ஏசாயா 1 : 1 (ECTA)
உசியா, யோத்தாம், ஆகாசு, எசேக்கியா என்போர் யூதா நாட்டின் அரசர்களாய் இருந்த காலத்தில் யூதா, எருசலேம் என்பவற்றைக் குறித்து ஆமோட்சின் மகன் எசாயா கண்ட காட்சி: [* 2 அர 15:1-7; 15:32-16:20; 18:1-20:21; 2 குறி 26:1-32: 33 ]
ஏசாயா 1 : 2 (ECTA)
கடவுள் தம் மக்களைக் கண்டித்தல் விண்வெளியே கேள்; மண்ணுலகே செவிகொடு: ஆண்டவர் திருவாய் மலர்ந்தருளுகின்றார்; பிள்ளைகளைப் பேணி வளர்த்தேன்; அவர்களோ எனக்கெதிராகக் கிளர்ந்தெழுந்தார்கள்.
ஏசாயா 1 : 3 (ECTA)
காளை தன் உடைமையாளனை அறிந்து கொள்கின்றது; கழுதை தன் தலைவன் தனக்குத் தீனி போடும் இடத்தைத் தெரிந்து கொள்கின்றது; ஆனால் இஸ்ரயேலோ என்னை அறிந்து கொள்ளவில்லை; என் மக்களோ என்னைப் புரிந்து கொள்ளவில்லை.
ஏசாயா 1 : 4 (ECTA)
ஐயோ, பாவம் நிறைந்த மக்களினம் இது; அநீதி செய்வோரின் கூட்டம் இது; தீச்செயல் புரிவோரின் வழிமரபு இது; கேடுகெட்ட மக்கள் இவர்கள்; ஆண்டவரைப் புறக்கணித்து விட்டார்கள்; இஸ்ரயேலின் தூயவரை அவமதித்துவிட்டார்கள்; அவருக்கு அன்னியராய் ஆகிவிட்டார்கள்.
ஏசாயா 1 : 5 (ECTA)
நீங்கள் ஏன் தொடர்ந்து வன்முறையில் ஈடுபடுகிறீர்கள்? என் கையால் பட்ட அடி போதாதா? உங்கள் தலையெல்லாம் வடுக்கள்; இதயமெல்லாம் தளர்ச்சி.
ஏசாயா 1 : 6 (ECTA)
உள்ளங்கால் முதல் உச்சந்தலை வரை உங்கள் உடலில் நலமே இல்லை; ஆனால் காயங்கள், கன்றிப்போன வடுக்கள், சீழ்வடியும் புண்களே நிறைந்துள்ளன; அங்கே சீழ் பிதுக்கப்படவில்லை, கட்டு போடப்படவில்லை, எண்ணெய் பூசிப் புண் ஆற்றப்படவுமில்லை.
ஏசாயா 1 : 7 (ECTA)
உங்கள் நாடு பாழடைந்து கிடக்கிறது; உங்கள் நகரங்கள் நெருப்புக்கு இரையாயின; வேற்று நாட்டினர் உங்கள் கண்ணெதிரே உங்கள் நாட்டை விழுங்குகிறார்கள்; வேற்று நாட்டினரால் வீழ்த்தப்பட்ட உங்கள் நாடு பாழடைந்து கிடக்கிறது.
ஏசாயா 1 : 8 (ECTA)
மகள் சீயோன் திராட்சைத் தோட்டத்துக் குடில் போன்றும் வெள்ளரித் தோட்டத்துக் குடிசை போன்றும் முற்றுகையிடப்பட்ட நகரம் போன்றும் கைவிடப்பட்டாள்.
ஏசாயா 1 : 9 (ECTA)
படைகளின் ஆண்டவர் நம்மில் சிலரையேனும் எஞ்சியிருக்கச் செய்யாவிடில் சோதோமைப்போல் நாம் ஆகியிருப்போம். கொமோராவுக்கு ஒத்தவர்களாயிருப்போம்.
ஏசாயா 1 : 10 (ECTA)
வெளிவேடக்காரருக்கு எதிராக எருசலேமே, உன்னை ஆளுகிறவர்களும் உன் மக்களும், சோதோம் கொமோராவைப் போன்றவர்களாயிருக்கின்றனர்; நம் ஆண்டவரின் அறிவுரையைக் கேளுங்கள்; அவர்தம் கட்டளைக்குச் செவிசாயுங்கள்.
ஏசாயா 1 : 11 (ECTA)
“எண்ணற்ற உங்கள் பலிகள் எனக்கு எதற்கு?” என்கிறார் ஆண்டவர். ஆட்டுக் கிடாய்களின் எரி பலிகளும், கொழுத்த விலங்குகளின் கொழுப்பும் எனக்குப் போதுமென்றாகிவிட்டன; காளைகள், ஆட்டுக் குட்டிகள், வெள்ளாட்டுக் கிடாய்கள் இவற்றின் இரத்தத்திலும் எனக்கு நாட்டமில்லை. [* ஆமோ 5:21-22.. ]
ஏசாயா 1 : 12 (ECTA)
நீங்கள் என்னை வழிபட என் திருமுன் வரும்போது, இவற்றையெல்லாம் கொண்டு வந்து என் கோவில் முற்றத்தை மிதிக்க வேண்டுமென்று கேட்டது யார்? [* ஆமோ 5:21-22.. ]
ஏசாயா 1 : 13 (ECTA)
இனி, காணிக்கைகளை வீணாகக் கொண்டுவர வேண்டாம்; நீங்கள் காட்டும் தூபம் எனக்கு அருவருப்பையே தருகின்றது; நீங்கள் ஒழுங்கீனமாகக் கொண்டாடும் அமாவாசை, ஓய்வுநாள் வழிபாட்டுக் கூட்டங்களை நான் சகிக்க மாட்டேன். [* ஆமோ 5:21-22.. ]
ஏசாயா 1 : 14 (ECTA)
உங்கள் அமாவாசை, திருவிழாக் கூட்டங்களையும், என் உள்ளம் வெறுக்கின்றது; அவை என் மேல் விழுந்த சுமையாயின; அவற்றைச் சுமந்து சோர்ந்து போனேன். [* ஆமோ 5:21-22.. ]
ஏசாயா 1 : 15 (ECTA)
என்னை நோக்கி உங்கள் கைகளை நீங்கள் உயர்த்தும் போது, பாரா முகத்தினனாய் நான் இருப்பேன்; நீங்கள் தொடர்ந்து மன்றாடினாலும் நான் செவிகொடுப்பதில்லை; உங்கள் கைகளோ இரத்தக் கறையால் நிறைந்திருக்கின்றன.
ஏசாயா 1 : 16 (ECTA)
உங்களைக் கழுவித் தூய்மைப்படுத்துங்கள்; உங்கள் தீச்செயலை என் திருமுன்னிருந்து அகற்றுங்கள்; தீமை செய்தலை விட்டொழியுங்கள்;
ஏசாயா 1 : 17 (ECTA)
நன்மை செய்யக் கற்றுக்கொள்ளுங்கள்; நீதியை நாடித் தேடுங்கள்; ஒடுக்கப்பட்டோருக்கு உதவி செய்யுங்கள்; திக்கற்றோருக்கு நீதி வழங்குங்கள்; கைம் பெண்ணுக்காக வழக்காடுங்கள்.
ஏசாயா 1 : 18 (ECTA)
“வாருங்கள், இப்பொழுது நாம் வழக்காடுவோம்” என்கிறார் ஆண்டவர்; “உங்கள் பாவங்கள் கடுஞ்சிவப்பாய் இருக்கின்றன; எனினும் உறைந்த பனிபோல அவை வெண்மையாகும். இரத்த நிறமாய் அவை சிவந்திருக்கின்றன; எனினும் பஞ்சைப்போல் அவை வெண்மையாகும்.
ஏசாயா 1 : 19 (ECTA)
மனமுவந்து நீங்கள் எனக்கு இணங்கி நடந்தால்; நாட்டின் நற்கனிகளை உண்பீர்கள்.
ஏசாயா 1 : 20 (ECTA)
மாறாக, இணங்க மறுத்து எனக்கெதிராகக் கிளர்ந்தெழுந்தால், திண்ணமாய் வாளுக்கு இரையாவீர்கள்; ஏனெனில் ஆண்டவர்தாமே இதைக் கூறினார்.
ஏசாயா 1 : 21 (ECTA)
அநீதி நிறைந்த எருசலேம் உண்மையாய் இருந்த நகரம், எப்படி விலைமகள் போல் ஆயிற்று! முன்பு அந்நகரில் நேர்மை நிறைந்திருந்தது; நீதி குடி கொண்டிருந்தது; இப்பொழுதோ, கொலைபாதகர் மலிந்துள்ளனர்.
ஏசாயா 1 : 22 (ECTA)
உன் வெள்ளி களிம்பேறிற்று; உன் மதுபானம் நீர்க்கலப்பாயிற்று.
ஏசாயா 1 : 23 (ECTA)
உன் தலைவர்கள் வன்முறையில் ஈடுபடுகின்றனர்; திருடருக்குத் தோழராய் இருக்கின்றனர்; கையூட்டு வாங்குவதற்கு ஒவ்வொருவனும் ஏங்குகின்றான். திக்கற்றோருக்கு அவர்கள் நீதி வழங்குவதில்லை; கைம்பெண்ணின் வழக்குகளைத் தீர்ப்பதில் கவனம் செலுத்துவதில்லை.
ஏசாயா 1 : 24 (ECTA)
ஆதலால், படைகளின் ஆண்டவரும் இஸ்ரயேலின் வல்லவருமாகிய ஆண்டவர் கூறுவது இதுவே: என் எதிரிகளைப் பழிவாங்குவேன்; என் பகைவர்மேலுள்ள சீற்றத்தைத் தீர்த்துக்கொள்வேன்.
ஏசாயா 1 : 25 (ECTA)
உனக்கு நேராக என் கைகளை நீட்டுவேன்; உன்னை நன்றாகப் புடமிட்டு உன் களிம்பை நீக்குவேன்; உன்னிடமுள்ள உலோகக் கலவை அனைத்தையும் நீக்குவேன்.
ஏசாயா 1 : 26 (ECTA)
முன்னாளில் இருந்தது போலவே உன் நீதிபதிகளைத் திருப்பிக் கொணர்வேன்; தொடக்க காலத்தில் இருந்தது போலவே உன் ஆலோசகர்களை மீண்டும் தருவேன்; அப்பொழுது எருசலேம் ‘நீதியின் நகர்’ எனப் பெயர் பெறும்; ‘உண்மையின் உறைவிடம்’ எனவும் அழைக்கப்படும்.
ஏசாயா 1 : 27 (ECTA)
நீதி சீயோனை மீட்கும்; நேர்மை மனமாற்றம் அடைவோரை விடுவிக்கும்.
ஏசாயா 1 : 28 (ECTA)
ஆனால் வன்முறையாளரும் பாவிகளும் ஒருங்கே அழிந்தொழிவர்; ஆண்டவரைப் புறக்கணித்தவர்கள் அனைவரும் இல்லாதொழிவர்;
ஏசாயா 1 : 29 (ECTA)
நீங்கள் நாடி வழிபட்ட தேவதாரு மரங்களை முன்னிட்டு மானக்கேடு அடைவீர்கள்; நீங்கள் தெரிந்து கொண்ட சோலைகளை முன்னிட்டு நாணுவீர்கள்;
ஏசாயா 1 : 30 (ECTA)
ஏனெனில் நீங்கள் இலையுதிர்ந்த தேவதாரு மரத்தைப்போல் ஆவீர்கள்; நீரின்றி வாடிப்போகும் சோலையைப் போலவும் இருப்பீர்கள்;
ஏசாயா 1 : 31 (ECTA)
வலிமை மிக்கவன் சணற் கூளம் போலாவான்; அவனுடைய கைவேலைப்பாடும் தீப்பொறியாகும்; அவை இரண்டும் ஒருங்கே எரிந்து போகும்; நெருப்புத் தணலை அணைப்பார் எவரும் இரார்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31