ஓசியா 9 : 1 (ECTA)
இஸ்ரயேலுக்கு வரும் தண்டனைத் தீர்ப்பு இஸ்ரயேலே! நீ களிப்புறாதே; மற்ற மக்களைப்போல் நீ அக்களிக்காதே. உன் கடவுளைக் கைவிட்டு நீ வேசித் தொழில் புரிந்தாய்; கதிரடிக்கும் களமெல்லாம் நீ விலைமகளின் கூலியை நாடுகின்றாய்.
ஓசியா 9 : 2 (ECTA)
கதிரடிக்கும் களமும், திராட்சைக் கனி பிழியும் ஆலையும் அவர்களுக்கு உணவு அளிக்கமாட்டா; புதிய திராட்சை இரசமும் இல்லாமல் போகும்.
ஓசியா 9 : 3 (ECTA)
ஆண்டவரின் நாட்டில் அவர்கள் குடியிருக்க மாட்டார்கள்; எப்ராயிம் எகிப்துக்குத் திரும்பிப் போவான்; அவர்கள் அசீரியாவில் தீட்டுப்பட்டதை உண்பார்கள்.
ஓசியா 9 : 4 (ECTA)
திராட்சை இரசத்தை ஆண்டவருக்கு நீர்மப் படையலாய் வார்க்க மாட்டார்கள்; அவர்களின் பலிகள் அவருக்கு உகந்தவை ஆகமாட்டா; அவை அவர்களுக்கு இழவு வீட்டு உணவு போலிருக்கும்; அவற்றை உண்பவர் யாவரும் தீட்டுப்படுவர்; ஏனெனில், அவை அவர்களின் பசி தீர்க்கும் உணவே ஆகும். ஆண்டவரின் கோவிலில் அவை படைக்கப்படுவதில்லை.
ஓசியா 9 : 5 (ECTA)
விழா நாள்களில் அவர்கள் என்ன செய்கின்றார்கள்? ஆண்டவரின் திருநாளன்று அவர்கள் செய்வதென்ன?
ஓசியா 9 : 6 (ECTA)
அவர்கள் அழிவுக்குத் தப்பி ஓடுவார்கள்; எகிப்து அவர்களைச் சேர்த்துக் கொள்ளும்; மெம்பிசில் அவர்கள் அடக்கம் செய்யப்படுவார்கள். அவர்கள் விரும்பி வைத்திருந்த வெள்ளியால் செய்த அரிய பொருள்கள் காஞ்சொறிச் செடிகளுக்கு உரிமைச் சொத்தாகும். அவர்களின் கூடாரங்களில் முட்புதர்கள் வளரும்.
ஓசியா 9 : 7 (ECTA)
இஸ்ரயேலரின் பாவமும் அதற்கான தண்டனையும் தண்டனைத் தீர்ப்புப் பெறும் நாள்கள் வந்துவிட்டன; பதிலடி கிடைக்கும் நாள்கள் வந்துவிட்டன; இதை இஸ்ரயேலர் அறிந்துகொள்வர். உன் தீச்செயலின் மிகுதியாலும், பெரும் பகையுணர்ச்சியாலும் ‘இறைவாக்கினன் மூடனாய் இருக்கிறான்; இறை ஆவி பெற்றவன் வெறிக்கொண்டு உளறுகின்றான்,’ என்கின்றாய். [* லூக் 21: 22 ]
ஓசியா 9 : 8 (ECTA)
என் கடவுளின் மக்களாகிய எப்ராயிமுக்கு இறைவாக்கினன் காவலாளியாய் இருக்கின்றான்; ஆயினும் வேடன் ஒருவனின் வலை அவனை எப்பக்கமும் சூழ்ந்துள்ளது; அவனுடைய கடவுளின் கோவிலிலும் பகைமை நிலவுகின்றது.
ஓசியா 9 : 9 (ECTA)
கிபயாவின் நாள்களில் நடந்ததுபோலவே, அவர்கள் கொடுமை செய்வதில் ஆழ்ந்திருக்கின்றார்கள்; அவர்களுடைய தீச்செயலை ஆண்டவர் நினைவில் கொள்வார்; அவர்களுடைய பாவங்களுக்குத் தண்டனை கொடுப்பார். [* நீத 19:1- 30 ]
ஓசியா 9 : 10 (ECTA)
பாலைநிலத்தில் திராட்சைக் குலைகளைக் கண்டது போல் நான் இஸ்ரயேலைக் கண்டுபிடித்தேன். பருவகாலத் தொடக்கத்தின் முதல் அத்திப் பழங்களைப்போல் உங்கள் தந்தையரைக் கண்டு பிடித்தேன். அவர்களோ பாகால் பெயோருக்கு வந்து, மானக்கேடானவற்றுக்குத் தங்களையே நேர்ந்து கொண்டார்கள். [* எண் 25:1-5.. ]
ஓசியா 9 : 11 (ECTA)
எப்ராயிமின், மேன்மை பறவைபோல் பறந்தோடிவிடும்; அவர்களுக்குள் பிறப்போ, கருத்தாங்குவதோ, கருத்தரிப்பதோ எதுவுமே இராது.
ஓசியா 9 : 12 (ECTA)
அவர்கள் பிள்ளைகளைப் பெற்று வளர்த்தாலும், ஒருவனும் எஞ்சியிராமல் அப்பிள்ளைகளை இழக்கச் செய்வேன்; நான் அவர்களைவிட்டு அகன்றுவிட்டால், அவர்களுக்கு ஐயோ கேடு!
ஓசியா 9 : 13 (ECTA)
நான் பார்த்ததற்கிணங்க, எப்ராயிம் தம் மக்களைக் கொள்ளைப் பொருளாய் ஆக்கியிருக்கின்றான்; எப்ராயிம் தம் மக்களையெல்லாம் கொலைக் களத்திற்குக் கூட்டிச் செல்வான்.
ஓசியா 9 : 14 (ECTA)
ஆண்டவரே, அவர்களுக்குக் கொடுத்தருளும், எதைக் கொடுப்பீர்? கருச்சிதைவையும் கருப்பையையும் பால் சுரவா முலைகளையும் கொடுத்தருளும்.
ஓசியா 9 : 15 (ECTA)
கில்காலில் செய்த பாவத்திற்குத் தண்டனை அவர்களின் கொடுஞ்செயல்கள் யாவும் கில்காலில் உருவாயின; அங்கேதான் நான் அவர்களைப்
பகைக்கத் தொடங்கினேன்;
அவர்களுடைய தீச்செயல்களை முன்னிட்டு என் வீட்டினின்றும் நான் அவர்களை விரட்டியடிப்பேன்; இனி அவர்கள்மேல் அன்புகொள்ள மாட்டேன், அவர்களின் தலைவர்கள் அனைவரும் கலகக்காரராய் இருக்கிறார்கள்.
ஓசியா 9 : 16 (ECTA)
எப்ராயிம் மக்கள் வெட்டுண்டு வீழ்ந்தார்கள்; அவர்களுடைய வேர் உலர்ந்து போயிற்று; இனிமேல் அவர்கள் கனி கொடுக்கமாட்டார்கள்; அவர்கள் பிள்ளைகளைப் பெற்றாலும், நான் அவர்களுடைய அன்புக் குழந்தைகளைக் கொன்றுவிடுவேன்.
ஓசியா 9 : 17 (ECTA)
என் கடவுள் அவர்களைத் தள்ளிவிடுவார்; ஏனெனில், அவர்கள் அவருக்குச் செவி கொடுக்கவில்லை; வேற்றினத்தார் நடுவில் அவர்கள் நாடோடிகளாய்த் திரிவார்கள்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17