ஓசியா 5 : 1 (ECTA)
குருக்களுக்கும் அரச குடும்பத்தினருக்கும் எதிரான குற்றச்சாட்டு குருக்களே, இதைக் கேளுங்கள்; இஸ்ரயேல் குடும்பத்தாரே, கவனியுங்கள்; அரசனின் வீட்டாரே, செவி கொடுங்கள்; உங்களுக்கு எதிராகவே தீர்ப்புத் தரப்படுகின்றது; நீங்கள் மிஸ்பாவில் ஒரு கண்ணியாய் இருக்கின்றீர்கள்; தாபோர்மீது விரிக்கப்பட்ட வலையுமாயிருக்கின்றீர்கள்.
ஓசியா 5 : 2 (ECTA)
வஞ்சகர்கள் கொலைத் தொழிலில் ஆழ்ந்துள்ளார்கள்; அவர்கள் அனைவரையும் தண்டிப்பேன்.
ஓசியா 5 : 3 (ECTA)
எப்ராயிமை நான் அறிந்திருக்கிறேன்; இஸ்ரயேல் எனக்கு மறைவானதன்று; எப்ராயிமே! நீ வேசித்தனத்தில் ஈடுபட்டிருக்கின்றாய்; இஸ்ரயேல் தீட்டுப்பட்டிருக்கின்றது;
ஓசியா 5 : 4 (ECTA)
அவர்களுடைய கடவுளிடம் திரும்பிவர அவர்களின் செயல்கள் விடுவதில்லை; ஏனெனில், விபசாரப் புத்தி அவர்களை ஆட்கொண்டுள்ளது; ஆண்டவரைப்பற்றிய அறிவு அவர்களுக்கில்லை. [* "உன் மக்கள் குருவோடு வழக்காடுகிறவர்களைப் போலிருக்கிறார்கள்" என்பது "குருவே, உன்னோடு தான் என் வழக்கு" எனவும் பொருள்படும்.. ]
ஓசியா 5 : 5 (ECTA)
இஸ்ரயேலின் இறுமாப்பு அவனுக்கு எதிராகச் சான்று கூறும்; இஸ்ரயேலும் எப்ராயிமும் தங்கள் தீச்செயலால் இடறிவிழுவார்கள்; யூதாவும் அவர்களோடு இடறிவிழுவான்.
ஓசியா 5 : 6 (ECTA)
தங்கள் ஆடு மாடுகளோடு அவர்கள் ஆண்டவரைத் தேடிப் போவார்கள்; ஆனால் அவரைக் காணமாட்டார்கள்; அவர் அவர்களை விட்டு விலகி விட்டார்.
ஓசியா 5 : 7 (ECTA)
ஆண்டவருக்கு நம்பிக்கைத் துரோகம் செய்தார்கள்; ஏனெனில் அன்னியப் பிள்ளைகளைப் பெற்றார்கள்; இப்பொழுதே அவர்களையும் அவர்கள் நிலங்களையும் அமாவாசை விழுங்கப் போகிறது.
ஓசியா 5 : 8 (ECTA)
கிபயாவில் கொம்பு ஊதுங்கள்; இராமாவில் எக்காளம் முழக்குங்கள்; பெத்தாவேனில் போர்க்குரல் எழுப்புங்கள்; பென்யமின்! உன்னைப் பின் தொடருகின்றார்கள்.
ஓசியா 5 : 9 (ECTA)
தண்டனை வழங்கப்படும் நாளில் எப்ராயிம் பாழாவான்; இஸ்ரயேலின் குலங்களுக்கு உறுதியாய் நேரிடப் போவதையே அறிவிக்கின்றேன்.
ஓசியா 5 : 10 (ECTA)
யூதாவின் தலைவர்கள் எல்லைக்கல்லைத் தள்ளி வைக்கிறவர்களுக்கு ஒப்பாவார்கள்; அவர்கள் மேல் என் கோபத்தை வெள்ளப்பெருக்கைப்போல் கொட்டித் தீர்ப்பேன்.
ஓசியா 5 : 11 (ECTA)
எப்ராயிம் ஒடுக்கப்படுகின்றான்; தண்டனைத் தீர்ப்பால் நொறுக்கப்படுகின்றான்; அவன் வீணான கட்டளைகளைப் பின்பற்றுவதில் கருத்தாய் இருந்தான்.
ஓசியா 5 : 12 (ECTA)
ஆகையால் எப்ராயிமுக்கு நான் விட்டில்போல் இருக்கின்றேன்; யூதாவின் வீட்டாருக்குப் புற்றுநோய்போல் இருக்கின்றேன்.
ஓசியா 5 : 13 (ECTA)
வேற்று நாட்டுடன் செய்த மதியீனமான உடன்படிக்கை எப்ராயிம் தன் பிணியைக் கண்டுகொண்டான்; யூதா தன் காயத்தை உணர்ந்து கொண்டான்; எப்ராயிம் அசீரியாவில் புகலிடம் தேடி, யாரேபு அரசனுக்கு ஆளனுப்பினான். ஆனால், உங்களைக் குணமாக்கவோ, உங்கள் காயங்களை ஆற்றவோ அவனால் இயலாது.
ஓசியா 5 : 14 (ECTA)
ஏனெனில், நான் எப்ராயிமுக்குச் சிங்கத்தைப் போலவும், யூதாவின் வீட்டாருக்குச் சிங்கக்குட்டியைப்போலவும் இருப்பேன்; நான், நானே அவர்களைக் கவ்விப் பிடிப்பேன்; தூக்கிக்கொண்டு போவேன்; விடுவிப்பவன் எவனுமே இரான்.
ஓசியா 5 : 15 (ECTA)
தங்கள் குற்றத்திற்கான பழியை ஏற்று, என்னைத் தேடி வரும்வரை, நான் என் இடத்திற்குத் திரும்பிப் போய்விடுவேன். தங்கள் துன்பத்திலே அவர்கள் என்னைத் தேடுவார்கள்.
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15