எபிரேயர் 3 : 1 (ECTA)
3.இயேசு கிறிஸ்து மோசேக்கும் யோசுவாவுக்கும் மேலானவர்இயேசு மோசேயைவிட மேலானவர் எனவே, தூய சகோதர சகோதரிகளே, விண்ணக அழைப்பில் பங்கு கொண்டவர்களே, நாம் அறிக்கையிடும் திருத்தூதரும் தலைமைக் குருவுமான இயேசுவைப்பற்றி எண்ணிப்பாருங்கள்.
எபிரேயர் 3 : 2 (ECTA)
கடவுளின் குடும்பத்தினர் அனைவரிடையேயும் மோசே நம்பிக்கைக்குரியவராய் இருந்தார். அவ்வாறே இவரும் தம்மை நியமித்த கடவுளுக்கு நம்பிக்கைக்குரியவராக இருந்தார். [* எண் 12: 7 ]
எபிரேயர் 3 : 3 (ECTA)
ஒரு வீட்டைக் கட்டி எழுப்புகிறவருக்கு அவ்வீட்டைவிட அதிக மதிப்பு உண்டு. அதுபோல, இயேசுவும் மோசேயைவிட அதிக மேன்மை பெறத் தகுதி உடையவராகிறார்.
எபிரேயர் 3 : 4 (ECTA)
ஏனெனில், ஒவ்வொரு வீட்டையும் கட்டி எழுப்ப ஒருவர் இருப்பது போல, எல்லாவற்றையும் கட்டி எழுப்புகிறவர் ஒருவர் இருக்கிறார்; அவர் கடவுளே.
எபிரேயர் 3 : 5 (ECTA)
ஊழியன் என்னும் முறையில் மோசே கடவுளின் குடும்பத்தார் அனைவரிடையேயும் நம்பிக்கைக்குரியவராய் இருந்தார். கடவுள் பின்னர் அறிவிக்கவிருந்தவற்றுக்குச் சான்று பகர்வதே அவரது ஊழியமாயிருந்தது.
எபிரேயர் 3 : 6 (ECTA)
ஆனால், கிறிஸ்து மகன் என்னும் முறையில் கடவுளின் குடும்பத்தார்மேல் அதிகாரம் பெற்றுள்ளார். துணிவையும் எதிர்நோக்கோடு கூடிய பெருமையையும் நாம் உறுதியாகப் பற்றிக் கொண்டால் கடவுளுடைய குடும்பத்தாராய் இருப்போம்.
எபிரேயர் 3 : 7 (ECTA)
கடவுள் தரும் ஓய்வு எனவே, தூய ஆவியார் கூறுவது:“இன்று நீங்கள் அவரது குரலைக் கேட்பீர்களென்றால், [* திபா 95:7- 11 ]
எபிரேயர் 3 : 8 (ECTA)
பாலை நிலத்தில் சோதனை நாளன்று கிளர்ச்சியின்போது இருந்ததுபோல, உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள். [* திபா 95:7- 11 ]
எபிரேயர் 3 : 9 (ECTA)
அங்கே உங்கள் மூதாதையர் நாற்பது ஆண்டுகள் என் செயல்களைக் கண்டிருந்தும் என்னைச் சோதித்துப் பார்த்தனர். [* திபா 95:7- 11 ]
எபிரேயர் 3 : 10 (ECTA)
எனவே, அத்தலைமுறையினர் மீது வெறுப்புக்கொண்டு, ‘எப்போதும் இவர்களது உள்ளம் தவறுகிறது; என் வழிகளை இவர்கள் அறியாதவர்கள்; எனவே நான் சினமுற்று, [* திபா 95:7- 11 ]
எபிரேயர் 3 : 11 (ECTA)
“நான் அளிக்கும் இளைப்பாற்றியின் நாட்டிற்குள் நுழையவே மாட்டார்கள்” என்று ஆணையிட்டுக் கூறினேன்’ என்றார் கடவுள்.” [* திபா 95:7- 11 ]
எபிரேயர் 3 : 12 (ECTA)
அன்பர்களே, நம்பிக்கை கொள்ளாத தீய உள்ளம், வாழும் கடவுளை விட்டு விலகும். இத்தகைய தீய உள்ளம் உங்களுள் எவருக்கும் இராதபடி பார்த்துக்கொள்ளுங்கள்.
எபிரேயர் 3 : 13 (ECTA)
உங்களுள் எவரும் பாவத்தால் ஏமாற்றப்பட்டு, கடின உள்ளத்தினர் ஆகாதவாறு, ஒவ்வொரு நாளும் “இன்றே” என எண்ணி, நாள்தோறும் ஒருவருக்கொருவர் அறிவுரை கூறுங்கள்.
எபிரேயர் 3 : 14 (ECTA)
தொடக்கத்தில் நாம் கொண்டிருந்த திட நம்பிக்கையை இறுதிவரை உறுதியாகப் பற்றிக் கொண்டிருந்தால் நாமும் கிறிஸ்துவின் பங்காளிகளாவோம்.
எபிரேயர் 3 : 15 (ECTA)
“இன்று நீங்கள் அவரது குரலைக் கேட்பீர்களென்றால், கிளர்ச்சியின்போது இருந்ததுபோல, உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள்.” என்று கூறப்பட்டுள்ளது. [* திபா 95:7, 8 ]
எபிரேயர் 3 : 16 (ECTA)
அவரது குரலைக் கேட்டும் கிளர்ச்சி செய்தவர்கள் யார்? மோசேயின் தலைமையில் எகிப்திலிருந்து வெளியேறினவர்கள் அனைவரும் அல்லவோ? * எண் 14:1-35..
எபிரேயர் 3 : 17 (ECTA)
நாற்பது ஆண்டுகள் கடவுள் சீற்றம் கொண்டது யார்மீது? பாவம் செய்தவர்கள் மீதல்லவோ? அவர்களுடைய பிணங்கள் பாலை நிலத்தில் விழுந்து கிடந்தன அல்லவோ? * எண் 14:1-35..
எபிரேயர் 3 : 18 (ECTA)
“நான் அளிக்கும்
இளைப்பாற்றியின் நாட்டிற்குள்
நுழையவே மாட்டார்கள்” என்று யாரைப்பற்றி ஆணையிட்டுக் கூறினார்? கீழ்ப்படியாதவர்களைப் பற்றியன்றோ? * எண் 14:1-35..
எபிரேயர் 3 : 19 (ECTA)
அவர்கள் நம்பிக்கை கொண்டிராததால்தான் அதை அடைய முடியாமற்போயிற்று என்பது தெரிகிறது.
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19