அபகூக் 3 : 1 (ECTA)
அபக்கூக்கின் மன்றாட்டு இறைவாக்கினர் அபக்கூக்கு ‘சிகாயோன்’ பண்களில் பாடிய மன்றாட்டு:
அபகூக் 3 : 2 (ECTA)
ஆண்டவரே, உம்மைப்பற்றிக் கேள்வியுற்றேன்; ஆண்டவரே, உம் செயலைக் கண்டு அச்சமடைகிறேன்; எங்கள் வாழ்நாள் காலத்திலேயே அதை மீண்டும் செய்யும்; காலப்போக்கில் அதை அனைவரும் அறியும்படி செய்யும்; சினமுற்றபோதும் உமது இரக்கத்தை நினைவு கூரும்.
அபகூக் 3 : 3 (ECTA)
தேமானிலிருந்து இறைவன் வருகிறார்; பாரான் மலையிலிருந்து புனிதர் வருகிறார். (சோலா) அவரது மாட்சி விண்ணுலகை மூடியிருக்கின்றது; அவரது புகழால் மண்ணுலகம் நிறைந்திருக்கின்றது.
அபகூக் 3 : 4 (ECTA)
அவரது பேரொளி கதிரவன் ஒளிபோல் இருக்கின்றது; அவர் கையினின்று ஒளிக்கதிர்கள் புறப்படுகின்றன; அங்கேதான் அவரது வல்லமை மறைந்திருக்கின்றது.
அபகூக் 3 : 5 (ECTA)
அவருக்கு முன்பாகப் பெருவாரி நோய் செல்கின்றது; அவருடைய அடிச்சுவடுகளைத் தொடர்ந்து கொள்ளைநோய் புறப்படுகின்றது.
அபகூக் 3 : 6 (ECTA)
அவர் நின்றால், நிலம் அதிர்கின்றது, அவர் நோக்கினால் வேற்றினத்தார் நடுங்குகின்றனர்; தொன்றுதொட்டு இருக்கும் மலைகள் பிளவுண்டு போகின்றன. பண்டைக் காலக் குன்றுகள் அமிழ்ந்து விடுகின்றன. அவர்தம் வழிகளோ என்றும் உள்ளவை.
அபகூக் 3 : 7 (ECTA)
கூசாவின் கூடாரங்களில் வேதனை நிறைந்திருப்பதை நான் கண்டேன்; மிதியான் நாட்டுக் கூடாரத் திரைகள் நடுநடுங்கின.
அபகூக் 3 : 8 (ECTA)
ஆண்டவரே, நீர் உம்முடைய குதிரைகள் மேலும், வெற்றித் தேர்மேலும் ஏறிவரும்போது, நீரோடைகள்மீதா உம் கோபத்தீ மூண்டது? ஆறுகள் மீதா உம் சினம் பெருகியது? கடல்மீதா உம் சீற்றம் மிகுந்தது?
அபகூக் 3 : 9 (ECTA)
நீர் உம் வில்லைக் கையிலெடுத்து நாணேற்றுகின்றீர்; அம்பறாத் தூணியை அம்புகளால் நிரப்புகின்றீர்; (சேலா) நிலத்தை ஆறுகளால் பிளக்கின்றீர்.
அபகூக் 3 : 10 (ECTA)
மலைகள் உம்மைக்கண்டு நடுங்கின்றன; பெரும் வெள்ளங்கள் பீறிட்டுப் பாய்கின்றன; ஆழ்கடல் தன் இரைச்சலை எழுப்புகின்றது; அது தன் கைகளை மேலே உயர்த்துகின்றது.
அபகூக் 3 : 11 (ECTA)
கதிரவனும் நிலவும் தங்கள் இருப்பிடத்திலேயே நிலைத்து நிற்கின்றன; பாய்ந்தோடும் உம் அம்புகளின் ஒளியின் முன்னும், பளிச்சிடும் உம் ஈட்டியினுடைய சுடரின் முன்னும் தங்கள் செயல் திறனை இழந்து நிற்கின்றன.
அபகூக் 3 : 12 (ECTA)
சினத்தோடு மண்ணுலகில் நடந்து போகின்றீர்; சீற்றம்கொண்டு வேற்றினத்தாரை நசுக்குகின்றீர்.
அபகூக் 3 : 13 (ECTA)
உம் மக்களை மீட்கவும், நீர் திருப்பொழிவு செய்தவரை விடுவிக்கவுமே நீர் புறப்படுகின்றீர். பொல்லாதவனின் குடும்பத் தலைவனை வெட்டி வீழ்த்துகின்றீர். அவனைப் பின்பற்றுவோரை முற்றிலும் அழித்து விடுகின்றீர். (சேலா)
அபகூக் 3 : 14 (ECTA)
அவன் படைத்தலைவனின் தலையை அவன் ஈட்டிகளைக் கொண்டே பிளக்கின்றீர்; அவனோ ஒடுக்கப்பட்டவனை மறைவாக விழுங்கி மகிழ்வது போல மகிழ்ந்து, சூறாவளிக் காற்றென என்னைச் சிதறடிக்கப் பாய்ந்து வருகின்றான்.
அபகூக் 3 : 15 (ECTA)
ஆனால், நீர் உம்முடைய குதிரைகளால் ஆழ்கடலை மிதித்து, பெருவெள்ளக் குவியலைச் சிதறடிக்கின்றீர்.
அபகூக் 3 : 16 (ECTA)
இதை நான் கேட்கும்போது என் உடல் நடுநடுங்குகின்றது; அப்பேரொலியைக் கேட்பதனால் என் உதடுகள் துடிதுடிக்கின்றன; என் எலும்புகள் உளுத்துப் போகின்றன; என் காலடிகள் நிற்கும் இடத்திலேயே தடுமாறுகின்றன; எங்களைத் தாக்கும் மக்கள்மீது இடுக்கண் வரும் நாள்வரை அமைதியாய்க் காத்திருப்பேன்.
அபகூக் 3 : 17 (ECTA)
அத்திமரம் துளிர்த்து அரும்பாமல் போயினும், திராட்சைக் கொடிகள் கனி தராவிடினும் ஒலிவ மரங்கள் பயன் அற்றுப் போயினும், வயல்களில் தானியம் விளையாவிடினும், கிடையில் ஆடுகள் யாவும் அழிந்து போயினும், தொழுவங்களில் மாடுகள் இல்லாது போயினும்,
அபகூக் 3 : 18 (ECTA)
நான் ஆண்டவரில் களிகூர்வேன்; என் மீட்பரான கடவுளில் மகிழ்ச்சியுறுவேன்.
அபகூக் 3 : 19 (ECTA)
ஆண்டவராகிய என் தலைவரே என் வலிமை; அவர் என் கால்களைப் பெண்மானின் கால்களைப் போலாக்குவார்; உயர்ந்த இடங்களுக்கு என்னை நடத்திச் செல்வார். [* 2 சாமு 22:34; திபா 18: 33 ; பாடகர் தலைவர்க்கு: இசைக்கருவி நெகினோத்து.. ]

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19