ஆதியாகமம் 4 : 1 (ECTA)
காயினும் ஆபேலும் ஆதாம் தன் மனைவி ஏவாளுடன் கூடி வாழ்ந்தான். அவள் கருவுற்றுக் காயினைப் பெற்றெடுத்தாள். அவள் “ஆண்டவர் அருளால் ஆண் மகன் ஒருவனை நான் பெற்றுள்ளேன்” என்றாள்.
ஆதியாகமம் 4 : 2 (ECTA)
பின்பு, அவள் அவன் சகோதரன் ஆபேலைப் பெற்றெடுத்தாள். ஆபேல் ஆடு மேய்ப்பவன் ஆனான். காயின் நிலத்தைப் பண்படுத்துபவன் ஆனான்.
ஆதியாகமம் 4 : 3 (ECTA)
சில நாள்கள் சென்றன. காயின் நிலத்தின் பலனிலிருந்து ஆண்டவருக்குக் காணிக்கை கொண்டு வந்தான்.
ஆதியாகமம் 4 : 4 (ECTA)
ஆபேலும் தன் மந்தையிலிருந்து கொழுத்த தலையீறுகளைக் கொண்டு வந்தான். ஆண்டவர் ஆபேலையும் அவன் காணிக்கையையும் கனிவுடன் கண்ணோக்கினார். [* எபி 11: 4 ]
ஆதியாகமம் 4 : 5 (ECTA)
ஆனால், காயினையும் அவன் காணிக்கையையும் அவர் கனிவுடன் கண்ணோக்கவில்லை. ஆகவே, காயின் கடுஞ்சினமுற்றான். அவன் முகம் வாடியது.
ஆதியாகமம் 4 : 6 (ECTA)
ஆகவே, ஆண்டவர் காயினிடம், “நீ ஏன் சினமுற்றிருக்கிறாய்? உன் முகம் வாடி இருப்பது ஏன்?
ஆதியாகமம் 4 : 7 (ECTA)
நீ நல்லது செய்தால் உயர்வடைவாய் அல்லவா? நீ நல்லது செய்யாவிட்டால், பாவம் உன்மேல் வேட்கை கொண்டு உன் வாயிலில் படுத்திருக்கும். நீ அதை அடக்கி ஆளவேண்டும்” என்றார்.
ஆதியாகமம் 4 : 8 (ECTA)
காயின் தன் சகோதரன் ஆபேலிடம், “நாம் வயல்வெளிக்குப் போவோம்” என்றான். அவர்கள் வெளியில் இருந்தபொழுது, காயின் தன் சகோதரன் ஆபேலின் மேல் பாய்ந்து அவனைக் கொன்றான். [* மத் 23:35; லூக் 11:51; 1 யோவா 3: 12 ; இச்சொற்றொடர் மிகப் பழமையான பதிப்புகளில் உள்ளது. ]
ஆதியாகமம் 4 : 9 (ECTA)
ஆண்டவர் காயினிடம், “உன் சகோதரன் ஆபேல் எங்கே?” என்று கேட்டார். அதற்கு அவன், “எனக்குத் தெரியாது. நான் என்ன, என் சகோதரனுக்குக் காவலாளியோ?” என்றான்.
ஆதியாகமம் 4 : 10 (ECTA)
அதற்கு ஆண்டவர், “நீ என்ன செய்துவிட்டாய்! உன் சகோதரனின் இரத்தத்தின் குரல் மண்ணிலிருந்து என்னை நோக்கிக் கதறிக் கொண்டிருக்கிறது. [* எபி 12: 24 ]
ஆதியாகமம் 4 : 11 (ECTA)
இப்பொழுது, உன் கைகள் சிந்திய உன் சகோதரனின் இரத்தத்தைத் தன் வாய்திறந்து குடித்த மண்ணை முன்னிட்டு, நீ சபிக்கப்பட்டிருக்கின்றாய்.
ஆதியாகமம் 4 : 12 (ECTA)
நீ மண்ணில் பயிரிடும் பொழுது அது இனிமேல் உனக்குப் பலன் தராது. மண்ணுலகில் நீ நாடோடியாக அலைந்து திரிவாய்” என்றார்.
ஆதியாகமம் 4 : 13 (ECTA)
காயின் ஆண்டவரிடம், “எனக்குக் கொடுக்கப்பட்ட தண்டனை என்னால் தாங்க முடியாததாக இருக்கின்றது.
ஆதியாகமம் 4 : 14 (ECTA)
இன்று நீர் என்னை இம்மண்ணிலிருந்து துரத்தியிருக்கின்றீர்; உமது முன்னிலையினின்று நான் மறைக்கப்பட்டுள்ளேன். மண்ணுலகில் நான் நாடோடியாக அலைந்து திரிய வேண்டியுள்ளது. என்னைக் காண்கின்ற எவனும் என்னைக் கொல்வானே!” என்றான்.
ஆதியாகமம் 4 : 15 (ECTA)
ஆண்டவர் அவனிடம் “அப்படியன்று; காயினைக் கொல்கின்ற எவனும் ஏழு முறை பழி வாங்கப்படுவான்” என்று சொல்லி, காயினைக் கண்டு பிடிக்கும் எவனும் அவனைக் கொல்லாமல் இருக்க ஆண்டவர் அவன் மேல் ஓர் அடையாளம் இட்டார்.
ஆதியாகமம் 4 : 16 (ECTA)
பின்னர், காயின் ஆண்டவர் திருமுன்னை விட்டுச் சென்று ஏதேனுக்குக் கிழக்கே இருந்த நோது நாட்டில் குடியேறினான்.
ஆதியாகமம் 4 : 17 (ECTA)
காயினின் வழிமரபினர் காயின் தன் மனைவியுடன் கூடி வாழ, அவளும் கருவுற்று ஏனோக்கைப் பெற்றெடுத்தாள். அப்பொழுது காயின் ஒரு நகரத்தை நிறுவி, அதற்குத் தன் மகன் ஏனோக்கின் பெயரை வைத்தான்.
ஆதியாகமம் 4 : 18 (ECTA)
ஏனோக்கிற்கு ஈராது பிறந்தான். ஈராதுக்கு மெகுயாவேல் பிறந்தான். மெகுயாவேலுக்கு மெத்துசாவேல் பிறந்தான். மெத்துசாவேலுக்கு இலாமேக்கு பிறந்தான்.
ஆதியாகமம் 4 : 19 (ECTA)
இலாமேக்கு இரு பெண்களை மணந்துகொண்டான். ஒருத்தியின் பெயர் ஆதா; மற்றொருத்தியின் பெயர் சில்லா.
ஆதியாகமம் 4 : 20 (ECTA)
ஆதா யாபாலைப் பெற்றெடுத்தாள். இவன்தான் ஆடுமாடு மேய்த்துக் கூடாரத்தில் வாழும் மக்களின் தந்தை.
ஆதியாகமம் 4 : 21 (ECTA)
அவன் சகோதரன் பெயர் யூபால். இவன்தான் யாழ் மீட்டுவோர், குழல் ஊதுவோர் ஆகியோர் அனைவரின் தந்தை.
ஆதியாகமம் 4 : 22 (ECTA)
சில்லா தூபால்காயினைப் பெற்றெடுத்தாள். இவன் வெண்கலத்தாலும், இரும்பாலும் எல்லாவிதமான கருவிகள் செய்யும் கொல்லன் ஆனான். தூபால்காயினுக்கு நாகமா என்ற சகோதரி இருந்தாள்.
ஆதியாகமம் 4 : 23 (ECTA)
இலாமேக்கு தன் மனைவியரிடம், “ஆதா, சில்லா, நான் சொல்வதைக் கவனியுங்கள். இலாமேக்கின் மனைவியரே, என் சொல்லுக்குச் செவிகொடுங்கள்; என்னைக் காயப்படுத்தியதற்காக ஒருவனை நான் கொன்று விட்டேன்; என்னை அடித்ததற்காக அந்த இளைஞனை நான் கொன்றேன்.
ஆதியாகமம் 4 : 24 (ECTA)
காயினுக்காக ஏழுமுறை பழிவாங்கப்பட்டால் இலாமேக்கிற்காக எழுபது - ஏழுமுறை பழிவாங்கப்படும்” என்றான். [* மத் 18: 22 ]
ஆதியாகமம் 4 : 25 (ECTA)
ஆதாம் மீண்டும் தன் மனைவியுடன் கூடி வாழ, அவளும் மகன் ஒருவனைப் பெற்று அவனுக்குச் சேத்து* என்று பெயரிட்டாள். “காயின் ஆபேலைக் கொன்றதால் அவனுடைய இடத்தில் இன்னொருவனைக் கடவுள் வைத்தருளினார்” என்றாள். * எபிரேயத்தில், ‘வைத்தல்’ என்பது பொருள்..
ஆதியாகமம் 4 : 26 (ECTA)
சேத்துக்கும் மகன் ஒருவன் பிறந்தான்; அவனுக்கு அவன் ஏனோசு என்று பெயரிட்டான். அப்பொழுதே ‘ஆண்டவர்’ என்னும் திருப்பெயரால் அவரை வழிபடலாயினர்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26