ஆதியாகமம் 9 : 1 (ECTA)
நோவாவுடன் கடவுளின் உடன்படிக்கை கடவுள் நோவாவிற்கும் அவர் புதல்வருக்கும் ஆசி வழங்கிக் கூறியது: “பலுகிப் பெருகி மண்ணுலகை நிரப்புங்கள். [* தொநூ 1: 28 ]
ஆதியாகமம் 9 : 2 (ECTA)
மண்ணுலகின் விலங்குகள், வானத்துப் பறவைகள், நிலத்தில் ஊர்வன, கடலின் மீன்கள் அனைத்தும் உங்களுக்கு அஞ்சி நடுங்கட்டும்! அவை உங்கள் கைகளில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
ஆதியாகமம் 9 : 3 (ECTA)
நடமாடி உயிர்வாழும் அனைத்தும் உங்களுக்கு உணவாகட்டும். உங்களுக்குப் பசுமையான செடிகளை உணவாகத் தந்தது போல இவை எல்லாவற்றையும் தருகிறேன்.
ஆதியாகமம் 9 : 4 (ECTA)
இறைச்சியை அதன் உயிராகிய இரத்தத்தோடு உண்ணாதீர்கள். [* லேவி 7:26-27; லேவி 17:10-14; 19:26; இச 12:16,23; 15: 23 ]
ஆதியாகமம் 9 : 5 (ECTA)
உங்கள் உயிராகிய இரத்தத்திற்கு நான் ஈடு கேட்பேன். உயிரினம் ஒவ்வொன்றிடமும் மனிதர் ஒவ்வொருவரிடமும் நான் ஈடு கேட்பேன். மனிதரின் உயிருக்காக அவரவர் சகோதரரிடம் உயிரை நான் ஈடாகக் கேட்பேன்.
ஆதியாகமம் 9 : 6 (ECTA)
ஒரு மனிதரின் இரத்தத்தை எவர் சிந்துகிறாரோ அவரது இரத்தம் வேறொரு மனிதரால் சிந்தப்படும். ஏனெனில், கடவுள் மனிதரைத் தம் உருவில் உண்டாக்கினார். [* தொநூ 1:26; விப 20: 13 ]
ஆதியாகமம் 9 : 7 (ECTA)
நீங்கள் பலுகிப் பெருகிப் பன்மடங்காகி மண்ணுலகை நிரப்புங்கள்.” * தொநூ 1:28..
ஆதியாகமம் 9 : 8 (ECTA)
கடவுள் நோவாவிடமும் அவருடனிருந்த அவர் புதல்வரிடமும் கூறியது:
ஆதியாகமம் 9 : 9 (ECTA)
“இதோ! நான் உங்களோடும் உங்களுக்குப் பின்வரும் உங்கள் வழிமரபினரோடும்
ஆதியாகமம் 9 : 10 (ECTA)
பேழையிலிருந்து வெளிவந்து உங்களோடிருக்கும் உயிரினங்கள், பறவைகள்,கால்நடைகள், நிலத்தில் உங்களுடன் உயிர்வாழும் விலங்கினங்கள் எல்லாவற்றோடும், மண்ணுலகில் உள்ள எல்லா உயிர்களோடும் என் உடன்படிக்கையை நிலைநாட்டுகிறேன்.
ஆதியாகமம் 9 : 11 (ECTA)
உங்களோடு என் உடன்படிக்கையை நிறுவுகிறேன்; சதையுள்ள எந்த உயிரும் வெள்ளப் பெருக்கால் மீண்டும் அழிக்கப்படாது. மண்ணுலகை அழிக்க இனி வெள்ளப் பெருக்கு வரவே வராது.”
ஆதியாகமம் 9 : 12 (ECTA)
அப்பொழுது கடவுள், “எனக்கும் உங்களுக்கும் உங்களுடன் இருக்கும் உயிருள்ள எல்லாவற்றிற்குமிடையே தலைமுறைதோறும் என்றென்றும் இருக்கும்படி, நான் ஏற்படுத்திய உடன்படிக்கையின் அடையாளமாக,
ஆதியாகமம் 9 : 13 (ECTA)
என் வில்லை மேகத்தின்மேல் வைக்கிறேன். எனக்கும் மண்ணுலகுக்கும் இடையே உடன்படிக்கையின் அடையாளமாக இது இருக்கட்டும்.
ஆதியாகமம் 9 : 14 (ECTA)
மண்ணுலகின் மேல் நான் மேகத்தை வருவிக்க, அதன்மேல் வில் தோன்றும்பொழுது,
ஆதியாகமம் 9 : 15 (ECTA)
எனக்கும் உங்களுக்கும் சதையுள்ள உயிரினங்கள் எல்லாவற்றுக்கும் இடையே உள்ள என் உடன்படிக்கையை நான் நினைவுகூர்வேன். உயிர்கள் எல்லாவற்றையும் அழிப்பதற்குத் தண்ணீர் இனி ஒருபோதும் பெருவெள்ளமாக மாறாது.
ஆதியாகமம் 9 : 16 (ECTA)
வில் மேகத்தின்மேல் தோன்றும்பொழுது அதை நான் கண்டு, கடவுளாகிய எனக்கும் மண்ணுலகில் இருக்கும் சதையுள்ள உயிரினங்கள் அனைத்திற்கும் இடையே என்றென்றுமுள்ள உடன்படிக்கையை நினைவுகூர்வேன்” என்றார்.
ஆதியாகமம் 9 : 17 (ECTA)
கடவுள் நோவாவிடம், “எனக்கும் மண்ணுலகில் வாழும் எல்லா உயிரினங்களுக்கும் இடையே நான் ஏற்படுத்திய உடன்படிக்கையின் அடையாளம் இதுவே” என்றார்.
ஆதியாகமம் 9 : 18 (ECTA)
நோவாவும் அவர் புதல்வரும் சேம், காம், எப்பேத்து, ஆகியோர் பேழையிலிருந்து வெளிவந்த நோவாவின் புதல்வர். காம் கானானின் தந்தை.
ஆதியாகமம் 9 : 19 (ECTA)
இவர்கள் மூவரும் நோவாவின் புதல்வர். இவர்களிலிருந்துதான் மண்ணுலகு முழுவதும் மனித இனம் பரவியது.
ஆதியாகமம் 9 : 20 (ECTA)
நோவா நிலத்தில் பயிரிடுபவராகித் திராட்சைத் தோட்டம் அமைத்தார்.
ஆதியாகமம் 9 : 21 (ECTA)
அவர் திராட்சை இரசத்தைக் குடித்துப் போதைக்குள்ளாகித் தம் கூடாரத்தில் ஆடை விலகிக் கிடந்தார்.
ஆதியாகமம் 9 : 22 (ECTA)
கானானின் தந்தையாகிய காம் தன் தந்தை திறந்த மேனியாராய்க் கிடப்பதைக் கண்டு, வெளியே இருந்த தன் இரு சகோதரரிடம் அதைத் தெரிவித்தான்.
ஆதியாகமம் 9 : 23 (ECTA)
அப்பொழுது சேமும், எப்பேத்தும் ஒரு துணியை எடுத்துத் தங்கள் இருவரின் தோள்மேல் போட்டுக்கொண்டு பின்னோக்கி நடந்து தங்கள் தந்தையின் திறந்த மேனியை மூடினர். அவர்கள் முகம் எதிர்ப்பக்கம் நோக்கி இருந்ததால் தங்கள் தந்தையின் திறந்த மேனியை அவர்கள் பார்க்கவில்லை.
ஆதியாகமம் 9 : 24 (ECTA)
நோவாவிற்குப் போதை தெளிந்ததும், தம் இளைய மகன் தமக்குச் செய்ததை அறிந்தார்.
ஆதியாகமம் 9 : 25 (ECTA)
அப்பொழுது அவர், “கானான் சபிக்கப்பட்டவன்; தன் சகோதரருக்கு அவன் அடிமையிலும் அடிமையாக இருப்பான்.
ஆதியாகமம் 9 : 26 (ECTA)
சேமின் கடவுளாகிய ஆண்டவர் போற்றி! அவனுக்குக் கானான் அடிமையாக இருப்பான்.
ஆதியாகமம் 9 : 27 (ECTA)
கடவுள் எப்பேத்து குடும்பத்தைப் பெருகச் செய்யட்டும். அவன் சேமின் கூடாரத்தில் வாழட்டும். அவனுக்கும் கானான் அடிமையாக இருக்கட்டும்” என்றார்.
ஆதியாகமம் 9 : 28 (ECTA)
வெள்ளப்பெருக்குக்குப் பின்னர், நோவா முந்நூற்றைம்பது ஆண்டுகள் வாழ்ந்தார்.
ஆதியாகமம் 9 : 29 (ECTA)
இவ்வாறு, நோவா தொள்ளாயிரத்து ஐம்பது ஆண்டுகள் வாழ்ந்தபின் இறந்தார்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29