எபிரேயர் 2 : 1 (ECTA)
ஒப்பற்ற மீட்பு எனவே, நாம் கேட்டறிந்த செய்தியினின்று வழுவிவிடாதிருக்குமாறு, மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
எபிரேயர் 2 : 2 (ECTA)
ஏனெனில், வானதூதர்வழி எடுத்துரைக்கப்பட்ட செய்தி உறுதியாயிருந்தது. அதை மீறிய எவரும், அதற்குக் கீழ்ப்படியாத எவரும் தகுந்த தண்டனை பெற்றனர்.
எபிரேயர் 2 : 3 (ECTA)
அவ்வாறிருக்க, இத்தகைய ஒப்பற்ற மீட்பைப்பற்றி நாம் அக்கறையற்றிருப்போமானால், தண்டனையிலிருந்து எப்படி தப்பமுடியும்? இம்மீட்புச் செய்தியை முதன்முதல் அறிவித்தவர் ஆண்டவரே. இதைக் கேட்டவர்களும் இதனை நமக்கு உறுதிப்படுத்தியுள்ளனர்.
எபிரேயர் 2 : 4 (ECTA)
கடவுளும் அடையாளங்கள், அருஞ்செயல்கள், பல்வேறு வல்ல செயல்கள் மூலமாகவும், தம் திருவுளப்படி தூய ஆவியின் கொடைகளைப் பகிர்ந்தளித்ததன் மூலமாகவும் இதற்குச் சான்று பகர்ந்துள்ளார்.
எபிரேயர் 2 : 5 (ECTA)
கிறிஸ்து நம் மீட்பர் வரவிருக்கும் உலகு பற்றிப் பேசுகிறோம். கடவுள் அதனை வானதூதரின் அதிகாரத்திற்குப் பணியச் செய்யவில்லை.
எபிரேயர் 2 : 6 (ECTA)
இதற்குச் சான்றாக மறைநூலில் ஓரிடத்தில் சொல்லப்பட்டுள்ளது இதுவே:“மனிதரை நீர் நினைவில் கொள்வதற்கு அவர்கள் யார்? மனிதப் பிறவிகளை நீர் ஒரு பொருட்டாக எண்ணுவதற்கு அவர்கள் எம்மாத்திரம்? [* திபா 8:4- 6 ]
எபிரேயர் 2 : 7 (ECTA)
ஆயினும், நீர் அவர்களை வானதூதரை விடச் சற்றே சிறியவர் ஆக்கியுள்ளீர்; மாட்சியையும் மேன்மையையும் அவர்களுக்கு முடியாகச் சூட்டியுள்ளீர். உமது கை படைத்தவற்றுக்கு மேலாக அவர்களை நியமித்தீர். [* திபா 8:4- 6 ]
எபிரேயர் 2 : 8 (ECTA)
எல்லாவற்றையும் அவர்கள் பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தியுள்ளீர்.” அனைத்தையும் மனிதருக்கு அடிபணியச் செய்தார் என்பதால், எதையும் பணியாதிருக்க விட்டுவிடவில்லை எனலாம். எனினும், அனைத்தும் மனிதருக்கு இன்னும் அடிபணியக் காணோம். [* திபா 8:4- 6 ]
எபிரேயர் 2 : 9 (ECTA)
நாம் காண்பதோ சிறிது காலம் வானதூதரைவிடச் சற்றுத் தாழ்ந்தவராக்கப்பட்ட இயேசுவையே. இவர் துன்புற்று இறந்ததால், மாட்சியும் மாண்பும் இவருக்கு முடியாகச் சூட்டப்பட்டதைக் காண்கிறோம். இவ்வாறு கடவுளின் அருளால் அனைவருடைய நலனுக்காகவும் இவர் சாவுக்கு உட்பட வேண்டியிருந்தது.
எபிரேயர் 2 : 10 (ECTA)
கடவுள் எல்லாவற்றையும் தமக்கென்று தாமே உண்டாக்கினார். அவர், மக்கள் பலரை மாட்சியில் பங்குகொள்ள அழைத்துச் செல்ல விரும்பியபோது, அவர்களது மீட்பைத் தொடங்கி வழி நடத்துபவரைத் துன்பங்கள் மூலம் நிறைவுள்ளவராக்கினார். இது ஏற்ற செயலே.
எபிரேயர் 2 : 11 (ECTA)
தூய்மையாக்குகிறவர், தூய்மையாக்கப்படுவோர் அனைவருக்கும் உயிர்முதல் ஒன்றே. இதனால் இயேசு இவர்களைச் சகோதரர் சகோதரிகள் என்று அழைக்க வெட்கப்படவில்லை.
எபிரேயர் 2 : 12 (ECTA)
“உமது பெயரை என் சகோதரர் சகோதரிகளுக்கு அறிவிப்பேன்; சபை நடுவே உம்மைப் புகழ்ந்து பாடுவேன்” என்று கூறியுள்ளார் அன்றோ! [* திபா 22: 22 ]
எபிரேயர் 2 : 13 (ECTA)
மேலும், “நான் அவர்மேல் என் நம்பிக்கையை நிலை நிற்கச் செய்வேன்” என்றும், “இதோ, நானும் கடவுள் எனக்கு அளித்த குழந்தைகளும்” அவ்வாறு செய்வோம் என்றும் அவர் கூறியுள்ளார். * எசா 8:17,18..
எபிரேயர் 2 : 14 (ECTA)
ஊனும் இரத்தமும் கொண்ட அப்பிள்ளைகளைப் போல் அவரும் அதே இயல்பில் பங்கு கொண்டார். இவ்வாறு சாவின்மேல் ஆற்றல் கொண்டிருந்த அலகையைச் சாவின் வழியாகவே அழித்து விட்டார்.
எபிரேயர் 2 : 15 (ECTA)
வாழ்நாள் முழுவதும் சாவுபற்றிய அச்சத்தினால் அடிமைப்பட்டிருந்தவர்களை விடுவித்தார்.
எபிரேயர் 2 : 16 (ECTA)
ஏனெனில், அவர் வானதூதருக்குத் துணை நிற்கவில்லை. மாறாக, ஆபிரகாமின் வழிமரபினருக்கே துணை நின்றார் என்பது கண்கூடு.
எபிரேயர் 2 : 17 (ECTA)
ஆதலின், கடவுள் பணியில் அவர் இரக்கமும், நம்பிக்கையும் உள்ள தலைமைக் குருவாயிருந்து, மக்களுடைய பாவங்களுக்குக் கழுவாயாகுமாறு எல்லாவற்றிலும் தம் சகோதர் சகோதரிகளைப்போல் ஆக வேண்டிதாயிற்று.
எபிரேயர் 2 : 18 (ECTA)
இவ்வாறு தாமே சோதனைக்கு உள்ளாகித் துன்பப்பட்டதனால் சோதிக்கப்படுவோருக்கு உதவி செய்ய அவர்வல்லவர்.
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18