஏசாயா 17 : 10 (ECTA)
இஸ்ரயேலே, உனக்கு விடுதலை அளித்த கடவுளை நீ மறந்துவிட்டாய்; உன் அடைக்கலமான கற்பாறையை நீ நினைவு கூரவில்லை; ஆதலால், கண்ணுக்கினிய நாற்றுகளை நீ நட்டுவைத்தாலும், வேற்றுத் தெய்வத்திற்கு இளம் கன்றுகளை நாட்டினாலும்,
ஏசாயா 17 : 11 (ECTA)
நீ அவற்றை நட்ட நாளிலேயே பெரிதாக வளரச் செய்தாலும், விதைத்த காலையிலேயே மலரச் செய்தாலும், துயரத்தின் நாளில் தீராத வேதனையும் நோயுமே உன் விளைச்சலாய் இருக்கும்.
ஏசாயா 17 : 12 (ECTA)
பகைவர் தோல்வியுறல் ஐயோ! மக்களினங்கள் பலவற்றின் ஆரவாரம் கேட்கிறது; கடல் கொந்தளிப்பதுபோல் அவர்கள் கொந்தளிக்கிறார்கள்; இதோ, மக்கள் கூட்டத்தின் கர்ச்சனைக்குரல் கேட்கிறது; வெள்ளப்பெருக்கின் இரைச்சலைப் போல் அவர்கள் முழங்குகிறார்கள்.
ஏசாயா 17 : 13 (ECTA)
பெருவெள்ளம்போல் மக்கள் கூட்டத்தினர் கர்ச்சிக்கிறார்கள்; அவர்களை ஆண்டவர் அதட்டுவார்; அவர்களும் வெகுதொலைவிற்கு ஓடிப் போவார்கள்; மலைகளில் காற்றின் முன் அகப்பட்ட பதர் போன்றும், புயல்காற்று முன் சிக்குண்ட புழுதி போன்றும் துரத்தப்படுவார்கள்.
ஏசாயா 17 : 14 (ECTA)
மாலைவேளையில், இதோ! எங்கும் திகில்; விடிவதற்குள் அவர்கள் இல்லாதொழிவார்கள்; இதுவன்றோ நம்மைக் கொள்ளையடிப்பவர்கள் பங்கு! இதுவன்றோ நம்மைச் சூறையாடுவோரின் நிலைமை.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14