ஓசியா 7 : 1 (ECTA)
நான் இஸ்ரயேலைக் குணமாக்கும் போது, எப்ராயிமின் தீச்செயல் வெளிப்படும்; சமாரியாவின் பொல்லாப்புகள் புலப்படும்; அவர்கள் வஞ்சகம் செய்கின்றார்கள்; திருடன் உள்ளே நுழைகின்றான்; கொள்ளையர் கூட்டம் வெளியே சூறையாடுகின்றது.
ஓசியா 7 : 2 (ECTA)
அவர்களுடைய தீவினைகளையெல்லாம் நான் நினைவில் வைத்திருக்கின்றேன் என்பதை அவர்கள் நினைத்துப் பார்ப்பதில்லை. இப்பொழுது அவர்கள் செயல்களே அவர்களை வளைத்துக் கொண்டன. அவை என் கண்முன் இருக்கின்றன.
ஓசியா 7 : 3 (ECTA)
இஸ்ரயேல் அரண்மனையில் சதித்திட்டம் தங்கள் தீமையினால் அரசனையும், தங்கள் பொய்களினால் தலைவர்களையும் அவர்கள் மகிழ்விக்கின்றார்கள்.
ஓசியா 7 : 4 (ECTA)
அவர்கள் அனைவரும் விபசாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள்; எரியும் அடுப்புக்கு ஒப்பானவர்கள்; அப்பம் சுடுபவன் மாவைப் பிசைந்தது முதல் புளிப்பேறும்வரையில் கிளறாத நெருப்புக்கு ஒப்பானவர்கள்.
ஓசியா 7 : 5 (ECTA)
“நம் அரசனின் திருநாள்!” என்று சொல்லித் தலைவர்கள் திராட்சை இரசத்தால் போதையேறிக் கிடந்தார்கள்; அரசனும் ஏளனக்காரரோடு கூடிக் குலாவினான்.
ஓசியா 7 : 6 (ECTA)
அவர்களின் இதயம் சதித்திட்டத்தால் அடுப்பைப்போல் எரிகின்றது; அவர்களின் கோபத்தீ இரவெல்லாம் கனன்று கொண்டிருக்கும்; அது காலையில் நெருப்பைப் போலக் கொழுந்துவிட்டு எரியும்.
ஓசியா 7 : 7 (ECTA)
அவர்கள் எல்லாரும் அடுப்பைப்போல் அனலாய் இருக்கின்றார்கள்; தங்களின் ஆட்சியாளர்களை விழுங்குகின்றார்கள்; அவர்களின் அரசர்கள் அனைவரும் வீழ்ச்சியுற்றார்கள்; அவர்களுள் எவனுமே என்னை நோக்கிக் கூப்பிடவில்லை.
ஓசியா 7 : 8 (ECTA)
வேற்றினத்தாரை நம்பியதன் விளைவு எப்ராயிம் வேற்றினத்தாருடன் கலந்து வாழ்கின்றான்; எப்ராயிம் ஒருபுறம் வெந்த அப்பமாயிருக்கின்றான்;
ஓசியா 7 : 9 (ECTA)
அன்னியர் அவன் ஆற்றலை உறிஞ்சிவிட்டனர்; அதை அவன் அறியவில்லை. அவனுக்கு நரைவிழுந்துவிட்டது; அதையும் அவன் அறியவில்லை.
ஓசியா 7 : 10 (ECTA)
இஸ்ரயேலின் இறுமாப்பு அவனுக்கு எதிராகச் சான்று சொல்கின்றது; ஆயினும், அவர்கள் தங்கள் கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பவில்லை; இவை அனைத்திற்குப் பிறகும் அவரைத் தேடவில்லை.
ஓசியா 7 : 11 (ECTA)
எப்ராயிம், அறிவில்லாப் பேதைப் புறாவைப்போல் இருக்கின்றான்; அவர்கள் எகிப்தைத் துணைக்கு அழைக்கின்றார்கள்; அசீரியாவிடம் புகலிடம் தேடுகின்றார்கள்.
ஓசியா 7 : 12 (ECTA)
அவர்கள் போகும்போது, என் வலையை அவர்கள்மேல் விரித்திடுவேன்; வானத்துப் பறவைகளைப்போல அவர்களைக் கீழே விழச் செய்வேன்; அவர்கள் தீச்செயல்களுக்காக* அவர்களைத் தண்டிப்பேன். * ‘சபையில் கேட்டவற்றிற்காக’ எனவும் பொருள்படும்.
ஓசியா 7 : 13 (ECTA)
அவர்களுக்கு ஐயோ கேடு! என்னை விட்டு விலகி, அலைந்து திரிகின்றார்கள்; அவர்களுக்கு அழிவுதான் காத்திருக்கின்றது, அவர்கள் எனக்கு எதிராகக் கலகம் செய்தார்கள்; நான் அவர்களை மீட்டு வந்தேன்; ஆனால் அவர்கள் எனக்கு எதிராகப் பொய் சொல்கின்றார்கள்.
ஓசியா 7 : 14 (ECTA)
தங்கள் உள்ளத்திலிருந்து என்னை நோக்கி அவர்கள் கூக்குரலிடவில்லை, அதற்கு மாறாக, தங்கள் படுக்கைகளில் கிடந்து கதறுகின்றார்கள்; கோதுமைக்காகவும் திராட்சை இரசத்திற்காகவும், தங்களையே பிய்த்துப் பிடுங்கிக் கொள்கின்றார்கள்;
ஓசியா 7 : 15 (ECTA)
நானே அவர்களைப் பயிற்றுவித்து, அவர்கள் புயங்களை வலிமையுறச் செய்திருந்தும் எனக்கு எதிராகத் தீங்கு நினைக்கின்றார்கள்.
ஓசியா 7 : 16 (ECTA)
பாகாலை நோக்கியே* திரும்புகின்றார்கள்; நம்பமுடியாத வில்லுக்கு ஒப்பாய் இருக்கின்றார்கள்; அவர்களுடைய தலைவர்கள் நாவால் பேசிய இறுமாப்பை முன்னிட்டு வாளால் மடிவார்கள்; இதுவே எகிப்தை முன்னிட்டு அவர்களுக்கு ஏற்படும் நிந்தையாகும். [* எபிரேயத்தில் ‘மேல் நோக்கியல்ல’ எனவும் பொருள்படும்.. ]
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16