எபிரேயர் 12 : 1 (ECTA)
ஆண்டவர் அளிக்கும் பயிற்சி எனவே, திரண்டு வரும் மேகம் போல் இத்தனை சாட்சிகள் நம்மைச் சூழ்ந்து நிற்க எந்தச் சுமையையும், நம்மைப் பற்றிக் கொண்டிருக்கும் எந்தப் பாவத்தையும் உதறித்தள்ளிவிட்டு, நமக்குக் குறிப்பிட்டுள்ள பந்தயத்தில் மனஉறுதியோடு ஓடுவோமாக.
எபிரேயர் 12 : 2 (ECTA)
நம்பிக்கையைத் தொடங்கி வழி நடத்துபவரும் அதை நிறைவு செய்பவருமான இயேசுவின் மீது கண்களைப் பதிய வைப்போம். அவர் தாம் அடையவிருந்த மகிழ்ச்சியின் பொருட்டு, இழிவையும் பொருட்படுத்தாமல் சிலுவையை ஏற்றுக்கொண்டார். இப்போது, கடவுளது அரியணையின் வலப்பக்கத்தில் வீற்றிருக்கிறார்.
எபிரேயர் 12 : 3 (ECTA)
பாவிகளால் தமக்கு உண்டான எந்த எதிர்ப்பையும் மன உறுதியோடு தாங்கிக்கொண்ட அவரை எண்ணிப்பாருங்கள். அப்போது நீங்கள் மனம் சோர்ந்து தளர்ந்து போக மாட்டீர்கள்.
எபிரேயர் 12 : 4 (ECTA)
பாவத்திற்கு எதிரான போராட்டத்தில், இரத்தம் சிந்தும் அளவுக்கு நீங்கள் இன்னும் எதிர்த்து நிற்கவில்லை.
எபிரேயர் 12 : 5 (ECTA)
தம் பிள்ளைகளிடம் பேசுவதுபோல் இறைவன் உங்களுக்குத் தந்த பின்வரும் அறிவுரையை நீங்கள் மறந்துவிட்டீர்கள்: “பிள்ளாய், ஆண்டவர் உன்னைக் கண்டித்துத் திருத்துவதை வேண்டாம் எனத் தள்ளிவிடாதே. அவர் கண்டிக்கும்போது தளர்ந்து போகாதே.” [* யோபு 5:17; நீமொ 3:11, 12 ]
எபிரேயர் 12 : 6 (ECTA)
“தந்தை தாம் ஏற்றுக்கொண்ட மக்களைத் தண்டிக்கிறார்; ஆண்டவர் தாம் யாரிடம் அன்பு கொண்டிருக்கிறாரோ அவர்களைக் கண்டிக்கிறார்.” [* யோபு 5:17; நீமொ 3:11, 12 ]
எபிரேயர் 12 : 7 (ECTA)
திருத்தப்படுவதற்காகத் துன்பங்களைத் தாங்கிக் கொள்ளுங்கள். கடவுள் உங்களைத் தம் பிள்ளைகளாக நடத்துகிறார். தந்தை தண்டித்துத் திருத்தாத பிள்ளை உண்டோ?
எபிரேயர் 12 : 8 (ECTA)
எல்லாப் பிள்ளைகளுக்கும் அளிக்கப்படும் தண்டனை உங்களுக்கு அளிக்கப்படாவிட்டால், நீங்கள் உண்மையான பிள்ளைகளாய் இருக்க மாட்டீர்கள்; முறை தவறிப் பிறந்த பிள்ளைகளாகவே இருப்பீர்கள்.
எபிரேயர் 12 : 9 (ECTA)
இவ்வுலகத் தந்தையர் நம்மைத் தண்டித்துத் திருத்தினார்கள். நாமும் அவர்களுக்கு மதிப்புக் கொடுத்து வந்தோம். அவ்வாறாயின், விண்ணகத் தந்தைக்கு நாம் எவ்வளவோ பணிந்து வாழ வேண்டும் அன்றோ?
எபிரேயர் 12 : 10 (ECTA)
மேலும், இவ்வுலகத் தந்தையர் தங்களுக்கு நலமெனத் தோன்றின வகையில் சிறிது காலம் நம்மைத் தண்டித்துத் திருத்தினார்கள். ஆனால் கடவுள், நமது நலனுக்காக, நாமும் அவருடைய தூய்மையில் பங்குகொள்ள வேண்டுமென்பதற்காகவே நம்மைத் தண்டித்துத் திருத்துகிறார்.
எபிரேயர் 12 : 11 (ECTA)
இவ்வாறு திருத்தப்படுவது இப்போது மகிழ்ச்சிக்குரியதாய் இராமல், துயரத்துக்குரியதாகவே தோன்றும். ஆனால் பின்னர், இவ்வாறு பயிற்சி பெற்றவர்கள் அமைதியையும் நேர்மையான வாழ்வையும் பயனாகப் பெறுவர்.
எபிரேயர் 12 : 12 (ECTA)
எனவே,“தளர்ந்துபோன கைகளைத் திடப்படுத்துங்கள், தள்ளாடும் முழங்கால்களை உறுதிப்படுத்துங்கள்.” [* எசா 35: 3 ]
எபிரேயர் 12 : 13 (ECTA)
“நீங்கள் நேர்மையான பாதையில் நடந்து செல்லுங்கள்.” அப்போதுதான் ஊனமாய்ப் போன கால்மூட்டு பிசகாமல் குணமடையும்.
எபிரேயர் 12 : 14 (ECTA)
கடவுளின் அருளைப் புறக்கணித்து விடாதபடி எச்சரிக்கை அனைவருடனும் அமைதியாய் இருக்க முயலுங்கள்; தூய்மையை நாடுங்கள். தூய்மையின்றி எவரும் ஆண்டவரைக் காணமாட்டார்.
எபிரேயர் 12 : 15 (ECTA)
உங்களுள் எவரும் கடவுளின் அருளை இழந்துவிடாமலிருக்கப் பார்த்துக்கொள்ளுங்கள். கசப்பான நச்சுவேர் எதுவும் உங்களுக்குள் முளைத்து, தொல்லை கொடுக்காதபடியும் அதனால் பலர் கெட்டுப்போகாதபடியும் பார்த்துக் கொள்ளுங்கள்.
எபிரேயர் 12 : 16 (ECTA)
உங்களுள் யாரும் காமுகராயும் ஏசாவைப்போல் உலகப் போக்கைப் பின்பற்றுபவராயும் இராதபடி கவனமாயிருங்கள். இந்த ஏசா, ஒரே ஒரு வேளை உணவுக்காகத் தம் தலைப்பேற்று உரிமையை விற்றுப் போட்டார். [* தொநூ 25:29- 34 ]
எபிரேயர் 12 : 17 (ECTA)
பின்னர், அவர் தமக்குரிய ஆசியை உரிமைப் பேறாக்கிக் கொள்ள விரும்பியும் அது அவருக்குக் கிடைக்கவில்லை; கண்ணீர் சிந்தி அதை நாடியும் அந்நிலையை மாற்ற வாய்ப்பு ஏதும் கிட்டவில்லை. இது உங்களுக்குத் தெரியும் அல்லவா! [* தொநூ 27:30, 40 ]
எபிரேயர் 12 : 18 (ECTA)
நீங்கள் வந்து சேர்ந்திருப்பது தொட்டுணரக்கூடிய, தீப்பற்றியெரிகின்ற, இருள்சூழ்ந்த, மந்தாரமான, சுழல்காற்று வீசுகின்ற சீனாய் மலை அல்ல. [* விப 19:16-22; 20:18-21; இச 4:11,12; 5:22- 27 ]
எபிரேயர் 12 : 19 (ECTA)
அங்கு எக்காளம் முழங்கிற்று; பேசும் குரலொன்று கேட்டது. அக்குரலைக் கேட்டவர்கள் அதற்குமேல் தங்களோடு அது ஒரு வார்த்தைகூடப் பேசவேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்கள். [* விப 19:16-22; 20:18-21; இச 4:11,12; 5:22- 27 ]
எபிரேயர் 12 : 20 (ECTA)
ஏனெனில், “இம்மலையைக் கால்நடை தொட்டால்கூட அதைக் கல்லால் எறிந்து கொல்ல வேண்டும்” என்று அக்குரல் கொடுத்த கட்டளையை அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. [* விப 19:12, 13 ]
எபிரேயர் 12 : 21 (ECTA)
“நான் அஞ்சி நடுங்குகிறேன்” என்று மோசேயே சொல்லுமளவுக்கு அக்காட்சி அச்சம் விளைவித்தது. [* இச 9: 19 ]
எபிரேயர் 12 : 22 (ECTA)
ஆனால், நீங்கள் வந்து சேர்ந்திருக்கும் சீயோன் மலை வாழும் கடவுளின் நகர்; விண்ணக எருசலேம். அதனைப் பல்லாயிரக் கணக்கான வானதூதர் சூழ்ந்துள்ளனர்.
எபிரேயர் 12 : 23 (ECTA)
விண்ணகத்தில் பெயர் எழுதப்பட்டுள்ள தலைப்பேறானவர்களின் திருச்சபை விழாக் கூட்டமென அங்கே கூடியுள்ளது. நிறைவுபெற்ற நேர்மையாளர்களோடு சேர்ந்து, அனைவருக்கும் நடுவரான கடவுள் முன்னிலையிலும்,
எபிரேயர் 12 : 24 (ECTA)
புதியதோர் உடன்படிக்கையின் இணைப்பாளராகிய இயேசுவின் முன்னிலையிலும் நிற்கிறீர்கள். ஆபேலின் இரத்தத்தைப் போலன்றிச் சிறந்த முறையில் குரலெழுப்பும் இயேசுவின் இரத்தத்தினால் தெளிக்கப்பட்டிருக்கிறீர்கள். [* தொநூ 4: 10 ]
எபிரேயர் 12 : 25 (ECTA)
எனவே, கடவுளின் வார்த்தைக்குச் செவி சாய்க்க மறுத்து விடாதபடி பார்த்துக்கொள்ளுங்கள். இவ்வுலகில் அவரது எச்சரிக்கைக்குச் செவிசாய்க்க மறுத்தவர்கள் தண்டனைக்குத் தப்பவில்லை. அவ்வாறெனில் விண்ணுலகிலிருந்து பேசுபவரைப் புறக்கணித்தால், நாம் எவ்வாறு தப்பித்துக் கொள்ள முடியும்? [* விப 20: 22 ]
எபிரேயர் 12 : 26 (ECTA)
அவருடைய குரல் அன்று மண்ணுலகை அதிரச் செய்தது. இப்பொழுது அவர்,“இன்னும் ஒரு முறை மண்ணுலகை மட்டும் அல்ல, விண்ணுலகையும் நடுக்கமுறச் செய்வேன்” என்று உறுதியாக வாக்களித்துள்ளார். [* ஆகா 2: 6 ]
எபிரேயர் 12 : 27 (ECTA)
“இன்னும் ஒரு முறை” என்பது, அதிர்பவை யாவும் படைக்கப்பட்டவை என்னும் முறையில் அகற்றப்படும் என்பதை எடுத்துக் காட்டுகிறது. அப்போது அசையாதவையே நிலைத்து நிற்கும்.
எபிரேயர் 12 : 28 (ECTA)
ஆதலின், அசைக்கமுடியாத அரசைப் பெற்றுக்கொண்ட நாம், நன்றியுள்ளவர்களாய் இருப்போம். நன்றியுணர்வோடும், இறைப்பற்றோடும், அச்சத்தோடும் கடவுளுக்கு உகந்தமுறையில் அவருக்கு வழிபாடு செய்வோம்.
எபிரேயர் 12 : 29 (ECTA)
ஏனெனில்,“நம் ஆண்டவர் அழிக்கும் நெருப்பு போன்றவர்.” [* இச 4:24.. ]

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29