எபிரேயர் 1 : 1 (ECTA)
1.முன்னுரைகடவுள் தம் மகன் மூலமாக நம்மிடம் பேசியுள்ளார் பலமுறை, பலவகைகளில் முற்காலத்தில் இறைவாக்கினர் வழியாக நம் மூதாதையரிடம் பேசிய கடவுள்,
எபிரேயர் 1 : 2 (ECTA)
இவ்விறுதி நாள்களில் தம் மகன் வழியாக நம்மிடம் பேசியுள்ளார்; இவரை எல்லாவற்றுக்கும் உரிமையாளராக்கினார்; இவர் வழியாக உலகங்களைப் படைத்தார்.
எபிரேயர் 1 : 3 (ECTA)
கடவுளுடைய மாட்சிமையின் சுடரொளியாகவும், அவருடைய இயல்பின் அச்சுப் பதிவாகவும் விளங்கும் இவர், தம் வல்லமைமிக்க சொல்லால் எல்லாவற்றையும் தாங்கி நடத்துகிறார். மக்களைப் பாவங்களிலிருந்து தூய்மைப்படுத்தியபின், விண்ணகத்தில் இவர் பெருமைமிக்க கடவுளின் வலப்பக்கத்தில் வீற்றிருக்கிறார்.
எபிரேயர் 1 : 4 (ECTA)
2.கடவுளின் மகன் வானதூதரைவிட மேலானவர் இவ்வாறு இறைமகன் வான தூதரைவிடச் சிறந்ததொரு பெயரை உரிமைப்பேறாகப் பெற்றார். அந்நிலைக்கு ஏற்ப அவர்களைவிட இவர் மேன்மை அடைந்தார்.
எபிரேயர் 1 : 5 (ECTA)
ஏனெனில், கடவுள் வானதூதர் எவரிடமாவது “நீ என் மைந்தர்; இன்று நான்
உம்மைப் பெற்றெடுத்தேன்” என்றும், “நான் அவருக்குத் தந்தையாயிருப்பேன்,
அவர் எனக்கு மகனாயிருப்பார்”
என்றும் எப்போதாவது கூறியதுண்டா? [* திபா 2:7; 2 சாமு 7:14; 1 குறி 17: 13 ]
எபிரேயர் 1 : 6 (ECTA)
மேலும் அவர் தம் முதற்பேறான இவரை உலகிற்கு அனுப்பியபோது, “கடவுளின் தூதர் அனைவரும்
அவரை வழிபடுவார்களாக” என்றார். [* திபா 97: 7 ]
எபிரேயர் 1 : 7 (ECTA)
வானதூதரைக் குறித்து அவர் “தம் தூதரைக் காற்றுகளாகவும்
தம் பணியாளரைத்
தீப்பிழம்புகளாகவும் செய்கிறார்” என்றார். [* திபா 104: 4 ]
எபிரேயர் 1 : 8 (ECTA)
தம் மகனைக் குறித்து, “இறைவனே, என்றுமுளது உமது அரியணை; உம் ஆட்சியின் செங்கோல் வளையாத செங்கோல். [* திபா 45:6, 7 ]
எபிரேயர் 1 : 9 (ECTA)
நீதியே உமது விருப்பம்; அநீதி உமக்கு வெறுப்பு; எனவே கடவுள், உமக்கே உரிய கடவுள், மகிழ்ச்சியின் நெய்யால் உம்மீது அருள்பொழிவு செய்து அரசத் தோழரினும் மேலாய்
உயர்த்தினார்”
என்றார்.
எபிரேயர் 1 : 10 (ECTA)
மீண்டும், “ஆண்டவரே, நீர் தொடக்கத்தில் பூவுலகுக்கு அடித்தளம் இட்டீர். விண்ணுலகம் உமது கைவினைப் பொருள் அன்றோ! [* திபா 102:25- 27 ]
எபிரேயர் 1 : 11 (ECTA)
அவையோ அழிந்துவிடும்; நீரோ நிலைத்திருப்பீர். அவையெல்லாம் ஆடைபோல் பழமையாகும்;
எபிரேயர் 1 : 12 (ECTA)
போர்வையைப்போல் அவற்றை நீர் சுருட்டிவிடுவீர்; ஆடையைப்போல் அவற்றை மாற்றிவிடுவீர். நீரோ மாறாதவர்! உமது காலமும் முடிவற்றது” என்றார் அவர்.
எபிரேயர் 1 : 13 (ECTA)
மேலும், கடவுள், வானதூதர் எவரிடமாவது, எப்போதாவது, “நான் உம் பகைவரை உமக்குக் கால்மணையாக்கும் வரை நீர் என் வலப்பக்கம் வீற்றிரும்” என்று கூறியதுண்டா? * திபா 110:1..
எபிரேயர் 1 : 14 (ECTA)
அவர்கள் அனைவரும் ஊழியம் புரியும் ஆவிகள் அல்லவா? மீட்பை உரிமைப்பேறாகப் பெறவிருப்போருக்குத் தொண்டாற்ற அனுப்பப்பட்டவர்கள் அல்லவா?

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14