எபிரேயர் 13 : 1 (ECTA)
சகோதர அன்பில் நிலைத்திருங்கள்.
எபிரேயர் 13 : 2 (ECTA)
அன்னியரை வரவேற்று விருந்தோம்ப மறவாதீர்கள். இவ்வாறு விருந்தோம்பியதால் சிலர் தாங்கள் அறியாமலே வான தூதர்களை மகிழ்ச்சிப்படுத்தியதுண்டு.
எபிரேயர் 13 : 3 (ECTA)
சிறைப்பட்டவர்களோடு நீங்களும் சிறைப்பட்டருப்பதாக எண்ணி அவர்களை நினைத்துக்கொள்ளுங்கள். துன்புறக்கூடிய உடல் உங்களுக்கும் உள்ளதால், துன்புறுத்தப்படுபவர்களை மறவாதீர்கள்.
எபிரேயர் 13 : 4 (ECTA)
திருமணத்தை அனைவரும் உயர்வாக மதியுங்கள். மணவறைப் படுக்கை மாசுறாமல் இருக்கட்டும். காமுகரும் விபசாரத்தில் ஈடுபடுவோரும் களவுளின் தீர்ப்புக்கு ஆளாவர்.
எபிரேயர் 13 : 5 (ECTA)
பொருளாசையை விலக்கி வாழுங்கள். உள்ளதே போதும் என்றிருங்கள். ஏனெனில், "நான் ஒருபோதும் உன்னைக் கைவிடமாட்டேன்! உன்னை விட்டு விலகமாட்டேன்" என்று கடவுளே கூறியிருக்கிறார்.
எபிரேயர் 13 : 6 (ECTA)
இதனால், நாம் துணிவோடு, "ஆண்டவரே எனக்குத் துணை, நான் அஞ்சமாட்டேன்; மனிதர் எனக்கு எதிராக என்ன செய்யமுடியும்?" என்று கூறலாம்.
எபிரேயர் 13 : 7 (ECTA)
உங்களுக்குக் கடவுளின் வார்த்தையை எடுத்துச்சொன்ன உங்கள் தலைவர்களை நினைவுகூருங்கள். அவர்களது வாழ்வின் நிறைவை எண்ணிப் பார்த்து, நீங்களும் அவர்களைப்போல நம்பிக்கையுடையவர்களாய் இருங்கள்.
எபிரேயர் 13 : 8 (ECTA)
இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றுமே மாறாதவர்.
எபிரேயர் 13 : 9 (ECTA)
பல்வேறுவகை நூதனமான போதனைகளால் கவரப்படாதீர்கள். உணவு பற்றிய விதிகளைக் கடைப்பிடித்தல் அல்ல, அருளினால் உள்ளத்தை உறுதிப்படுத்தலே சிறந்தது. உணவு விதிகளைக் கடைப்பிடித்தவர்கள் எப்பயனும் அடைந்ததில்லை.
எபிரேயர் 13 : 10 (ECTA)
நமக்கு ஒரு பலிபீடம் உண்டு. அதில் படைக்கப்பட்டவற்றை உண்பதற்குக் கூடாரத்தில் திருப்பணி செய்கிறவர்களுக்கு உரிமையில்லை.
எபிரேயர் 13 : 11 (ECTA)
விலங்குகளின் இரத்தத்தைப் பாவம் போக்குவதற்கென தலைமைக் குரு தூயகத்திற்குள் எடுத்துச் செல்கிறார். ஆனால், அந்த விலங்குகளின் உடல்கள் பாளையத்திற்கு வெளியே சுட்டெரிக்கப்படுகின்றன.
எபிரேயர் 13 : 12 (ECTA)
இதனால்தான், இயேசுவும், தம் சொந்த இரத்தத்தால் மக்களைத் தூயவராக்க நகரவாயிலுக்கு வெளியே துன்புற்றார்.
எபிரேயர் 13 : 13 (ECTA)
ஆகவே, நாமும் அவருக்கு ஏற்பட்ட இகழ்ச்சியில் பங்கு கொண்டு, பாளையத்தை விட்டு வெளியேறி அவரிடம் செல்வோம்.
எபிரேயர் 13 : 14 (ECTA)
ஏனெனில் நிலையான நகர் நமக்கு இங்கே இல்லை; வரப்போகும் நகரையே நாம் நாடிச் செல்கிறோம்.
எபிரேயர் 13 : 15 (ECTA)
ஆகவே, அவர் வழியாக எப்போதும் நாம் கடவுளுக்குப் புகழ்ச்சிப்பலியைச் செலுத்துவோமாக, அவருடைய பெயரை அறிக்கையிடுவதன் வழியாக நம் உதடுகள் செலுத்தும் காணிக்கையே இப்புகழ்ச்சிப் பலியாகும்.
எபிரேயர் 13 : 16 (ECTA)
நன்மை செய்யவும் பகிர்ந்து வாழவும் மறவாதீர்கள். இவ்வகைப் பலிகளே கடவுளுக்கு உகந்தவை.
எபிரேயர் 13 : 17 (ECTA)
உங்கள் தலைவர்களுக்குக் கீழ்ப்படியுங்கள்; அவர்களுக்குப் பணிந்திருங்கள். அவர்கள் உங்களைப்பற்றிக் கணக்கு கொடுக்கவேண்டியிருப்பதால் உங்கள் நலனில் விழிப்பாயிருக்கிறார்கள். இப்பணி அவர்களுக்கு மகிழ்ச்சியுள்ளதாய் இருக்கும்படி நடந்து கொள்ளுங்கள். அவர்களுக்கு மனத்துயர் தராதீர்கள். அவர்களுடைய துயரம் உங்களுக்கு நலம் பயக்காது.
எபிரேயர் 13 : 18 (ECTA)
எங்களுக்காக இறைவனிடம் வேண்டுங்கள். நாங்கள் நல்ல மனச்சான்று கொண்டுள்ளோம் என உறுதியாக நம்புகிறோம். அனைத்திலும் நன்னடத்தை உடையவர்களாய் இருக்கவே விரும்புகிறோம்.
எபிரேயர் 13 : 19 (ECTA)
உங்களிடம் நான் மீண்டும் விரைவில் வந்து சேரும்படி நீங்கள் இறைவனை வேண்ட உங்களை வருந்திக் கேட்டுக்கொள்கிறேன்.
எபிரேயர் 13 : 20 (ECTA)
என்றுமுள்ள உடன்படிக்கையின் இரத்தத்தால், ஆடுகளின் பெரும் ஆயரான நம் ஆண்டவர் இயேசுவை இறந்தோரிடமிருந்து எழுப்பியவர் அமைதியை அருளும் கடவுளே.
எபிரேயர் 13 : 21 (ECTA)
அவர் தம் திருவுளத்தை நீங்கள் நிறைவேற்றும்படி, எல்லா நன்மையும் செய்வதற்கு உங்களை ஆயத்தப்படுத்தி இயேசு கிறிஸ்து வழியாகத் தமக்கு உகந்ததை நம்மில் செய்தருள்வாராக! இயேசு கிறிஸ்துவுக்கே என்றென்றும் மாட்சி உரித்தாகுக! ஆமென்.
எபிரேயர் 13 : 22 (ECTA)
சகோதர சகோதரிகளே, நான் உங்களுக்குக் கூறும் இந்த அறிவுரையைப் பொறுமையோடு ஏற்றுக்கொள்ளும்படி உங்களைக் கேட்டுக் கொள்கிறேன். சுருக்கமாகவே உங்களுக்கு எழுதியுள்ளேன்.
எபிரேயர் 13 : 23 (ECTA)
நம் சகோதரர் திமொத்தேயு விடுதலை பெற்று விட்டார். அவர் விரைவில் வந்து சேர்ந்துவிட்டால் அவரோடு நான் உங்களை வந்து பார்ப்பேன் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
எபிரேயர் 13 : 24 (ECTA)
உங்கள் தலைவர்கள் அனைவருக்கும் இறைமக்கள் யாவருக்கும் வாழ்த்துக் கூறுங்கள். இத்தாலியா நாட்டிலிருந்து இங்கே வந்திருப்போர் உங்களுக்கு வாழ்த்துக் கூறுகின்றனர்.
எபிரேயர் 13 : 25 (ECTA)
இறையருள் உங்கள் அனைவரோடும் இருப்பதாக !

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25

BG:

Opacity:

Color:


Size:


Font: