ஆதியாகமம் 48 : 1 (ECTA)
எப்ராயிம், மனாசேக்கு யாக்கோபு ஆசி வழங்குதல் இந்நிகழ்ச்சிகளுக்குப்பின், “உம் தந்தை உடல் நலமின்றி இருக்கிறார்” என்று யோசேப்புக்குத் தெரிவிக்கப்பட்டது. உடனே அவர், தம் இரு மைந்தர்களாகிய மனாசேயையும் எப்ராயிமையும் அழைத்துக் கொண்டு சென்றார்.
ஆதியாகமம் 48 : 2 (ECTA)
“இதோ உம் மகன் யோசேப்பு உம்மைக் காண வந்திருக்கிறார்” என்று அறிவிக்கப்பட்டவுடன், யாக்கோபு பெருமுயற்சி செய்து எழுந்து கட்டிலின் மேல் அமர்ந்தார்.
ஆதியாகமம் 48 : 3 (ECTA)
யாக்கோபு யோசேப்பை நோக்கி, “எல்லாம் வல்ல இறைவன் கானான் நாட்டிலுள்ள லூசு என்ற இடத்தில் எனக்குக் காட்சியளித்து ஆசி வழங்கி, [* தொநூ 28:13- 14 ]
ஆதியாகமம் 48 : 4 (ECTA)
‘நான் உன்னைப் பல்கிப் பெருகச் செய்வேன். உன்னைத் திரளான மக்கள் கூட்டமாக ஆக்குவேன். இந்நாட்டை உனக்கும் உனக்குப் பின் உன் வழிமரபினர்க்கும் என்றுமுள உடைமையாகத் தருவேன்’ என்று வாக்களித்தார். [* தொநூ 28:13- 14 ]
ஆதியாகமம் 48 : 5 (ECTA)
ஆகையால், நான் எகிப்திற்கு வந்து உன்னிடம் சேர்வதற்கு முன்பே உனக்கு இந்நாட்டில் பிறந்த இரு மைந்தரும் என் புதல்வர்களாய் இருப்பார்கள். ரூபன், சிமியோன் போன்று எப்ராயிமும் மனாசேயும் என்னுடையவர்களே.
ஆதியாகமம் 48 : 6 (ECTA)
இவர்களுக்குப்பின் உனக்குப் பிறக்கும் ஏனைய புதல்வர்கள் உன்னுடையவர்களாகவே இருப்பார்கள். அவர்கள் தங்கள் மூத்த சகோதரர்களின் பெயர் வரிசையில் சேர்க்கப்பட்டு, அவர்களது உரிமையில் பங்கு பெறுவர்.
ஆதியாகமம் 48 : 7 (ECTA)
ஏனெனில், நான் பதானைவிட்டு வரும்பொழுது, வழியில் ராகேல் கானான் நாட்டில் இறந்து என்னைத் துயரத்தில் ஆழ்த்தினாள். அப்பொழுது நான் எப்ராத்துக்கு அருகில் இருந்தேன். எப்ராத்துக்கு அதாவது பெத்லகேமுக்குப் போகும் வழியில் அவளை அடக்கம் செய்தேன்” என்றார். [* தொநூ 35:16- 19 ]
ஆதியாகமம் 48 : 8 (ECTA)
பின்னர், அவர் யோசேப்பின் புதல்வர்களைக் கண்டு, “இவர்கள் யார்?” என்று கேட்டார்.
ஆதியாகமம் 48 : 9 (ECTA)
யோசேப்பு தம் தந்தையிடம், “இந்நாட்டில் கடவுள் எனக்குத் தந்தருளின மைந்தர்கள் இவர்கள்தாம்” என்று சொல்ல, அவர், “அவர்களை என் அருகில் கொண்டு வா; நான் அவர்களுக்கு ஆசி வழங்குகிறேன்” என்றார்.
ஆதியாகமம் 48 : 10 (ECTA)
ஏனெனில், வயது முதிர்ச்சியினால் இஸ்ரயேலின் பார்வை மங்கிப்போக, அவர் எதையும் காண முடியாதவராய் இருந்தார். யோசேப்பு அவர்களை அவர் அருகில் கொண்டுவந்தவுடன் அவர் அவர்களை முத்தமிட்டு அரவணைத்துக் கொண்டார்.
ஆதியாகமம் 48 : 11 (ECTA)
பின்னர், இஸ்ரயேல் யோசேப்பை நோக்கி, “உன் முகத்தை நான் காண மாட்டேன் என்றே நினைத்தேன்; ஆனால், உன் வழிமரபையும் கூட நான் காணும்படி கடவுள் அருள்செய்தார்” என்றார்.
ஆதியாகமம் 48 : 12 (ECTA)
பின்னர், யோசேப்பு அவர்மடியிலிருந்த தம் பிள்ளைகளை இறக்கிவிட்டு, தரையில் முகம் குப்புறவிழுந்து வணங்கினார்.
ஆதியாகமம் 48 : 13 (ECTA)
பின்பு, யோசேப்பு எப்ராயிமைத் தம் வலக்கையால் இஸ்ரயேலுக்கு இடப்புறமும், மனாசேயைத் தம் இடக்கையால் இஸ்ரயேலுக்கு வலப்புறமும் இருக்கும்படி அழைத்து வந்து இருவரையும் அவர் அருகில் நிறுத்தினார்.
ஆதியாகமம் 48 : 14 (ECTA)
ஆனால், இஸ்ரயேல் தம் கைகளைக் குறுக்காக நீட்டி வலக்கையை இளையவன் எப்ராயிமின் தலைமீதும் இடக்கையை தலைமகன் மனாசேயின் தலைமீதும் மாற்றி வைத்தார்.
ஆதியாகமம் 48 : 15 (ECTA)
அவர் யோசேப்புக்கு ஆசி வழங்கிக் கூறியது: “என் தந்தையரான ஆபிரகாமும் ஈசாக்கும் எந்தக் கடவுள் திருமுன் நடந்து வந்தனரோ அந்தக் கடவுளே இன்று வரை என் வாழ்நாள் முழுவதும் எனக்கு ஆயராக விளங்கிவருகிறார்.
ஆதியாகமம் 48 : 16 (ECTA)
அந்தக் கடவுள், என்னை எல்லாத் தீமையினின்றும் மீட்ட தூதர், இச்சிறுவர்களுக்கு ஆசி வழங்குவாராக! மேலும், என் பெயரும், என் தந்தையரான ஆபிரகாம், ஈசாக்கின் பெயர்களும் இவர்கள் மூலம் நிலைநிற்பனவாக! மண்ணுலகில் இவர்கள் பெருந்திரளாகப் பல்குவார்களாக!”
ஆதியாகமம் 48 : 17 (ECTA)
தம் தந்தை வலக்கையை எப்ராயிம் தலைமேல் வைத்திருந்தது யோசேப்புக்குப் பிடிக்கவில்லை. எனவே, அவர் எப்ராயிம் தலைமேலிருந்த தம் தந்தையின் கையை மனாசேயின் தலைமேல் வைக்கும்படி எடுக்க முயன்றார்.
ஆதியாகமம் 48 : 18 (ECTA)
யோசேப்பு தம் தந்தையை நோக்கி, “தந்தையே! இது சரியன்று; இவன் தான் தலைமகன். இவன் தலையின் மேல் உமது வலக்கையை வையும்” என்றார்.
ஆதியாகமம் 48 : 19 (ECTA)
ஆனால், அவர் தந்தை மறுத்து, “தெரியும் மகனே, எனக்குத் தெரியும். இவனும் ஒரு மக்களினமாகப் பல்கிப் பெருகுவான். ஆனால், இவன் தம்பி இவனிலும் பெரியவன் ஆவான். அவன் வழிமரபினர் மக்களினங்களாகப் பெருகுவர்” என்று கூறினார்.
ஆதியாகமம் 48 : 20 (ECTA)
மேலும், அவர் அன்று அவர்களுக்கு ஆசி வழங்கிக் கூறியது: “‘எப்ராயிம், மனாசேயைப்போல் உன்னையும் கடவுள் வளரச் செய்வாராக’ என்று உங்கள் பெயரால் இஸ்ரயேல் ஆசி வழங்கும்.” இவ்வாறு அவர் எப்ராயிமை மனாசேக்கு முன் வைத்தார். * எபி 11:21..
ஆதியாகமம் 48 : 21 (ECTA)
பின்பு, இஸ்ரயேல் யோசேப்பை நோக்கி, “இதோ நான் சாகப் போகிறேன். கடவுள் உங்களோடு இருப்பார். உங்கள் மூதாதையரின் நாட்டிற்கு உங்களை அவர் திரும்பவும் நடத்திச் செல்வார்.
ஆதியாகமம் 48 : 22 (ECTA)
நான் என் வாளாலும் வில்லாலும் எமோரியரிடமிருந்து கைப்பற்றிய செக்கேம் பகுதியை, உன் சகோதரரை விட உயர்ந்தவன் என்ற முறையில், உனக்கே தருகிறேன்” என்றார்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22