ஓசியா 14 : 1 (ECTA)
மனமாற்றத்திற்கு அழைப்பு இஸ்ரயேலே! உன் கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பி வா; நீ உன் தீச்செயலால் வீழ்ச்சியுற்றாய்.
ஓசியா 14 : 2 (ECTA)
இம்மொழிகளை ஏந்தி ஆண்டவரிடம் திரும்பி வந்து இவ்வாறு சொல்லுங்கள்: “தீவினை அனைத்தையும்
அகற்றியருளும், நன்மையானதை ஏற்றுக்கொள்ளும்; நாங்கள் எங்கள் வாய்மொழியாம் கனிகளை உமக்கு அளிப்போம்;
ஓசியா 14 : 3 (ECTA)
அசீரியர் எங்களை விடுவிக்கமாட்டார்கள்; குதிரைமேல் நாங்கள் ஏறமாட்டோம்; எங்கள் கைவினைப்
பொருள்களை நோக்கி, ‘எங்கள் கடவுளே!’ என்று இனிச் சொல்லமாட்டோம்; திக்கற்றவன் உம்மிடத்தில் பரிவைப் பெறுகிறான்”
எனச் சொல்லுங்கள்.
ஓசியா 14 : 4 (ECTA)
அவர்களுடைய
பற்றுறுதியின்மையை நான் குணமாக்குவேன்; அவர்கள்மேல் உளமார அன்பு கூர்வேன். அவர்கள் மேலிருந்த என் சினம் தணிந்துவிட்டது.
ஓசியா 14 : 5 (ECTA)
நான் இஸ்ரயேலுக்குப் பனி போலிருப்பேன்; அவன் லீலிபோல் மலருவான்; லெபனோனின் மரம்போல்
வேரூன்றி நிற்பான்.
ஓசியா 14 : 6 (ECTA)
அவனுடைய கிளைகள் விரிந்து பரவும்; அவன் பொலிவு ஒலிவ மரம் போல் இருக்கும்; லெபனோனைப்போல் அவன் நறுமணம் பரப்புவான்.
ஓசியா 14 : 7 (ECTA)
அவர்கள் திரும்பிவந்து என்* நிழலில் குடியிருப்பார்கள்; கோதுமைபோல் தழைத்தோங்குவார்கள். திராட்சைக் கொடிபோல் செழிப்படைவார்கள். லெபனோனின் திராட்சை இரசம்போல்
அவர்களது புகழ் விளங்கும். [ ‘அவர்’ என்பது எபிரேய பாடம்.. ]
ஓசியா 14 : 8 (ECTA)
இனிமேல் எப்ராயிமுக்குச் சிலைகள் எதற்கு? நானே அவனுக்குச் செவி சாய்த்து, அவன்மேல் அக்கறை கொண்டுள்ளேன்; நான் பசுமையான தேவதாரு மரம் போன்றவன். உன் கனி எல்லாம் என்னிடமிருந்தே வரும்.
ஓசியா 14 : 9 (ECTA)
ஞானம் நிறைந்தவன் எவனோ, அவன் இவற்றை
உணர்ந்து கொள்ளட்டும்; பகுத்தறிவு உள்ளவன் எவனோ, அவன் இவற்றை அறிந்து கொள்ளட்டும்; ஆண்டவரின் நெறிகள் நேர்மையானவை; நேர்மையானவர்கள் அவற்றைப் பின்பற்றி நடக்கிறார்கள்; மீறுகிறவர்கள் அவற்றில் இடறி விழுகின்றார்கள்.
❮
❯
1
2
3
4
5
6
7
8
9