ஆதியாகமம் 43 : 1 (ECTA)
பென்யமின் எகிப்துக்குச் செல்லல் நாட்டில் பஞ்சம் மிகக் கடுமையாய் இருந்தது.
ஆதியாகமம் 43 : 2 (ECTA)
எகிப்திலிருந்து வாங்கி வந்திருந்த உணவுப் பொருள்கள் தீர்ந்துவிட்டன. அவர்கள் தந்தை அவர்களை நோக்கி, “நீங்கள் திரும்பிப் போய் நமக்குக் கொஞ்சம் உணவுப் பொருள் வாங்கி வாருங்கள்” என்றார். [* திப 7: 12 ]
ஆதியாகமம் 43 : 3 (ECTA)
அதற்கு யூதா, “அந்த ஆள் உங்கள் இளைய சகோதரனை உங்களுடன் அழைத்து வராவிடில் நீங்கள் என் முகத்தில் விழிக்க வேண்டாம் என்று எங்களைக் கடுமையாய் எச்சரித்துள்ளார்.
ஆதியாகமம் 43 : 4 (ECTA)
ஆதலால், நீங்கள் எம் சகோதரனை எங்களோடு அனுப்பினால் மட்டுமே நாங்கள் அங்குச் சென்று உணவுப் பொருள்களை உங்களுக்கு வாங்கிக்கொண்டு வருவோம்.
ஆதியாகமம் 43 : 5 (ECTA)
நீங்கள் அவனை அனுப்பாவிடில், நாங்கள் போகமாட்டோம். ஏனெனில், அந்த ஆள் ‘உங்கள் சகோதரன் உங்களுடன் வராவிடில், நீங்கள் என் முகத்தில் விழிக்கவேண்டாம்’ என்று சொல்லிவிட்டார்” என்று சொன்னார்.
ஆதியாகமம் 43 : 6 (ECTA)
இஸ்ரயேல் அவர்களை நோக்கி, “உங்களுக்கு இன்னுமொரு சகோதரன் இருக்கிறான் என்று அம்மனிதருக்குத் தெரிவித்து, நீங்கள் ஏன் எனக்குத் துன்பம் வருவித்தீர்கள்” என்று முறையிட்டார்.
ஆதியாகமம் 43 : 7 (ECTA)
அவர்கள், “அந்த ஆள் நம்மைப்பற்றியும் நம் உறவினரைப்பற்றியும் துருவித் துருவிக் கேட்டார். ‘உங்கள் தந்தை இன்னும் உயிரோடு இருக்கிறாரா? உங்களுக்கு வேறு சகோதரன் உண்டா?’ என்று வினவினார். அவர் கேட்ட கேள்விகளுக்கு இவ்வாறு பதிலளித்தோம். ‘உங்கள் சகோதரனை இங்கே கொண்டு வாருங்கள்’ என்று அவர் சொல்வார் என்று நாங்கள் அறிந்திருக்கக் கூடுமோ?” என்று மறுமொழி கூறினர்.
ஆதியாகமம் 43 : 8 (ECTA)
மேலும், யூதா தம் தந்தை இஸ்ரயேலை நோக்கி, “எங்கள் குழந்தைகளும், நீங்களும் நாங்களும் சாகாமல் உயிரோடிருக்க வேண்டுமானால், இளைஞனை என்னோடு அனுப்பி வையுங்கள். நாங்களும் புறப்பட்டுச் செல்வோம்.
ஆதியாகமம் 43 : 9 (ECTA)
அவனுக்கு நானே பொறுப்பாளி. அவனைப்பற்றிய பொறுப்பை என்கையில் விட்டுவிடுங்கள். நான் அவனை உங்களிடம் கொண்டுவந்து ஒப்புவிக்காவிடில், உங்களுக்கு முன்பாக, அப்பழியை எந்நாளும் நான் சுமப்பேன். [* தொநூ 37:5- 10 ]
ஆதியாகமம் 43 : 10 (ECTA)
இவ்வளவு காலந்தாழ்த்தியிராவிட்டால், இதற்குள் இரண்டுமுறை போய்த் திரும்பி வந்திருக்கலாம்” என்றார்.
ஆதியாகமம் 43 : 11 (ECTA)
அதைக் கேட்டு, அவர்களின் தந்தை இஸ்ரயேல், அவர்களை நோக்கி, “அவ்வளவு அவசியமானால், நீங்கள் அப்படியே செய்யுங்கள். ஆனால், இந்த நாட்டின் விளைச்சலில் மிகச் சிறந்த சிலவற்றை உங்கள் பைகளிலே எடுத்துச் செல்லுங்கள். கொஞ்சம் தைல வகைகள், தேன், நறுமணப் பொருள்கள், வெள்ளைப் போளம், தேவதாருக் கொட்டைகள், வாதுமைப் பருப்பு ஆகியவற்றை அம்மனிதருக்குக் காணிக்கையாகக் கொண்டு செல்லுங்கள்.
ஆதியாகமம் 43 : 12 (ECTA)
மேலும், இருமடங்கு பணத்தைக் கையில் எடுத்துக்கொள்ளுங்கள். உங்கள் கோணிப்பை வாயில் வைக்கப்பட்டிருந்த பணத்தை நீங்கள் திருப்பிக் கொடுத்துவிடவேண்டும். ஒரு வேளை அது தவறுதலாய் நேர்ந்திருக்கக்கூடும்.
ஆதியாகமம் 43 : 13 (ECTA)
உங்கள் சகோதரனை அழைத்துக்கொண்டு மீண்டும் அந்த மனிதரிடம் செல்லுங்கள்.
ஆதியாகமம் 43 : 14 (ECTA)
அந்த மனிதர் ஏற்கெனவே அங்குள்ள உங்கள் சகோதரனையும் இந்தப் பென்யமினையும் உங்களோடு அனுப்பிவைக்கும்படி எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்குக் கருணை காட்டுவாராக! நானோ பிள்ளைகளை இழக்கவேண்டியிருந்தால், பிள்ளைகளை இழந்தவனாகவே இருப்பேன்” என்றார்.
ஆதியாகமம் 43 : 15 (ECTA)
அவர்களும் மேற்குறிப்பிட்ட காணிக்கைகளையும் இருமடங்கு பணத்தையும் கையில் எடுத்துக் கொண்டு பென்யமினுடன் எகிப்திற்குச் சென்று யோசேப்பின் முன்னிலையில் வந்து நின்றனர்.
ஆதியாகமம் 43 : 16 (ECTA)
யோசேப்பு அவர்களையும் அவர்களுடன் பென்யமினையும் கண்டவுடன் தம் வீட்டு மேற்பார்வையாளனை நோக்கி, “நீ இம்மனிதர்களை என் வீட்டிற்கு அழைத்துச் செல். இவர்கள் பகலுணவை இன்று என்னோடு உண்பார்கள். கால்நடை ஒன்றை அடித்து உணவு தயார் செய்” என்றார்.
ஆதியாகமம் 43 : 17 (ECTA)
அவனும் யோசேப்பு சொன்னபடியே அம்மனிதர்களை அவர் வீட்டிற்கு அழைத்துக்கொண்டு போனான்.
ஆதியாகமம் 43 : 18 (ECTA)
யோசேப்பின் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டதால் அவர்கள் அச்சமுற்றனர். ஏனெனில், ‘முன்பு நம் கோணிப்பைகளில் வைக்கப்பட்ட பணத்தை முன்னிட்டே இங்குக் கொண்டுவரப்பட்டுள்ளோம். நம்மைத் தாக்கி மடக்கி அடிமைகளாக்கி நம் கழுதைகளைக் கைப்பற்றிக் கொள்ளுமாறு இவ்வாறு கொண்டுவந்திருக்கிறார்களோ?’ என்று நினைத்துக்கொண்டனர்.
ஆதியாகமம் 43 : 19 (ECTA)
எனவே, அவர்கள் யோசேப்பின் வீட்டு வாயிற்படியிலே மேற்பார்வையாளனை அணுகிக் கூறியது:
ஆதியாகமம் 43 : 20 (ECTA)
“ஐயா, முன்பு ஒருமுறை நாங்கள் தானியம் வாங்குவதற்கும் இங்கு வந்திருந்தது உண்மையே.
ஆதியாகமம் 43 : 21 (ECTA)
திரும்பவும் வழியில் சாவடியில் எங்கள் கோணிப்பைகளைத் திறந்தபோது, பைகளின் வாயிலே நாங்கள் கொடுத்த பணம் அப்படியே இருக்கக் கண்டோம். அதே அளவு திரும்பவும் கையோடு கொண்டு வந்திருக்கிறோம்.
ஆதியாகமம் 43 : 22 (ECTA)
மேலும், எங்களுக்கு வேண்டியவற்றை வாங்குவதற்கு வேறு பணமும் கையோடு கொண்டு வந்திருக்கிறோம். நாங்கள் முன் கொடுத்த பணத்தை எங்கள் கோணிப்பைகளில் வைத்தது யாரென்று அறியோம்” என்றனர். * தொநூ 37:21-22..
ஆதியாகமம் 43 : 23 (ECTA)
அதற்கு அவன், “உங்களுக்கு அமைதி உண்டாகுக! அஞ்சவேண்டாம்! உங்கள் கடவுளும் உங்கள் தந்தையின் கடவுளுமானவர் உங்கள் கோணிப்பைகளில் அந்தப் பணத்தை உங்களுக்குப் புதையலாகத் தந்திருப்பார்! உங்கள் பணம் தான் என்னிடம் வந்ததே!” என்று சொல்லியபின், சிமியோனை அவர்களிடம் அழைத்து வந்தான்.
ஆதியாகமம் 43 : 24 (ECTA)
மேலும், அந்த மனிதன் அவர்களை யோசேப்பின் வீட்டிற்குள் அழைத்துச் சென்று, அவர்களுக்குத் தண்ணீர் கொடுத்தான். அவர்கள் தங்கள் பாதங்களைக் கழுவிக் கொண்டனர். பின்பு, அவர்களுடைய கழுதைகளுக்கு அவன் தீனி போட்டான்.
ஆதியாகமம் 43 : 25 (ECTA)
நண்பகலில் யோசேப்பு வரும் நேரத்தில், அவருக்குத் தருவதற்காக அவர்கள் தங்கள் காணிக்கைகளைத் தயார் செய்தனர். ஏனென்றால், தாங்கள் அங்கேயே உணவு அருந்தப்போவதாகக் கேள்விப்பட்டிருந்தனர்.
ஆதியாகமம் 43 : 26 (ECTA)
யோசேப்பு தம் வீட்டுக்கு வந்தார். வீட்டுக்குள் அவர்கள் கையில் கொண்டுவந்திருந்த காணிக்கைகளை அவர்முன் வைத்து, தரை மட்டும் தாழ்ந்து வணங்கினர்.
ஆதியாகமம் 43 : 27 (ECTA)
அவரோ அவர்களிடம் நலம் விசாரித்தபின் “நீங்கள் என்னிடம் சொல்லியிருந்த முதிர்வயதான உங்கள் தந்தை நலமாய் இருக்கிறாரா? இன்னும் உயிரோடிருக்கிறாரா?” என்று விசாரித்தார்.
ஆதியாகமம் 43 : 28 (ECTA)
அவர்கள், “உங்கள் ஊழியராகிய எங்கள் தந்தை நலமுடன் இருக்கிறார். இன்னும் உயிரோடிருக்கிறார்” என்று பதில் கூறித் தரைமட்டும் தாழ்ந்து வணங்கினர்.
ஆதியாகமம் 43 : 29 (ECTA)
யோசேப்பு கண்களை உயர்த்தி, தம் சகோதரனும், தம் தாயின் மகனுமான பென்யமினைப் பார்த்து, “நீங்கள் என்னிடம் சொல்லியிருந்த உங்கள் இளைய சகோதரன் இவன்தானோ?” என்று கேட்டபின், “மகனே, கடவுள் உனக்கு அருள்புரிவாராக!” என்றார்.
ஆதியாகமம் 43 : 30 (ECTA)
யோசேப்பு தம் சகோதரனைக் கண்டதும் மனம் நெகிழ்ந்து அழுவதற்கு ஓரிடம் தேடினார். உடனே தம் உள்ளறைக்குள் விரைந்துசென்று கண்ணீர்விட்டார்.
ஆதியாகமம் 43 : 31 (ECTA)
பின்பு, முகத்தைக் கழுவியபின் வெளியே வந்தார். தம்மை அடக்கிக்கொண்டு, “உணவு பரிமாறுங்கள்” என்றார்.
ஆதியாகமம் 43 : 32 (ECTA)
யோசேப்பிற்குத் தனியாகவும் சகோதரர்களுக்குத் தனியாகவும் அவருடன் உண்ணவிருந்த எகிப்தியருக்குத் தனியாகவும் உணவு பரிமாறப்பட்டது. ஏனென்றால், எகிப்தியர் எபிரேயரோடு உண்பதில்லை. அப்படி உண்பதை எகிப்தியர் அருவருப்பாகக் கருதினர்.
ஆதியாகமம் 43 : 33 (ECTA)
மேலும், அவருக்கு முன் அவர்களில் மூத்தவன் தலைமகன் உரிமைப்படி முதலாவதாகவும், இளையவர்கள் அவரவர் வயதின்படியும் அமர்த்தப்பட்டதால் ஒருவர் மற்றவரை வியப்புடன் நோக்கினர்.
ஆதியாகமம் 43 : 34 (ECTA)
யோசேப்பின் முன் வைக்கப்பட்ட தட்டுகளினின்று அவர்களுக்குப் பரிமாறப்பட்டது. மற்றவர்களது பங்கைப்போல் ஐந்து மடங்கு மிகுதியாகப் பென்யமினுக்குப் பரிமாறப்பட்டது. அவருடன் அவர்கள் மதுவருந்தி விருந்துண்டனர்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34