எபிரேயர் 7 : 1 (ECTA)
இந்த மெல்கிசதேக்கு சாலேம் நகரின் அரசர்; உன்னத கடவுளின் குரு. இவர் அரசர்களை முறியடித்துத் திரும்பியபொழுது ஆபிரகாமை எதிர்கொண்டு போய் அவருக்கு ஆசி அளித்தார்.
எபிரேயர் 7 : 2 (ECTA)
ஆபிரகாம் தம்மிடமிருந்த எல்லாவற்றிலிருந்தும் பத்தில் ஒரு பங்கை இவருக்குக் கொடுத்தார். நீதியின் அரசர் என்பது இவர் பெயரின் முதற்பொருள். மேலும், இவர் சாலேமின் அரசர். அமைதியின் அரசர் என்பது இதற்குப் பொருள்.
எபிரேயர் 7 : 3 (ECTA)
இவருக்குத் தந்தை இல்லை, தாய் இல்லை; தலைமுறை வரலாறு இல்லை; இவரது வாழ்நாளுக்குத் தொடக்கமும் இல்லை; முடிவும் இல்லை. இவர் கடவுளின் மகனுக்கு ஒப்பானவர்; குருவாக என்றும் நிலைத்திருப்பவர்.
எபிரேயர் 7 : 4 (ECTA)
நம் குலமுதல்வர் ஆபிரகாமே தாம் போரில் கைப்பற்றிய பொருள்களுள் பத்தில் ஒரு பகுதியை இவருக்கு அளித்தார் என்றால் இவர் எத்துணை பெரியவர் என்பதை எண்ணிப் பாருங்கள்.
எபிரேயர் 7 : 5 (ECTA)
லேவியின் குலத்தவருள் குருத்துவப் பணி ஏற்பவர்கள் மக்களிடமிருந்து திருச்சட்டபடி பத்தில் ஒரு பங்கு பெற வேண்டும் என்ற ஒரு கட்டளை உண்டு. அம்மக்கள் ஆபிரகாமின் மரபில் தோன்றிய தம் சகோதரர் சகோதரிகளாயிருந்தும் அவர்களிடமிருந்தும் இதைப் பெறுகின்றனர்.
எபிரேயர் 7 : 6 (ECTA)
ஆனால், அவர்களுடைய தலைமுறையைச் சாராத மெல்கிசதேக்கு ஆபிரகாமிடமிருந்து பத்தில் ஒரு பங்கைப் பெற்றார். வாக்குறுதிகளைப் பெற்றிருந்த ஆபிரகாமுக்கே அவர் ஆசி அளித்தார்.
எபிரேயர் 7 : 7 (ECTA)
பெரியோர் சிறியோருக்கு ஆசி அளிப்பதே முறை. இதற்கு யாரும் எதிர்ப்புத் தெரிவிக்க முடியாது.
எபிரேயர் 7 : 8 (ECTA)
மேலும் பத்தில் ஒரு பங்கு பெறும் லேவியர்கள் மாண்டுபோகும் மனிதர்கள்; மெல்கிசதேக்கோ, "வாழ்பவர்" எனச் சான்றுபெற்றவர்.
எபிரேயர் 7 : 9 (ECTA)
அன்றியும், பத்தில் ஒரு பங்கு பெறும் லேவியும் கூட, ஆபிரகாமின் வழி, பத்தில் ஒரு பங்கைக் கொடுத்தார் என்று சொல்லலாம்.
எபிரேயர் 7 : 10 (ECTA)
ஏனெனில், மெல்கிசதேக்கு ஆபிரகாமை எதிர்கொண்டபோது, லேவி தம் மூதாதையாகிய ஆபிரகாமுக்குள் இருந்தார் எனலாம்.
எபிரேயர் 7 : 11 (ECTA)
லேவியரின் குருத்துவமுறை வழியே இஸ்ரயேல் மக்கள் சட்டத்தைப் பெற்றவர்கள். அதன் வழியாக அவர்கள் நிறைவு அடையக்கூடுமாயின், ஆரோனின் முறையிலன்றி மெல்கிசதேக்கின் முறையில் வேறொரு குருவை ஏற்படுத்த வேண்டிய தேவை என்ன?
எபிரேயர் 7 : 12 (ECTA)
ஏனெனில் குருத்துவமுறை மாற்றம் அடையும்போது, திருச்சட்டமும் கட்டாயமாக மாற்றப்பட வேண்டும் அல்லவா?
எபிரேயர் 7 : 13 (ECTA)
இவையெல்லாம் யாரைக் குறித்துச் சொல்லப்பட்டனவோ, அவர் வேறொரு குலத்தைச் சேர்ந்தவர். அக்குலத்தைச் சேர்ந்த எவருமே பலிபிடத்தில் பணி செய்யத் தம்மை அர்ப்பணித்தது இல்லை.
எபிரேயர் 7 : 14 (ECTA)
நம் ஆண்டவர் யூதாவின் குலத்தில் தோன்றினார் என்பது தெளிவாகத் தெரிந்தது தானே? குருக்களைப் பற்றிப் பேசியபோது, மோசே அக்குலத்தைக் குறித்து ஒன்றுமே குறிப்பிடவில்லை.
எபிரேயர் 7 : 15 (ECTA)
மெல்கிசதேக்குக்கு ஒப்பான வேறொரு குரு தோன்றியிருப்பதால் நாம் மேற்கூறியது இன்னும் அதிகத் தெளிவாகிறது.
எபிரேயர் 7 : 16 (ECTA)
இவர் திருச்சட்டத்தின் கட்டளைப்படி மனித இயல்புக்கு ஏற்ப அல்ல, அழியாத வாழ்வின் வல்லமையால் குருவாகத் தோன்றினார்.
எபிரேயர் 7 : 17 (ECTA)
இவரைப் பற்றி, "மெல்கிசதேக்கின் முறைப்படி நீர் என்றென்றும் குருவே" என்னும் சான்று உரைக்கப்பட்டுள்ளது.
எபிரேயர் 7 : 18 (ECTA)
இவ்வாறு, முந்திய கட்டளை வலிமையும் பயனும் அற்றுப் போனதால், அது நீக்கப்பட்டு விட்டது.
எபிரேயர் 7 : 19 (ECTA)
ஏனெனில், திருச்சட்டம் எதையும் முழு நிறைவுள்ளதாய் ஆக்கவில்லை. இப்போதோ, அதைவிடச் சிறந்ததொரு எதிர்நோக்கு அளிக்கப்படுகிறது. இந்த எதிர்நோக்கு வழி நாம் கடவுளை அணுகிச் செல்கிறோம்.
எபிரேயர் 7 : 20 (ECTA)
இவரது குருத்துவப் பணியோ ஆணையிட்டு அளிக்கப்பட்ட ஒன்று; லேவியர் குருக்கள் ஆனபோது ஆணை எதுவும் இடப்படவில்லை.
எபிரேயர் 7 : 21 (ECTA)
"நீர் என்றென்றும் குருவே என்று ஆண்டவர் ஆணையிட்டுச் சொன்னார். அவர் தம் மனத்தை மாற்றிக் கொள்ளார்" என்று கடவுள் அவரிடம் ஆணையிட்டுக் கூறினார் அன்றோ!
எபிரேயர் 7 : 22 (ECTA)
இவ்வாறு இயேசு எவ்வளவு சிறந்த உடன்படிக்கைக்குக் காப்புறுதி அளிப்பவராயிருக்கிறார்!
எபிரேயர் 7 : 23 (ECTA)
மேலும், அந்தக் குருக்கள் சாவுக்கு ஆளானவர்களாய் இருந்ததால் தம் பணியில் நிலைத்திருக்க முடியவில்லை. வேறு பலர் தொடர்ந்து குருக்களாயினர்.
எபிரேயர் 7 : 24 (ECTA)
இவரோ, என்றென்றும் நிலைத்திருப்பதால், மாறாத குருத்துவப் பணியைப் பெற்றுள்ளார்.
எபிரேயர் 7 : 25 (ECTA)
ஆதலின், தம் வழியாகக் கடவுளிடம் வருபவரை அவர் முற்றும் மீட்க வல்லவராயிருக்கிறார்; அவர்களுக்காகப் பரிந்து பேசுவதற்கென என்றுமே உயிர் வாழ்கிறார்.
எபிரேயர் 7 : 26 (ECTA)
இத்தகைய தலைமைக் குருவே நமக்கு ஏற்றவராகிறார். இவர் தூயவர், கபடற்றவர், மாசற்றவர், பாவிகளிடமிருந்து பிரித்தெடுக்கப்பட்டு, வானங்களுக்கு மேலாக உயர்த்தப்பட்டவர்.
எபிரேயர் 7 : 27 (ECTA)
ஏனைய தலைமைக் குருக்கள் செய்வது போல, முதலில் தம்முடைய பாவங்களுக்காகவும் பின்னர் மக்களுடைய பாவங்களுக்காகவும் இவர் நாள்தோறும் பலி செலுத்தத் தேவையில்லை. ஏனெனில் தம்மைத் தாமே பலியாகச் செலுத்தி இதை ஒரே ஒருமுறைக்குள் செய்து முடித்தார்.
எபிரேயர் 7 : 28 (ECTA)
திருச்சட்டப்படி வலுவற்ற மனிதர்கள் குருக்களாக ஏற்படுத்தப்படுகிறார்கள். ஆனால் அத்திருச்சட்டத்திற்குப் பின்னர், ஆணையிட்டுக் கூறப்பட்ட வாக்கின் மூலம் என்றென்றும் நிறைவுள்ளவரான மகனே குருவாக ஏற்படுத்தப்படுகிறார்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28

BG:

Opacity:

Color:


Size:


Font: